அரசியல்

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 2

[அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் துணையோடு, ஏமனில் சவுதி அரேபியா நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஏமனில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஏவுகணைகளை சவுதி அரேபியா வீசியதில், 120க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்… இந்நிலையில் ஏமனின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.]

 

 

தெற்கும்-வடக்கும் இணைக்கப்பட்ட ஏமன்:

 

அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது தெற்கு ஏமன். சட்டங்கள் வழியாக நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது; பெண்-ஆண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியை நிர்வகித்து வந்த சோசலிசக் கட்சியில் பலதரப்பட்ட குழுக்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில், கம்யூனிஸ்டுகள் முக்கிய பங்காற்றினார். பல்வேறு விதமான குழுக்கள் இருந்தமையால், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது செய்ய முயலும் போதும், பல்வேறு விவாதங்களும் தடைகளும் குழப்பங்களும் வந்துகொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்தபடியே தான் முற்போக்கான நாடாக தெற்கு ஏமன் முன்னேறிக்கொண்டிருந்தது.

 

ஆண்டாண்டுகாலமாக நிலவுடைமையாளர்களாகவும், அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களாலும், அரசின் மக்கள் நலச் சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அரசில் அவ்வப்போது நிலவிய கருத்துவேறுபாடுகள், சண்டைகளாகவும் கொலைகளாகவும் மாறின. அரசின் முக்கியமான தலைவர்களைக் கூட இழக்கவேண்டியிருந்தது. பனிப்போர் காலத்தில், தெற்கு ஏமனை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஒரு முக்கிய எதிரியாகவே பார்த்தன. மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றன. இறுதி முயற்சியில், பல முக்கிய தலைவர்களின் உயிரிழப்பு சோசலிசக் கட்சியினை பலவீனமாக்கியது. உடனே லிபரல் குழுக்கள் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக்கொண்டன.  அதன்பின்னர், வீரியம்குறைந்த, பலமற்ற சோசலிசக்கட்சியாகவே இருந்தது.

 

வடக்கு ஏமனோ, 1962 முதலே அதிபர் சாலேவின் தலைமையிலான பிற்போக்குவாத அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வடக்கு ஏமன் உருவாகக்கூடாதென்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பிரிட்டனும் 1962-ல் போராடின. ஆனால், தெற்கு ஏமனை கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்கிறார்கள் என்றவுடன், வடக்கு ஏமனுடன் இணைந்து தெற்கு ஏமனை அழிக்க எல்லாவித முயற்சிகளும் எடுத்தன அமெரிக்காவும் சவுதி அரேபியாவும். வடக்கு ஏமனின் அதிபர் சாலேவை நல்லவர் வல்லவர் என்றெல்லாம் உலகிற்கு சொல்லத் துவங்கிவிட்டார்கள்.
1990 ஆம் ஆண்டு சோவியத்தின் சரிவும், தெற்கு ஏமனின் கம்யூனிஸ்டு தலைவர்களின் இழப்பும் ஒன்று சேர்ந்து, எவ்வித சமரசத்திற்கும் உடன்பட தெற்கு ஏமன் அரசு தயாராகியிருந்தது. அதன்படி, தெற்கு ஏமனும் வடக்கு ஏமனும் ஒன்றிணைந்து, 1990-ல் “ஏமன்” என்கிற ஒரே நாடாக உருவானது. வடக்கு ஏமனின் அதிபராக இருந்த சாலே ஒருங்கிணைந்த ஏமனின் அதிபரானார். துவக்கத்தில் நடுநிலைவாதி போல தன்னை காட்டிக்கொண்டார் சாலே. சோசலிசப் பின்னணியைக் கொண்ட தெற்கு ஏமனைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்த அரசில் இணைக்கப்பட்டனர்.

 

ஏமன் உருவான சமயத்தில் வளைகுடாப் போர் துவங்கிய காலம். ஏமனில் இணைந்திருந்த முற்போக்குவாதிகள், வளைகுடாப் போரை ஏமன் அரசு ஆதரிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அதன்படி சாலேவும் வளைகுடாப் போரை ஏமன் எதிர்க்கிறது என்றே அறிவித்தார். அதன்மூலம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் எதிர்ப்பை ஏமன் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த 10 இலட்சம் ஏமன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதனால், ஏமனுக்கு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சவுதி அரேபியாவின் சொல்பேச்சை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்கிற செய்தியை வழங்கியது இந்நடவடிக்கை. அப்போதே, சவுதி அரேபியாவையும் அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்கிற நிலைக்கு சாலேவின் ஏமன் அரசு தள்ளப்பட்டது.

 

பலம் வாய்ந்த அதிபராக சாலே உருவெடுத்த பின்னர், ஏற்கனவே பலமிழந்து காணப்பட்ட தெற்கு ஏமனின் சோசலிசக்கட்சி, மேலும் வலுவிழந்தது. அரசின் எல்லாவித அதிகாரங்களிலிருந்தும் தெற்கு ஏமன் புறக்கணிக்கப்பட்டது. வடக்கு ஏமனோடு இணைந்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லிக்கொண்டு சில பிரிவினைவாதக் குழுக்கள் தெற்கு ஏமனில் உருவாகின. 1994-ல் மீண்டும் தெற்கு ஏமன் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையோடு தெற்கு ஏமனில் கலவரங்களும் போராட்டங்களும் வெடிக்கத்துவங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போராட்டக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியது வேறு யாருமல்ல, சவுதி அரேபியாதான்.

 

ஏமனில் ஒரு நிலையான அரசு அமைவதை எப்போதும் விரும்பாத சவுதி அரேபியா, தெற்கு ஏமனின் போராடக்குழுக்களுக்கு ஆதரவளித்தது. அதற்கு முன்பு வரலாற்றில் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாத தெற்கு மற்றும் வடக்கு ஏமன் மக்களிடையே பிரிவினை எண்ணங்கள் பரப்பப்பட்டன. சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 10 இலட்சம் ஏமன் மக்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்ட காரணத்தால், ஏமனில் பெரிய பொருளாதார நெருக்கடியும் உருவாகிற்று. உழைப்பதற்கு வேலையும், மூன்று வேளை உணவும் கிடைக்காத மக்களிடத்திலே பிரிவினைவாதத்தை எளிதில் உருவாக்கிவிடமுடியும் என்று சவுதி அரேபியா தீர்க்கமாக நம்பியது. நாளடைவில் அதுவே பெரிய உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 1994  மே மாதம், “ஏமன் ஜனநாயகக் குடியரசு” என்கிற நாடு மீண்டும் உருவாகிவிட்டதாக தெற்கு ஏமனின் போராட்டக்குழுவினர் அறிவித்தும் விட்டனர். வடக்கு ஏமனைப் பூர்வீகமாகக் கொண்ட அதிபர் சாலே, மதரீதியாக வடக்கு மக்களை தெற்கு மக்களுக்குக் எதிராகத் திரட்டினார்.

இசுலாமின் சைதி பிரிவைச் சேர்ந்த வடக்கு ஏமன் மக்களை, சன்னி பிரிவைச் சேர்ந்த தெற்கு ஏமன் மக்களுக்கு எதிராக நிறுத்தினார் அதிபர் சாலே. மக்களிடையே மதவுணர்வு தூண்டப்பட்டு, காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள், எதிரெதிர் திசையில் நிறுத்தப்பட்டனர். இரண்டு மாதங்களாக நடந்த போரின் இறுதியில், தெற்கு ஏமனின் போராட்டக்குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, தெற்கு ஏமனில் மிச்சமிருந்த சோசலிசக் கட்சியினரும், இன்னபிற ஜனநாயக விரும்பிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். வெளிப்படையான கணக்குப்படியே 10,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஏமனின் சர்வாதிகாரியாக அலி அப்துல்லா சாலே உருவெடுத்தார்….

 

ஹூத்திகள் – வடக்கு ஏமனின் கிளர்ச்சியாளர்கள்:

 

2004-ல் ஹூத்திகள் என்கிற போராட்டக்குழுவொன்று வடக்கு ஏமனில் உருவானது. வடக்கு ஏமனைச் சேர்ந்த ஹுசைன் அல் ஹூத்தி என்பவரால் உருவாக்கப்பட்டது தான் ஹூத்திகள் இயக்கம். இயக்கத்தை உருவாக்கிய ஹூத்தியை அதே ஆண்டிலேயே ஏமன் அரசு கொன்றது. அதன்பின்னர், அவரது சகோதரர்களின் தலைமையில் ஹூத்திகள் இயக்கம் தொடர்ந்து இயங்கிவருகிறது. வடக்கு ஏமனில் பெரும்பாலான மக்கள் இஸ்லாமின் சைதி பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இஸ்லாமில் சன்னி, ஷியா போன்ற பிரிவுகள் இருப்பதைப்போல், அப்பிரிவுகளிலிருந்தும் வேறு சில புதிய பிரிவுகள் உருவாகின. சைதி என்பது இஸ்லாமின் ஷியா பிரிவிலிருந்து உருவான மற்றொரு பிரிவு. ஹூத்திகள் இஸ்லாமின் சைதி பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும், அவர்களது இயக்கத்தை வெறுமனே ஒரு மதவாத இயக்கமாக மட்டுமே பார்க்கமுடியாது. ஏனெனில், ஹூத்திகள் இயக்கம் கடுமையாக எதிர்த்த ஏமனின் அதிபராக இருந்த சாலேவும் அதே சைதி பிரிவைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏமனின் பொருளாதாரம் பெரிதும் விவசாயத்தை சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அரசின் அலட்சியப்போக்கினால், விவசாயம் பொய்க்கத் துவங்கியிருக்கிறது. எண்ணை வளங்களினாலும், மீன்பிடித் தொழிலாலும், சர்வதேச உதவிகளாலும், வெளிநாடுவாழ் ஏமன் மக்கள் அனுப்பும் பணத்தாலும் மட்டுமே ஏமனின் வருமானம் அடங்கியிருக்கிறது. அதிபர் சாலேவும் அவரது சுற்றியுள்ள அதிகாரமிக்க சில நபர்களுமே வசதியான வாழ்க்கை வாழ்வதும், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்ற நிலையில் தவிப்பதுமே 20 ஆண்டுகளாக இயல்பாகிப்போயிற்று. ஏமனின் பெரும்பகுதி மக்கள் 30 வயதுக்குட்பட்டோர்தான் எனினும், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. 2009 இல் 40% ஏமன் மக்களுக்கு வேலை இல்லாத நிலைதான். இதனை எல்லாம் எதிர்த்துக் கேள்வி எழுப்பினர் ஹூத்தி இயக்கத்தினர்.

 

வடக்கு ஏமன் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையும், உள்கட்டமைப்பு வசதியேதும் இல்லாத சூழலும் தொடர்ந்து கொண்டிருந்ததை ஏன் என்று கேள்வி எழுப்பினர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் தட்டிக்கழித்த அதிபர் சாலே, ஹூத்திகளை அலட்சியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆயுதப்போராட்டத்தை துவக்கினர் ஹூத்திகள் இயக்கத்தினர். வடக்கு ஏமனில் இருக்கும் சாதா என்கிற நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கத்துவங்கினர். இஸ்லாமின் சைதி பிரிவு ஏமனிற்குள் முதன்முதலாக உருவான இடமும் அதே சாதா என்கிற நகரம் தான் என்று சொல்லப்படுகிறது.

“ஏமன் அரசைக் கவிழ்த்து சர்வாதிகார ஆட்சியினை அமைப்பது எங்கள் நோக்கமல்ல. ஏமன் ஒரு குடியரசு நாடாக இருக்கவேண்டுமென்றுதான் நாங்கள் விரும்புகிறோம். பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு ஆட்சியதிகாரத்திலும் பங்கெடுக்க அனுமதிக்கிற ஊழலற்ற ஒரு ஜனநாயக அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்”

என்று ஹூத்திகள் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

 

துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் தெருவுக்கு வந்து போராடியதை அரபு வசந்தம் என்றழைக்கிறோம். அதே காலகட்டத்தில், ஏமனிலும் ஜனநாயக ஆட்சி அமையவேண்டுமென்ற கோரிக்கையுடன் தலைநகரான சானாவில் மக்கள் போராடினர். வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்த நிலை, ஊழல் போன்றவற்றை மையக் காரணிகளாக கையிலெடுத்தனர் போராட்டத்தில் குதித்த மக்கள். அவர்களுக்கு, வடக்கு ஏமனின் போராட்டக்குழுவான ஹூத்திகளும் ஆதரவு தெரிவித்தனர். மக்கள் அமைதிவழிப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த அதே வேளையில், ஹூத்தி போராளிகள் ஏமன் அரசின் இராணுவத்துடன் சண்டையிட்டு பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.

 

ஹூத்திகள், இஸ்லாமின் ஷியா பிரிவிலிருந்து உருவான சைதி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைத் தூண்டிவிட்டு ஏமனில் நிலையற்ற சூழலை உருவாக்குவது ஈரான்தான் என்று அமெரிக்க மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதனையே காரணமாகக் கூறி, அதிபர் சாலேவும் சன்னி பிரிவு மக்களை ஹூத்திகளுக்கு எதிராக திருப்பிவிட கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், சைதி பிரிவு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஷியா பிரிவிலிருந்து உருவாகியிருந்தாலும், காலப்போக்கில் அவர்களது வணங்கும் முறை மற்றும் வாழ்க்கைமுறை யாவும் சன்னி பிரிவுக்கு மிகவும் நெருக்கமானதாவும் மாறியிருக்கிறது என்பது தான் தற்போதைய நிலை. ஹூத்திகளுக்கு போராடுவதற்கு அதிகளவில் ஆயுதங்கள் கிடைப்பது, ஏமன் இராணுவத்திற்குள்ளேயே இருக்கும் ஹூத்தி ஆதரவாளர்களிடமிருந்துதான் என்பது ஆச்சரியமான உண்மை. ஹூத்திகளின் போராட்டத்திலிருக்கும் நியாயத்தின் அடிப்படையில், ஏமன் இராணுவத்திலிருந்து விலகிக்கூட பலரும் ஹூத்திகளின் போராட்டக்குழுவில் இணைகிறார்கள்.

 

[ஏமன் வரலாறு தொடரும்….]

 

Related Posts