சமூகம்

கையேந்தினால் போதுமா? கழிப்பறை எப்போது?

“தாயகத்தில் கழிப்பறை கட்ட உதவுங்கள்”… இது ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களிடம், நரேந்திர மோடி வைத்த கோரிக்கை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே கோரிக்கையை இந்திய தொழிலதிபர்களிடம் அவர் முன்வைத்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும், பணக்காரர்களிடமும் கையேந்தும் அளவுக்கு முக்கியமான பிரச்சனையா இது?… இதற்காக கையேந்தி நிற்கும் அளவில் நம்முடைய நாட்டின் நிலைமை உள்ளதா? என இரண்டு கேள்விகள் இங்கே எழுகின்றன.

உலகில் அதிவேகமாக நகரமயமாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்ப்புற 11.4 சதவிகிதம். 2001 ஆம் ஆண்டு இந்த 28.53 சதவிகிதமாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டு 31.16 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. இதே வேகத்தில் சென்றால் 2030 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் 40.76 சதவிகிதம் நகரப் பகுதிகளாகிவிடும் என ஐநா சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக மக்கள் நெருக்கம் அதிகரிப்பதும், காலியிடங்களெல்லாம் தொழில்மயமாக்கப்படுவதும் நடக்கிறது. இந்த சூழலில், வெட்ட வெளியில் மலம் கழிப்பது மிகவும் அசூசையான உணர்வையே தனி மனிதருக்கு ஏற்படுத்தும்.

மறுபக்கம், இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசமாக உள்ளது. அதுவும் இந்தியாவில் கிராமப்புறங்களில்தான் மிக அதிகமானா பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பலாத்கார விபரங்களை விட்டுவிட்டாலும் கூட, பெண்களின் மாதவிடாய் சுழற்சிக் காலத்தில், தனிமை அவசியப்படுகிறது. எனவே கழிப்பிடங்களை ஏற்படுத்துவது இந்தியாவின் அவசரத் தேவை.

பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்தின் தலைநகரம் அகமதாபாத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரம் கழிப்பிடங்கள் தேவைப்படுகின்றன. இந்தியா முழுமையிலும் 5.97 கோடி கழிப்பறைகள் கட்டவேண்டும். பிரச்சனையில் அளவு இவ்வளவு பெரியதாக இருக்கும்போது, ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களிடம் வேண்டுகோள் வைப்பது எப்படித் தீர்வாக அமைந்திடும்? கழிப்பறையில் அமர்ந்து யோசித்தால், நல்ல யோசனை வரும் என்று கிண்டலாக சொல்வார்கள். அப்படி வசதியான கழிப்பறையில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டு யோசிக்கும்போது இப்படிப்பட்ட சிந்தனைதான் உதிக்கும் போலும்.

தனி நபர்களுக்கு, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும் என்பது நம் விருப்பம். ஆனால், அரசுப் பள்ளிகளில் கூட நாம் போதுமான கழிப்பிடங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

பின்வரும் அட்டவணையைப் பாருங்களேன்.

தமிழகத்தில் கழிப்பிடங்கள் இல்லாத அரசுப் பள்ளிகள்

Government Schools Without Toilets, Tamil Nadu

மொத்தப்
பள்ளிகள்
கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளிகள் கழிப்பறை இல்லாத ஆண்கள் பள்ளிகள் பெண்கள் கழிப்பறை செயல்படாத பள்ளிகள் ஆண்கள் கழிப்பறை செயல்படாத பள்ளிகள்
1 சென்னை 332 0 0 1 0
2 கோவை 1963 70 270 9 30
3 கடலூர் 1417 24 82 42 56
4 தர்மபுரி 1362 92 134 50 51
5 திண்டுக்கல் 1305 182 84 32 42
6 ஈரோடு 1791 43 134 8 30
7 காஞ்சிபுரம் 1425 8 51 17 30
8 கன்னியாகுமரி 518 0 5 1 2
9 கரூர் 805 0 236 44 18
10 கிருஷ்ணகிரி 1669 36 259 31 15
11 மதுரை 1230 161 222 76 104
12 நாகப்பட்டிணம் 919 16 32 23 32
13 நாமக்கல் 995 27 234 32 35
14 பெரம்பலூர் 940 40 198 86 82
15 புதுக்கோட்டை 1533 73 286 19 39
16 இராமநாதபுரம் 1062 67 150 15 16
17 சேலம் 1728 60 299 12 24
18 சிவகங்கை 1111 55 161 16 21
19 திருவாரூர் 1370 16 38 10 13
20 நீலகிரி 429 8 35 20 22
21 தேனி 528 21 7 4 8
22 திருவள்ளூர் 1454 81 130 33 34
23 திருவாரூர் 930 9 22 4 10
24 தூத்துக்குடி 704 17 69 6 10
25 திருச்சி 1272 40 116 13 34
26 திருநெல்வேலி 918 62 138 19 26
27 திருவண்ணாமலை 1968 11 110 15 15
28 வேலூர் 2229 32 257 102 118
29 விழுப்புரம் 2116 161 390 188 211
30 விருதுநகர் 979 30 129 30 31
மொத்தம் 37002 1442 4278 958 1159

*2013-14 (as on 30th September 2013)

தமிழகத்தில் 37,032 பள்ளிகள் உள்ளன. இதில் இருபாலர் பயிலும் 4060 பள்ளிகளில் கழிப்பறை இல்லை. மாணவிகள் பயிலும் 898 பள்ளிகளிலும், ஆண்கள் பயிலும் 1189 பள்ளிகளிலும் கழிப்பறைகள் பயனற்று உள்ளன. இந்தக் குறைபாடுகளை களையக்கோரி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று ஒருவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கீழே உள்ளது:

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்வது தொடர்பாக அளித்த மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும். கழிப்பறையை சரியாக பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவற்றுடன் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கழிப்பறை விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

மாணவ, மாணவிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்று நோய் வருகிறது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதத்தில் செய்து கொடுக்க வேண்டும் என கடந்த 2012-ல் நீதிமன்றம்  என உத்தரவிட்டிருந்தது.

இப்படி ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் கழிப்பறைகளை அமைக்க கால கெடுவுடன் தீர்ப்பு அளிக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதில்லை.

ஆறாம் வகுப்பு முதல் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. வயதிற்கு வந்த பிறகு, பெண்களை பள்ளிக்கு அனுப்புறதே பெரிய விஷயம். இதுல கழிப்பறை இல்லாதபோது அவர்களின் கல்வி தொடருமா?

அரசுக் கட்டடங்கள், பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பிடங்களை அமைப்பது அவசியம். மேலும் ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் தனி நபர் கழிப்பிடங்கள், பொது சுகாதார வளாகங்களை ஏற்படுத்திடவும் வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் அரசிடம் பணம் இல்லை என்பதைத்தான், வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கையேந்துவதன் மூலம் சூசகமாகச் சொல்கிறார் பிரதமர் மோடி. வரியாக அவர்கள் செலுத்தியது போக, நன்கொடையும் தரவேண்டும் எனக் கேட்கிறார். ஆகஸ்ட் மாதம் பிரதமரின் வைத்த கோரிக்கையை ஏற்று 100 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்த டாட்டா நிறுவனம், 10000 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 1000 என பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னது. திருவிழாக்களில் பயன்படுத்தும் தற்காலிக கழிப்பிடமே சுமார் ரூ.1500 ஆகிற நிலையில், வந்த பணம், யானைப் பசிக்கு சோளப் பொறிதான்.

இந்த நிதியாண்டில் மட்டும் வசூலிக்க முடியாமல் அரசு தள்ளுபடி செய்த வரி மற்றும் வரிச் சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடிகள். சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் குவித்த செல்வத்தை திரும்ப எடுப்பதில் அக்கறை காட்டினால் இந்திய கஜானா பல லட்சம் கோடிகளைப் பெற முடியும். கருப்புப் பண மீட்பு குறித்து நரேந்திர மோடியே பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் வழங்க முடியுமாம்?… மக்களின் சுகாதாரத்திலும், பாதுகாப்பிலும், வாழ்வுரிமையிலும் அக்கறையுள்ள அரசு என்றால், இந்தச் செல்வங்களைத் திரட்டி மக்களின் அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். மாறாக, நாட்டுக்கு நாடு சென்று கையேந்துவதால் நம் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.

Related Posts