அரசியல்

தலைநகரை செந்நகர் ஆக்கிய தொழிலாளி வர்க்கம் . . . . . . . . . . . . . . !

டெல்லி ராம்லீலா மைதானம் ஆயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றதை போன்ற ஒரு போராட்டத்தை, டெல்லி மக்கள் அண்மை காலத்தில் ராம்லீலாவில் பார்த்திருக்க மாட்டார்கள். செங்கொடிகளை கைகளில் ஏந்தியபடி லட்சக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் கண்களில் நம்பிக்கையை சுமந்தபடி அமர்ந்திருந்தனர். தங்கள் விடியலுக்கான முழக்கங்களை அவர்கள் சுமந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒரு அக்கினி குஞ்சு போலவே காட்சியளித்தனர்.

இது முற்றிலும் மாறுபட்ட போராட்டம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவசாயிகளும் கைகள் கோர்த்து, டெல்லியை அதிர வைத்த போராட்டம். கடந்த ஒரு வாரமாகவே செப்டம்பர் 5 ஆம் தேதியை எதிர்பார்த்து ராம்லீலா மைதானத்தில் அவர்கள் திரளத் தொடங்கியிருந்தனர். சிஐடியு எனப்படும் இந்திய தொழிற்சங்க மையமும், அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்களின் சங்கமும் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பாட்டாளிகளின் சங்கமத்தால் டெல்லி முழுவதுமே பரவி கமகமத்தது வியர்வையின் நறுமணம்.

டெல்லியில் பேரணிக்கு முந்தைய 3 நாட்களில் பெய்த மழை பேரணி அன்றும் நீடித்தது. தண்ணீரால் அணையக்கூடிய நெருப்பா அது? விடுதலைக்கான நெருப்பு லட்சியத்தை அடையாமல் அவ்வளவு சீக்கிரமாக அணைந்திடுமா என்ன? ராம்லீலா மைதானத்தில் இருந்து, செங்கொடிகளை உயர்த்தி பிடித்தபடி, பாட்டாளி வர்க்கம் அதிகார வர்க்கத்தின் திறக்கப்படாத காது சவ்வுகளை கிழிப்பதற்காக நாடாளுமன்ற வீதியில் படையெடுத்தது. தலைநகரம் இதுவரை காணாத படையெடுப்பு இது. செம்படையின் அணிவகுப்பு.

இந்திய துணைக்கண்டத்தின் அதிகார வர்க்கம் மையம் கொண்டுள்ள வீதிகளுக்குள் புகுந்த பாட்டாளி வர்க்கத்தின் முழக்கங்கள், அலுவலக சுவர்களை துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவசாயக் கடன் தள்ளுபடி, அடிப்படை ஊதியமாக ரூ. 18,000, நிலமற்றோருக்கு நிலம், சமூக பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, தனியார்மயத்துக்கு எதிர்ப்பு என முழங்கியவை எல்லாம் தங்களுக்கான கோரிக்கைகள். பேரணியில் பங்கேற்க முடியாத தங்களை போன்ற மற்றவர்களுக்கான கோரிக்கைகள். மொத்தத்தில் மக்களுக்கான கோரிக்கைகள்.

டெல்லி பேரணியின் தாக்கம் சமூக வலைதளங்களையும் விட்டு வைக்கவில்லை. மோடியே வெளியேறு என பேரணியில் பாட்டாளி வர்க்கம் முழங்க, சமூக வலைதளங்களில் நடுத்தர வர்க்கம் எதிரொலித்தது. சமூக வலைதளங்களில் பேரணி குறித்த செய்திகள் ட்ரெண்டானது.

மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க நடைபயணத்தை, 10 நாட்களுக்கு பிறகே திரும்பி பார்த்த ஊடகங்கள், டெல்லி பேரணியை கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய வரலாற்றை படைத்திருக்கிறார்கள் பாட்டாளிகள். ஆசிரியர்கள் தினத்தன்று போராட்டங்களின் அடுத்தகட்ட நகர்வு குறித்து, நாட்டுக்கு கற்பித்திருக்கிறார்கள்.
சிவப்பு நிறம் காட்டப்பட்டால் வாகனங்கள் வேண்டுமானால் நின்று கொள்ளட்டும். பாட்டாளிகள் தலைநகரில் காட்டிய சிவப்பின் பாதையில் தேசம் இனி அணிவகுக்கட்டும். தேசம் சிவக்கட்டும்…

– அகிலன்.

 

Related Posts