பிற

செங்குருதியில் மலர்ந்த மகளிர் தினம் . . . . . . . . . !

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நட்த்த வந்தோம் என்ற பாட்டு சித்தன் பாரதியின் வரிகளுக்கேற்ப வீட்டிற்குள் இருந்த பெண் சமுதாயம் வானை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டது பல்வேறு பெண்களின் போராட்டங்களும், அதன் வெற்றியுமே. உலக மகளிர் தினமாக மார்ச் 8 ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பல வியாபார நிறுவனங்களின் கொண்டாட்ட தினமாகவும், சலுகை தள்ளுபடிகளை அறிவிக்கப்படும் நாளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு கோலப்போட்டி, அழகு சார்ந்த போட்டிகள், ராம் வாக் (Ram Walk) போன்ற நிகழ்ச்சிகள் நட்த்தப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். உண்மையில் மகளிர் தினமானது அவ்வளவு எளிதாக கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது. பல லட்சம் பெண்களின் செங்குருதியில் மலர்ந்த தினமாகும்.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பெண்கள் வீட்டு வேலை செய்யவும், குழந்தைகளை பராமரிக்கும் பொருட்டும் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவம், சுகாதாரமும் கூட என்னவென்று கூட அறியாத காலம் அது.

1857-ஆம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தவிர்க்க நிலக்கரிச் சுரங்கம், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணி செய்ய முடியும் என நிரூபித்தனர். ஆண்களுக்கு சரிநிகராக பெண்களால் வேலை செய்ய முடியும் என ஆண் சமுதாயத்திற்கு அப்போதுதான் புரிய வந்தது.

பெண்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு பெருமளவு அநீதி இழைக்கப்பட்ட்து. இதனால் கிளர்ந்து எழுந்த பல பெண்கள் 1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அதிர்ந்து போன அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை அடக்க முயற்சித்தது. அடக்கி வைத்தால் அடங்கி போவது அடிமை இனம் என்று பெண் தொழிலாளர்கள் “சம உரிமை, சம ஊதியம், 8 மணி நேர வேலை” ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து 1907-ஆம் ஆண்டு மீண்டும் போராட்டக்களத்தில் வெகுண்டு எழுந்தனர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பெண் தொழிலாளிகள், பல பெண்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுல் ஒருவரான கிளாரே செர்கிளே மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பல ஆண்டுகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து 1920-ல் சோவியத் ரஷ்யாவில் நடந்த பெண்கள் போராட்டத்தில் அலெக்ஸாண்டாரா கெலுன்ரா-தான் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினம் என பிரகடனம் செய்தார். 1921-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.

19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்த பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணர தொடங்கினர்.

வேத காலங்களில் கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகள் மெத்த படித்தவர்களாகவும், கணவர்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையானவர்களாகவும் இருந்தனர் என உபநிடதம், ரிக் வேதம் மூலம் அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை அப்படியே தலைகீழாக சரிய தொடங்கியது. சதி எனும் உடன்கட்டை ஏறுதல், சிறு வயதில் திருமணம் என்ற பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கின. சில பெண்கள் வயது வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்த பெண்கள் ஆயுள் முழுவதும் விதவையாக சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது.

கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக் கலையை வளர்த்த்தில் இவர்களது பங்கு மிக முக்கியமானது. கடவுளுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கடவுள்களுக்கு தாசிகளாக இருந்து, கோவில் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருந்தனர். பிற்காலத்தில் கோவில்களில் வருமானம் குறைய குறைய இவர்களது நிலை சிறிது சிறிதாக மாறி மனிதர்கள் குறிப்பாக பணம் படைத்த ஆண்கள் மற்றும் பண்ணையார்களின் ஆசை நாயகிகளாக மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

கல்வியே பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என கருதிய பல பெண்கள் ரகசியமாகவே கல்வி கற்றனர். குறிப்பாக இந்தியாவில் பெண்கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சாவித்திரி பாய் புலே பெண்களுக்கான முதல் பொதுப்பள்ளியை உருவாக்கினார். அதே போல சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்க கூடாது எனும் மனுநீதி கடந்து, தடைகளை மீறி சமஸ்கிருதம் கற்று பண்டிதரானார் ராமபாய் பழங்குடியினர்கள். தேவதாசிகள் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் கல்வி கற்க இரவு பாடசாலை தொடங்கியவர் முத்துலெட்சுமி ரெட்டி. இது போன்று வரலாற்றில் பல பெண்கள் பல்வேறு ஆபத்துக்களை கடந்து தடைகளை மீறி வீரம் செறிந்த போராட்டங்களை நட்த்தியுள்ளனர். இது எத்தனை பெண்களுக்கு தெரியும்.

பெண்கள் இன்றளவும் கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. பழமையான சிந்தனையிலிருந்து விடுபட்டு சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைக்கும் பெண்களை இந்த ஆணாதிக்க சமூகம் தற்சார்புடனோ அல்லது சுயமரியாதையுடனோ வாழவிடுவதில்லை.

பொதுவாக, இந்தியாவில் பெண்களின் நிலை என்பது முரண்பாடுகள் நிறைந்த்து என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் குடும்ப அமைப்பு அதில் பெண்களின் மீது ஒழுக்கம், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மற்றொருபுறத்தில் குறைவான ஆடைகள் அணிவித்து, அவளின் உடல் சந்தைப்படுத்தப்படுகின்றது. இவை இரண்டுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடேயாகும். ஆண்களின் மகிழ்ச்சிக்காகவே இந்த இரு முரண்பாடுகளும் நிலவுகிறது.

”நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?” என்பது போல பல பெண்கள் ஆயிரம் படித்தாலும் திறன்கள் பல பெற்றிருந்தாலும், “பொம்பள, பொம்பள” தான் என்ற ஆணாதிக்க பிற்போக்குத்தனம் ஆழமாக வேரூன்றி இருப்பதால்தான் இன்னும் பல பெண்களும், பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர். ஒவ்வொரு ½ மணி நேரத்திற்குள்ளாகவும் ஒரு பெண் அல்லது குழந்தை பாலியல் வன்கொடுமைகளை சந்திக்கின்றன. இந்தியாவெங்கும் 25,000 பாலியல் வல்லுறவு மற்றும் சீண்டல்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2015-ல் மட்டும் 35,000 பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளன. காவல்துறை, நீதிமன்றம் என வெளியில் வந்த கணக்குகள் இவை. இன்னும் அவமான்ங்களுக்கு ஆட்பட்டு வெளியில் சொல்லாமல் நடந்தவை எத்தனையோ?

ஆக பெண்களும், பெண் குழந்தைகளுக்கும் குடும்பம் என்ற தனித்தளமும், பொதுத்தளமும் எப்போதும் பாதுகாப்பை வழங்குவதில்லை என்பதற்கு அறுதியிட்ட சான்றாக தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வன்முறைகளும் நீதிமன்ற வழக்குகள் மூலம் நம்மால் உணர முடிகிறது.

இச்சமூகம் பெண்களை சுயமரியாதையுடனும் நாகரீகத்துடனும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் கூர்தீட்டி வைத்து இருந்தால் தற்போது உலகம் மற்றும் பொதுவெளியில் நடக்கும் அநாகரீக சித்தரிப்புக்களை தடுத்திருக்க முடியும். பெண்களை அநாகரீகமான முறையில் சிந்திப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும், தடுக்க வேண்டும்.

இன்னும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பெண்கள் படிக்க, வேலைக்கு போக, வாகனம் ஓட்ட ஆண்களின் அனுமதியின்றி ஏதும் செய்ய முடியாத அவலநிலை நிலவுகிறது. தற்போது இணையத்தின் மூலம் தன்னெழுச்சியாக பெண்கள் தங்களுக்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் புந்தேல் கனிட் பகுதியில் பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை பிரச்சனை, குழந்தை திருமணம் என பெண் விடுதலைக்கு எதிராக எங்கு தவறு நடந்தாலும் பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆணை மூங்கில் கம்புகளால் அடிப்பார்களாம். இவர்களுக்கு குலாபி கேப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

பெண்களின் சக்தியே பெரும் சக்தி. பெண்கள் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அனைவரும் ஒருசேர இணைந்து முன்னேற்றப்பாதையில் அணி வகுத்து செல்வோம். நம்மை நாமே வலுப்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் பங்கு பெற நமக்கு நாமே பாடுபட்டு அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும்.

பெண்களை மார்ச் 8-ல் மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் கொண்டாடுங்கள். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் உரிமைகு பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையில் இத்தினத்தை கடைபிடிக்க வேண்டும்.

– வசந்தி.

மாநிலக்குழு உறுப்பினர். DYFI.

Related Posts