அரசியல்

வேலைதேடும் பணியில் இணைவாரா நமது பிரதமர்?

அரசுத்துறையில் வேலை கிடைத்தால் மரியாதையான சம்பளம், விடுமுறை எடுக்கும் உரிமை, மற்றும் சில சலுகைகள் கிடைக்கும் என்ற கனவு எனக்கு இருந்துச்சு. ஆனா, மத்திய அரசு – புதிய பணி நியமனங்களுக்கு முழுமையான தடை விதிச்சிருக்காமே. அதுமட்டுமல்லாம, ஓராண்டுக்கு மேல ஒரு இடம் காலியாக இருந்தா, அதுக்கும் ஆள் போடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க…

போச்சுடா ஏற்கனவே நமக்கு வேலை இல்ல. இதுல இதுவேறயா?

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாம யாரோ இதைப் பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு இப்படியெல்லாம் செய்யமாட்டார். தேர்தலுக்கு முன்னாடி அவர் பேசுனதும், கொடுத்த வாக்குறுதிகளும் நமக்கெல்லாம் ஞாபகமிருக்கே. அவருரோட ஒவ்வொரு வார்த்தையையும் வேத வாக்கா நினைச்சுதான ஓட்டுப் போட்டோம். பிறகு எப்படி அவர் நம்ம ஏமாத்துவாரு?….

ஆனாலும் இப்படி ஒரு உத்தரவ அரசாங்கம் போட்டிருக்கு. அமைச்சர்கள்தான இதெல்லாம் பண்றாங்க… அதவிட இந்த பணி நியமனத் தடைக்கு ஏதோ காரணமெல்லாம் சொல்லிருக்காங்கப்பா…

நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை தற்போதுள்ள 4 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 4 புள்ளி ஒரு சதவீதமாக குறைக்கும் நோக்கில், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறதாம். திட்டம் சாராத செலவினங்கள் 10 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளுக்கும் இந்த சிக்கன நடவடிக்கைகள் பொருந்தும் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத பாக்கும்போது, “டேய் டேய் இந்த நடிப்புதான வேண்டாம்ங்குறது” ங்குற கவுண்டமணி காமெடிதான் ஞாபகம் வருது. அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி..?! சுவிஸ் பேங்குல பணம் இருக்குன்றாங்க… உலக பணக்கார வரிசையில இந்தியாக்காரங்க இருக்காங்கனு சொல்றாங்க … அப்புறம் வருசா வருசம் பணக்காரங்களுக்கு வரிச்சலுகை மட்டும் 5 லட்சம் கோடி கொடுக்குறாங்க.

அப்புறம் எப்டி காசு இல்லைங்குறாங்க? – பட் மோடி நல்லவர். தேர்தல் சமயத்துல கருப்புப் பணத்தைப் பத்தி பேசுனாரு மோடி, 100 நாள்ல அந்தப் பணத்தையெல்லாம் மீட்டு ஆளுக்கு ரூ.15 லட்சம் கொடுக்குறேன்னு சொன்னாருல்ல.

மோடிக்குத் தெரியாததில்ல …

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலை கேட்டு காத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 11 கோடிக்கும் மேல். இதில் சுமார் 3 கோடிப்பேருக்கு சுமாரான வேலைகூட இல்ல.

காங்கிரசை நாம ஏன் வீட்டுக்கு அனுப்புனோம்?… வேலை கொடுக்காமலே, நாடு வளர்ந்திருச்சுனு பேசுனாங்க, ஊழல், விலைவாசின்னு நம்ம வாழ்க்கைப் பாடே திண்டாட்டம் ஆனதாலதான் தேர்தல்ல படு தோல்வியடைஞ்சாங்க.

அது தெரிஞ்சுதான் மோடி, எல்லாருக்கும் வேலை கொடுப்போம்னு சொன்னார்.

தேர்தல் வாக்குறுதி:

வேலைவாய்ப்பும் தொழில்முனைப்பும்

கடந்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தினால், நமது நாடு வேலைவாய்ப்பற்ற வளர்ச்சிக்கு இட்டுச் செல்லப்பட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகள் உருவாக்கும் விதத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த உடன்படுகிறது. நாங்கள், தொழிலாளர்கள் செரிந்த உற்பத்தி நடவடிக்கைளான (ஜவுளி, காலணி மற்றும் மிண்ணணு இயந்திரங்கள் கூட்டுதல்) மற்றும் சுற்றுலா போன்ற களங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் வளர்ச்சிக்குத் திட்டமிடுவோம். பாரம்பரிய வேலைவாய்ப்புத் தளங்களான விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், விளைபொருள் சில்லறை வணிகம் போன்றவற்றை நவீனப்படுத்தி கூடுதல் கடன் மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வலுப்படுத்துவோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வீட்டுவசதி ஆகிய துரைகளில் உள்ள வாய்ப்புகளை அவற்றின் வேலை வாய்ப்பு உருவாக்கும் தன்மையைக் கணக்கில் கொண்டு வேகப்படுத்துவோம். நமது இளைஞர்களை சுய வேலைவாய்ப்பை நோக்கி ஊக்கப்படுத்துவோம், கடன் வழங்குவதன் மூலமும், ஆரம்பகட்ட உதவிகளை மேற்கொள்வதன் மூலமும் தொழில் முனைப்பு ஊக்குவிக்கப்படும். வேலைவாய்ப்புக்கு தகுதிப்படுத்தும் விதத்தில் பல்திறன் மேம்பாட்டுத் திட்டம், தீவிர அக்கறையுடன் தொடங்கி செயல்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் தொழில் முனைப்பை ஊக்குவிப்பதில் கவனம் குவிக்கப்படும். நம்முடைய வேலைவாய்ப்பு மையங்கள், வாழ்க்கை வழிகாட்டி மையங்களாக மாற்றப்பட்டு, இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு இணைப்பை வெளிப்படையான விதத்தில், திறன் மிகுந்த வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்வதுடன் கலந்தாய்வு மூலமாகவும் மற்றும் பயிற்சிகள் வழங்கியும் ஏற்படுத்துவோம்.

இப்படிச் சொல்லிட்டு ஆட்சிக்கு வந்தாரு மோடி. ஆனா, அரசாங்கத்துல இருக்குறவங்களுக்கு இதெல்லாம் மனசுல இல்லையோ?

எங்க தாத்தனும், அப்பனும் செய்த/செய்துவரும் விவசாயத்துல போதுமான வரும்படி இல்ல. இளைஞர்களாகிய நாங்க எல்லாம் கிராமத்த விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கோம். (கிராமங்களில் 30%, நகரங்களில் 23% வேலை கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஒருத்தரின் பிரச்சனை மட்டுமல்ல. இந்தியாவின் செல்வமே மனித வளம்தான்) ஆனா அவங்களுக்கு வேலை செய்யவே வழி கொடுக்காம இப்டி பண்றாங்களேம்மா.

இறுதியா சொல்லவர்றது என்னானா….

நம்ம அக்கா, தங்கச்சிய கல்யாணம் கட்டிக் கொடுக்கிறதுக்குக் கூட பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஐடியா கொடுத்திருக்காரு. வாரணாசியில பேசின அவரு என்ன சொன்னாரு தெரியுமா?… பொண்ண பெத்தவங்க எல்லாம் மரம் வெச்சி பிழைச்சுக்க சொன்னாரு. (I was delighted to learn that many of tweeeples liked mytweet regarding planting trees on birth of a daughter) அதுவும் பொண்ண பெத்தவஙகளுக்கு மட்டும் இம்புட்டு அக்கறையோட சொன்னீங்களே பிரதமரய்யா, உங்க அமைச்சருங்க எங்களுக்கு வேல இல்லன்னு சொல்றாங்களே!!

நீங்க நாட்டுக்காக எம்புட்டு கடுமையா உழைக்கிறீங்க. முதல் 100 நாள்ல, 30 நாள் வெளி நாடு போயிருக்கீங்க. அங்கபோய் பல கம்பெனிகாரங்க, முதலாளிங்ககிட்டலாம் கெஞ்சி நம்ம ஊர்ல கம்பெனி ஆரம்பிக்கச் சொல்லிருக்கீங்க. ஆனா ஒன்ன ஞாபகத்துல வச்சுகோங்க, இங்க ஏற்கனவே பல வெளிநாட்டு கம்பெனிங்க பண்ற அட்டூழியத்த நாங்க பாத்துட்டு இருக்கோம். நோக்கியால 8000 பேர வேலயவிட்டு அனுப்பிட்டாங்க… ஹீண்டாய்ன்னு ஒரு கம்பெனி என்ன பண்ணிருக்கு, நம்ம நாட்டுகாரங்களுக்கு வேலை தருவோம், அப்டி இப்டின்னு சொல்லி வரி இல்லாம நிறைய லாபத்த சம்பாதிச்சுட்டு, ஆரம்பிக்கும் போது எவ்லோ ஆள் இருந்தாங்கலோ அதவிட இப்ப ரொம்ப கம்மி பண்ணிட்டாங்கலாம். இதெல்லாம் பிரதமருக்கு தெரியும், இருந்தாலும் ஞாபகபடுத்துறேன்.

தெரிஞ்சும் அவர் அப்டி பண்றார்ன்னா அதுக்குல்ல என்னமோ இருக்கு? சரி அது எதுக்கு நமக்கு, அவரு நமக்கு வேலை தர்றேன்னு சொல்லிருக்கார்..

இன்னும் 5 வருசம் இருக்கு.. எப்டியும் நம்ம எல்லாத்துக்கும் மோடி வேலையைத் தேடி தந்துடுவார்ன்னு நம்புவோம்… நம்பித்தான ஓட்டுப் போட்டோம். அந்த நம்பிக்யோட இன்னும் 5 வருசத்தோட ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்துவோம்.

நன்றி!

இப்படிக்கு

மோடிக்கு வாக்களித்தவர்களில் ஒருவன்

Related Posts