அரசியல்

இந்துப் பெருமிதம் விடுதலையைத் தருமா?

Kusapet_vinayagarபணம் படைத்தோரை ஏழைகளின் கோபக்கனலில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டதே அனைத்து மதங்களும் என்பது நாம் நன்றாக அறிந்ததே. அதிலும் நாம் பிறந்ததாகச் சொல்லப்படுகிற இந்து மதம் இருக்கிறதே, படுபுத்திசாலித்தனத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்படுகிற மக்களுக்கு, பாதிப்பை ஒரு துளியும் உணரச்செய்யாமல் பாதிப்பை ஏற்றுக்கொள்ள வைப்பது புத்திசாலித்தனம் அல்லாமல் வேறென்ன?

உலகிலுள்ள அனைத்து மதங்களும், அந்தந்த மதங்களுக்குள் சமத்துவத்தைப் பேணுகின்றன. ஆனால் இந்து மதம் மட்டும் மக்களைப் பிளப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு ஐரோப்பிய, பணக்கார இஸ்லாமியர் இந்தோனேஷியாவில் பிறந்து வளர்ந்த ஒரு அரேபிய, ஏழை இஸ்லாமியரைத் தொட்டு உறவாட, கட்டியணைக்க – அந்த மதம் தடைசெய்வதில்லை. அவர்களிடையே நாடு, இனம், மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகள் இருந்தாலும், மதத்தால் தீண்டாமை எழவில்லை.

ஆனால் அதுவே ஒரே இந்தியாவில், ஒரே மொழி பேசுகிற, ஒரே கூலி வேலைக்குச் செல்கிற, ஒத்த உணவு, உடை பண்பாட்டுடன் வாழ்கிற இரண்டு இந்துக்கள் சந்தித்துக்கொண்டால் அவர்கள் இருவரும் தொட்டுக்கொள்வதை, அன்னம் தண்ணீர் புழங்கிக்கொள்வதை, சமைத்த உணவை பகிர்ந்து கொள்வதில் உள்ள திரை சீனப்பெருஞ்சுவரையும் தாண்டி உயரமானது.

நெருப்பு, வெள்ளம், பாம்பு உள்ளிட்ட பல அறியாதவைகளைக் கண்டு அஞ்சியும் மிரண்டும் வணங்க ஆரம்பித்த மனிதன், அவைகளுக்கு உருவம் கொடுத்த பக்தி செலுத்த ஆரம்பித்தான். மனிதனே உருவாக்கிய கடவுளைக்கண்டு மனிதனே பயப்பட ஆரம்பித்தான். அந்த பயத்தை பக்தியாக்கி வருமானம் செய்ய சிலர் திட்டமிட்டு வெற்றியும் கண்டனர். வருமானத்தைப் பன்மடங்கு பெருக்க, பக்தியை மூடத்தனமாக மாற்றினர். 30 கோடி மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் நாட்டில் ஒரே ஒரு தங்கப்பூணூலுக்காக ஒன்றரை கோடி செலவு செய்ய வல்லமை படைத்தவராக திருப்பதி வெங்கடாசலபதி மாறிப்போனார்.

 அறியாமை அச்சமாகி, அச்சம் பக்தியாகி, பக்தி மூடத்தனமான வரை கூட நமக்கு பெரிய கோபமில்லை. நான் முட்டாளாகத்தான் திரிவேன் என்று ஒருவர் சொல்லிக்கொள்ள அவருக்கிருக்கும் தனிமனித உரிமையை மதிக்கிறோம். ஆனால் அந்த பக்தி தற்சமயம் அரசியல் படுத்தப்பட்டு வரும் ஆபத்தான சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ரத்தமும் சதையுமாக வாழ்ந்து, மக்களுக்கு சுயமரியாதை உணர்வையும் பகுத்தறிவையும் ஊட்டி மறைந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு விடுமுறை விடாத அரசாங்கம், கற்பனைப்பாத்திரங்களான கிருஷ்ணர் மற்றும் விநாயகர்களின் கற்பனைப் பிறந்த நாள்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி பெயரில் எனும் பெயரில் விடுமுறை விடுகின்றது.

விநாயகர் சதுர்த்தி வந்தால், தாங்களாகவே ஒரு களிமண் பிள்ளையார் சிலையை வாங்கி வந்து வணங்கி விட்டு தங்கள் வீட்டு கிணற்றிலோ அருகிலுள்ள ஆற்றிலோ தாங்களாகவே கரைத்து வந்தனர். இதிலே இருக்கிற மூடத்தனம் வருத்தம் அளித்தாலும், தற்போது அந்த பக்தி அரசியல்படுத்தப்பட்டு, தெருவுக்குத்தெரு பிரம்மாண்டமான சிலைகள் அமைக்கப்பட்டு, மனிதர்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லப்பட்ட கடவுளை மனிதர்கள் காப்பாற்றி வைத்திருந்து, மக்களுக்கு பீதியை ஊட்டுகிற வகையில் ஊர்வலமாக எடுத்துப்போய், ரசாயனப் பொருட்களால்  சுற்றுச்சூழலைக் கெடுக்கிற வகையில் நீர்நிலைகளில் கரைக்கிற மத அரசியல் கண்டிக்கத்தக்கதும் வெறுக்கத்தக்கதும் ஆகும்.

பக்தி அரசியல் மயப்படுத்தப்பட்டு வருவதால், உங்களுக்கு என்ன நட்டம்? என்ற கேள்வி எழலாம். இந்த அரசியல்படுத்தப்பட்ட பக்திதான் இந்து வாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், ஒரு பகுத்தறிவான நேர்மையான மனிதர் இந்துவாக இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைய முடியவே முடியாது.

நான் யாரையும் அவமதிக்கவில்லை, யாரையும் அடிமைப்படுத்தவில்லை, யார் மீதும் தீண்டாமை கடைப்பிடிக்கவில்லை, யார் மீதும் வன்கொடுமை நடத்தவில்லை என்று ஒரு இந்து தப்பித்துக்கொள்ள முடியாது. தான் ஒரு இந்து என்பதை ஒப்புக்கொள்ளும்போதே, ஏதாவது ஒரு சாதியில் தன்னை அடைத்துக்கொள்வதாகத்தான் அர்த்தம்.

தான் பிறந்த மதத்தில் பிறந்த கால் பங்கிற்கும் மேலானவர்களை தீண்டத்தகாதவர்களாக வைத்துக்கொண்டு, பொது உரிமைகளைத் துய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாக, குறைந்தபட்சம் மனிதனாக வாழ்வதற்கு ஏங்குபவர்களாக இருக்கையில் பெருமித உணர்வும் மகிழ்ச்சியும் நியாயமானதா என்று மனச்சாய்வு இல்லாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சக மனிதனை சமமாகப் பார்ப்பதற்கு தடையாக இருக்கும் சாதியப்பாகுபாட்டை தன் அடித்தளமாக வைத்திருக்கும் இந்து மதத்தில் பிறந்ததற்காகவும், இந்து வாக வாழ்வதற்கும் வெட்கித்தலை குனிய வேண்டும். சான்றிதழ்களில் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்…! மூளையால் நாம் இந்துவாக இருக்க வேண்டாம். இந்துவாக இருக்க பெருமைப்படு! என்று நம்மை மூளைச்சலவை செய்யும் அரசியல் பிழைப்புவாதிகளிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

Related Posts