அரசியல் சமூகம்

திருநங்கையற்கு பிரதிநிதித்துவம்: கனவு நிஜமாகுமா?

மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1318 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 1198 ஆண்கள், 118 பெண்கள், மற்றும் ஒரு திருநங்கை. தமிழகத்தில், மதுரை தொகுதியிலிருந்து போட்டியிட்ட பாரதி கண்ணம்மா தான் அந்த திருநங்கை. இவர் தான் இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கையாக இருப்பாரெனக் கருதப்படுகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

உலகிலேயே திருநங்கை ஒருவர் தேர்தலின் மூலம் மக்கள் பிரதிநிதியாகியிருப்பது ‘போலந்து’ நாட்டில்தான் சாத்தியமாகியுள்ளது. அன்னா கோஸ்கா என்ற திருநங்கை, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ’ தேர்தல் முறையின் காரணமாக இந்த வாய்ப்பைப் பெற்றார்.

உச்சநீதிமன்றம் அவர்களை ‘மாற்று பாலினத்தவர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தீர்ப்ப்பளித்திருக்கிறது. ஆறு மாதத்தில், அவர்களுக்கான சட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. மாற்றுப் பாலினத்தவரை வாக்காளர் பட்டியலில் தனியாக சேர்த்து, அவர்கள் மாற்று பாலினத்தவராகவே, வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

அதே சமயம், சமூக ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களாகவும், ஒதுக்கப்பட்டோராகவும், அங்கீகாரம் மறுக்கப்பட்டோராகவும் மாற்றுப் பாலினத்தோர் உள்ளனர். அதுவும் திருநங்கைகள், ஓர்பால் ஈர்ப்பு கொண்டவர்கள், ஈர்பால் ஈர்ப்பு கொண்டவர்களை அச்சுறுத்து விதமாக 377 அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ள நிலையில், சில வலுவான அரசியல் கட்சிகளும் இத்தகைய உறவுகளை அங்கீகரிப்பதற்கு எதிராக உள்ள நிலையில், சட்டமியற்றும் மன்றங்களில் திரு நங்கைகளுக்கான பிரதிநிதித்துவத்தும் முக்கியத்துவம் பெருகிறது.

பாரதி கண்ணம்மா

மதுரை தொகுதியில் களத்தில் உள்ள ‘பாரதி கண்ணம்மா’ சமூகவியலில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். கணினி அறிவியலில் டிப்ளமோ முடித்துள்ளார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தான் ஏன் இருக்கக் கூடாது என்பதற்காகவே தன் பெயரை பாரதி கண்ணம்மா என்று  மாற்றிக் கொண்டவர் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

குடும்ப சூழல்

குடும்பத்தை கவனிக்காத அப்பா, மகனை மலை போல் நம்பியிருக்கும் அம்மா என்று சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வருபவர் பாரதி கண்ணம்மா. பதின்பருவத்தில் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்து அனுசரித்து செல்ல யாரும் இல்லாத காரணத்தால் பெண்ணாக தன்னை உணர்ந்தாலும் ஆணாகவே வாழ்ந்துக் கொண்டிருந்தார்.

“எனது நடை உடை பாவனை என்னைக் காட்டிக் கொடுத்து விட்டன. அதை புரிந்து கொண்ட என் அம்மா நான் மும்பை சென்று தவறான வழியில் சென்று விடுவேனோ என்று பயந்தார். நான் பெண்ணாக மாற கூடாது என்று நேரடியாக இல்லாவிட்டாலும் நாசுக்காக என்னிடம் பல முறை கூறியுள்ளார்” என்கிறார் பாரதி கண்ணம்மா.

படிப்பில் கவனம்

திருநங்கையாவதற்கு வீட்டில் சம்மதம் இல்லையென்றால், வீட்டை விட்டு ஓடுவது, ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் தொழிலாளியாக மாறுவது, படிப்பும் வேலையும் இல்லாமல், முதிர்ச்சியடையாத இந்த சமூகத்தின் கேலிக்கு கிண்டலுக்கும் ஆளாவது- இது தான் பல திருநங்கைகளின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால், பாரதி கண்ணம்மா தான் படித்து முடித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். “நான் அம்மாவின் அரவணைப்பில் இன்குபேட்டரில் இருந்த குழந்தை போல் வாழ்ந்து வந்தேன். எனது எல்லைகள் எனக்கு தெரியும். பாலியல் தொந்தரவுகள் இருந்தாலும் நான் படித்து முடித்தால் தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நல்லது என்று கடுமையாக உழைத்தேன்,” என்றார்.

வெற்றியாக மாறிய வலி

பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, பொருளாதாரத்தில் இளங்கலை முடித்துள்ளார். “பி.ஏ. முடித்த பிறகும், எனக்கு ஆங்கிலம் எழுத, படிக்க தெரியாது. அது தெரியாத என் மாமா என்னை ஒரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு ஆங்கிலத்தில் கடிதம் ஒன்று எழுத சொன்ன போது, எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விஷயம் தெரிந்த பிறகு எனது மாமா நான் உருப்பிட மாட்டேன் என்று சொல்லி சொல்லி அடித்தார். அந்த வலி தான் என்னை இந்த அளவுக்கு முயற்சி செய்ய வைத்திருக்கிறது,” என்று தனது அனுபங்களை நினைவு கூறும் பாரதி கண்ணம்மா பிற்காலத்தில் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். அவருடைய விடா முயற்சியின் காரணமாக சமூகவியலில் முதுகலையும், கணினி அறிவியலில் டிப்ளோமோவும் முடித்துள்ளார்.

சட்டம் படிக்க ஆசை

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் எப்போதும் இருந்திருக்கிறது. சட்டம் படிக்க ஆசைப்பட்டாலும், வீட்டில் அனுமதியில்லாததால் படிக்க இயலவில்லை. ஆனால் பிற்காலத்தில் சட்டம் அவரை தேடி வந்தது என்றே சொல்ல வேண்டும். ”மதுரையில் உள்ள லோக் அதாலத்தில் உறுப்பினராக என்னை நியமிக்கலாம் என்று பரிந்துரைத்த போது, அங்கிருந்த 150 வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது அத்தனை பேரும் எனது நண்பர்கள். ரூ.75 கொடுத்து வாங்கிய சட்டப்படிப்புக்கான படிவத்தை, வீட்டில் அனுமதி தராத்தால் கிழித்து எறிந்தேன். ஆனால் இன்று பல பேருக்கு சட்ட ஆலோசகராகவும், பல வழக்குகளை முடித்தும் வைத்திருக்கிறேன்”. தன்னை வெறுத்த உறவுகளும் தன்னிடம் சட்ட ஆலோசனைக்காக வந்திருந்த சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு என்கிறார் பாரதி கண்ணம்மா.  தாய் பாலம் என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர். காவல்துறையினருக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் மாற்று திறனாளிகள் பற்றி மாநில அளவில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தியவர்.

அரசியல் பிரவேசம் பற்றி…

”திருநங்கைகள் எல்லா துறைகளிலும் சாதித்துக் கொண்டு வருகின்றனர். ஏன் அரசியலில் கூடாது என்பதற்காக போட்டியிடுகிறேன். அடிதட்டு மக்களோடு அவர்களின் பிரச்னைகளை உணர்ந்து துணை நின்றிருக்கிறேன். என்னால் நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வாங்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. திருநங்கைகளுக்கு கல்வி வேண்டும், வேலை வேண்டும் என்று கேட்க நான் வரவில்லை. அவர்களை சக மனிதர்களாக மதியுங்கள் என்று கூற நான் வந்துள்ளேன். அவர்கள் சமமாக நடத்தினால் தன்னால அவர்களுக்கான கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்கும். பெண்கள் 33% இட ஒதுக்கீட்டாக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உண்மையான உரிமைகளுக்கு குரல் கொடுக்க நான் வந்துள்ளேன்” என்று உறுதியாக கூறுகிறார்.

அரசியல் பின்புலம் இல்லாமல் போட்டியிடுவது வெற்றி வாய்ப்பை அமைத்து தருமா?

மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி இருக்கிறது. அதனால் தான் நோட்டா இம்முறை அறிமுகமாயிருக்கிறது. அந்த அதிருப்தியை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திருநங்கையாக எனக்கு தனியான குடும்பம் என்று கிடையாது. எனவே சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே மக்கள் நலன் மட்டுமே எனது கவனமாக இருக்கும்.

இந்த தேர்தலில் தோல்வியுற்றால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பாரதி கண்ணம்மா கூறியது… “யாரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை. அரசியலில் உள்ள ஜாம்பவான்கள் எல்லோரும், பல தோல்விகளையும் அவமானங்களையும் கண்டு தான் வென்றுள்ளார்கள். இந்த முறை தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பேன்” என்றார்.

பாரதி கண்ணம்மா வெற்றி பெறுவாரா இல்லையா என்பது விவாத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், பாலின சிறுபான்மையினர் என்று ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற விழிப்புணர்வே நமது சமூகத்துக்கு மிக சமீபத்தில் தான் வந்துள்ளது. இன்னமும் அவர்களைப் பற்றிய முழுமையான, ஆழமான புரிதல் நம்மிடையே இல்லை. இந்த சூழலில் தேர்தலில் அவர்களையும் மற்றவர்களோடு சம்மாக போட்டியிட செய்வது நியாயமற்றது. அவர்களது பிரதிநிதித்துவம் மக்கள சபையில் வேண்டும் என்று உணமையாகவே விரும்பினால் நமது தேர்தல் முறையில் உரிய மாற்றங்களைச் செய்து, பாலியல் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட வாய்ப்புகள் மூலம் பிரதிநிதித்துவம் கொடுப்பதே தீர்வாக அமையும்.

Related Posts