அரசியல்

இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை நோக்கத்திலிருந்து அதிகமாக விலகச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக)  இலேசாக அதனைத் தொட்டுச்சென்றிருக்கிறேன்.

இஸ்ரேன் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இக்கேள்விக்கு இன்று சொல்லப்படும் பதில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

  1. தங்களது சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் நாடு நாடாக ஓடிக்கொண்டிருந்தனர்.
  2. இலட்சக்கணக்கான யுதர்களை ஹிட்லரும் அவனின் நாஜித்தத்துவமும் கொன்று கொண்டிருக்கிறது என்பதற்காக, யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு அமைக்கப்புறப்பட்டனர்.
  3. யூதர்களின் பூர்வீகம் இன்றைய இஸ்ரேல் நிலப்பரப்புதான். அதனால் தான் அங்கே சென்றார்கள்

ஆனால் இஸ்ரேல் உருவான தேவையையும் காரணத்தையும் வரலாற்றையும் இவ்வளவு தட்டையாகப் பார்க்கமுடியாது(கூடாது) என்று நினைக்கிறேன்.

தேசிய இனப்பிரச்சனைகளை ஆய்வுசெய்கிறபோது, அத்தேசிய இனத்தின் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைக்கான மூலகாரணங்களையும், அதற்கான  தீர்வுகளாக முன்வைக்கப்படுகிறவற்றையும் தனித்தனியாகப் பிரித்துப்பார்த்து புரிந்துகொண்டால், யாருக்கான விடுதலையைக் கோருகிறார்கள் என்பதை நன்றாக விளங்கிக்கொள்ளமுடியும்.

இம்மூன்றையும் ஒன்றாக இணைத்து நம்மை பார்க்கச்சொல்வதுதான் தேசியவாதிகளின் வழக்கமாக இருக்கிறது.

ஒரு தேசியஇன ஒடுக்குதலுக்கு, பிரச்சனையாக சொல்லப்படுபவை நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்கலாம், ஆனால் அதற்கான மூலகாரணமோ தீர்வோ முற்போக்கானதாகவோ நேர்மையானதாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் இஸ்ரேலிய உருவாக்கத்திலும் நடந்தேறியது. அதனால், ஐரோப்பாவில் யூதர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வாக பாலஸ்தீனர்கள் வாழ்ந்துவந்த நிலப்பகுதியை தேர்ந்தெடுத்து இஸ்ரேல் அமைத்ததையும் தனித்தனியாக பிரித்து ஆய்வுசெய்யவேண்டும்.

யூதர்களுக்கான தனிநாடு அடையும் உரிமையை நாம் கேள்விகேட்டால், அவர்களுக்கு நடக்கிற/நடந்த கொடுமைகளை இல்லையென்று சொல்வதாகிவிடுமோ அல்லது சந்தேகிப்பதாகிவிடுமோ என்ற கருத்து இன்று நேற்றல்ல, ஹிட்லர் காலத்திலேயே இருந்தது. அதைமீறி மார்க்சும் மார்க்சியவாதிகளும் மட்டும்தான் தைரியமாக (அவர்களில் பலரும் பிறப்பால் யூதர்கள்) அப்போதே எழுதினர். “On the Jewish question” என்று காரல்மார்க்ஸ் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் யூதர்களுக்கு தனிநாடென்ற கோரிக்கையை கிழித்து தொங்கவிட்டிருப்பார். அதேபோன்று “Jewish question – A Marxist interpretation” என்ற மற்றொரு நூலை ஆப்ரகாம் லியோன் என்கிற தோழர் எழுதியிருக்கிறார். (நாஜிப்படைகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் இறந்துபோனார்). இந்நூல் யூதர்களின் தேசிய இனப்போராட்டம், தனிநாடுகோரிக்கை ஆகியவற்றை, மார்க்சியப் பார்வையயிலும் சமூகப்பொருளாதார முகம்கொடுத்தும் பேசிய நூல். தமிழில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

யூதர்கள் ஐரோப்பாவில் இனவெறித்தாக்குதலுக்கு ஆளானார்கள் என்பது உண்மையே. அது மறுப்பதற்கும் மறைப்பதற்குமில்லை. பிரெஞ்சுப்புரட்சி, அதனைத்தொடர்ந்து ஐரோப்பாவில் போலியாக உருவாக்கப்பட்ட தேசிய இன உணர்வு, வரலாற்று ரீதியாக யூதர்கள் வியாபாரத்தில் மேலோங்கியிருந்தது, அதனை அபகரிக்க தேசிய இன உணர்வைப் பயன்படுத்திய போட்டியாளர்கள் உருவாக்கிய யூத எதிர்ப்புப் பிரச்சாரங்கள், ஒப்பீட்டளவில் கல்வியில் மேம்பட்டிருந்த யூத உழைக்கும்வர்க்கம், சக யூத முதலாளிகளாலேயே ஒடுக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துவங்கிய யூத உழைக்கும் மக்கள், வியாபாரப் போட்டியையும் தொழிலாளர் எதிர்ப்பையும் ஒருசேர சமாளிக்க வேண்டிய சூழலில் யூத முதலாளிகள் இருந்தது, எனப் பல்வேறு காரணிகளையும் கோணங்களையும் இணைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் இனவெறி என்பதையே நாம் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். மொழியாலோ, மதத்தாலோ, இனத்தாலோ வேறுபட்டிருப்பதால் மட்டும்தான் ஒருகுழு மற்றொரு குழுவை ஒடுக்குகிறது என்று எளிமையாக புரிந்த்கொள்ளமுயன்றோமென்றால், நாமும் அந்த ஆதிக்க வெறிக்கு தூபம் போடுவதாகவே மாறிவிடும். ஒவ்வொரு ஒடுக்குமுறைக்குப் பின்னாலும், வெறுமனே ஆதிக்கமனோபாவமோ கலாச்சார வேறுபாடுகளோ மட்டுமல்ல, சுரண்டலும் மூலதனத்தை தக்கவைத்தும் பெருக்கியும் ஆகவேண்டும் என்கிற வெறியும் பின்னிருக்கிறது.

  1. ஐரோப்பாவில் யூதர்கள் மீது இனவெறித்தாக்குதல்கள் உச்சத்தில் இருந்தபோதும், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இன்றைய இஸ்ரேலின் நிலப்பரப்புக்கு செல்லவேண்டும் என்றோ அங்கே ஒரு தனிநாடு அமைக்கவேண்டும் என்றோ நினைக்கவேயில்லை. பிற்காலத்தில் இஸ்ரேல் அமைக்கப்பட்டபிறகு, உலக மக்களாகிய நம்மை அவ்வாறு நம்பவைத்திருக்கிறார்கள். அன்றைக்கு யூதர்களின் கனவு, ஐரோப்பாவைத்தாண்டி அமெரிக்காவோ கனடாவோ சென்றுவிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. மேற்கு ஐரோப்பாவின் எல்லையில் ஒரு “ரெட் ஸ்டார் லைன்” என்ற கப்பல் மூலம் மட்டும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் யூதர்கள்தான் (குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கைரோப்பிய யூதர்கள்). பல தலைமுறைகளாக ஐரோப்பாவில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு, பாலஸ்தீன நிலப்பரப்பு என்பது, அவர்களுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நிலப்பிரதேசமாகத்தான் இருந்தது.

 

  1. யூதர்கள் இவ்வாறு பல்வேறு நாடுகளுக்கு (அமெரிக்கா, கனடா, தென்னமெரிக்கா) சென்று சிதறி புலம்பெயர்வது, யூதப்பணக்காரர்களுக்கும் அவர்களது மூலதனத்துக்கும் நிச்சயமாக நல்லதல்ல. தேசிய இனத்தின் மக்கள் இல்லாத நிலை ஏற்படும்போது, அத்தேசிய இனத்தின் செல்வம் எளிதாக சூறையாடப்படும் என்பது தெரிந்ததுதானே. யூத உழைக்கும்வர்கத்தைப் பொருத்தவரை, அமெரிக்க கண்டத்துக்கு போவதுதான் நல்ல எதிர்காலத்தைத் தரும் என்று நம்பினார்கள். ஆனால் யூதமுதலாளிகளைப் பொருத்தவரையில், தனிநாடு அடைவதன்மூலம் தங்களது செல்வத்தை ஓரிடத்தில் கொண்டுசேர்த்து தற்சமயத்துக்கு பாதுகாத்திடமுடியும் என்று நம்பினார்கள்.

 

  1. ஆக தனிநாடுதான் தீர்வு என்று யூத முதலாளிகளும், பெரும்பணக்காரர்களும் மற்ற எளிய உழைக்கும் யூதர்களிடம் பிரச்சாரம் செய்வது துவங்கியது. சீயோனிசம் என்கிற தத்துவத்தை உருவாக்கியதும், தனிநாடு தேடும் படலத்தை துவங்கியதும் அவர்கள் தான். பெரும்பாலான யூத மக்களுடைய கோரிக்கையாக அது இருக்கவில்லை. அதனால் மக்களை சீயோனிசத்தின் பக்கம் இழுப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. தனிநாடு எங்கே அமைப்பது? யாரு நிலம் தருவார்கள்? தேர்ந்தெடுக்கப்படும் நிலத்துக்கு யூதமக்கள் பின்தொடர்ந்து வருவார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் இருந்தன. யூதர்களுக்கான நாடுதேடும் படலத்தை சீயோனிசத் தலைவர்கள் துவங்கினர். ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்த சைனாவின் ஒரு மாகாணம், மடகாஸ்கர் தீவு, கயானா, அமெரிக்க அலபாமா, ஆஸ்திரேலிய டாஸ்மேனியா, உகாண்டா, அராரத் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய பட்டியல் ஆராயப்பட்டன. ஹிட்லர்கூட யூதர்களுக்கு தனிநாடு அமைத்து, அங்கே யூதர்களை துரத்திவிட முயற்சித்ததெல்லாம் நடந்தது. ஒரு சிறிய யூத சாம்ராஜ்ஜியம் கேரளாவில் இருந்ததால், கேரளாவைக்கூட அவர்களின் பட்டியலில் வைத்திருந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரிட்டன் சம்மதித்திருந்தால், கேரளாவில் கூட இன்றைய இஸ்ரேல் இருந்திருக்கக்கூடும். பாலஸ்தீன-இஸ்ரேலியப் பிரச்சனைக்கு பதிலாக, இஸ்ரேலிய-மலையாளிகள் பிரச்சனை குறித்து நாம் பேசிக்கொண்டிருந்திருப்போம் என்று நினைக்கிறேன். இடத்தைத் தேர்வு செய்யும் பேச்சுவார்த்தையில் சீயோனிசவாதிகளியமே கருத்துவேறுபாடு இருந்தது. உகாண்டாவில் யூததேசம் அமைக்கும் திட்டத்தை அதே அமைப்பில் சில ஆதரித்தனர். சிலர் எதிர்த்தனர். அதனால் அமைப்பே இரண்டாக உடைந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

  1. இதெல்லாம் ஒருபுறமிருக்க, யூதர்களை ஐரோப்பாவைவிட்டு துரத்தியும்விடவேண்டும், அதேநேரத்தில் அதனால் ஏதாவது இலாபமும் அடைந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டது (மேற்கு) ஐரோப்பிய ஏகாதிபத்தியம். (மேற்கு ஐரோப்பா என்று குறிப்பிடுவதற்கு மிகமுக்கியமான காரணமிருக்கிறது. சோவியத் யூனியன் அமைந்தபிறகு, யூதர்களை அணைத்துக்கொள்ள எல்லாவித முயற்சிகளும் சோவியத் யூனியனில் எடுக்கப்பட்டது. யூதர்களுக்கென்று சோவியத் யூனியனிலேயே தனிநாடு அமைத்துக்கொடுக்க முன்வந்தார் ஸ்டாலின். ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மொழியையும் வளர்த்துக்கொள்ள ஏதுவாக சோவியத் யூனியனில் தனித்தனி மாகாணாங்கள் உருவாக்கப்பட்டபோது, யூதர்களுக்கும் ஒன்று ஒதுக்கப்பட்டது.) பிரிட்டனைப் பொருத்தவரை இந்தியாதான் அதற்கு தங்கமுட்டையிடும் வாத்து. அந்த வாத்தினை பாதுகாப்பாக பொத்திப்பொத்தி பாதுகாத்து வளர்க்க என்னவேண்டுமென்றாலும் செய்வதற்கு பிரிட்டன் தயாராகவே இருந்தது. சூயஸ் கால்வாய் கட்டுவதற்கு முன்னரிலிருந்தே, அதற்கான வாய்ப்பு இருப்பதை அறிந்துவைத்திருந்த பிரிட்டன், பாலஸ்தீன நிலப்பரப்பின் மீது அழுத்தமாக தனது பார்வையை வைத்திருந்தது. பிரிட்டனிலிருந்து இந்தியா வரையிலான கடல்வழிப்போக்குவரத்திற்கான பாதையில் பாலஸ்தீன நிலப்பரப்பு மிகமுக்கியமான ஒன்றாக இருந்தது பிரிட்டனுக்கு. ஒட்டோமன் பேரரசு இருந்தபோதே, பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியெல்லாம் பார்த்தது பிரிட்டன். அரபு மக்கள நிறைந்திருக்கும் அகண்ட மத்திய கிழக்கில், பாலஸ்தீன நிலத்தை மட்டும் ஆக்கிரமித்தால், அம்மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா? மீண்டும் மற்ற பகுதி அரபு மக்களோடு இணைந்துகொள்வார்களா? மற்ற பகுதி அரபு மக்கள் இங்கே ஆக்கியமிக்க வந்துவிடுவார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் பிரிட்டனுக்கு நிச்சயமாகத் தோன்றியிருக்கும். (அதனை மெய்ப்பிக்கும் வகையில் சர்வதேச சீயோனிச அமைப்பின் தலைவர்கள், பிரிட்டனுக்கு வாக்குறுதி அளித்த விவரங்களை நூலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்)

 

  1. ஆக, பாலஸ்தீன நிலத்தினை ஆக்கிரமிக்கும் விருப்பத்தில் இருந்த பிரிட்டனும், தனிநாட்டில் தங்கள் செல்வத்தைக் கொண்டுசேர்த்து காப்பத்தவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்த யூதபெருமுதலாளிகளும் ஒருபுள்ளியில் இணைந்தனர். அதற்குப்பின்னர் தான், இஸ்ரேல் உருவாக்கும் திட்டம் மிகுந்த கவனத்தோடு வேகமெடுத்தது. அமெரிக்கா செல்லத்துடிக்கும் ஐரோப்பிய யூதமக்களை பாலஸ்தீனத்தின் பக்கம் திருப்புவதுதான் அவர்களின் மிகமுக்கிய பணியாக இருந்தது. யூத முதலாளிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் பாலஸ்தீன நிலத்தில் வாங்கிக்குவித்தனர். அங்கே போனால, வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் கிடைக்கும் என்று ஐரோப்பா முழுவதும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர்.
  1. யூத உழைக்கும் மக்களை தனி நாடடையும் திட்டத்தில் இணைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது யூதமுதலாளிகள் தெரிந்துகொண்டனர். மதநம்பிக்கையை வரலாறாகத் திரித்து, உணச்சிமயக்கருத்துக்களைத் திணித்தனர். கடவுள் நமக்கு அருளிய இடம்தான் பாலஸ்தீன நிலம் என்றனர். (ஆனால் கடவுள் அருளியதாக சொல்லப்படும் அந்தகாலகட்டத்தில், அங்கே ஏற்கனவே கனானியர்கள் என்கிற இனக்குழுவினர் வாழ்ந்துவந்தனர் என்பது வரலாறு. ஒருவேளை கனானியர்கள்தான் தற்போதைய பாலஸ்தீனர்கள் என்று சொன்னால், கதை எப்படிப்போகும். இன்னும் பல்வேறு வாதங்களை நூலில் வைத்திருக்கிறேன்). மதநம்பிக்கையை பயன்படுத்தி ஜெருசலத்திற்கு மதச்சுற்றுலா எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைக்கு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருக்கிறதல்லாவா. அவர்கள்தான் இதில் முக்கியப்பங்காற்றினர். (ஹிட்லரின் ஆதிக்கத்துக்கு முன்னரேகூட) ஐரோப்பிய யூதர்களை அங்கே அழைத்துச்சென்று, தொடர்ந்து அந்நிலத்துக்கும் யூதர்களுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்ற கருத்தாக்கத்தை அச்சுற்றுலாக்கள் உருவாக்கின.

இஸ்ரேல் உருவானதை வெறுமனே இனப்பிரச்சனைக்கான தீர்வாக மட்டுமே பார்க்கிற பார்வையை கொஞ்சம் உடைக்கவேண்டும் என்று நினைத்துத்தான் நூலில், விவாதங்களைத் தூண்டும் சிலவரிகளாய் இணைத்திருந்தேன்.

3000 பேருக்கும் குறைவான யூதர்களே வாழ்ந்துவந்த பாலஸ்தீன நிலப்பரப்பை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பதற்கு யூதமக்களின் விருப்பமும் ஆசையும் இனவெறியிலிருந்து தப்பிக்கவெண்டிய கட்டயமும் மட்டுமல்ல காரணம். முன்னரே சொன்னதுபோல, யூத முதலாளிகளின் மூலதனவெறியும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் (இந்தியாவை தொடர்ந்து அடிமைப்படுத்தியே வைத்திருக்கவேண்டும்) என்கிற ஏகாதிபத்திய மற்றும் காலனிய வெறியும்கூட காரணங்கள்தான்.

ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் (யூதர்கள்) கைகளில் ஆயுதங்களைக்கொடுத்து, மற்றொரு ஒடுக்கப்பட்ட இனத்தின் (பாலஸ்தீனர்கள்) முன்பு நீட்டி மிரட்டச்செய்து, அதுதான் உன்விடுதலை என்று நம்பவைத்ததுதான் ஏகாதிபத்திய வெறியின் உச்சகட்டம்.

-இ.பா.சிந்தன்

()

Related Posts