அரசியல்

சமஸ்கிருதம் தொன்மையான மொழிதான், ஆனால், அனைவரும் ஏன் கற்கவேண்டும்?

இந்திய அரசியமைப்புச் சட்டத்தின்  எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள  முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும். கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகம், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டதாகும்.  (சமஸ்கிருத அறிவுமுறை  என்று அறியப்பட்டதாகும்)

மதத்தைச் சார்ந்த மற்றும் சாராத அறிஞர்களாலும், சமூகத்தின் இன்னும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும்  பரந்த சமூக-பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை உருவாக்கப்பட்டதாகும். 

இப்படியான சமஸ்கிருதத்தை,  மூன்று மொழிக்கொள்கை உள்பட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் மாணவர்களுக்கான முக்கியமான வளமூட்டும் விருப்பப் பாடமாக கற்க வாய்ப்பளிக்கப்படும்.

சமஸ்கிருத அறிவுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக ஒலி மற்றும் உச்சரிப்பு மூலமாக,  ஆர்வத்திற்குரிய மற்றும் அனுபவத்திற்குரிய வகையில் சமகாலத்திற்குப் பொருத்தமான   வழிகளில் இவை கற்பிக்கப்படும். சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் மூலமாகவே கற்றுத்தரும் வகையில், ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்விக்கான  சமஸ்கிருதப் பாடப்புத்தகங்கள், எளிய நிலையான சமஸ்கிருதம் (எஸ்.எஸ்.எஸ்) எனும் அடிப்படையில் எழுதப்பட்டு, மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் வகையில் கற்றுத்தரப்படும். 

மேற்கண்ட வரிகள் யாவும் புதிய கல்விக்கொள்கையில்  முதல் அத்தியாயமான பள்ளிக்கல்வி எனும் தலைப்பில், நாலாவது பத்தியில்(4.17ல்) கூறப்பட்டிருப்பதாகும்.

மிகக் கவனமாய் அரசியல்ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை அமைப்புகளைக் கொண்டு சமஸ்கிருதக் கல்வித் திணிப்பை இக்கல்விக் கொள்கை முன்வைக்கிறதென்பதை இதை வாசிக்கையிலேயே நம்மால் அறிந்துகொள்ள இயலும்.

உதாரணத்துக்கு, இந்திய அரசியமைப்புச் சட்டத்தின்  எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள  முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும் என்ற வாக்கியம் என்ன  கூறுகிறதெனில், எட்டாவது அட்டவணையில் இருக்கும் மொழிகளிலேயே சிறந்த மொழியான சமஸ்கிருதம், உலகிலேயே பழைய மொழிகளான லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் வளமையான மொழியென்கிறது. 

அதாவது, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிலேயே சிறந்த மொழி சமஸ்கிருதம்தான் என்கிறது.  தமிழை விட சிறந்த மொழி என்ற பதத்தைப் பயன்படுத்தாமலேயே அந்த அர்த்தத்தை அளித்துவிட்டுச் செல்லும் இந்த வார்த்தைப் பயன்பாடு ஆழமான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இந்தப் புதிய கல்விக்கொள்கையின் நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள மேலே கண்ட ஒரு பத்தியே போதுமெனக் கருதுகிறேன்.

இருப்பினும், இன்னொரு பத்தியையும் நாம் அனைவரும் அறிந்துகொண்டே ஆகவேண்டும். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பகுதிகள் எனப் பேசும் பகுதி 3ல், 22.15 பத்தி பின்வருமாறு சொல்கிறது.

பல துறைகளிலும், பல வகைகளிலும் மிக விரிவான, முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்த சமஸ்கிருத மொழியை, அதன்  இலக்கியங்கள், கலாச்சாரப் பங்களிப்புகள் மற்றும் அதன் இயல்பான அறிவியல்பூர்வமான பார்வை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெறுமனே சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுப்பது என்றில்லாமல், சமஸ்கிருதத்தை பிரதானமாகக்கொண்ட கல்விமுறையை உருவாக்கி, பள்ளிகளில் வலுவான கல்வியாக வழங்கப்படும். 

 உயர்கல்வி உள்பட அனைத்து மட்டத்திலும் வழங்கும் வகையிலும், மூன்றுமொழி பாடத்திட்டத்தில் பிரதானமாக சமஸ்கிருதத்தை வழங்கும் வகையிலும் செய்யப்படும்.

சமஸ்கிருதம் என்பது தனிமைப்படுத்தி ஒரு பாடமாக மட்டும் கற்றுத் தரப்படுவதல்ல.  மாறாக, சுவையான, புதுமையான வழியில், காலத்திற்குப் பொருந்தும் நவீன வகையில், இதர முக்கியப் பாடங்களான கணிதம், தத்துவம், மொழி, நாடகம், வானவியல், யோகா மற்றும் பல துறைகளுடன் இணைத்துக் கற்றுத் தரப்படும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் என்பவை பரந்த அளவில், பல்துறை கல்வி கற்றுத் தரப்படும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்.

சமஸ்கிருதத் துறையானது சமஸ்கிருதத்தை கற்றுத்தருவது குறித்தும், பல துறைகளுக்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்தும், பல்துறைகளிலும் சமஸ்கிருதத்தை வளர்ப்பது குறித்தும் விரிவான சிறப்பான ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளும்.  சமஸ்கிருத அறிவு அமைப்புமுறையை விரிவாக்கி, வளர்த்தெடுப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, அதைப் பலப்படுத்துவதோடு, உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பல்துறை கல்வியை அளிக்கச் செய்வோம்.

ஒரு மாணவன் உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து வருகையில் ஒரு முழுமையான  பன்முக உயர்கல்வியின் இயல்பான பகுதியாக, சமஸ்கிருதமே இருக்கும். கல்வியியல் மற்றும் சமஸ்கிருதம்  என  பி. எட்டில் நான்கு வருடப் படிப்பில் ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைப் பரப்புதெற்கென்றே  தூதுப்பணி செய்யும் தொழில்முறை ஆசிரியர்களாக அதிக அளவில் நியமிக்கப்பட்டு பணியாற்றுவார்கள்.

பத்தி 22.15ல் இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. அநேகமாக, உலகத்தில் எந்த ஒரு நாடும் எந்த ஒரு மொழியையும் இப்படி தன்னுடைய கல்விக்கொள்கையில் கூறியிருக்கவே முடியாது. ஏனெனில், இக்கல்விக் கொள்கை கல்விக்கான மொழி பற்றிப் பேசவில்லை. இந்திய நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதும் ஆதிக்கச் சிந்தனையை கல்வியின் மூலம் அனைத்து நிலைகளிலும் திணிப்பது  குறித்துப் பேசுகிறது என்பதே உண்மையாகும்.

மும்மொழிக்கல்வி குறித்துதான் இக்கல்விக்கொள்கை பேசுகிறது என்று சொல்வோர்களே, சொல்லுங்கள், மும்மொழிக்கொள்கை உள்பட அனைத்து வழிகளிலும் சமஸ்கிருதத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க முயற்சிப்போம் என்று வெளிப்படையாகவே கல்விக்கொள்கை சொல்லிவிட்ட பின்பும், எதை மறைப்பதற்காக பொய் சொல்கிறீர்கள்?

சமஸ்கிருதம் இந்தியாவின் மொழியா? இந்தியாவிற்கென ஒரு மொழி இருந்ததாக வரலாறு சொல்கிறதா? இந்தியாவின் எந்த மாநில மக்கள் சமஸ்கிருதத்தை  தாய்மொழியாகக் கொண்டவர்கள்?

நவீன மொழியென சமஸ்கிருதத்தை சொல்லுகிறார்களே, இந்தியாவின் இன்றைய அறிவியல், தொழிற்நுட்பப் பயன்பாட்டில் சமஸ்கிருதத்தின் பங்களிப்பு என்ன? சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் அந்த மொழியின் பங்களிப்பு என்ன? தமிழும், தெலுங்கும், மலையாளமும், ஒடியாவும், வங்கமும் நிலைத்திருக்க சமஸ்கிருதம் அவசியமா?

சமஸ்கிருதத்தின் சமகால அவசியமென்ன? சமஸ்கிருதம் இல்லாததால்  சுதந்திர இந்தியா இழந்தது என எதையாவது சொல்லமுடியுமா? 

சமஸ்கிருதம் விரும்புவோர் அதைத் தாரளமாகக் கற்கட்டும். அதற்கான வாய்ப்பும், வசதியும் ஏற்கனவே இந்தியாவில் முழுமையாக இருக்கிறதுதான்.  அது சமூக உரையாடலுக்கான மொழியல்ல என்று அதைக் கற்றவர்களே அறிவார்கள். ஏற்றுக்கொள்வார்கள். அப்படியிருக்க, வழக்கில் இல்லாத ஒரு மொழியை நாடெங்கும் ஏன் இப்படித் திணிக்கவேண்டும்? 

அனைத்துப் பள்ளிகள் முதல் அனைத்துக் கல்லூரிகள் வரை சமஸ்கிருதம் மூலமாகவே கட்டடக்கலை கணிதம், தத்துவம், யோகா என அனைத்தையும் கற்றுத்தருவோம் என்கிறார்களே, அதற்கான அவசியமென்ன?

சமஸ்கிருத அறிஞர்களால் பல்துறை நுட்பங்கள் எழுதப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நாமறிவோம். ஆக, பல நூறாண்டுகளாய் காலப் பொருத்தம் இல்லாத மொழியென ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? 

கட்டடம், மருத்துவம், தத்துவம் ஆகிய எந்தத் துறையாயினும் சரி, நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாட்டியலை சமஸ்கிருத மொழியில் கண்டுபிடித்து யாரேனும் உருவாக்கியுள்ளார்களா? அப்படியான வளர்ச்சியை சமஸ்கிருதம் உள்வாங்கியுள்ளதா? நாடாளுமன்றத்தை பிரம்மாண்டமாய் கட்டப் போகிறீர்களே, நவீனத் தொழில்நுட்பத்திலா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தொழில்நுட்பத்திலா? 

அம்மொழியில் எழுதப்பட்ட நுட்பங்கள் அனைத்தும், இன்றைய காலத்திற்கு முற்றிலும் பொருத்தப்பாடு உள்ளதுதானா?  நிச்சயம்  இருக்காது என்பதை அனைவரும் அறிவோம். அப்படியிருக்க, எந்த அடிப்படையில் அந்த மொழியை ஒன்றிய அரசு இப்படித் தூக்கிப் பிடிக்கிறது?

சந்தேகமில்லாமல், சமஸ்கிருதமும் தொன்மையான மொழிதான். வளமான படைப்புகள் பல கொண்டவைதான். ஆனால், மக்கள் புழங்குவதற்கு “அனுமதிக்கப்பட்ட” மொழி அல்லவே. உலகில் எந்த மொழியாவது மக்கள் பயன்பாட்டிற்கு அல்ல என்று அறிவிக்கப்பட்டதுண்டா? பயன்படுத்தினால் தண்டனை என்று அறிவிக்கப்பட்டதுண்டா?

அப்படியான ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே ஆகும். அப்படித்தான்  அது வழக்கொழிந்து போனது என்பதையும் நாமறிவோம். அதனால்தான், இப்போது அந்த மொழியைக் காப்பாற்ற அனைவரும் படியுங்கள் என்கிறார்கள். அந்த மொழிக்கு உரிமை கொண்டாடியோர் யாரோ, அவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே, அதையேன் இன்று அரசின் அதிகாரத்திணிப்போடு அனைவரும் கற்கவேண்டும்?

பல சிறப்பான, பயன்பாட்டிற்குரிய குறிப்புகள் அம்மொழியில் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், அதைக் கற்க சமஸ்கிருதம் ஏன் கற்கவேண்டும்? ஆயுர்வேதக் குறிப்புகள் சமஸ்கிருதத்தில் உள்ளன எனில், அதை இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யுங்கள். அது தவறில்லை.  அந்த சமஸ்கிருத நூலின் புகழ் அழியாமல் இருக்கும். அதுவே காலத்திற்கு உகந்த செயலாகும்.

இதோ கொரோனா சிகிச்சைக்கு மரபு மருத்துவங்கள் பங்களிப்பு செய்கின்றன என்றபோதிலும், அதைப் புறக்கணிக்கிறீர்களே, இதுதானே மரபு மருத்துவத்தின் மீது ஒன்றிய அரசுக்கு இருக்கும் அக்கறை. ஆயுஷ் சிகிச்சை ஆய்வுகளுக்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ள விரும்பாத அரசு சமஸ்கிருதத்தை மட்டும் மரபின் பெயரால் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?

ஆங்கிலத்தில் உள்ள ஆய்வுகளை மட்டுமல்ல, கவிதைகளையே மொழியாக்கம் செய்து கற்கத் துவங்கிய காலமிது. ஆனால், அப்படிச் செய்யாமல், சமஸ்கிருத மொழியில் உள்ளதை சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டுதான் கற்கவேண்டுமெனச் சொல்லுகிறீர்களே, அதுவும் கல்விக்கொள்கையில் சொல்லுகிறீர்களே, உலக அறிவையெல்லாம் தன் அனைத்துக் குடிமக்களின் தாய்மொழியில் மொழியாக்கம் செய்து வளர்ச்சி பெற்ற வளர்ந்த நாடுகள் நம்மைப் பார்த்து கேலியாய் சிரிக்காதா? 

சமஸ்கிருதத்தை கற்க வருவோருக்கு தாரளமாய் கற்றுக்கொடுங்கள். ஏனெனில், வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நமது பண்பாட்டில் அம்மொழியை நிச்சயம் ஒதுக்கவோ, வெறுக்கவோ முடியாது. அதுவும், இந்திய மொழிகளில் ஒன்றாய் உலகில் நிலைபெறட்டும்.

ஆனால், உயர்கல்வியின் இயல்பான பகுதியாக சமஸ்கிருத வழியிலான பல்துறை உயர்கல்வி இருக்குமென்கிறீர்களே, அப்படியான அவசியம் என்ன இருக்கிறது? 

மூன்று மொழிகளை கற்றால் என்ன தவறென்று கேட்போர்களே, 

பி. எட் படிப்பில் சமஸ்கிருதம் பயின்றோரை அதிகப்படுத்தி, சமஸ்கிருதத்தை பரப்புவதை மட்டுமே தொழிலெனக் கொண்ட பல்லாயிரம் ஆசிரியர்களை நாடெங்கும் நியமிப்போம்  என்பதாகச் சொல்கிறார்களே, அதன் விளைவு என்னவாக இருக்குமெனக் கொஞ்சம் கற்பனை செய்தாவது பாருங்கள். இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும், குறிப்பாக, செம்மொழிகளுக்கு கூட அந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லையே, ஏன்? மொழி அரசியலை ஒரு கல்விக்கொள்கை செய்திடலாமா?

அரசியலைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மொழியை மட்டும் குறிப்பிட்டு, அந்த மொழிதான் உலகின் மொழிகளிலேயே சிறந்த மொழி, அறிவார்ந்த மொழியென ஒரு கல்விக்கொள்கை சொல்லுமெனில்,  அந்நாட்டிற்கான அதிகாரப்பூர்வ மொழியாக அந்த மொழியைத்தான் அந்தக் கல்விக்கொள்கை முன்மொழிகிறது என்பதாகத்தானே அர்த்தம் கொள்ளமுடியும்? 

கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம் எனப் பயன்பாட்டிலேயே இல்லாத ஒரு மொழியை மற்ற மொழிகளையும் விட சிறப்பு வாய்ந்ததாய் முன்மொழிகிறார்களே, அப்படியெனில் இதர மொழிகள் என்னாகும்?

இல்லையில்லை, கல்விக்கொள்கை  மற்ற மொழிகளைப் புறக்கணிக்கவில்லை. பிறமொழிகள் குறித்தும் நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்பார்கள் பாஜகவினர். சொல்லியுள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் எப்படித் தெரியுமா?

இந்தியாவின் மற்ற செவ்வியல் மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளிலும் விரிவான வளமான இலக்கியங்கள் இருக்கிறதாம். அதையும் பாதுகாக்க வேண்டுமாம். 4.18 பத்தி சொல்லிக்கொள்கிறது. சமஸ்கிருதக் கல்வி மற்றும் வளர்ச்சி குறித்து  சொல்லப்பட்ட அளவுக்கு ஏன் மற்ற செம்மொழிகள் குறித்து சொல்லப்படவில்லை என்பதுதான் கேள்வி.

21 இடங்களில்(மொத்தம் 23 இடம், இரண்டு இடத்தில் விளக்கத்திற்காக)  சமஸ்கிருதம் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ள கல்விக்கொள்கை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய செம்மொழிகளை இரண்டே இரண்டு இடத்தில் அதுவும் 4.18 என்ற ஒரே ஒரு பத்தியில், மற்ற செம்மொழிகளான என்றும் சொல்லும் வகையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இடத்திலும் சமஸ்கிருதம் மற்றும் இதர செம்மொழிகள் என்பதே பயன்பாடாகும். 

அந்தளவுக்கு சம்ஸ்கிருதம் உயர்ந்தது எனில், அதற்கான  ஒரு காரணத்தைக்கூட ஏன் இக்கல்விக் கொள்கை வெளிப்படையாய் கூறிடவில்லை? 

இந்தியாவுக்கென ஒரு தனித்த பாரம்பரியம், மதம், வரலாறு, மொழி மற்றும் பல்துறை அறிவு உள்ளதாக, ஆங்காங்கே பல இடங்களில் சொல்லும் கல்விக்கொள்கை அதைக் கற்றுக்கொள்ளும் ஒரே வழியாகவும், ஒரே மொழியாகவும் முன்மொழிவது சமஸ்கிருதமே மட்டுமே ஆகும். இதுதான் இக்கொள்கை முன்வைக்கும் ஆபத்துகளில் மிகத் தலையானதாகும். 

ஆம். இந்தியாவின் வரலாறும், கலாச்சாரமும் சமஸ்கிருதம் சார்ந்தது என்கிறார்கள். ஒரு மொழியின் கையில் மொத்த இந்தியாவுக்கான புகழையும் கொடுத்த பின்னர், மற்ற மொழிகளுக்கான அவசியமே காலப்போக்கில் இல்லாமல் ஆகிவிடுமே?

இந்தியா என்றொரு நாடே பிரிட்டிசாரின் நிர்வாக அமைப்புமுறையில் உருவானதென்கிறது நமது வரலாறு. சைவம், வைணம், புத்தம், சமணம் எனப் பல மதங்கள் இங்கு இருந்ததாகச் சொல்லும் நமது வரலாறு இந்துமதம் என்ற வார்த்தையே பிரிட்டிசார் உருவாக்கியதாகத்தான் சொல்கிறது. 

ஆக, இந்தியா என்ற நாடே கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன்பு இல்லாத ஒரு நாட்டில், இந்தியப் பாரம்பரியமென்று எப்படி இருக்கமுடியும்?  இன்றும் இந்தியாவுக்கென தனித்த பாரம்பரியமென்று எது இருக்கிறது?

மொழி, உடை, மதவழிபாடு மற்றும் மத நம்பிக்கைகள், உணவு, கோவில் அமைப்பு, கட்டடம், மருத்துவம், சாதி என்று எதை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவுக்கென ஒரு ஒற்றை அடையாளத்தை எதிலும் காணமுடியாத அளவுக்கு வேற்றுமைகள் பல கொண்டதே இந்தியா என்பதாகும். 

இந்து மதத்தையே எடுத்துக்கொள்வோமே, அது ஒரே பண்பாட்டைக்  கொண்டதல்லவே, நாடெங்கும் கோவில் அமைப்பு முறை, வழிபாடு, நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபாடுகள் ஆயிரம் கொண்டதாயிற்றே. அதனால்தான், அனைத்துப் பண்பாடுகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொல்லை பள்ளிக்கூடங்களிலேயே கற்றுத்தருகிறோம்.

ஆனால், புதிய கல்விக்கொள்கை என்ன கூறுகிறதெனில், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிறது. இதை எப்படிக் கற்றுத் தருவோம் என பத்தி 4.16ல் கூறுவதையும் பார்த்தால்  பாஜகவின் மறைநோக்கம் நமக்கு நன்றாகப் புரியும்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும்  முன்னெடுப்பின் மூலம், இந்தியாவின் மொழிகளை ஒவ்வொரு மாணவரும் உற்சாகமான செயல்வழிக்கற்றல்/  திட்டத்தின்  கற்றுக்கொள்வர். மொழியின் வரலாறு, வார்த்தை உருவான ஆதாரங்கள், உச்சரிப்பின் சிறப்புகள், இலக்கண அமைப்புகள் என மொழி குறித்தான பல செய்திகளையும் கற்றுத்தரப் போகிறார்களாம். எப்படித் தெரியுமா?

 சமஸ்கிருதம் மற்றும் இதர முக்கியமான செவ்வியல் மொழிகளுக்கு இடையிலான தொடர்புகள், ஒரு மொழி மற்றொரு மொழியின் மீது செலுத்தும் தாக்கம் மற்றும்  பிரமிக்கத்தக்க ஒற்றுமையைக் கற்றுக்கொள்வதன் மூலம் தெரிந்துகொள்வர் என்கிறது பத்தி 4.16. அதாவது சமஸ்கிருதம் மற்றும் இதர செவ்வியல் மொழிகளுக்கு இடையிலான  தொடர்பு மற்றும் தாக்கம் குறித்து சொல்லித் தருவார்களாம்.

என்ன சொல்லித் தருவார்கள்? சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பார்கள். அதற்கான பாடத்திட்டத்தை ஒன்றிய அரசே எழுதும் எனும்போது, யார் அதைக் கண்காணிப்பது? இந்தக் கல்விக்கொள்கைக்கே மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்யாத ஒன்றிய அரசு, பாடப்புத்தகங்களுக்கு கலந்தாலோசனை செய்யுமா என்ன?

இப்போதிருக்கும் மாநிலக் கல்வி அமைச்சர்களில் எத்தனை பேர் இந்தக் கல்விக்கொள்கையை வாசித்திருப்பார்கள்? மக்கள் அனைவருக்கும் இந்தக் கேள்விக்கான பதில் தெரியும்.  அப்படியிருக்க, மாநில மொழி, மாநில வரலாறு, மாநிலப் பண்பாடுகள் என்றெல்லாம் யார் பேசுவது?

ஒரே பாரதம் என்று சொல்வதே நமக்குப் புதிதாய் புதிராய் இருக்கிறது. ஆம். நாடு ஏற்கனவே ஒரே நாடாய்தானே இருக்கிறது. அப்புறமேன், அடிக்கடி ஒரே பாரதம் என்கிறார்கள்? பாரதம் எனும் சொல்லே பழங்காலத்தை நினைவுபடுத்தும் வேளையில், ஒரே பாரதம் என்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒரே பாரதமாக இருந்தபோது, சமஸ்கிருதம் பாரதமொழியாக இருந்தது எனச் சொல்லப் போகிறார்களா?  அல்லது இங்குள்ள அரசுகளுக்கிடையே தொடர்பு மொழியாக இருந்தது எனச் சொல்லப்போகிறார்களா?

ஆம்.  அதுதான் அவர்களின் நோக்கமாகும். சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என வரிக்கு வரி சொல்வதிலேயே நமக்குப் புரிந்திருக்கும். ஆம். சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தொன்மை மொழி, அதிலிருந்துதான் பிற மொழிகள்  உருவாகின என்று கற்றுத் தரப்போகிறோமென்று கல்விக்கொள்கையே சொல்லாமல் சொல்லிவிட்டது. 

சமஸ்கிருதம் என தனித்தும் மற்றும் இதர செவ்வியல் மொழிகள் என மொத்தமாகவும் ஒரே வார்த்தையில் சொல்லிச் சொல்லும் இடங்களில்,  வெளிப்படும் அந்த மொழி ஆதிக்கச் சிந்தனை வெளிப்படுத்தும் அரசியல் உண்மை இதுவே ஆகும். 

ஆம்.  இந்தியாவின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, கலைகள் என அனைத்துத் துறை சார்ந்த அறிவையும், அனுபவங்களையும் சமஸ்கிருதம் சார்ந்ததாய் சொல்லும்போது, அதையே நான்கைந்து ஆண்டுகளாய் போதித்தால், எதிர்காலத் தலைமுறைக்கு என்னவிதமான சிந்தனை எழும்? 

வரலாறு முக்கியம் அமைச்சரே எனச் சொல்லும் நகைச்சுவைக் காட்சியில் நடிகர் வடிவேல், வருங்காலத் தலைமுறைக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது என்று சொல்லிக்கொண்டே அவரின் உருவப்படத்தை வரையும் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள். அதுதான் கல்விக்கொள்கையில் நடந்திருக்கிறது.

இல்லையில்லை, அனைத்து மொழிகளையும்  ஒன்றிய அரசு சமமாய் மதிக்கிறது என்று வாய்கூசாமல் யாரேனும் சொன்னால், இதோ இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் போதும்.

2017 முதல் 2020 வரையான மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை 643.84 கோடி, தமிழுக்கு 22.94 கோடி. ஆண்டுவாரியாக, சமஸ்கிருத சன்ஸ்தனுக்கு 2019–20ல் 231.15 கோடி, 2018—19ல் 214.38 கோடி, 2017—18ல் 198.31 கோடி. வருடந்தோறும் உயர்ந்து வந்திருக்கிறது. தமிழுக்கு, 2019–20ல் 7.7 கோடி, 2018—19ல் 4.65 கோடி, 2017—18ல் 10.59 கோடி.  ஆக, தமிழுக்கான நிதி ஒதுக்கீடு. குறைந்துவிட்டது.

இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி மொழியைக் கற்பிக்க 2019-20 ஆம் ஆண்டில் 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை சமஸ்கிருதத்தை வளர்த்தெடுக்கும் பணியைச் செய்யும் அதே நேரத்தில், அதிகாரப்பூர்வ மொழித்துறையோ(அப்படி இருக்கிறதா) இந்தியை முன்னெடுக்கிறது. 


தமிழை விடவும் சமஸ்கிருதத்துக்கு 30 மடங்கு ஒதுக்கீடு அதிகம் என்பது மட்டுமல்ல.  இந்தியாவின் சுற்றுச் சூழல் துறைக்கு ஒதுக்கியதை விடவும் சமஸ்கிருதத்துக்கு அதிகம் எனில், சமஸ்கிருதம் மீதான ஒன்றிய அரசின் கவனம் நன்றாகவே அனைவருக்கும் புரியும். 

இந்தியாவின் பாரம்பரிய, பழைய சிறப்பான மொழியைக் கற்றுத்தர வேண்டுமென்று நினைக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்போர்களே,

நல்லது. உங்கள் நினைப்பு நல்லது. அப்படியெனில் தமிழைக் கற்றுக்கொடுங்கள். இந்தியாவின் மூத்த மொழி என்பது மட்டுமல்ல,  சந்தேகத்திற்கு இடமில்லாத வளமான மொழி தமிழே ஆகும். வழக்கில் இல்லாத மொழியை அனைவருக்கும் சொல்லிக் கொடுப்பதற்கு மாறாக, ஏற்கனவே எட்டுகோடிப் பேர் பேசும் மொழியை, எல்லோருக்கும் எளிதில் சொல்லிக் கொடுத்துவிடலாமே? 

 இன்று வரை உலகின் எல்லாத் துறையின் வளர்ச்சிகளையும் தனது மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. தமிழும் தன்னளவில் வளர்ந்துகொண்டே வருகிறது.  பிரதமரோ அல்லது நிதி மந்திரியோ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை உதாரணம் காட்டி எங்கும் பேசவில்லை. தமிழில் எழுதப்பட்டதை சொல்லித்தான் பேசுகிறார்கள்.  

உங்கள் நியாயப்படி பார்த்தால், பிரதமர் தமிழ் கற்றுக்கொண்டுதான் திருக்குறளை பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், நாங்கள் அப்படிச் சொல்லமாட்டோம். தமிழை தாராளமாய் யாரும் பயன்படுத்தட்டும். தமிழில் இருந்து மொழிபெயர்த்தும் அவரவர் மொழிகளில் சொல்லிக் கொடுத்துக் கொள்ளட்டும்.

என்ன, தமிழை இந்தியாவெங்கும் சொல்லித் தாருங்கள் என்று சொன்னால் கோபம் வருகிறதா? 

ஆம். வரும். நியாயமான கோபம்தான். தமிழ் எங்களின் தாய்மொழி. நாங்கள் தமிழ் வழியாகக் கற்றுக்கொள்கிறோம். அவரவர் அவரவர் தாய்மொழியின் வழியாகக் கற்றுக்கொள்ளட்டும். உலக அனுபவம் அதுதான். 

நாங்கள் ஏன் சமஸ்கிருதத்தின் வழியாக அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறோம். இதிலென்ன தவறு?

ஆகவே, ஒரு மொழியைக் கொண்டு இதர மொழிகளை அழிக்கும் அரசியலைச் செய்யாதீர்… அதைக் கல்வியின் பெயரில் செய்யவே செய்யாதீர்…

இதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். நாங்கள் சமஸ்கிருதத்தையும் எதிர்க்கவில்லை, இந்தியையும் எதிர்க்கவில்லை. நாங்கள் அவ்விரு மொழிகளையும் நிச்சயம் மதிக்கிறோம். அது தேவையெனில், கற்றுக்கொள்வோம். ஆனால், அதை கல்விக்கொள்கையின் மூலம் அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமெனத் திணிக்காதீர்கள்.

  • இல.சண்முகசுந்தரம்

Related Posts