அரசியல்

நவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக? உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்?

2020 நவம்பர் 26 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் 1991 முதல் அமுலாக்கப்பட்டு வருகிறது. அதனை எதிர்த்து அன்று முதல் வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்து வருகிறது. இது 20வது மிகப்பெரிய நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகும்.
அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகிற 11 முன்னணி தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசு ஊழியர் அமைப்புகள், பொதுத்துறையிலும், நிதித் துறையிலும் இயங்கி வரும் சங்கங்கள் மற்றும் விவசாயிகளையும், விவசாயத்தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல கோடி உழைக்கும் மக்கள் பங்கேற்கவுள்ளார்கள். கடந்த ஆண்டு பங்கேற்ற 20 கோடி எண்ணிக்கை இந்தாண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் , தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

ஏழு பிரதான கோரிக்கைகள்

  1. நிதித்துறையில் செயல்படுகிற பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட எந்த அரசு நிறுவனத்தையும் தனியார்மயமாக்க கூடாது.
  2. தேசிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.
  3. வயது அடிப்படையில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் சமீபத்திய மத்திய அரசின் சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
  4. தொழிலாளர் விரோத மற்றும் வேளாண் விரோத சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
  5. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை விரிவுபடுத்தவும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
  6. மாதந்தோறும் 10 கிலோ அரிசி/கோதுமை விலையில்லாமல் வழங்க வேண்டும்.
  7. வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ 7500 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்.

போராட்டங்கள் வெற்றி தருகின்றனவா? அப்படி என்ன வெற்றியை ஈட்டியிருக்கிறோம்?

நவீன தாராளமய அமலாக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளோம். ஆனாலும், முதலாளித்துவம் விடாமல் தனது தணியாத லாப வெறியால் தீவிரமான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.
உதாரணமாக, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம், விவசாயிகள் விவசாயக் கூலிகள் போராட்டம், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் 3 நாள் வேலை நிறுத்தம், பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பாரத் பெட்ரோலிய தொழிலாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம், ரயில் உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், உத்தரபிரதேச மின்சாரத் துறை தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் என சமீப காலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
வேகத்தை மட்டுப்படுத்துவதே வெற்றி தான். தள்ளிப்போடுவதும் வெற்றி தான். தடுத்து நிறுத்துவதும் வெற்றி தான்.
பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க இந்திய பொருளாதார இறையாண்மையைப் பாதுகாக்க, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க, கார்ப்போரேட் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் ஒப்பந்த வேளாண்மைக்கு எதிராகவும், மாறுபட்ட வேளாண் சந்தைக்கு எதிராகவும் அவற்றின் பாதிப்புகளிலிருந்து நமது இந்திய விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் நடைபெறுகிற நவம்பர் 26 ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒரு தேசபக்த போராட்டமாகும்.

தீவிரமாகும் நெருக்கடி

திடீரென்று திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், ஆலை மூடல்களால் இந்த மகா தொற்றுக் காலத்தில் சுமார் 14 கோடித் தொழிலாளர்கள் வேலையிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் 2 கோடி பேர் கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் வேலை இழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இருந்தது. தற்போது இது 23 சதமானம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கைகளில் குழந்தைகளுடன் நூற்றுக் கணக்கான மைல்கள் தங்களது கிராமங்களை நோக்கி நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. சர்வதேச பசிக் குறியீடு 2020-ன் படி, 107 நாடுகளில் 94 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
இதிலிருந்தெல்லாம் ஏழை எளிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும், மீட்பதற்கு மாறாக எதிர்த் திசையில் இந்த அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கி வருவதுடன் அவர்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. 29 தொழிலாளர் சட்டங்கள் இப்போது 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட்டில் முதல் தொகுப்பு சட்டம் “கூலித் தொகுப்பு சட்டம்- 2019” நிறைவேற்றப்பட்டது. 2020 செப்டம்பரில் மூன்று தொகுப்பு சட்டங்கள் (தொழிலுறவு தொகுப்பு சட்டம்- 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்பு சட்டம் – 2020, பணித்தல பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு சட்டம் – 2020) நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்த சட்ட தொகுப்புகள், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளையும் பறிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சங்கம் சேரும் உரிமையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் பறிக்கிறது. நிரந்தர வேலைகளுக்கு மூடுவிழா நடத்துவதாக இந்த சட்டத் தொகுப்புகள் இருக்கின்றன. அதேபோல, வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பினையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
மின் விளக்கை கண்டுபிடித்தவுடன் அன்றைய கொத்தடிமை கூலிகள் அதனை வெறுப்புடன் அடித்து நொறுக்கினார்கள் என்று பல மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறோம். காரணம் மின்விளக்கு இல்லாமலேயே 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது, மின் விளக்கு வந்து விட்டால் 24 மணி நேரமும் உழைக்க வேண்டியிருக்கும், முதலாளிகள் சுரண்டுவார்கள் என்பதை இதை விட விளக்க முடியாது. அதே போல, இரவிலும் இருட்டிடங்களிலும் தொழிலாளர்கள் வேலை பார்க்க முடிந்ததால் இந்த மின்விளக்குகள் தான் தொழில் புரட்சியில் பெரும் தாக்கத்தை செலுத்தின என்றும் கூட சில பதிவுகள் இருப்பதைப் பார்க்கிறோம். காரணம் முதலாளிகளின் லாப வெறி. அன்றைக்கு பெண்கள், குழந்தைகள் என்று அனைவரையும் லாப வெறியுடன் முதலாளிகள் 16 மணி நேரம் வேலை வாங்கினார்கள் என்பதை நாம் வரலாற்றினை புரட்டும் போது தெரிந்து கொள்கிறோம்.

தீவிரமடையும் சுரண்டலும்
வேலை நேர நீட்டிப்பும்……

தற்போதும் தொழிலாளர் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் இது அமலுக்கும் வந்துள்ளது கொரோனா மகா தொற்றின் பெயரிலே.
தொழிலாளியைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனில், 30 நாள் முதல் 90 நாள் வரை முன் அறிவிப்பு தந்து செய்ய வேண்டுமென்று இருந்தது. ஆலைகள், தோட்டங்கள், சுரங்கங்கள் ஆகிய தொழில்களில் 100 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்கள் எண்ணிக்கை இருப்பின் அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆட்குறைப்பு செய்ய முடியாது என்றும் இருந்தது. இப்போது இந்த விதிகள் எல்லாம் தளர்த்தப்பட்டுள்ளது. புதிய தொழிலுறவு தொகுப்பு சட்டத்தின் மூலம் 300 தொழிலாளர்க்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். நிறுவனங்களை மூட முடியும்.
இது வரை தொழிலாளர்கள் இரண்டு வாரங்களில் இருந்து ஆறு வாரங்கள் வரை முன் அறிவிப்பு தந்துவிட்டு வேலை நிறுத்தம் செய்ய முடியும். ஆனால், தற்போது புதிய சட்டத்தின்படி 60 நாள் முன் அறிவிப்பைத் தர வேண்டும். மின்னல் வேலை நிறுத்தங்கள் (Flash Strikes) தடை செய்யப்படுகின்றன.
விவசாயிகளுக்கு “சுதந்திரம்” தருபவை என இந்தியப் பிரதமர் சொல்லி மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால், ”உண்மையில் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் அவர்கள் தங்களை சுரண்டலுக்கு சுதந்திரமாக ஆட்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக மாறிக் கொள்வதற்கான சுதந்திரம். தற்கொலை செய்து கொள்வதற்கான சுதந்திரம். இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்கானவை. பதுக்கலையும், கறுப்புச் சந்தையையும், கார்ப்பரேட் மற்றும் பெரு வணிகர்களின் ஆன்லைன் சூதாட்டத்தையும் சட்ட பூர்வமாக்குபவை. நுகர்வோர் கூடுதல் விலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைந்த விலைதான் கிடைக்கும். குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு தர வேண்டுமென்பதைப் பற்றி இந்த சட்டம் எதுவுமே பேசவில்லை. மாறாக ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிக்கிறது. இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். விவசாய விளைபொருள் சந்தைக் கழகத்தின் அதிகாரங்கள் நீர்த்துப் போகும். மொத்த விவசாயச் சந்தையும் கார்ப்பரேட் வசம் கை மாற்றப்படும். விவசாயிகள் குறைகளைத் தீர்க்க உயர் நீதி மன்றத்தையே நாட வேண்டும். இவையெல்லாம் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக மாற்றி விடும்” என்று விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் தோழர் அசோக் தாவ்லே கூறுகிறார். வேளாண் சட்டங்களால் சாதாரண ஏழை எளிய மக்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றைக்கு நகரங்களுக்கு வேலை தேடி வருபவர்களில் மிகப் பெரும்பான்மையினர் விவசாயத்துறையின் சீர்குலைவினால் வேலையிழந்தவர்களே ஆவர்.

யாருக்காக தற்சார்பு
முதலாளிகளுக்கா
தொழிலாளிகளுக்கா…….

நிதி ஆயோக்கின் CEO இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று சொல்கிறார். எதற்கு?
தற்சார்பு இந்தியா குறித்தும், அதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்தும் பிரதமர் கூறுகிறார். ஆனால், மறுபுறம் நவரத்னாக்களையும், மகா ரத்னாக்களையும், மினி ரத்னாக்களையும் தனியார்களுக்குத் தாரை வார்க்கத் துடிக்கிறது மத்திய அரசாங்கம். இந்தியாவில் 339 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 10 மகாரத்னாக்கள், 14 நவரத்னாக்கள், 74 மினி ரத்னாக்கள். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று இந்த நிறுவனங்களில் 23 நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நிலம், நீர், ஆகாயம், விண்வெளி எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரை வார்க்க துடிக்கிறது அரசாங்கம். உண்மையில் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டியுள்ள வருமானமும், லாபமும் தற்சார்பு இந்தியாவிற்கு உதவாதா?
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் 2018-19 ல் செயல்பாட்டின் மூலம் ஈட்டியுள்ள மொத்த வருவாய் ரூ 25,43,370 கோடிகள் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ 21,54,774 கோடிகள். ஓராண்டில் 18.03 சதவீதம் உயர்வாகும். அதே போல, 2018-19 ல் நிகர லாபம் ரூ 1,42,951 கோடிகள். முந்தைய ஆண்டில் இது ரூ 1,23,751 கோடிகள். 15.52 சதவீத உயர்வாகும். பொதுத்துறை இருக்கும் வரையில் தான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு என்பது கிடைக்கும். கடந்த 2019 ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி ரூ.62,296.04 கோடி இந்தியன் ஆயில் ரூ.42,113.76 கோடி, என்.டி.பி.சி ரூ19,989.20 கோடி, பவர் கிரிட் ரூ.19,624.78 கோடி, பாரத் பெட்ரோலியம் ரூ.17.058.52 கோடி, கோல் இந்தியா ரூ. 13,792. 82 கோடி, ரூரல் எலக்ட்ரிபிக்கேஷன் ரூ.7,010.83 கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளன.
கார்ப்பரேட் கடன்கள் write-off என்ற பெயரில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. வெகு சமீபத்தில் Bhusan Steel, Lanco, Frost Int., ABG Shipyard, Rotomac, IVRCL உள்ளிட்டு 66 பேர் கடன் ரூ.18 ஆயிரம் கோடியை IOB வங்கி ரைட் ஆப் செய்துள்ளது. அதில் 0.5 % மட்டுமே வசூலாகியுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. லாபம் ஒன்றையே நோக்கமாக கொண்டு பெருநகரங்களில் மட்டுமே செயல்படும் தனியார் வங்கிகள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன்களை வழங்கக் கூடியதாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் ஐசிஐசிஐ வங்கியில் அதன் மேலான் இயக்குனர் மூலம் நடைபெற்ற ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. யெஸ் வங்கி தனது தவறான கடன் கொள்கையால் கிட்டத்தட்ட திவால் நிலைக்கு சென்றுள்ளது. தற்போது ஷெட்யூல்ட் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியும் அதே நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது. எனவே இவை அனைத்தையும் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க அரசாங்கமோ சில பொதுத்துறை வங்கிகளை தனையார்மயமாக்கும் முடிவுகளை நோக்கி செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி 8500 பேருக்கான தொழில் பழகுனர் (Apprentice) பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்திருப்பது பொதுத்துறை வங்கிகளின் நிரந்தர பணித் தன்மையின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலே அன்றி வேறொன்றுமில்லை.
இ.பி.எப் மற்றும் இதர பிரிவுகள் சட்டத்தின் (EPF and Miscellaneous Provisions Act) அடிப்படையில் உருவாக்கப்பட்ட மத்திய பி.எப் அறக்கட்டளை (Central Board of Trustees) தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இ.பி.எப் க்கான பங்களிப்பை 12% லிருந்து 10 % க்கு குறைத்திருக்கிறது.
ரயில் போக்குவரத்து, ரயில் நிலையங்கள், ரயில் உற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள், துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, இலாபம் தரும் அரசுத் துறை நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள், இயற்கை வளங்கள், பாரத் பெட்ரோலியம் போன்ற வளமான பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு, ஏர் இந்தியா, தரைப் போக்குவரத்து, என அனைத்தும் விற்பனைக்கு. அதைவிட விண்வெளி ஆரோய்ச்சியிலும் தனியார்மயத்தை புகுத்தும் ஏற்பாடு நடக்கிறது. பி.எஸ்.என்.எல் லுக்கு இன்றுவரை 4ஜி தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
பொது இன்சூரன்ஸ் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஜி.ஐ.சி ரீ மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. தற்போது பங்குச் சந்தையில் எல்.ஐ.சி நிறுவனம் பட்டியலிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. எல்.ஐ.சி 1956 ல் இருந்து 2020 வரை டிவிடெண்ட் தந்து வருகிறது. 1957 ல் 1.45 கோடி கொடுத்த எல்ஐசி, 1980 ல் 18 கோடி, 2000 ல் 316 கோடி, 2009 ல் 929 கோடி, 2019 ல் 2660 கோடி, 2020 ல் 2698 கோடி கொடுத்துள்ளது. அதன் சொத்துக்களும் 32 லட்சம் கோடிகளை விஞ்சி இருக்கிறது. வணிகத்திற்கான பெரிய வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. ஏனென்றால், இந்தியாவின் சராசரி வயது 29, அமெரிக்காவில் இது 40, ஐரோப்பாவில் 46, ஜப்பானில் 47… இப்படியொரு வளமான சந்தை பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களின் கண்களை உறுத்துகிறது. அரசிற்கு வருமானம் வேண்டுமென்றால், கார்ப்பரேட் வரியை உயர்த்ததலாம். அல்லது, சூப்பர் ரிச் வரி, செல்வ வரி, வாரிசுரிமை வரி… இப்படியெல்லாம் சிந்திக்கலாம். அதற்கு அதன் வர்க்க பாசம் இடம் தரவில்லை. ஆகவே பொதுத் துறை பங்கு விற்பனையை நாடுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களின் பஞ்சப்படியை மத்திய அரசாங்கம் முடக்கியுள்ளது. மத்திய அரசு இவர்களிடமிருந்து ரூ 37350 கோடிகளை பறித்துள்ளது. பஞ்சப்படி உயர்வு பறிக்கப்பட்டதால் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் ரூ 1260 முதல் ரூ 4000 வரையிலும், பென்சன்தாரர்கள் ரூ 630 முதல் ரூ 3500 வரையிலும் இழப்பார்கள்.
நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணிற்கான அடிப்படை ஆண்டை 2001-ல் இருந்து 2016க்கு மாற்றி மத்திய அரசு எதேச்சதிகாரமாக தான்தோன்றித்தனமாக அறிவித்துள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பஞ்சப்படி உயர்வு உரிமையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் இரண்டு முறை மாற்றிய போதும், உயர்வான மாற்று காரணிகளைக் கொண்டே (Conversion factor) கணக்கீடு செய்யப்பட்டது- அதாவது, 1960-ல் இருந்து 1982க்கு மாற்றப்பட்டபோது 4.93 என்றும், 1982 லிருந்து 2001க்கு மாற்றப்பட்டபோது 4.63 என்றும் கணக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 2001ல் இருந்து 2016க்கு மாற்றும்போது வெறும் 2.88 என்ற மாற்று காரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது பஞ்சப்படி உயர்வை குறைக்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?
அதே போல, இதற்கு முன் 2001 என்ற அடிப்படை ஆண்டை 2020ஆக மாற்ற வேண்டும் என்று எடுத்திருந்த முடிவு தற்போது 2016ஆக மாற்றப்பட்டிருப்பதிலும் சரி, சில மாவட்டங்களை நீக்கிவிட்டு, சில மாவட்டங்களை புதிதாக இணைத்திருப்பதிலும் சரி, ஒரே நோக்கம் தான். அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைப் பூசிமெழுகும் ஏற்பாடு அது. மேலும், ஒவ்வொரு மாற்றத்தின் போதும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கணக்கீட்டு பட்டியலில் இருந்து வெளியேற்றப் படுவதும், முக்கியத்துவம் இல்லாத பொருட்கள் சேர்க்கப்படுவதும் விலைவாசியின் தாக்கத்தை குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
அரசிற்கு வருமானம் வேண்டுமென்றால், 2019 ல் இந்தியாவில் தனியார் செல்வ மதிப்பு ரூ 945 லட்சம் கோடிகள். இதில் டாப் 1 சதவீதத்தினர் வசம் இருப்பது 42.3 சதவீதம். அதாவது ரூ 400 லட்சம் கோடிகள். 2 சதவீத செல்வ வரி போட்டால் கூட ரூ 8 லட்சம் கோடிகள் கிடைக்கும். இந்த செல்வ வரியோடு சேர்த்து இந்தியாவில் வாரிசுரிமை வரியை டாப் 1 சதவீதத்தினர் செல்வம் மீது 5 சதவீதம் என்ற அள்வில் விதித்தால் அதன் மூலம் ஆண்டிற்கு ரூ 6.67 லட்சம் கோடி கிடைக்கும். அப்படியெனில் டாப் 1 சதவீதம் பேரிடம் இருந்து ஆண்டிற்கு ரூ 14.67 லட்சம் கோடிகள், அதாவது நடப்பு ஜி.டி.பி யில் 14.67 லட்சம் கோடிகள் கிடைக்கும்.
சேம நல அரசு என்ற முறையில் இந்திய மக்களின் ஐந்து அடிப்படை பொருளாதார உரிமைகளைப் பலப்படுத்த முடியும். உணவு உரிமை, வேலை உரிமை, பொது சுகாதார உரிமை, பல்கலைப் பட்டம் வரை அரசு நிதியுடனான கட்டணமற்ற கல்வி உரிமை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் ஆகியன ஆகும். இவற்றை நிறைவேற்ற கூடுதலாக ஜி.டி.பியில் 10 சதவீதம் தேவைப்படும். மேற்கண்ட வரிகள் மூலம் கிடைக்கிற வருவாய் மூலம் இவற்றைப் பலப்படுத்த முடியும். இவை சந்தையில் ஏற்படுத்துகிற தூண்டுதல் – இப் பயன்களைப் பெறுபவர்கள் சந்தையில் செலவழிப்பார்கள் அல்லவா- கூடுதலாக இவற்றில் 15 சதவீதத்தை மீண்டும் வரிகளாக கொண்டு வந்து சேர்க்கும். அரசாங்கத்திற்கே “இன்ப பூமராங்காக” திரும்ப புதிய வருமானம் கிடைக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் செல்வ வரி, வாரிசுரிமை வரி மூலம் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் இக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான தொகையை கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறது என்று பிரபாத் பட்நாயக் கூறுவதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது எமர்ஜென்சி என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்று பல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இன்று பாராளுமன்ற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குள்ளாகியுள்ளது. பெரும்பான்மை என்ற பெயரில் ஜனநாயக மாண்புகளும், நிறுவனங்களும் சிதைக்கப்படுகிறது. அரசின் நிலைப்பாடுகளை ஆதரிப்பவர்கள் தேசபக்தர்கள். எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என கற்றம் சாட்டப்படுகிறது இன்று எமர்ஜென்சி இல்லை என்ற போதிலும் சர்வாதிகார போக்கின் அம்சங்கள் வெளிப் படுவதை பார்க்க முடிகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பேச்சுரிமை, எழுத்துரிமை ஒடுக்கப்படுகிறது. தொழிற்சங்க சட்டங்கள் திருத்தப்படுகின்றன. அரசு ஊழியர்களின் பஞ்சப்படி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, முதலாளித்துவ ஆதரவு நிலைபாடு ஆட்சியாளர்களால் எடுக்கப்படுகிறது. விவசாயிகள், உழைப்பாளி மக்கள் நலனை விட, கார்ப்பரேட் நலன், பெருமுதலாளிகள் நலன் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆகையினால்தான் விவசாயிகள், உழைப்பாளி மக்கள், சாதாரண மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
”ஒரு பொருளாதார நெருக்கடியின் உச்சம் எமர்ஜென்சியில் தான் வந்து முடியும் என்றால், அந்த நெருக்கடி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்றால், ஒரு சர்வாதிகார அரசு அமைவதற்கான அத்தனைக் கூறுகளும் அதில் உள்ளது. எதிர்காலத்தில் ஒரு சர்வாதிகார அரசு மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என இப்போது நாம் நினைத்தால் அது நம்முடைய அறியாமையாகவே அமையும். ஆகையால் இதனை எதிர்த்து ஒரு அரசியல் போராட்டம் நடத்த வேண்டியது இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. முக்கியமான ஒன்று” என்றார் தோழர் சரோஜ் சவுத்ரி.
சரோஜ் சவுத்ரி அவர்கள் சொன்னதைப் போல, ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் காக்க வேண்டிய பொறுப்பும், அதனை விரிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு, தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது தொழிலாளர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று. விவசாயிகளும் தொழிலாளர்களும் கரம் கோர்க்க வேண்டியது தற்போது மிகவும் அவசியமாகிறது. தொழிலாளர் விடுதலைக்கும், சுரண்டல் அமைப்பு வீழ்த்தப்படுவதற்கும் முன் நிபந்தனை தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையாகும்.அந்த ஒற்றுமையின் சாட்சியாய் நடைபெற இருக்கும் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்.

  • ஆர்.எஸ்.செண்பகம்.

Related Posts