இதழ்கள் இளைஞர் முழக்கம்

யாருக்கு பிரதம சேவகன்?

  • கிரிஜா

நாடாளுமன்றத்தின் வாயிலில் நுழைகின்றபோது மண்டியிட்டு படிக்கட்டுகளை முத்தமிட்டு உள்ளே நுழைந்த நரேந்திர மோடி, தான் இந்திய நாட்டின் பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகன் என்றார். ‘நல்ல நாட்கள்‘ மக்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றபோது இவ்வாறு இவர் சொன்னது மக்களின் மனதில் ஓர் இயல்பான எதிர்பார்ப்பை உருவாக்கியது. தங்களின் துன்பங்களை எல்லாம் கடந்த கால பழங்கதையாக்கிவிடுகிற கொள்கைகளை இவரது அரசு செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. ‘மேக் இன் இந்தியா‘, ‘தூய்மை இந்தியா‘ எனத் துவங்கிய மோடியின் முழக்கங்கள், ‘ஸ்கில் இண்டியா‘, ‘டீம் இண்டியா‘, ‘ஸ்டெடி இண்டியா’, ‘ஸ்டாண்ட் அப் இண்டியா‘, ‘ஸ்டார்ட் அப் இண்டியா‘ ‘டிஜிட்டல் இண்டியா’ என போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய நாட்டின் சாதாரண ஏழை மக்களுக்கு, உழைப்பாளிகளுக்கு நல்ல நாட்கள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படவே இல்லை. அதுமட்டுமின்றி, பழைய மோசமான நாட்களையாவது எங்களுக்கு திருப்பித் தாருங்கள் என கேட்கக் கூடிய நிலையே எழுந்துள்ளது.

யார் ‘மக்கள்’?

இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என நமது நிதியமைச்சர் கூறுகிறார். விவசாயிகள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகிறார். நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயிகளும் தங்களது நலனை தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற கருத்தை கொண்டிருப்பதால், இவர்களது நலன் காக்கும் கொள்கைகளை தான் செயல்படுத்திட தேவையில்லை என மோடி அரசு கருதுகிறது போலும். அதனால்தானோ என்னவோ சமூக நலத் திட்டங்களுக்கும், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்குமான நிதியினை வெட்டிச் சுருக்குகிறது. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 17 சதவீதமே நமது நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதமாக உள்ள விவசாயிகளின் பங்காக உள்ளது. அதே நேரத்தில், டாலர் பில்லியனர்கள், அதாவது சுமார் ரூ.6000 கோடி சொத்து மதிப்புள்ள இந்திய செல்வந்தர்கள் 100 பேர் இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கினை சொந்தமாக்கி உள்ளனர். இந்தப் பிரிவு மக்களின் நலன் காக்கவே மோடி அரசு விரும்புகிறது. எனவேதான், 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான வரிச்சலுகைகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்படுகிறது. ஆக, இத்தகைய கார்ப்பரேட்டுகளே இவர்களது பார்வையில் மக்கள் ஆவர்.

கார்ப்பரேட்டுகளின் காவலன்

மோடி அரசின் இத்தகைய கொள்கைகளால் அம்பானிகளும், அதானிகளுமே பலனடைந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்ற 800 மில்லியன் மக்கள் வாழ்கிற இந்த நாட்டில்தான், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர் ஈட்டுகின்ற செல்வச் சீமான்களும் வாழ்ந்து வருகின்றனர். கார்ப்பரேட் உலகில் கோலோச்சும் இச்சீமான்கள், நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு மென்மேலும் ஏற்றம் பெற்று வருகின்றனர். மார்ச் 2014ல் 2.8 பில்லியனாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, மோடியின் ஓராண்டு ஆட்சிக் காலத்திலேயே கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்து செப்டம்பர் 2015ல் 7.1 பில்லியன் டாலர் என உயர்ந்திருக்கிறது. நாளது தேதியில் அதானியின் சொத்து மதிப்பு 7.6 பில்லியன் டாலராக உள்ளது (ஆதாரம் – ஃபோர்ப்ஸ்). இது ஏதோ இயல்பாக நடந்த ஒன்றல்ல என்பது கடந்த கால நிகழ்வுகளை நினைவு படுத்திப் பார்த்தால் தெளிவாகும்.

நினைவலைகளில்…

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த 51 வயதான அதானி, வைர வியாபாரியாக தனது வாழ்க்கையைத் துவக்கினார். பின்னர், அவரது மூத்த சகோதரர் நடத்தி வந்த ப்ளாஸ்டிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், அதானி ஏற்றுமதி நிறுவனத்தை சொந்தமாகத் துவக்கினார். பின்னர், அரபிக் கடலின் கரையோரத்தில் குஜராத்தில் துறைமுகம் கட்டுவதில் தனது கவனத்தை திருப்பினார். இதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் துவக்கத்தில் தோல்வியடைந்தன. எனினும், 1995ல் இவரது முயற்சிகள் வெற்றி பெற்று, முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்கான ஒப்பந்தம் குஜராத் மாநில அரசுடன் எட்டப்பட்டது. மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது.

குஜராத் மாநில முதல்வராக மோடி அவர்கள் பதவியேற்பதற்கு முன்னர், குஜராத்தில் புதிதாக தோன்றி வரும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் ஒன்றாகவே அதானியின் நிறுவனமும் இருந்ததாக கார்ப்பரேட் வட்டாரத்தினர் கூறுகின்றனர். குஜராத் மாநில முதல்வராக மோடி பதவியேற்ற 6 மாத காலத்தில் – அதாவது 2002 நிதியாண்டின் இறுதியில், அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 375 மில்லியன் டாலராக இருந்தது. 2013 நிதியாண்டின் இறுதியில் இச்சொத்து மதிப்பு 50 மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்து 20.6 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. குஜராத்தில் ஆட்சியிலிருந்தவர்களின் அருளாசியினால் கிடைத்த சலுகைகள் அத்தகைய வளர்ச்சிக்கு வழி கோலின. இக்காலகட்டத்தில், அதானி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு பங்குச் சந்தையில் 85 மடங்கு அதிகரித்தது. பிரதமர் வேட்பாளராக மோடியின் பெயர் வெளிவந்தவுடனே, இந்நிறுவனத்தின் பங்குகள் மும்மடங்கு உயர்ந்ததை காண முடிந்தது. அதே போன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் செல்வந்தருமான முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 11 சதவீதம் அதிகரித்தது.

விரலுக்கு தக்க வீக்கம்?!

இந்திய நாட்டின் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும்போது, அவரவர் வசதிக்கேற்பவே வாழ வேண்டும் என்று இலவச ஆலோசனையை அள்ளித் தரும் மோடி போன்றோருக்கு, அதானி வகையறாக்களை பார்க்கும்போது இதுவெல்லாம் நினைவுக்கு கூட வருவதேயில்லை. அதனால்தான், அவர்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்கள். அதானிக்கு சலுகை அளிப்பதில் மோடியின் குஜராத் மாநில அரசு சாதனை படைத்தது. ஆம், இவர்களது அருளாசி காரணமாகவே, மின்சார கொள்முதல் தொடர்பான ஒப்பந்த விதிகளை அதானியின் மின்சார நிறுவனம் அப்பட்டமாக மீறியபோது அதற்கான அபராதத் தொகையை வசூலிப்பதில் கூட ஆட்சியாளர்களின் இரக்கம் கரை புரண்டோடியது. எனவேதான், 240 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 80 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் துறையில் அனுமதியின்றியே மிகப் பெரிய கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்திட அதானி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நல்ல காலம் வந்ததே …

வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய அபராதத் தொகை முழுமையாக வசூலிக்கப்படாதது தொடர்பாக எழுந்த பிரச்சனை பிரதமர் மோடியின் ஆட்சியில் பனிபோல் விலகியது. ஆம், குஜராத்தின் முந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலத்தினுள் கடலோரப் பகுதியை தனது சட்டவிரோத நடவடிக்கைகளால் அதானி நிறுவனம் மாசுபடுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதி மன்றம் இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, அதனுள் எழுப்பபட்டுள்ள தொழிற்சாலைகள் தங்களது செயல்பாட்டை நிறுத்திடவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அதானி நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது. எனினும், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தங்களது செயல்பாடுகளை தொடரலாம் என்றும், எந்த விரிவாக்கமோ, கூடுதல் கட்டுமானப் பணியோ மேற்கொள்ளப்படக் கூடாது என கட்டளையிட்டது. மேலும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை எடுத்திடுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினை அறிவுறுத்தியது. மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்ற 2 மாதத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அளிக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் மோடி முன்வைத்த நல்ல நாட்கள் இன்று அதானி வகையறாக்களுக்கு கை கூடி வருகிறது.

பிரதமராகப் பொறுப்பேற்ற நாள் முதல் உலகம் சுற்றும் வாலிபராக மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போதெல்லாம் அவரின் செல்லப் பிள்ளைகளான கார்ப்பரேட்டுகளும் உடன் சென்றனர். பிரதமரின் எல்லா வெளிநாட்டு பயணங்களின்போதும் அவருடன் சென்ற அதானி, பிரதமர் தங்கிய அதே ஓட்டலிலேயே தங்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமம் துவங்கிட கடன் வழங்க சர்வதேச வங்கிகள் பல முன்வராதபோது பாரத ஸ்டேட் வங்கி முன் வந்ததன் சூட்சுமத்தை யாரும் விளக்கிட வேண்டிய அவசியமில்லை.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களோடு அரசு தனது நடவடிக்கைகளை பின்னிப் பிணைந்திருக்கச் செய்திடும் நடைமுறையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைக்கும்போது அதனை செயல்படுத்த முன்வராத இவர்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுமாறு இளைஞர்கள் எழுப்புகின்ற கோரிக்கையை செயல்படுத்திட மனம் இல்லாத இவர்கள், அதானிகளின், அம்பானிகளின் உள்ளக்கிடக்கைகளை எல்லாம் செயல்படுத்திட ஆளாய்ப் பறக்கிறார்கள். இவர்களது இந்த வர்க்க பாசம் மாற்றப்பட வேண்டுமெனில், மக்கள் ஒன்று திரண்டு போராட்ட களத்தில் நின்றிட வேண்டும்.

Related Posts