பிற

எவன்டா இலுமினாட்டி . . . . . . . ?

“உன் பிரச்சனைகளுக்கு நீயோ, இந்த அரசோ, சமூகமோ, உற்பத்திமுறையோ காரணமில்ல. எங்கயோ இருக்கிற கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் காரணம்” என்று சொல்லி எதற்கும் போராடவிடாமல் காலங்காலமாக ஜோசியக்காரர்கள் நம்மைத் தடுத்தார்களல்லவா…

அதேபோன்று, “இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் எங்கயோ இருக்கிற 13 பேர்தான் காரணம். நீயும் நானும் எதையும் மாற்றிவிட முடியாது. போய் பொழப்பப்பாரு” என்று சொல்பவர்கள்தான் இலுமினாட்டி குறித்து பேசுபவர்கள். அவர்கள் சொல்லும் அந்த 13 பேர்தான் இலுமினாட்டிகளாம்.

இயற்கையை விளங்கிக்கொள்ளாத காலகட்டத்தில் மழை, வெயில், சூரியன், மேகம், மரம், செடி, கொடி என உலக மாற்றங்கள் அனைத்துக்கும் மேல இருக்கிற எவனோ ஒருத்தன்தான் காரணம் என்று சொல்லிப்பழகினார்கள் மனிதர்கள். இதெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த அறியாமை… பின்னர் படிப்படியாக கற்றுக்கொண்டு உண்மையை மனித இனம் தெரிந்து புரிந்துகொண்டது. ஆனால் எல்லாவற்றையும் அலசி ஆராயும் அளவுக்கு மனிதனுக்கு அறிவும், தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இன்றைய காலகட்டத்திலும், இப்படி எதற்கெடுத்தாலும் இலுமினாட்டிதான் காரணம் என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள் இந்த இலுமினாட்டி கதையை அளப்பவர்கள்.

‘ஒரு பொய் சொல்லும்போது, அதில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கவேண்டும்’ என்பதற்கு சரியான உதாரணம்தான் இலுமினாட்டிகள் பற்றி சொல்லப்படும் கதைகள்….

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்ள சுரண்டலின் காரணமாக, உலகின் மிகச்சிலரிடம் பெரும்பாலான செல்வம் சென்று சேர்ந்துவிடுகிறது (அல்லது அவர்கள் சேர்துக்கொள்கிறார்கள்) என்கிற தத்துவார்த்த உண்மையிலிருந்து பாதியை மட்டும் (சிலர் மட்டும் பணக்காரர்கள் ஆகிறார்கள்) எடுத்துக்கொண்டு, அதில் தனிநபர் எதிர்ப்பை இணைத்து உருவாக்கப்பட்ட கதைதான் இலுமினாட்டிகள் பற்றி சொல்லப்படும் கதை.

இன்றைக்கு இந்தியாவில் பெரும்பணக்காரராக அம்பானியாக ஆதிக்கம் செலுத்துகிறார் என்றால், அதுவே நேற்று டாட்டாவாகவோ, நாளை வேறு யாரோவொருவராகவோ இருப்பார். இது சர்வதேச அளவிலான வரலாற்றுக்கும் பொருந்தும். சில ஆயிரக்கணக்கான பெருமுதலாளிகளில் ஒரு 13 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒழித்துக்கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் இலுமினாட்டிகளுக்கு எதிராக சொல்லப்படும் உளரல். மிகச்சில தனிநபர்களாலா உலகில் எல்லா சுரண்டல்களும் நடக்கின்றன?

உலகத்தொழிலாளர்கள் ஒன்று சேர்வதற்கு முன்னரே உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதனால் உலகளவில் சுரண்டப்படும் செல்வங்களில் பெரும்பகுதி ஓரிடத்தில் மையங்கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனை புரிந்துகொள்ளாமல், 13 பேர்தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்வதால் யாருக்கு என்ன பயன? இதிலிருந்து எதனைக் கற்றுக்கொண்டு என்ன தீர்வினை முன்வைக்கிறார்கள் அந்த புரளியக் கெளப்பியவர்கள்? என்று யோசிக்கவேண்டும். அவர்களின் நோக்கமே ஒன்று, உலகப்பிரச்சனைகளுக்கு தனிநபர்களே காரணகர்த்தா என்று தத்துவங்களை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது.. குறிப்பாக மார்க்சிய தத்துவத்தை… மற்றொன்று, இலுமினாட்டிகள் குறித்து பரப்பப்படும் (புதிது புதிதாக தகவல்களை இணைத்து) சமீபகால செய்திகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே வருவதாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் (குறிப்பாக கத்தார், சவுதி, உள்ளிட்ட நாடுகள்) உருவாகிவரும் சமூகப்/பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மக்கள் தங்களது அரசுகளை எதிர்த்துக் கேள்வி கேட்டுவிடாமல் இருப்பதற்கு, இப்படியாக எல்லாப்பிரச்சனைகளுக்கும் சில யூதர்கள்தான் காரணம் என்ற கதைகளை அளந்துவிடுவது ஆட்சியாளர்களின் நோக்கம்…

இலுமினாட்டிகள் என்பவர்கள் வெறுமனே 13 பேரல்ல.. சில ஆயிரம் பேர். அவர்கள் வேறு யாருமல்ல, பெருமுதலாளிகள் தான்…

அதிலும்கூட முதலாளிகள் என்கிற தனிநபர்களை அல்ல… முதலாளித்துவம் என்கிற அமைப்பையும், தத்துவத்தையும், அதன் உற்பத்தி முறையையும், அது செய்யும் சுரண்டலையும் தான் நாம் எதிர்க்கவேண்டும்… எதிர்த்துப் போராடவேண்டும்…

 – இ.பா.சிந்தன்

Related Posts