இலக்கியம்

கருப்பு யானைகளுக்கு வெள்ளையடிக்கும் ஜெயமோகன்

– கரன் கார்க்கி,

எழுத்தாளர்.

நசுக்கப்பட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் விடுதலை குறித்தும் பேசுகிற இலக்கியங்கள் இன்று உலகெங்கும் சீறி கிளம்பிக் கொண்டிருக்கின்றன. சுரண்டல் காயங்களால் மரத்துப் போன மனங்களில் கூட கசிவை உண்டாக்கி அதில் சனநாயக மருந்துகளை தடவிக் கொண்டிருக்கிற இலக்கியங்களை யாரொருவரும் வரவேற்பதில் இணக்கம் காட்டாமலிருக்க முடியாது. ‘*கருப்பர் நகரத்தின் மீதான கரிசனம் காலம் கடந்ததானாலும்’ வரவேற்கப்பட வேண்டியதே. (* கருப்பர் நகரம் – சென்னை குடிசைப் பகுதிவாழ் மக்கள் குறித்த நாவல்)

ஆனால், துயரத்தின் விசும்பல்களாலான கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ள கூடிய நவீன நாட்களில் சுரண்டல் கைகள் இலக்கியத்திலும் ஆழ ஊடுருவ முயல்கிறது. அதுதான் எம்மை திடுக்கிட வைக்கிறது. ஜெயமோகன் அவர்களின் வெள்ளையின் வழி நெடுக வரலாறை அறுத்து கூறு போட முயன்றுள்ளது எதற்காக? யார் கண்ணீரை துடைக்க? யாருக்கு கண்ணீர் வரவழைக்க?

இரண்டாயிரமாண்டுக்கும் மேலான துயரங்களின் பரு உடலின் மீதான வெள்ளை துகிலுரிக்க புலம்பல்களிலிருந்து வெளியேறி கருப்பு எழுத்தாணிகள் விரைத்துக் கொண்டு இயங்குகிற காலமிது. வெள்ளையானை பாசாங்காய், நெஞ்சில் குத்திய முள்ளின் உறுத்தலின் துயர்தீர பிளிறி தீர்க்கிறது. கற்பனைகள் எதற்கு? நிசங்களின் காட்சிகளே கற்பனைகளை மிஞ்சிவிடும். கற்பனைகள் கருப்பர்களின் வாழ்வியலை மறைத்துவிடும் அபாயம் உள்ளது. வெள்ளையானையில் அந்த அபாயம் மிக தந்திரமாக நிரம்பி வழிகிறது.

1870 நிகழ்த்தப்பட்ட பஞ்சம் குறிப்பாக 1878ல் அதன் உச்சநிலைதான் நாவலின் காலம். அப்போது நடந்த தொழிலாளர் போராட்டத்திற்கு குறிப்பாக ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு, இரண்டு கொலைகள்தான் காரணம் என்று நாவலில் சொல்லப்படுகின்றது. எல்லாம் சரி, இது போன்ற படைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவையே, நாமும் வரவேற்கிறோம். ஆனால், படைப்பினூடே பகடைகள் உருட்டப்பட்டுள்ளதை நாம் கவனிக்காமல் இருந்துவிட முடியாது.

அதீத கற்பனைகள் நிசத்தின் கோர்வையை உடைத்து பல இடங்களில் அதிகமாக ஒலிக்கிறது. வா ஆனால் இன்னொரு முறை முடிவிலா மன்னிப்பின் சிலுவையுடன் வராதே குருதி வெறிகொண்ட வாளுடன் வா, இந்த பூமியை ஒரு சீழ்கட்டிப் போல உடைத்து திறக்கும் பிரம்மாண்டமான வெடிமருந்து மலையுடன் வா (115 பக்கம்) சீழ்கட்டிகள் எதையும் உடைத்து திறப்பதில்லை. சீழ்கட்டிகளை நாம் தான் உடைக்க வேண்டும் என்று வெள்ளையானைக்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜெயமோகன் அவர்களே உங்களுக்கு வலி குறைவு அதனால் முரண்பாடுகள் நீண்டு விரிகிறது.

வந்தவர் முடிவில்லா மன்னிப்புடன் வந்ததாக கிளிபிள்ளை போல சொல்பவர்களுடன் நீங்கள் சேர்ந்துக் கொண்டது புதுமையில்லை, உண்மையில் அவசியத்தின் போது சாட்டையால் விளாசியவர் தான். அப்போது சாட்டை இப்போது எதுவோ?எல்லா காலத்திலும் அவர் வந்து கொண்டுதானிருக்கிறார். குருதி வெறி கொண்ட வாள் எதற்கு?

அநீதிக்கெதிரான நியாயம் தீர்க்கும் ஆயுதங்களை ஒடுக்கப்பட்ட மனிதர்களே ஏந்தி புறப்பட்டுவிட்டார்கள். அன்றைய மதராசப்பட்டினம் சதுப்பு நிலமாக இருந்ததில்லை அது உலர்ந்த மேட்டுப் பகுதிதான். இடுப்பளவு சேற்று நீர் என்பதெல்லாம் அதீத கற்பனை. இங்கே கோடை காலத்தில்தான் கொஞ்சமாவது வாழ முடியும் என்ற வரிகள் முரண்களின் பிளிரலில் சின்ன சான்று. சென்னையில் எப்போதுமே கோடை காலம்தானே. அதுவும் கடும் பஞ்ச காலத்தில் மிக்க கொடுமையானதாக சித்தரிப்பது அதிக புனைவுதானே.  (பக்கம் 115)

உண்மையில் வெள்ளையர்களால் உண்டாக்கப்பட்ட சேரிகளின் குடிசைகள், இன்றைய குடிசை மாற்று வாரியத்தின் அளவைவிட கூடுதலானது என்பதுதான் உண்மை. கழிப்பிட வசதி அன்று மட்டும்தான் மோசமாக இருந்ததா? என்பது இன்றுள்ள நிலையைப் பார்த்தாலே தெரியாதா?.

**

ஏறக்குறைய ஆறடி உயரம் அகலம் எட்டடி நீளம் கொண்ட பனிக்கட்டிகளை துண்டாக்கி மீண்டும் அவைகளை மரப்பெட்டிகளில் அடைத்து அனுப்புகிற தொழிலாளர்களின் உடற்திறனை ஜெயமோகன் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“அத்தனை தொழிலாளர்களுக்கும் சருமம் முழுக்க பாறையில் பாசி படர்ந்தது போல சாம்பல் பூச்சாக தேமல், அக்குள்களிலும்,கழுத்துகளிலும் செவ்வெண்ணிறமான புண்கள், சில சிறு மீன்களின் வாய்கள் போலத் திறந்திருந்தன. தோண்டப்பட்ட சில கண்கள் போல சில விழித்திருந்தன. கைகளிலும், கால்களிலும் விரல்கள் அழுகிய நீர்பாம்புக் குஞ்சுகள் போலத் தோல் உரிந்து சதை வெளுத்து விறைத்திருப்பதை கண்டான். அவர்களிடமிருந்து வந்த நெடியை, அவன் நாசி அறுத்தது. புண்களின் நாற்றம், அழுகும் சதைகளின் நாற்றம்…” இன்னும் நீள்கிறது. 30 டன் எடையுள்ள பெரிய பனிக்கட்டியை கையாளும் தொழிலாளர் உடல் இப்படியிருக்க முடியுமா?

**

ஜெயமோகனின் மெய் மனசாட்சி எய்டன் மூலமாக இப்படி பேசுகிறது. இந்த தேசத்தில் தீண்டப்படாத மக்கள் இத்தனை தூரம் வெறுக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கும் காரணம் அவர்களேதான். இங்கே மிகப்பெரும்பான்மையினராக இருந்தார்கள் என்பதுதான். இந்த மண்ணே அவர்களுக்குதான் சொந்தம். அவர்களை அடக்கிச் சுரண்டித்தான் இந்த நாடு உருவாகியிருக்கிறது. ஆகவே, அவர்களை இவர்கள்( சாதி வெறியுள்ளவர்கள்) மனமாற வெறுத்தாக வேண்டும் வேறு வழியே இல்லை. (பக்கம் 144)

சுரண்டலை குற்றவுணர்ச்சியே இல்லாம செய்தால் மட்டும்தான் நான் நல்ல ஆட்சியாளனாக முடியும் (பக்கம் 143) எய்டன் வழியாக ஒட்டுமொத்த ஆதிக்கச் சமூகமும் இப்படித்தான் நம்புகிறது. பன்னெடுங்காலமாக இப்படித்தான் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் மனசாட்சி, கொஞ்சம் பிளிரல், வெள்ளை யானையை வாசிக்கும் போது தவிர்க்க முடியாமல் நம் முன் தோன்றும் உண்மையானது.

அரை வெள்ளை மற்றும் அதன் போதனைகளை ஏற்ற கருப்பு யானைகளின், சாதிய சுரண்டல் கோரைப் பல்லை (தந்தத்தை)வெள்ளையானையில் வாயில் மிக திறமையாக வலுக்கட்டாயமாக சொருகுகிறார் ஜெயமோகன். ‘சொல்லப் போனால் இந்த நாட்டில் சாதிகளை இந்த அளவுக்கு உறுதியாக நிலைநாட்டியது பிரிட்டிஷ் ஆட்சிதான். கோல்லெட் அன்று நினைத்திருந்தால் ஒருவேளை இங்கே சாதி பேதங்களை தடைசெய்திருக்கலாம்.’ (பக்கம் 163) புத்தனாலும், சங்கரராலும் முடியாமல் போனதை கோல்லெட் செய்திருக்கலாம் என்று சொல்வது ஏனென்று வாசகர்களுக்குப் புரியும்.

**

வெள்ளையர்கள் ஆட்சி வந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை காலம் தந்த கொடையென்று வரலாறு தெரிந்த எந்த மூளையும் ஏற்றுக் கொள்ளும். வெள்ளையானை அந்த மதிப்பீட்டை துடைத்தழிக்க முயல்கிறது. அதோடு வெள்ளையன் ஒடுக்கப்பட்ட மக்களை பூண்டோடு அழித்தொழிக்க ஏகாதிபத்திய மனசாட்சியோடு செயல்பட்டது என்று ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும் வெள்ளையன் மீது மட்டும் திணிக்க முயல்கிறது. இதெல்லாம் வெறுமனே வெள்ளையன் ஆண்ட காலத்துல மட்டும்தான் நடந்தது என்று வரலாற்று மனசாட்சியுடன் மட்டுமல்ல, சராசரி மனசாட்சியுடன் கூட சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் வெள்ளையனிடம் பதிவுகளில் இவை பதியப்பட்டிருந்தன. அவற்றை புரட்டி புதினங்களில் புனைவுகள் செய்ய…

 எய்டன் பஞ்சத்தின் குரூரத்தை காண நகருக்கு வெளியே போகிறான். அங்கு பசியால் பிணங்களை போல மாறிவிட்ட பெருங்கூட்டத்தை பற்றி வர்ணிப்புகள். நாய்கள் தோண்டி எடுத்துப் போட்ட புதைந்து மக்கிய சடலங்கள், மெலிந்து கருவாடாய் போன குழந்தைகள், பஞ்சத்தில் கோரம் இந்த புனைவுகளின் வழியே எய்டன் குமுறுகிறான்.

“ஆம் முட்டாள்கள் தான். வாழத்தெரியாதவன் முட்டாள். அவனுக்கு வாழ்கை கொடுக்கப்படக் கூடாது. அவர்கள் சாக வேண்டியதுதான். ஏன் இந்த கூட்டம் இவர்களுக்கு மேலே உண்டு, களைத்து அமர்ந்திருப்பவர்களை தாக்கக் கூடாது? கடித்து ரத்தம் குடிக்கக் கூடாது? தசைகளை பிய்த்து தின்னக் கூடாது? கெஞ்சி, கெஞ்சி சாகிறார்கள். கெஞ்சுபவர்கள் போல அருவெறுப்பூட்டுவது வேறில்லை (ப.232)

எய்டனுக்கு வரலாறு தெரியாது போலும். ஆனால், எய்டன்னை புலம்ப வைத்த ஜெயமோகனுக்கு 1945 – ல் ஜெர்மன் முகாம்களில் யூதர்களின் நிலை என்ன?

நிராயுதபாணியாய் இருப்பவன் யூதனாய் இருந்தால் என்ன, பறையனாய் இருந்தால் என்ன? கெஞ்சி, கெஞ்சி சாவதை தவிர. பசியால் நாசமடைந்தவர்கள் ஏதாவது கிடைக்காதா என்று சூழ்ந்துவிடும் பலவீனமானவர்களுக்கு எதிராக எய்டன் வாளை உருவுகிறான். (வழியேற்படுத்துவதற்குத்தான்)

சுரண்டுபவர்களின் நியாயம் ஒன்றே, ஒன்றுதான். சுரண்டு, அவன் சாகும்வரை சுரண்டு. அவன் சுரண்டப்படுவதற்காகவே பிறந்தவர் என்று உங்கள் மனசாட்சியில் நியாயமாக எழுதிவிட்டப் பிறகு என்ன இந்திய சமூகத்தால் நான்கைந்து பேரை தவிர மற்றவெனெல்லாம் அடிமைதான். ஒரு அடிமை தனக்குக் கீழான அடிமையை சுரண்டும் போது தன்னை மேலானவனாகக் காண்கிற உணர்வைப் பெறவும், தனது மேலாண்மையை தனது அடிமை மீது சங்கிலி போல பயன்படுத்தவும் சாதி கட்டமைக்கப்பட்டுள்ளது. சங்கிலித் தொடரின் முதலிடத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் மட்டுமே வெள்ளையன் வந்து உட்கார்ந்து கொண்டான். சங்கிலியின் கடைசியில் இருந்த விளிம்பு மனிதனை மேலிருக்கும் ஒட்டு மொத்தமும் உறிஞ்சி தீர்த்ததென்ற உண்மையை வாசகர்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது.

**

வெள்ளையானையின் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒன்று பனிக்கட்டிக் கம்பெனியின் அதிகாரி பார்மர்: “என் வாழ்க்கையில் மிக, மிக மோசமான நாட்கள் இங்கே நான் செலவிடும் இரண்டு வருடங்கள். இந்த நரகத்தில் ஆன்மா இல்லாத வாழ்க்கையில்” இங்குள்ள சாதி என்ற விசயத்தை எங்களால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை என்று மனம் கலங்கும் பார்மர் அதை பயன்படுத்திக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

வெள்ளையானையே இங்குள்ள கருப்பு முதலாளிகள் தங்கள் (சாதி) வலையில் சிக்க வைத்துவிடும் குரூரம் இருக்கும் போது பட்டினியான உடல்களால் என்ன ஆகும். பார்மர் சொல்கிறான் இங்குள்ள ஒரு பரமபக்தன் ஆயிரம் தீண்டப்படாத குழந்தைகளை எந்த மனசாட்சிப் பிரச்சினையுமின்றி சாகவைப்பான். இங்குள்ள தொழிலாளிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கூலியும் வசதியும் தர தயாராக இருக்கிறோம். ஆனால், இவர்கள் விட மாட்டார்கள். இப்போது தீண்டப்பட்டாதவர்களுக்கு கொடுக்கும் கூலியே அதிகம் என்று சொல்கிறார்கள். கொடுக்கப்படும் எந்த சலுகையும் இங்குள்ள சமநிலையை குலைத்துவிடும். இன்றைய சூழலில் உயர்சாதியினர் இல்லாமல் நாங்கள் செயல்பட முடியாது என்கிறார்.

தலித்தை ஒடுக்கி மேலும் ஒடுக்கி அவனை போதிய வசதிகள் இல்லாமல் குறைந்த கூலிக்கு வேலை வாங்க வெள்ளை நிர்வாகத்தை உயர்சாதி கங்காணிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பரதவர் படகு ஓட்டுவார். ஆனால், சரக்கை உள்ளூருக்குள் கொண்டு செல்ல கோமுட்டிச் செட்டிகள் தேவை. பனிக்கட்டியால் மரத்துகளை போடவும், அதைக் கொண்டு வருவதற்குமே தனியாக ஒரு சாதி உள்ளது. இப்படி பல சாதிகளை ஒருங்கிணைக்க பிராமணர் தேவை. பிராமணர்களுக்கு ஆயுதம் மூலம் உதவி செய்ய ரெட்டிகள், இப்படி இதை மீறி என்ன செய்ய முடியும் என்று கண்ணீர் வடிக்கிறார். எல்லாம் சரி, இதில் ஜெயமோகன் எங்கே அம்பலமாகிறார் என்றால் இதே பக்கத்தில் மேலும் பேசுகிறார்.

“நீங்கள் இந்த நாட்டில் வெளியே பார்க்கும் அதே அடிமைத்தனமும் ஈவிரக்கமற்ற சுரண்டலும்தான் எங்கள் நிறுவனத்திலும் இருக்கிறது. இங்கே உள்ள எல்லா நிர்வாகிகளும், கங்காணிகளும் (தொழிலாளிகளையும் அவன் மனைவியையும் கொன்ற நீலமேகம் உட்பட) ரெட்டி, நாயுடு என்ற இருசாதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் நீங்கள் நினைப்பது போல மூர்க்கர்களோ கொடுமைக்காரர்களோ அல்ல. மிக மிக புத்திசாலிகள். ட்யுடர் அன்ட் கம்பெனி லாபத்தில் இயங்குவதற்கு இவர்கள்தான் காரணம். நல்லவர்கள். உபசரிக்கும் பண்புள்ளவர்கள்.” கொலை செய்தவனை நல்லவன் என்று பார்மரை சொல்ல வைக்க ஜெயமோகன் மனசாட்சி விரும்புகிறது.

**

இந்த நாவலில் வரும் ஒவ்வொருவரும் இந்திய சனாதன மனசாட்சியுடனே இயங்குகிறார்கள். எய்டன், பார்மர் என்கிற வெள்ளையர்கள் கூட சூழலுக்கு ஏற்ப நிறங்களை மாற்றிக் கொண்டே போகின்றன. பனிக்கட்டி கிடங்கில் கொல்லப்பட்ட தொழிலாளியை அடையாளம் காட்டச் சொல்லி கேட்கிறான். இந்த இரண்டு உயிரற்ற உடல்களும் உயிரோடு இந்த கம்பெனியில்தான் உழைத்தன என்று சொல்ல வேண்டும். தொழிலாளர்களோ அச்சத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு தரும் என்று ஊக்கப்படுத்துகிறார். தொழிலாளர்கள் அமைதியாக இருக்க முட்டாள்களே, கேடுகெட்ட முட்டாள்களே. மிருகங்கள், ஆன்மா மட்கிப் போன வாழும் பிணங்கள், கோழைகள் மனித புழுக்கள் ஒருவன் முன் வந்து குரல் கொடுக்கக் கூடாதா? அதற்காக செத்தாலும் என்ன? (291 ப)

இப்படியெல்லாம் எய்டனின் மன்வோட்டம் இருப்பதாக ஜெயமோகன் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். கருப்பன் சாட்சி சொல்கிறான். பார்மர் குறுக்கிட்டு அவன் அடையாளம் தெரியாமல் பேசுகிறான் என்கிறார். சாட்சி சொன்ன கருப்பனை ஜெயமோகன் இப்படி வர்ணிக்கிறார். கரும் பாறையின் ஓரம் நெருப்புக்குச் சிவக்கிறது. பற்றிக் கொள்ளப் போகிறது என்று. ஜெயமோகனுக்கு வரலாற்றறிவு அதிகம்தான். ஆனால், அவர் திட்டமிட்டு விட்டார் அவர் பாதையை என்ன செய்ய.

ஐயா ஜெயமோகன் அவர்களே. கரும்பாறையல்ல, நன்கு காய்த்த மரம்தான், சுரண்டி தின்னும் நாய்கள் அதில் எப்போதும் எச்சிலையும், சிறுநீரையும் பீய்ச்சியடிக்கின்றன என்பதை நாம் சொல்ல வேண்டியுள்ளது. வெள்ளையனே இங்குள்ள கருப்பு கங்காணிகளின் வலையில் சிக்கி கட்டுப்படும் போது பட்டினியிலான உடல்களால் என்ன ஆகும்? ஒரு கட்டத்தில் காத்தவராயன் நான் வெள்ளை மனசாட்சியை நம்புகிறவன் என்று சொல்ல முயலும் ஜெயமோகன், அதற்கு எய்டன் மூலம் பேசுகிறார்.

“தென்னமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த வெள்ளை இனம் செய்த பேரழிவுகளை இந்த நாட்டின் சாதிவெறியர்கள் அவர்களின் உச்சக்கட்ட கீழ்மையிலும் கூட செய்ய துணியமாட்டார்கள். இதை காத்தவராயனுக்கு சொல்லி புரிய வைக்கமுடியுமா?” என்று யோசிக்கிறார். வரலாறு… வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்லி நம்மை இலகுவாக்கிக் கொள்வதை தவிர வேறென்ன?

**

இந்த நாவலில் வரும் காத்தவராயன்தான் அயோத்திதாச பண்டிதர். வரலாற்றில் மறைக்கப்பட்ட மகத்தானவர்களில் அவரும் ஒருவர். அவர் குறைந்தது பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார். எதிலும் வெள்ளையர்களின் கொடுமைகள் விவரிக்கப்படவில்லை என்பது ஒரு தகவலுக்காக… வெள்ளையன் என்பவன் சுரண்டிக் கொழுப்பவர்கள் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் சுரண்ட வந்தவன் நாம் உணர்ந்துதானிருக்கிறோம். ஆனால், நீங்கள் வெள்ளையானையின் தாக்குதலுக்குள்ளான கருப்பர்களை ஏன் எழுத வந்தீர்களென்று புரிகிறது.

கங்காணியால் கொல்லப்பட்ட தீண்டப்படாத தொழிலாளியில் மரணத்துக்கான விசாரணைக்கு உடன்பட பனிக்கட்டி கம்பெனியின் அமெரிக்க நிர்வாகி பார்மரின் மனது மாறினாலும் அதை ஏற்க முடியாத அய்யங்கார் மறுப்பதை விவரிக்கும் பகுதிகள் கவனிக்கபட வேண்டியவை.

வெள்ளையானையை இந்திய பாகுபாட்டுக்கு உடன்பட வைத்த உள்ளூர் அரை வெள்ளையானைகளின் கபடம் தோலுரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி இல்லாமல் போயிருந்தால் இந்த நாவலை நிறுவியிருக்க முடியாது என்பதால் மட்டுமல்ல இந்திய சாதிய மனசாட்சியை சமாதானம் செய்ய வேறு வழி. இந்த நாட்டின் சாதி வெறியர்கள் அவர்கள் உச்சக்கட்ட கீழ்மையிலும் கூட செய்யத் துணிய மாட்டார்கள் என்று வெள்ளையரை குற்றம்சாட்டி சாதிய வெறியர்களுக்கு வக்காலத்து வாங்கிய ஜெயமோகன்தான் இதையும் எழுதுகிறார்.

“பார்மரின் கட்டுப்பாட்டிலில்லாத நிர்வாக கட்டிடம் உட்பட முர்ஹரி அய்யங்காரின் கைகளுக்கு மாற்றப்பட்டு, தொழிலாளர்கள் போராட்ட களத்தில் நிற்கிறார்கள். என்னுடைய சொத்தையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியது மாட்சிமை தாங்கிய பேரரசியின் அதிகாரத்தின் பொறுப்பு என்று எய்டனுக்கு கோரிக்கை வைக்கிறார்.

எல்லாம் சரி இவர்களுடன் பணியாற்றிய தொழிலாளர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை எழுதிக் கொடுங்கள் போதும், போராடும் தொழிலார்கள் கரைந்து போவார்கள்.

கொல்லப்பட்டவர்கள் என்னுடைய தொழிலாளியல்ல என்பதுடன் அவர் சொல்கிறார். ஒரு தீண்டப்படாத தொழிலாளி கொல்லப்பட்டதற்கு விசாரணை வரும் என்றால் என்னுடைய நிர்வாக ஊழியர்கள் மனந்தளர்வார்கள். அதோடு அச்சத்தால் மட்டும்தான் இந்த பெரும் கூட்டத்தை நாங்கள் ஆட்சி செய்கிறோம்.

மேல்சாதியையும், அரசாங்கத்தையும் எதிர்க்க முடியும் என்று இவர்கள் முதல்முறையாக கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது வனவிலங்குக்கு முதல் ருசியை காட்டுவதைப் போல, இது உடனடியாக நசுக்கப்பட வேண்டும். (337,338 ப)

நீங்கள்தான் இந்த நீசர்களை வளர்த்துவிட்டீர்கள். இந்த மண்ணில் இந்த நீசர்கள் எவ்வளது அவ்வளவு மட்டும் எஞ்சியிருப்பார்கள். பிரிட்டிஷ் மகாராணியை விட கடவுளின் ஆணை பெரிது..அவர்களெல்லாம் போரில் செத்தவர்கள், கடவுளுடன் போர் செய்தார்கள். அவர்கள் கடவுள் உருவாக்கிய சட்டங்களை மீறினார்கள். இதோ நிற்கிறானே (காத்தவராயனை காட்டி) இவன் அணிந்திருக்கும் இந்த வெள்ளை உடைக்காகவே இவன் கூட்டத்தை கடவுள் கொன்றொழிப்பார். பிராமணனாகிய என் முன் தலைப்பாகையுடன் நின்றதற்காகவே இவர்கள் லட்சம் பேரை கடவுள் மண்ணோடு, மண்ணாக நசுக்கி தேய்ப்பார்…” இன்னும் நீண்ட புலம்பல். அய்யோ பாவம். பாவிகளா உங்கள் கண்களைப் போலவே கடவுளின் கண்களையும் கருதும் மகா தந்திரசாலி பாத்திரத்தை படைத்த ஜெயமோகன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். அதே நேரம் பெரும் பஞ்சங்களில் உழைக்க முடியாதவர்களும், நோயாளிகளும், கீழ்நிலை மக்களும் தான் சாகிறார்கள். அவர்கள் சாவதானால் மிச்சமாகும் உணவு மூலம் இதைவிட பெரும் பஞ்சங்கள் தவிர்க்கப்படுகின்றன என்று எய்டன் மூலம் பேசுவது ஜெயமோகன்.

**

எல்லோரும் தடுமாறி, உருமாறி மொள்ளமாறியென கதாப்பாத்திரங்கள் பாசாங்கு செய்யும் போது, மரியாவின் உறுதி நாவலின் நல்ல அம்சம். ஆங்கிலோ இந்திய பெண்ணான அவள் ஐஸ் ஹவுஸ் கலவரத்தில் தொழிலாளிகள் கொல்லப்பட்டதற்கு எய்டன்தான் காரணம் என்று அவனை நிராகரிக்கிறாள்.

இந்த கேடு கெட்ட மண்ணை உதறி என்றாவது நான் அயர்லாந்து செல்வேன் என்றால் நீயும் என்னோடு வர வேண்டும் என்று அவள் கையை பிடிக்கிறான். “ச்சீ..கையை எடு மிருகமே என்றைக்கு நீ என் மக்கள் மீது காலை வைத்து மிதித்து இறங்குவதை கண்டேனோ அன்றே நான் உன்னை புரிந்து கொண்டேன் போ வெளியே” எய்டனை காரி உமிழ்ந்து துரத்துகிறாள்.”

பார்மர் ஒத்துக் கொண்டும் அந்த ஊழியனுக்கும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென வாய்கூசாமல் பொய்யுரைக்கும் முரஹரி அய்யங்காரோடு ஒப்பிடும்போது மரிஸா இந்த மண்ணின் நல்ல ஆன்மா. ஒருவேளை திரையிட்டு மூடப்படாத மனசாட்சியென்று சத்தமாக சொல்ல முடியும்.

**

இருப்பினும், ஜெயமோகன் ஆங்கிலோ இந்திய பெண்கள் குறித்த உங்கள் வரலாற்று பார்வையின் குரூரம் புரிகிறது. “அந்தரங்கக் கணங்களில் முனங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட மாமிச பொம்மைகள். வெள்ளையன் அவனுடைய காமத்தையும், ஆதிக்க மனநிலையையும் இங்குள்ள தசைகளில் செலுத்தி தனக்கென செதுக்கி எடுத்த மனித உடல்கள் (130 ப) இந்திய மண்ணில் அரை வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தவன் ஒவ்வொருவனுமே கலப்பு இனத்தவன்தான் என்று நாம் சொல்லித்தானா ஜெயமோகனுக்கு தெரியப் போகிறது.

**

ஒரு மனிதனை சுரண்டி கொள்ளையடிக்கும் முன் வலுவுள்ள மனிதன் எப்படி தன் மனசாட்சியின் மீது திரை போட்டு மூடி தூங்க வைக்கிறான் என்பதை ஒளிவு மறைவின்றி ஜெயமோகன் பேசுகிறார். திரை அவரது மனசாட்சியிலிருந்து கொஞ்சம் விலகி கொண்டுள்ளது.

வெள்ளையானையின் பிளிரல்கள் வெறுமனே வெள்ளையானைக்கு மட்டுமல்ல அரை வெள்ளை மற்றும் கருப்பு யானைகளுக்கு மிக பொருத்தம். ஜெயமோகன் அப்படிச் சொல்ல விரும்பாவிட்டால் நாமென்ன செய்ய மனசாட்சியும் ஆன்மாவும் நமக்கு ஒன்றே. அதை விடவும் இது வெறுமனே வெள்ளையன் அதிகாரம் செய்த முன்னூறு ஆண்டுகால விசயம் மட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே நூற்றுக்கணக்கான நீலமேகம்கள் சாட்டையுடன் துரத்திய ஒடுக்கப்பட்டவனுக்கு பஞ்சகாலம்தான் என்று இந்த நாவலில் வரும் எய்டனுக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்தே சொல்ல வேண்டியது வரலாற்று கடமை.

மிஸ்டர் எய்டன் ஒரு பனிக்கிடங்கு நிகழ்வு உங்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுமென்றால் இங்கே ஆயிரமாயிரம் பனிக்கிடங்குகள், லட்சோபலட்ச கொலைகள், நூற்றுக்கணக்கான பஞ்சங்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் வலிந்தது வெல்லும். தழைக்கும் என்று டார்வின் கொள்கையை துணைக்கு அழையுங்கள். உங்களால் நல்ல கவர்ச்சியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முடிகிறது. கிருஸ்துவ சொர்க்கம், இந்து சொர்க்கம், இஸ்லாமிய சொர்க்கம் இன்னும் எத்தனை சொர்க்கங்கள் ஆனாலும் இந்த கதை முழுக்க நரகத்தின் விசும்பல்கள் கேட்டபடியே இருக்கிறது.

இருப்பினும் இதைப் புரிந்துகொண்ட எந்த வாசகனும் இந்த கதையாடலின் மறுவாசிப்பை நிகழ்த்தாமல் இருக்க முடியாது. காரணம், வரலாற்றின் புள்ளிகள் மேல் போடப்பட்ட இந்த வெள்ளையானையின் கோலம். புள்ளிகளை மறைத்துவிட படாதபாடு பட்டிருக்கிறது.

மறைக்க முடியாமல் பிதுங்கிக் கொண்டு பல உண்மைகளை கண்டறிய சொல்லி நம்மை வற்புறுத்துகிறது. இந்த மண்ணின் சாதிய கோர தாண்டவத்தை அதன் கொலைகளை, துயரங்களை ஆயிரமாயிரம் காட்சிகள் கொண்ட வரலாற்றை ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்து போன வெள்ளையானையின் முதுகின் மேல் சுமத்த முயல்வது கேலிகூத்துதான்.

பூசணியை கூட சோற்றில் மறைத்துவிடலாம், சேரியை எந்தச் சோற்றில் மறைக்க முடியும்?

முன்னுரையில் ஜெயமோகனின் ‘எங்கே நாம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம்’ என்று கேட்கிறார். வியப்பாக இருக்கிறது ‘நம்மிடம் எப்போது நீதியுணர்ச்சி இருந்தது?’. ஜெயமோகன் அதைத் தேடினால் இன்னும் பலன் அளிக்கும். அதைவிடவும் அணையாது கிடக்கும் அந்த அனல் மீது நீங்கள் சமாளிப்புகளையும், வெட்டி தர்க்கங்களையும்தான் அள்ளிப் போட்டிருக்கிறீர்கள். நல்ல வேளையாக நன்கு காய்ந்து ஈரமற்றிருப்பதால் அது பற்றிக் கொள்ளவும் செய்யும். நீங்கள் எழுதுவது போல எழுதுங்கள், நாங்கள் புரிந்து கொள்வது போல புரிந்து கொள்கிறோம்.

(கரன் கார்க்கி – சென்னையைச் சேர்ந்த நாவலாசிரியர், சென்னை மாநகரின் குடிசைப்பகுதி மக்கள், விவசாயத் தொழிலாளர், இடம்பெயர்ந்தோர், உழைப்பாளிகளின் அன்றாட வாழ்க்கையை எழுத்துக்களில் வடிப்பதை கடமையாகக் கொண்டு இயங்கி வருபவர்)

  • ஓவியம்: கே.கே.குமார்

Related Posts