உலக சினிமா சினிமா மாற்று‍ சினிமா

பிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை!

நதீன் லபாகி என்கிற லெபனான் பெண் இயக்குனரின் இயக்கத்தில், ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் திரைப்ப விருதுக் கதவுகளைத் தட்டிவிட்டு வந்த திரைப்படம் தான் “Where do we go now?”. மத ஒற்றுமையை வலியுறுத்திய இத்திரைப்படம்தான், லெபனான் நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமாக வசூல் செய்த மாபெரும் வெற்றிப்படம். 50 ஆண்டுகளாக மதம் சார்ந்த போர்ச்சூழலிலேயே வாழ்ந்துவருகிற லெபனான் மக்கள் அனைவரும் மதக்கலவரங்களை வெறுத்து ஒற்றுமையினையே விரும்புகிறார்கள் என்பது இத்திரைப்படத்தின் வெற்றியின்மூலம் உறுதியாகியிருக்கிறது.

திரைக்கதை:

லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பான்மையான பகுதிகளில் கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உருவாகியிருக்கிற பதட்டம் நிறைந்த இறுக்கமான சூழலுக்கு நடுவே, லெபனான் நாட்டின் ஒரு கிராமத்தில் மட்டும் கிறித்துவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்கிறார்கள். குறிப்பாக அக்கிராமத்திலிருக்கும் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பாகப் பழகுகிறார்கள். அவர்களுக்குள் மத வேறுபாடு இருப்பினும், அன்பைப் பகிர்ந்து கொள்வதிலும், நட்பு பாராட்டுவதிலும் மதத்தை குறுக்கே கொண்டுவராமல் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். அவர்களுடைய கிராமத்திலும், அதனைச் சுற்றிலும் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதனால், அவர்களால் வெளியுலகிற்கு செல்வது மிகக்கடினமானதாக இருக்கிறது. ஒரேயொரு சிறிய பாலம் மட்டுமே அக்கிராமத்தைக் கடந்து வெளியூருக்கு செல்வதற்கான வழியாக இருக்கிறது. எனவே அக்கிராமத்திலுள்ளவர்களுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதனை ஒட்டுமொத்தமாக நசீம் என்கிற வாலிபனும் அவனது மச்சான் ரோசக்கும் இணைந்து அருகாமை நகரத்திற்குச் சென்று வாங்கிவருவது வழக்கம்.

தங்களது கிராமத்தைச் சுற்றிலும் மதக்கலவரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதைக் கூட அறியாமல் இருந்தனர் அம்மக்கள். முதன்முதலாக அவ்வூருக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கப்படுகிறது. சிக்னல் கிடைக்கவேண்டுமென்பதற்காக அதனை ஊர் எல்லையில் ஓர் உயரமான இடத்தில் வைத்து, ஒட்டுமொத்த ஊரும் ஒன்றுகூடுகிறார்கள். அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் புள்ளிகளும் கோடுகளுமாக செய்தி அலைவரிசை ஒன்று தெரிகிறது. மத்திய கிழக்கு நாடொன்றினில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்வினைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்த மறுநொடியே, ஆண்களை திசைதிருப்பும் முயற்சியில் இறங்குகிறார்கள் அவ்வூர்ப் பெண்கள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா உன்வீட்டு கோழி என்வீட்டுத் தோட்டத்துக்கு வரும்?”

என்று ஒரு பெண் மற்றொருவரிடம் சண்டைக்குப் போகிறார்.

“உன் வீட்டு சேவல் மட்டும் என்ன யோக்கியமா?”

என்று இன்னொருவர்.
இப்படியாக யாரையும் அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தியைப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறார்கள் அவ்வூர்ப்பெண்கள். அன்றிரவே எல்லோரும் உறங்கியதும், தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சில பெண்கள் மட்டும் சென்று சரிசெய்யமுடியாத அளவிற்கு தொலைக்காட்சியின் வயர்களை கண்டந்துண்டமாக வெட்டிவிடுகிறார்கள்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு வேறு ஊர்களுக்கு சென்று வருகிற நசீமும் ரோசக்கும் வாங்கிவருகிற செய்தித்தாள்களில் கலவரங்கள் மற்றும் மதச்சண்டைகள் குறித்த செய்திகள் இருந்தால்,அவற்றை மட்டும் யாருக்கும் தெரியாமல் கிழித்தெரிந்துவிட்டுதான், ஊர்மக்களுக்கு விநியோகம் செய்தனர் அவ்வூர்ப் பெண்கள்.

இவ்வாறு இருமதத்தினரிடையே ஒற்றுமையை நிலைநாட்டி அதனை தொடரவைக்க கடுமையான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது அவ்வூர்ப்பெண்களுக்கு.

ஒருமுறை, அவ்வூரிலுள்ள கிறித்துவ தேவாலயத்தின் விளக்குகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இசுலாமிய இளைஞன் தவறுதலாக அங்கிருந்த சிலுவையின் மீது விழுந்து, அச்சிலுவை உடைந்துவிடுகிறது. தேவாலையத்தின் பாதிரியாருக்கு மட்டும் தெரிந்து, அவர் அதனை ஒரு கயிறு கொண்டு கட்டிவைக்கிறார்.

மறுநாள் தேவாலையத்தில் நிகழும் கூட்டத்தில், “நேற்று நான் தேவாலையத்தின் கதவுகளை மூட மறந்துவிட்டேன். அதனால், வேகமாகக் காற்றடித்து இச்சிலுவை உடைந்துவிட்டது.”

என்று சொல்லி, அதனை சரிசெய்கிற பணியை கவனிப்போம் என்கிறார் தேவாலையத்தின் பாதிரியார். இளைஞர்களில் சிலர் இசுலாமியர்கள் வேண்டுமென்றே செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகின்றனர். அவர்களை முடிந்தவரை சமாதானப் படுத்துகிறார் பாதிரியார்.

மறுமுறை, மசூதிக்குள் ஆடுகள் நுழைந்துவிடுகின்றன. இதனைக் கண்ட இசுலாமிய இளைஞர்கள், கிறித்துவ இளைஞர்களின் வேலையாக இருக்கும் என்று குரலெழுப்புகின்றனர். இதனை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை என்று அவர்களை இமாம் அமைதிகாக்கச் சொல்கிறார். தொடர்ந்து நடக்கிற சிறுசிறு உரசல்களால், இரு மதத்தின் இளைஞர்களுக்குமிடையில் மோதல் உண்டாகிறது. மோதலின் முடிவில், தேவாலயமும் மசூதியும் சிறிதளவு சேதப்படுத்தப்படுத்தி விடுகிறார்கள் இளைஞர்கள். ஊர்ப் பெண்கள் இணைந்து, அச்சேதங்களை சரிசெய்கிறார்கள். பெரியளவிலான கலவரமாக வெடிக்காவிட்டாலும், ஒருவிதமான பதற்றம் உருவாகிறது அக்கிராமத்தில்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும், சிறுசிறு உரசல்களும் சண்டைகளுமாகவே நாட்கள் கழிந்தன. எவ்வளவோ கவனமாக இருந்தும், இளைஞர்கள் மத்தியில் ஒரு இறுக்கமான சூழல் நிலவுகிறதே என வருத்தப்பட்டனர் அவ்வூர்ப் பெண்கள். இளைஞர்களை ஒற்றுமையாக்க என்ன செய்யலாம் என்று மறைமுகமாகக் கூடி ஆலோசிக்கின்றனர். நசீம் அவ்வப்போது நகரத்திற்கு சென்று வரும்போது, அழகிய நடனப் பெண்களின் புகைப்படங்களை கொண்டுவந்து இளைஞர்களிடையே விநியோகித்ததை, ஊர்ப்பெண்கள் கண்டும் காணாமல் கவனித்தே வந்திருக்கின்றனர். அதனையே ஒரு ஆயுதமாகக் கையாள முடிவெடுத்து, நகரிலிருந்து நடனப் பெண்களை அழைத்துவந்து அக்கிராமத்தில் தங்க வைத்தனர். நடனப் பெண்களுடன் பேசுகிற சாக்கில், இளைஞர்கள் தங்களது பகை எண்ணத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்த்து இப்படியொரு திட்டத்தைத் தீட்டினர் பெண்கள். துவக்கத்தில் பலன் தருவதைப் போல் தெரிந்தாலும், இருமதத்து இளைஞர்களும் ஒற்றுமையாவது போல் தெரியவில்லை.

வழக்கம் போல், பொருட்கள் வாங்குவதற்கு நகரத்திற்குச் சென்றனர் நசீமும் ரோசக்கும். ஆனால் வரும்வழியில், ஏதோவொரு ஊரில் நிகழ்ந்த கிருத்துவ-இசுலாமிய மதக்கலவரத்தில் இவர்களது வண்டியினை நோக்கி குண்டுகள் பாய்ந்து, அதில் நசீம் இறந்துவிட்டான். நசீமின் சடலத்தையும் வண்டியில் வைத்துக்கொண்டு இருட்டியபின்னர் ஊர் வந்துசேர்ந்தான் ரோசக். நசீமின் தாயார் கதறி அழுதபோதும், இச்செய்தி ஊர்முழுக்க பரவினால் பெரிய மதக்கலவரமே நிகழுமே என்று அஞ்சி நசீம் இறந்த செய்தியினை யாருக்கும் சொல்லாமல் மறைக்க முடிவுசெய்தார். நசீமின் உடலை ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் கிணற்றில் ஒளித்துவைத்துவிட்டு, அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று எல்லோரையும் நம்பவைத்தார். இரண்டு நாட்களுக்கு மேலாக தாக்குப்பிடிக்க முடியாமல், தனது மூத்த மகனிடம் வேறு வழியின்றி உணமையைச் சொல்லவேண்டியதாகிறது. ஊரிலுள்ள இசுலாமியர்களைக் கொன்றே தீருவேன் என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியத் தேடுகிறான் நசீமின் அண்ணன் இசாம். அவனுக்கு முன்னதாகவே அவது தாயார் அத்துப்பாக்கியை எடுத்து தனது மகனின் காலில் சுட்டு, அவனது வாய்,கை,கால்களைக் கட்டிப்போட்டு ஒரு அறையில் அடைத்துவிடுகிறார். ஒரு மகனை இழந்தும், மறு மகனைக் காலில் சுட்டும், ஊரின் ஒற்றுமையைக் காக்கப் போராடுகிறார் நசீமின் தாயார்.

இருமதத்து இளைஞர்களும் ஏராளமாக துப்பாக்கிகளை ஒளித்துவைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை அவ்வூர்ப் பெண்களுக்கு தெரியவர, அவர்கள் அழைத்துவந்த நடன அழிகிகளின் உதவியுடன் நடன நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து, ஆண்கள் அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த உணவினை கொடுக்கிறார்கள். எல்லா ஆண்களும் மயங்கி உறங்கிவிட்டதும், ஊர்ப் பெண்கள் அனைவரும் இணைந்து, துப்பாக்கிகள் உள்ளிட்ட எல்லா ஆயுதங்களையும் ஊருக்கு வெளியே ஒரு குழி தோண்டி புதைத்துவிடுகின்றனர்.

மறுநாள் காலையில் ஆண்கள் அனைவரும் கண்விழித்துப் பார்க்கையில், அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இரவோடு இரவாக, இசுலாமியப் பெண்கள் அனைவரும் கிறித்துவர்களாகவும், கிறித்துவப் பெண்கள் அனைவரும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியிருந்தனர்.

“உலகின் வேறேதோ ஒரு மூலையில், உன்னோட மதத்தைச் சேர்ந்தவர்களுடன் சண்டை போடுகிறார்கள் என்கிற காரணத்திற்காகத்தானே, அந்த மதத்தைச் சேர்ந்த நம்ம ஊர்க்காரர்களுடனும் சண்டை போடுகிறாய். இப்போது நானும் அந்த வேற்று மதத்தைச் சேர்ந்தவள்தான்… என்னை என்ன செய்யமுடியும் உன்னால்?”

என்று தனது கிருத்துவக் கணவனிடம் கேட்கிறாள் இசுலாம் மதத்திற்கு மாறிய பெண்ணொருத்தி.

நசீமின் இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்கிறார்கள் பெண்கள். நசீமின் சகோதரன் இசாமையும் கட்டவிழ்த்துவிட்டு ஊர்வலத்தில் பங்குபெற அனுமதிக்கிறார் அவனது தாயார். தற்போது ஒரே வீட்டிலுள்ள ஆண்கள் ஒரு மதமாகவும், பெண்கள் வேறொரு மதமாகவும் இருப்பதனால், என்ன செய்வதென்ற குழப்பத்துடனேயே அவ்வூரின் ஆண்கள் அனைவரும் நசீமின் உடலை எடுத்துக்கொண்டு அமைதியாக சுடுகாட்டினை நோக்கி நடக்கிறார்கள். ஊர்வலத்தின் இறுதியில், சுடுகாட்டிற்குள் வந்ததும் மற்றொரு குழப்பத்துடன் ஆண்கள் அனைவரும் நிற்கிறார்கள்.

இடது பக்கம் கிறித்துவ சுடுகாடும், வலது பக்கம் இசுலாமிய சுடுகாடுமாக அமைந்திருக்கிற சூழலில், எந்தப்பக்கம் நசீமின் உடலைப் புதைப்பது? நசீம் இப்போது எந்த மதம்? அவனது தாயார் மதம் மாறிவிட்டாரே?

“இப்போது நாம் எந்தப் பக்கம் போவது?” என்று ஆண்கள் பெண்களிடம் கேட்பதுடன் படம் முடிகிறது….

Related Posts