பிற

சாகுற நாள் தெரிஞ்சா … வாழும் நாள் என்னவாகும்!? (டிசிஎஸ் வேலை நீக்கமும், தொழிலாளர் நிலையும்)

“வெல்டிங்கோ பிட்டரோ படிச்சா, அம்பத்தூர் எஸ்டேட்ல உடனே வேலையாம். தெரியுமா?”

“இப்பல்லாம் பாலிடெக்னிக் இல்லாட்டி வேலை கிடைக்காதுப்பா”

“பி.காம் மட்டும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்ட, அப்பறம் உன் லெவலே வேற”

“டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் முடிச்சிட்டியா? வெவரம் தெரியாத பயலா இருக்கியே”

கம்ப்யூட்டர் கோர்ஸ் படிப்பா.. அதுபடிச்சா வேலை கிடைக்குமாமே”

“இப்பல்லாம் ஜாவாவுக்கு தான் மவுசு.”

“இஞ்சினியரிங் படிக்கணும். அதுவும் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கணும். தெரியுதா? விட்றாத..”

“இஞ்சினியரிங்க்ல கம்ப்யூட்டர் கோர்ஸ் வேண்டாம். எலெக்ட்ரானிக்ஸ் எடு. ஏன்னா, அப்பதான் கம்ப்யூட்டர் கம்பெனிக்கும் வேலைக்கு போலாம், எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிக்கும் வேலைக்கும் போலாம். புரிஞ்சி நடந்துக்கோ”

“அந்த ஆர்ட்ஸ் காலேஜில அப்ளை பன்னிருக்கல்ல? ஒரு வேளை சீட்டு கிடைக்கலன்னா, இஞ்சினியரிங் சேந்துடு. சரியா?”

இப்படியாக இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு காலகட்டமாக, “வேலைவாய்ப்பினை தரும் படிப்பு” என்ற தகுதியோடு ஏதோ ஒன்று நம்மிடையே பரவலாக பேசப்பட்டும், திணிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அதனையே நம்மில் பெரும்பாலானோர் படித்தும் வந்திருக்கிறோம். சரியான கல்விக்கொள்கையே இல்லாத ஆட்சியாளர்களால், மக்கள் தாங்களாகவே எதன் பின்னாவது செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றனர். இதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது, பணக்காரத் தொழிலதிபர்களும், பெருநிறுவனங்களும் தான். மருத்துவர் இல்லாத ஊரில், எதனைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலையும் நோயாளியைப்போல இருக்கும் நம்மக்கள், தனியார் முதலாளிகளின் தேவைக்கேற்ப படித்தார்கள்; உழைத்தார்கள். டாடாக்களை எல்லாம் பெரும்பணக்காரர்கள் ஆக்கியதும் நம் மக்களின் உழைப்புதானே.

கார் தொழிற்சாலைகள் உச்சத்தில் இருந்தபோதோ, இரும்பு உருக்காலைகள் கோலோச்சியபோதோ, இன்னபிற உற்பத்தித் தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலோ, சிறியளவிலான தொழிற்நுட்ப அறிவுடனான உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஏராளமாக தேவைப்பட்டனர். இஞ்சினியரிங் அளவிற்கு படித்தவர்களின் தேவையோ மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது.

கடந்த நூற்றாண்டின் இறுதியில், சர்வதேச அளவில் தொழிற்நுட்பப் புரட்சியொன்று துவங்கியது. அதற்குமுன்புவரை இருந்த உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு மாறாக, முதன்முறையாக அறிவுசார் தொழிற்நுட்ப வல்லுனர்கள் ஏராளமாகத் தேவைப்பட்டனர். தொழிலாளர்களின் தேவை அதிகம் என்பதாலும், அவ்வப்போது அத்துறையில் ஏற்படும் தொழிற்நுட்ப மாற்றங்களை விரைவாக கற்றுத்தேறவேண்டிய கட்டாயம் இருந்ததாலும், குறைந்த கூலிக்கே இவையனைத்தும் கிடைக்கவேண்டுமென்பதாலும் இந்தியாவைப்போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதே காலகட்டத்தில்தான் (1991க்கு பிறகு) , “அயல்நாட்டு நிறுவனங்களே! எங்கள் நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள். உங்களுக்கு என்னவேண்டுமானாலும் செய்கிறோம்” என்று சொல்லத்துவங்கியது இந்திய அரசு.

என்ன வேண்டுமானாலும்” என்கிற அந்த வாக்குறுதிதான், பல நூற்றாண்டுகளாக நாம் போராடிப்பெற்ற சலுகைகளை நம்மையறியாமலேயே இழக்கச்செய்தது.

யாருக்கு இலாபம்???

STPI என்று சொல்லப்படுகிற சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆஃப் இந்தியா என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளும், ஏற்றுமதிக்கு உதவிடும் அளவற்ற “இலவசங்களும்” வழங்கப்பட்டன. 1991 முதல் 2011 வரை 20 ஆண்டுகளாக STPI நிறுவனம் என்று அறியப்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 10ஏஏ வின் கீழ், 100% வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் STPI திட்டத்தின் கீழ் இயங்கிய சாப்ட்வேர் நிறுவனங்கள், ஏறத்தாழ 2,50,000,00,00,000 (2.5 இலட்சம் கோடி) ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்திருக்கின்றன. இவ்வளவு பெரிய வருமானத்திலிருந்து, அந்நிறுவனங்கள் செலுத்திய வரியோ பூஜ்ஜியம் என்றுதான் சொல்லவேண்டும்.

SEZ என்று சொல்லப்படுகிற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அறிமுகப்படுத்தி உருவாக்கியது இந்திய அரசு. ஏக்கர் கணக்கில் நிலம், தனி இடம், சாலை வசதி, இடைவிடாத தண்ணீர்/மின்சார வசதி போன்றவற்றை அமைத்துக்கொடுத்து, ஏராளமான சலுகைகளையும் SEZ இல் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அள்ளி வழங்கியது அரசு.

 • முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரியிலிருந்து 100% வரிவிலக்கு. எவ்வளவு இலாபம் வந்தாலும் 10 பைசா கூட வரி செலுத்தத் தேவையில்லை.
 • அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 50% அளவிற்கு வரி செலுத்தினால் போதும்.
 • அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு, சில நிபந்தனைகளுடன் 50% வரிவிலக்கு.
 • SEZ துவங்கிய 10 ஆண்டுகள் கூட ஆகவில்லை. வரிவிலக்கு காலம் முடிகிறபோது, நிச்சயமாக வேறொரு திட்டத்தை கொண்டுவந்துவிடுவார்கள்.
 • பொதுவாக, அதிக அளவிற்கு வருமானவரி விலக்கு பெற்ற நிறுவனங்கள், குறைந்தபட்ச வரியாவது செலுத்தவேண்டும் என்பதற்கு “குறைந்தபட்ச மாற்று வரி” செலுத்தவேண்டும். ஆனால், அதிலிருந்தும், SEZ நிறுவனங்களுக்கு வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 115JB யின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
 • சுங்க வரியிலிருந்து விலக்கு.
 • சேவை வரியிலிருந்து விலக்கு.
 • மத்திய விற்பனை வரியிலிருந்து விலக்கு.
 • மாநில அரசின் விற்பனை வரிகளிலிருந்தும் விலக்கு.
 • மதிப்புக் கூட்டு வரி செலுத்தியிருந்தால், திரும்பப்பெற்றுக் கொள்ளலாம்.
 • கலால் வரியிலிருந்தும் விலக்கு.
 • ஏற்றுமதி மீதான, அனைத்து மறைமுக வரிகளிலிருந்தும் விலக்கு.

ஒரு ஆண்டிற்கு ஏறத்தாழ 65,00,000,00,00,000 (65 இலட்சம் கோடி) ரூபாய் அளவிற்கு இந்திய ஐ.டி. நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றனவாம். இதில் பாதியளவிற்காவது வரி செலுத்தினால் கூட, பல இலட்சம் கோடி ரூபாய் இந்திய அரசிற்கு வருவாயாக கிடைக்கும். ஆனால் அரசாங்கத்தின் முன்வாசல், பின்வாசல், சைடு வாசல் என எல்லா வழிகளிலும் சென்று STPI, SEZ போன்ற பல பெயர்களின் மூலம் இலாபம் அடைந்துகொண்டே வருகின்றன இந்திய ஐ.டி. நிறுவனங்கள்.

யாருக்கு இழப்பு???

கோடிக்கணக்கான இந்திய மக்களின் வரிப்பணத்தை சலுகைகளாக பலவிதங்களில் பெற்றுக்கொண்டன ஐ.டி.நிறுவனங்கள். ஆனால், 10 பைசா கூட வரிசெலுத்தாமல் தப்பிப்பதற்கு பல வழிகளும் கண்டறிந்துவிட்டனர். நேர்மையாக வரிசெலுத்தி உண்மையான குடிமக்களாக திகழ்வது, அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான்.

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமானோர் உயிரிழந்து, வாழ்க்கையிழந்து எண்ணற்ற போராட்டங்களின் மூலம் தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்த உரிமைகளை ஒட்டுமொத்தமாக, இந்த ஐ.டி. நிறுவனங்கள் ஒரே நாளில் பறித்துக்கொண்டன. வேலை நேரம் 8 மணி நேரம் தான் இருக்கவேண்டும், அதனைத் தாண்டினால் கூடுதல் சம்பளம், வார விடுமுறை, நிறுவனம் நினைக்கிறபோதெல்லாம் வேலையை விட்டு தூக்க முடியாது, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச்சொல்வதற்கு தொழிற்சங்கம், போன்ற தொழிலாளர் உரிமைகளை ஒட்டுமொத்தமாக அரசுகளின் உதவியோடு பறித்துக்கொண்டன ஐ.டி. நிறுவனங்கள்.

ஐ.டி. நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஒரே குறிப்பிடத்தக்க சலுகை, மற்ற தொழிற்துறைகளை விடவும் சற்றே அதிகப்படியான ஊதியம்தான். ஒன்றைக்கொடுத்து பத்தை பிடுங்கி; பிற்காலத்தில் அந்த ஒன்றையும் பிடுங்கிய கதைதான் நடந்தேறியது.

அடிமைகளாக எஜமானர்களிடம் பணிபுரிந்த காலத்திலிருந்து, முன்னேறிய சமூகமாக அரசாங்கம் அமைத்தும் அரசமைப்புச் சட்டம் அமைத்தும் வாழ்கிற காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். உழைப்பவனுக்கும் உரிமைகள் உண்டு என்கிற ஒன்றில்தான் அடிமைகளாக இருந்த காலகட்டத்திற்கும், இப்போதைய காலகட்டத்திற்குமான வேறுபாடாக இருக்கமுடியும். ஆனால், ஐ.டி. நிறுவனங்களோ தங்களது தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாகத்தான் நடத்துகின்றன.

 • எந்தத் தொழிலாளர் சட்டத்தையும் மதிக்காதது,
 • எப்போது வேண்டுமாலும், யாரை வேண்டுமானாலும், காரணமே இல்லாமல் பணியிலிருந்து தூக்குவது,
 • தொழிலாளர்களை ஒன்றுபட விடாமல் தடுப்பது,
 • தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக்கொண்டு பணியில் சேர்ப்பது,
 • 8 மணிநேர வேலை என்பதை வெறும் கனவாக்கியது,
 • இரவு பகல் பாராமல் மிக அதிகநேரம் இயந்திரம் போல வேலைவாங்குவது,
 • அதிக நேரம் வேலை பார்த்தாலும், ஒரே சம்பளம் என்றாக்கியது,
 • அப்ரைசல் என்கிற முறையின் மூலம் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக்கி, அவர்களின் ஒற்றுமையைக் குலைப்பது,

என எல்லா வகையிலும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறித்திருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

அடிமைமுறை (VS) ஐ.டி.வேலை

அடிமைமுறை

ஐ.டி. வேலை

1 கால நேரம் கணக்கில்லாமல் வேலை செய்யவேண்டும் 8 மணி நேரம் மட்டுமே ஒரு நாளைக்கு வேலை செய்வேன் என்று சொல்லும் உரிமை தொழிலாளிக்கு இல்லை
2 அதிக அளவோ, அதிக நேரமோ வேலை பார்த்தாலும், கூடுதலாக எந்தச் சலுகையும் கிடையாது ஒரு நாளைக்கு 15 அல்லது 20 மணிநேரம் வேலை பார்த்தாலும், ஒரே சம்பளம்தான்
3 எஜமான் கொடுக்கிற வேலையை எந்தக்கேள்வியும் கேட்காமல் செய்ய வேண்டும் மேலிடமும் கிளைன்டும் இரண்டு இறைவன்கள். அவர்கள் சொல்லும் வேலையை செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால், “You are not flexible” என்று வேலையிழக்க வேண்டிவரும்
4 எஜமான் என்ன தவறு செய்தாலும், எப்போதும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது நிர்வாகம் எடுக்கிற முடிவுகள் தான் இறுதியானது. ராமலிங்க ராஜு போன்றவர்களை எதிர்த்தும் கேள்வி கேட்கக் கூடாது
5 மற்ற அடிமைகளுடன் கூட்டு சேர்ந்து கொடுமைகளுக்கு எதிராக நியாயம் கேட்கக் கூடாது சங்கம் எதுவும் அமைக்கக் கூடாது என்று கையெழுத்து வாங்கிவிட்டு தான் வேலைக்கே சேர்ப்பார்கள். சங்கம் அமைத்தால், சங்குதான்
6 எஜமான் எவ்வளவு கொடுமை செய்தாலும், வெளியில் சொல்லக்கூடாது அதிகம் வேலை வாங்குவது, கொடுமைப்படுத்துவது என்று என்ன செய்தாலும், நிறுவனத்தைப் பற்றி வெளியே சொன்னால், வேலை போகும்.
7

பண்ணைகளில் அடிமைகளின் உழைப்பால், அதிக வருமானம் வந்தாலும் அடிமைகளுக்கு ஒரு வேளை சோறுதான்.

அதே உழைப்பினால் குறைந்த வருமானம் வந்தாலோ, அடிமைகள் கொல்லப்ப்படுவர் அல்லது வாரத்திற்கு ஒருவேளை தான் சோறு

நிறுவனத்தின் இலாபம் 10 மடங்கு அதிகரித்தாலும் தொழிலாளியின் ஊதியம் பெரிதாக உயராது. நிறுவனத்தின் இலாபம் குறைந்தாலோ, தொழிலாளிகளின் ஊதியம் குறைக்கப்படும் அல்லது எண்ணற்றோர் வீட்டுக்கனுப்பப்படுவர்
8 எஜமான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அடிமைகளை குப்பையிலும் தூக்கி வீசலாம்; கொலையும் செய்யலாம். குறைந்த ஊதியம் கொடுத்து புதியவர்களை வேலைக்கு எடுத்து பழைய ஊழியர்களை வெளியேற்றுவது; இலாபத்தை அதிகரிக்க, ஊழியர்களை வெளியே அனுப்புவது; எல்லாமே முதலாளிகளின் விருப்பம்தான்.

 

அப்ரைசல்’ என்பது ஏமாற்றுவேலையே:

அவ்வப்போது சிலரை வெளியேற்றிக்கொண்டிருந்த நிறுவனங்கள், தற்போது அடுத்தகட்டத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டுகளாக தாங்கள் வேலைபார்த்த நிறுவனத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்த 25000-30000 ஊழியர்களை ஒரேயடியாக அடித்துத் துரத்துவதென டி.சி.எஸ். நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. தொழிலாளர்களின் எல்லா உரிமைகைளையும் பரித்துவிட்டோமே, இனி யார் நம்மைக் கேள்வி கேட்கப்போவது என்கிற நினைப்பில், மிகமோசமான முறையில் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பத்துவங்கியது நிர்வாகம்.

“கொஞ்சம் ஹெச்.ஆர். ரூமுக்கு வரீங்களா?” என்ற அழைப்பைத்தொடர்ந்து, “உங்களுடைய கடந்த கால அப்ரைசல் ரேட்டிங்குகள் உள்ளிட்ட பலவற்றைக் கருத்தில் கொண்டு, இன்றிலிருந்து நீங்கள் நீக்கப்படுகிறீர்கள். இந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடுங்கள். இது மேலிடம் எடுத்த முடிவு.” என்று சொல்லி ஒரே மணிநேரத்தில், அந்த ஊழியருக்கும் நிறுவனத்திற்குமான தொடர்பை துண்டித்துக் கொண்டிருக்கிறது நிறுவனம்.

அதென்ன அப்ரைசல்???

ஒரு நிறுவனத்திற்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் இடையிலான போட்டியினை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், ஒரே நிறுவனத்தில் ஒரு பிராஜக்டிற்குள்ளேயே ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து பணிபுரியவேண்டிய பணியாளர்களிடையே எதற்காக போட்டியை உருவாக்கவேண்டும்?

ஒரு பிணத்தை தூக்கிச்செல்லவேண்டும் என்றால், அதற்கு நான்குபேர் ஒற்றுமையாக இணைந்து ஒரேதிசையில் சுமந்தால்தானே, சேர வேண்டிய இடத்திற்கு பிணத்தை கொண்டுசேர்க்க முடியும். “உங்கள் நால்வரில் யார் சிறப்பாக  செல்கிறார்கள் என்று பார்ப்போம். உங்களை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று தரவரிசைப்படுத்தப் போகிறோம்.” என்று சொல்வது நியாயமானதாக இருக்க முடியாதல்லவா!

பின்பு எதற்காக “அப்ரைசல்” என்கிற திறன்பிரிக்கும் காரியத்தை செய்கின்றன ஐ.டி. நிறுவனங்கள்??? தொழிலாளர்களைப் பிரித்தாளும் “அப்ரைசல்” முறைக்குப் பின்னால், பெரிய பொருளாதார அரசியலே ஒளிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

டி.சி.எஸ். உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களின் திறனை அறிந்து, அவர்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அப்பிரிவுகளை பேண்ட் அல்லது ரேடிங் என்று அழைக்கின்றனர்.

 

ரேட்டிங் தொழிலாளர்கள் % விவரம்
A 10-15% தொழிலாளர்கள் Outstanding performance
B 15-20% தொழிலாளர்கள் Above Expectation
C 40-45 % தொழிலாளர்கள் Meets Expectation
D 15-20% தொழிலாளர்கள் Can be improved
E 5-10% தொழிலாளர்கள் Poor performance

அப்ரைசல் ரேட்டிங்கை முடிவுசெய்கிற “பெல் கர்வ்” என்கிற முறையே போலிப் பித்தலாட்டம் தான். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் எல்லோரும் மிகச்சிறப்பாக வேலை செய்தாலும், 5-10% பேருக்கு E ரேட்டிங்கும், 15-20% பேருக்கு D ரேட்டிங்கும், 40-45% பேருக்கு C ரேட்டிங்கும், 15-20% B ரேட்டிங்கும் கட்டாயமாக கொடுக்கப்படும். இன்னும் எளிமையாகச் சொல்வதற்கு, ஒரு 100 பேர் கொண்ட நிறுவனத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஓர் ஆண்டில் A ரேட்டிங் (Outstanding performance) வாங்கிய 10 தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் நிறுவனத்தை விட்டு வெளியேற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டு அப்ரைசலில் A ரேட்டிங் வாங்குபவர்களின் எண்ணிக்கை 1 ஆகத்தான் இருக்கும் (10 இன் 10%). ஆக, ஐ.டி. நிறுவனங்களில் செயல்பாட்டில் இருக்கும் அப்ரைசலுக்கும், தொழிலாளர்களின் திறமைக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை.

“நன்றாக” வேலை செய்தால் நல்ல “ரேடிங்” கிடைக்கும் என்று நிர்வாகத் தரப்பிலிருந்து சொல்வார்கள். ஆனால், அந்த “நன்றாக” என்பதற்கான விளக்கமும் பொருளும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்பதும், நிறுவனங்களின் சுயநலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்படத்தில், ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஒரு கடையின் வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள்ளே செல்வார். சிறிது நேரம் கழித்து வெளியேவந்து பார்த்தால், அவரது வாகனத்திற்கு அருகே ஒரு “No Parking” பலகை இருக்கும். ஒரு போக்குவரத்துக் காவலர், அவரிடம் 100 ரூபாய் இலஞ்சம் கேட்பார். “நான் போகும்போது இந்த பலகை இல்லையே” என்பார். “நீங்க வண்டிய நிறுத்துறத பாத்துதான் நான் No Parking பலகைய வெச்சேன்” என்பார் போக்குவரத்துக் காவலர். ஐ.டி. நிறுவனங்களின் அப்ரைசல் நடைமுறையும் அப்படித்தான் இருக்கும்.

 • ஒரு பிராஜக்ட் முடிவடைகிற தருவாயில் அதில் பணிபுரியும் ஒருவருக்கு அப்ரைசல் நடக்கிறதென்றால், அவருக்கு குறைவான ரேட்டிங் தான் தரப்படும். அவர் கடந்த ஓராண்டு செய்த கடின வேலை எல்லாம் கண்டுகொள்ளப்படாது.
 • தன்னை வேறு பிரஜக்டிற்கு மாற்றுமாறு ஒருவர் கேட்டால், அவருக்கு குறைவான ரேட்டிங் தான் கிடைக்கும்.
 • காரணமே கிடைக்கவில்லையென்றால், “நீ புதிதாகப் படித்து சான்றிதழ் எதுவும் வாங்கவில்லை” என்று சொல்லி சிலருக்கு குறைவாக ரேட்டிங் கொடுக்கப்படும். கடந்த ஓராண்டாக இரவு பகல் பாராமல், பிராஜக்டிற்காக கடுமையாக உழைத்திருப்பார். அவருக்கு மற்றதுக்கெல்லாம் நேரம் கூட இருந்திருக்காது.
 • “நீ வெள்ளையறிக்கை எதுவும் எழுதவில்லை” என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டு சிலருக்கு குறைந்த ரேட்டிங் கொடுக்கப்படும்.
 • “உனக்கு நல்ல ரேட்டிங் தான் போட்டேன். ஆனா மேனேஜ்மன்ட் கம்மியான ரேட்டிங் தான் போடா சொன்னாங்க” என்று சிலருக்கு காரணங்கள் சொல்லப்படும்
 • கடந்த ஆண்டில் பிரசவ விடுப்பில் சென்றிருந்தால், அதைக்காரணம் காட்டி குறைந்த ரேட்டிங் கொடுக்கப்படும். “நீங்க 8-9 மாசந்தான் வேலை பாத்துருக்கீங்க. அதனால் அதுக்கேத்த மாதிரிதான் ரேட்டிங் கொடுக்கமுடியும்” என்று ஆணாதிக்க விளக்கம் வேறு வரும்.
 • கடந்த ஆண்டு கடுமையாக உழைத்திருந்தாலும், தற்போது கர்ப்பிணியாக இருந்தால், அடுத்த சில மாதங்களில் பிரசவ விடுப்பு எடுப்பார்கள் என்பதால், குறைந்த ரேட்டிங் கொடுக்கப்படும்.
 • எதுவுமே கிடைக்கலையா? இருக்கவே இருக்கு… “பயிற்சி வகுப்புகள் எதுவும் யாருக்கும் நீ எடுக்கல”, “நீ இன்னும் பேச்சுத்திறமைய வளத்துக்கணும்”
 • “நான் நல்ல ரேட்டிங் தான் குடுத்தேன். ஆனா, பெல் கர்வ்-ல உனக்கு ரேட்டிங் குறைஞ்சிடிச்சி” என்று சொல்லப்படும்
 • “போன வருஷம் உனக்கு நல்ல ரேட்டிங் குடுத்தேன்ல. இந்த வருஷம் அடுத்தவங்களுக்கு வாய்ப்பு தருவோம்” என்று சொல்லி ரேட்டிங் குறைக்கப்படும்.
 • “நம்ம பிராஜக்டுக்கு பட்ஜெட் இல்ல. அதனால் ரேட்டிங் கம்மியாதான் குடுக்கமுடியும்”
 • வரும் ஆண்டில் அயல்நாட்டுக்கு செல்வதற்கு வாய்ப்பு வரும். அதனால் இந்த ரேட்டிங் பெருசா முக்கியமில்லை எனச்சொல்லி குறைந்த ரேட்டிங் கொடுக்கப்படும்.
 • ரேட்டிங் கொடுப்பவரின் பிராஜக்ட்டிற்கு அந்த குறிப்பிட்டத் ஊழியர் அடுத்த சில மாதங்களுக்கு தேவைப்படுவாரா இல்லையா என்பதைப் பொறுத்து ரேட்டிங் மாறும். (அவர் கடந்து கடுமையாக வேலை பார்த்ததெல்லாம் கணக்கில் வராது)
 • பெரும்பாலான நாட்களில் அதிக நேரம் அலுவலகத்தில் இருக்கவில்லை என்றால், அதுவும் கணக்கில் கொள்ளப்படும். குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு தான் வீட்டிலும் பெரும்வேலை காத்துக்கொண்டிருக்குமே. அதனால் அலுவலகத்தில் எல்லா வேலையையும் பொறுப்பாகவும் சரியான நேரத்திற்கும் முடித்தாலும்கூட, பெண்கள் தான் அதிகளவில் குறைந்த ரேட்டிங் வாங்குபவர்களாக இருப்பார்கள்..
 • அயல்நாட்டிற்கு சென்று வந்திருந்தால், கட்டாயமாக அவருக்கு குறைந்த ரேட்டிங் தான் தரப்படும். என்னவோ இலவசமாக சம்பளம் கொடுத்ததைப் போல, “கூட்டி கழிச்சி பாரு. கணக்கு சரியா வரும்” என்று அண்ணாமலை வசனத்தை வேறு பேசிக்’கொல்’வார்கள்.

இப்படியாக பெல் கர்வ்-வை கட்டாயமாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்கிற சூழலில், நியாயமற்ற முறையாகவே இருந்துவருகிறது ஐ.டி. நிறுவனங்களின் அப்ரைசல் முறை.

100 பேர் செய்த(செய்யவேண்டிய) வேலையை, 90 பேரை வைத்தே செய்யவைப்பதற்காக, கடுமையான போட்டியை உருவாக்கி, அதன் முடிவில் 10 பேரை வெளியே அனுப்பிவிட்டு, அவர்களின் வேலையையும் மீதமுள்ள 90 பேரை பயமுறுத்தி செய்ய வைக்கும் முறைதான் ஐ.டி. நிறுவனங்களில் பின்பற்றப்படும் “அப்ரைசல்” முறை.

இதோடு முடிவதில்லை. அடுத்த ஆண்டு, மீதமுள்ள 90 பேர் கடுமையாக உழைத்து செய்த அதே வேலையினை, 81 பேரை மட்டும் செய்யவைப்பதற்காக, மிகக்கடுமையான போட்டியை உருவாக்கி, அதன் முடிவில் 9 பேரை வெளியே அனுப்பிவிட்டு, அவர்களின் வேலையையும் சேர்த்து மீதமுள்ள 81 பேரை மேலும் பயமுறுத்தி செய்ய வைக்கும் இந்த கொடூரமான முறைதான் “அப்ரைசல்” எனப்படுகிறது.

இப்படிப்பட்ட ஏமாற்று வேலை நமக்கு எளிதாக புரிந்துவிடாமல் இருப்பதற்காக பல வழிகளை பின்பற்றும் நிறுவனம். புதிதாக சிலரையும் வேலைக்கு எடுப்பார்கள். ஏற்கனவே வேலை பார்த்தவர்களை இங்குமங்குமாக மாற்றுவார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வேலைபளுவும், மன அழுத்தமும்,  வேலைசெய்யும் நேரமும் கூடிக்கொண்டே இருப்பதை கூர்ந்து கவனித்தால் புரியும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோரிடம் கேட்டால், “10 வருசத்துக்கு முன்னாடி எல்லாம் இப்படி இல்ல. இப்பதான் நிறைய நேரம் வேலை பாக்க வேண்டி இருக்கு” என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு வருடமும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் பணிச்சுமையை திட்டமிட்டே அதிகரித்து வந்திருக்கின்றன நிறுவனங்கள்.

அடுத்தது என்ன?

 அடுத்தது என்ன என்றுகூட யோசிக்கமுடியாத நிலைக்குதான் பணிநீக்கம் செய்யப்பட தொழிலார்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சட்டப்படி தங்களுக்கான என்னென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதும் அறியாதநிலைதான்.

ytmசட்டப்படி ஐ.டி.தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன, “தொழிலாளர் நலச்சட்டம்” மற்றும் “இண்டஸ்ட்ரியல் டிஸ்ப்யூட் ஆக்ட்” போன்றவற்றிலிருந்து தங்களுக்கு விலக்கு இருப்பதுபோல காட்டிக்கொள்கிறது டி.சி.எஸ். நிர்வாகம். அந்த வாதத்தை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தனி மனிதர்களாக இயங்காமல், வெளியேற்றப்பட்ட எல்லா தொழிலாளர்களும் தயங்காமல் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்திருக்கிற அநீதிக்கு எதிராக ஒற்றுமையாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். இதில் FITE என்கிற இயக்கத்தின் பணி பாராட்டுக்குரியது.

அரசாங்கத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதே டி.சி.எஸ். நிறுவனம் பெல்ஜியத்திலோ மற்றும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளிலோ ஒரு கிளையைத் திறந்தால், தொழிலாளர்களுக்கு எந்தவுரிமையும் இல்லை என்று சொல்லமுடியாது. எந்தத் தொழிலாளரையும் வேலையைவிட்டு அனுப்பும்போது, தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியாகவேண்டும்; அரசாங்கத்திடம் அனுமதி வாங்கியாக வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற சட்டங்கள் போதுமானதாக இல்லையெனில், புதிய சட்டங்களை இயற்றிடவும் அரசை நோக்கி கேள்விகளை எழுப்பவேண்டிய தருணமிது. போகிற போக்கில், போகிற வரையும் போகட்டும் என்றிருக்கிற அரசின் மெத்தனத்தை தடுத்துநிறுத்த வேண்டியிருக்கிறது.

photo_2015-01-29_08-38-16
தொழிற்சங்கம் என்கிற வார்த்தையைக் கேட்டாலே பல ஐ.டி. தொழிலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள். ஆனால், “சங்கம்” அமைப்பதால் ஏற்படும் பலன்களை ஐ.டி. நிறுவன முதலாளிகள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களை “சங்கம்” அமைக்கக்கூடாது என்று கையெழுத்து வாங்கிவிட்டு வேலைக்கு சேர்க்கும் அவர்கள், நாஸ்காம் என்கிற ஐ.டி. நிறுவன முதலாளிகளுக்கான சங்கத்தை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக எல்லா நிறுவனங்களும் ஒற்றுமையாக இணைந்து தங்களுக்கான எல்லாத் தேவைகளையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஐ.டி. தொழிலாளர்களுக்கென்று ஒரு சங்கமிருந்திருந்தால் இப்போதைய டி.சி.எஸ். பிரச்சனையை எளிதாக எதிர்கொண்டிருக்கலாம்.
“வீடுக்கனுப்பிய அனைத்து தொழிலாளர்களையும் திரும்ப அழைக்கவில்லையென்றால், நாங்கள் யாரும் கீபோர்டில் கைவைக்கமாட்டோம்”
என்று மிக அமைதியாக உட்கார்ந்த இடத்திலிருந்தே டி.சி.எஸ். நிர்வாகத்தை இறங்கிவரச்செய்திருக்க முடியும். 3 இலட்சம் தொழிலாளர்களின் உழைப்பில்லாமல், டி.சி.எஸ்.சின் எந்தத் துரும்பையும், நிர்வாகத்தின் எவராலும் அசைத்துவிடமுடியாது தானே.
இது ஏதோ டி.சி.எஸ்.சில் வேலை பார்த்த 25000 பேருக்கு மட்டும் நிகழ்கின்ற கொடுமை மட்டுமல்ல. இதனை இன்று எதிர்த்துக் கேள்விகேட்காவிட்டால், நாளை யாருக்கும் நிகழலாம். 200 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த உரிமைகளுமே இல்லாமல், எல்லாவற்றுக்கும் போராட வேண்டியிருந்த தொழிலாளர்களின் நிலை எப்படி இருந்ததோ, அப்படித்தான் இருக்கிறது இன்றைய ஐ.டி. தொழிலாளர்களின் நிலை. இன்றேனும் ஒற்றுமையாக அனைத்துத் தொழிலாளர்களும் இணைந்து, தங்களது உரிமைகளை மீட்டெடுக்க, போராடவேண்டும்.

Related Posts