அரசியல் தலையங்கம்

ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கோ, அரசியல் ரீதியிலான சந்திப்புக்கோ ஒரு நாட்டின் பிரதிநிதி இந்தியா வருவதில் தவறில்லை, விழாவில், கொண்டாட்டத்தில் பங்கெடுக்க இலங்கை ஜனாதிபதி எதற்காக அழைக்கப்பட வேண்டும்? அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த அந்த ஆட்சியாளர்களோடு மகிழ்ந்திருப்பதில் என்ன பொருளிருக்கிறது? என்ற கேள்வியை தமிழக அமைப்புகள் எழுப்புகின்றனர்.

ஈழப் பிரச்சனையையே தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் ‘வைகோ’ நிலைமை, திரிசங்கு சொர்கத்தில் இருக்கிறது. அவர்தான், நரேந்திர மோடி இந்த நாட்டை ஆள வேண்டுமெனவும், தமிழர்கள் அதற்காக வாக்களிக்க வேண்டும் எனவும், வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். இப்போது, பதவியேற்பு விழாவிலேயே, தான் பங்கேற்க வேண்டுமா? என சிந்திக்க தொடங்கியிருக்கிறார். வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவக் காரணமாக இருந்த ‘பொடா’ சட்டத்தை அமலாக்கியது கடந்த பாஜக ஆட்சிதான். பழைய வரலாறுகளை அவர் மறந்துபோனார். இப்போது, வரலாறு தன்னை அவருக்கு நினைவூட்டுகிறது.

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை ‘பங்ளாதேசிகள்’ என்று வெறுப்பைக் கொட்டிய மோடி, இலங்கைத் தமிழர்களை நம்மவர்களாக நினைத்து செயல்படுவாரா? என்பதற்கு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. தனது அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற கலவரங்களால் குஜராத்தி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்தும், தன் அமைச்சரவை சகாக்களே, சிறை சென்று திரும்பியிருப்பது குறித்தும் எந்த வெக்கமும், அவமானமும் கொள்ளாதவர்தான் அவர்.

விழாவில் யார் பங்கெடுக்கிறார்கள்? என்பதை விட, இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவுகளால், குடிமக்களுக்கு விளையும் நன்மை என்ன என்பதுதான் மையமான கேள்வி. இலங்கையுடனான நட்புறவைப் பயன்படுத்தி, தமிழர்களின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு இதுவரையில் செயல்பட்டதில்லை. புதிதாக அமைந்துள்ள அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனது உறவை பயன்படுத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தின் வாசகங்கள், “தங்கள் அன்பான அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். அதற்கு காரணம், இது இலங்கை அரசுக்கும், வடக்கு மாகாணத்திற்கும் இடையில் மிக வலுவான உறவு இருப்பதாக எடுத்துக்காட்டக் கூடும்” இந்த வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

Related Posts