இதழ்கள் இளைஞர் முழக்கம்

கொலை செய்வது கௌரவமானதா?

 – தீபா

                ஒரு வீட்டில் புதிய வரவாக பிறக்கும் குழந்தைகள் அந்த வீட்டிற்கு எத்தனை மகிழ்ச்சியை கொடுக்கும்?

தாயும் தந்தையும் என் பிள்ளை இப்படிப் பேசுகிறது என்றும், என்னம்மா கேள்வி கேட்கிறாள் என் மகள் எனவும் அக்குழந்தை இயல்பாக செய்யும் ஒவ்வொரு செயலையும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ரசிப்பர். தாத்தா, பாட்டி பற்றி கேட்கவா வேண்டும்! அக்குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனாலும் தாத்தா பாட்டிக்கு அக்குழந்தை எப்பவுமே செல்லம்தான். தாய் அல்லது தந்தை மீது கூட குறை கூறும் சிலர் தாத்தா பாட்டி என்றால் நிச்சயம் கொண்டாடத்தான் செய்வார்கள். எப்போதுமே அவர்களைப் பற்றிய அன்பான மகிழ்ச்சியான நினைவுகள் தான் அதிகம் இருக்கும். அதைவிட ஒருவரின் வாழ்க்கை முழுவது தொடரும் உடன்பிறப்புகளின் உறவைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பாசமலர்கள் படம் பார்த்து உருகாத நம் முந்தைய தலைமுறையினர் உண்டா? கிழக்குச் சீமையிலே படம் எவ்வளவு கொண்டாடப்பட்டது? அதக் கூட விடுங்க, அண்ணன் தங்கச்சி பாசம் என்ன சாதாரண விசயமா? இன்றளவும் நமது சினிமாக்களில் ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்து வருகிறது. நல்ல வசூலையும் ஈட்டித் தருகிறது. இப்படியாகத்தான் நமக்கு நம் குடும்பங்களை பற்றிக் கருத்து இருக்கிறது.

இந்தியா கலாசாரத்தில் உயரந்த நாடு என்று நம் பொதுப்புத்தியில் உள்ளது. அது என்ன கலாச்சாரம்னு கேட்டால் குடும்ப அமைப்பு தான் என்று பலரும் படார் என்று பதில் கூறுவர். குடும்ப அமைப்போடு சேர்த்து எங்க நாட்டில பெண்களை தெய்வமா நடத்துவோம், குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் பாசமா அன்பா இருப்போம் என்று கூறி மெய்சிலிர்க்க வைப்பர்.

உண்மையைச் சொல்லுங்கள். நாம் இப்படித்தான் இருக்கிறோமா? குடும்பங்களில் அன்பு, பாசம், பரிவு மற்றும் அவரவரின் சுயமரியாதை போன்ற உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா? குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்த சமமான இடம் கிடைக்கிறதா? அல்லது “குடும்ப கௌரவம்” என்று கூறிக்கொண்டு குடும்ப உறுப்பினர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறோமா? இந்த விவாதத்தை நாம் முதலில் நமக்குள்ளும், நமது அமைப்புக்குள்ளும், நமது குடும்பங்களிலும் ஆரம்பிக்க வேண்டும்.

நாட்டுல எத்தனையோ முக்கியமான பிரச்சனை இருக்கு விவாதிக்க, இதை ஒரு முக்கியமான விசயமா பேச முடியுமா என்று கூட சிலர் எண்ணலாம். ஆம், இது நிச்சயம் முக்கியப்பிரச்னைதான். விலங்குகள் கூட உணவுக்காக மட்டுமே மற்ற விலங்கை கொல்கிறது. அதுவும் கூட தன் இனத்தைக் கொல்வது கிடையாது. ஆனால், மனிதர்கள்? குடும்பக் கலாச்சாரத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் தான் தாத்தா, தந்தை, தாய் மற்றும் சகோதரரால் தங்கள் வீட்டுப் பெண்களை கொலை செய்யும் “உயர்ந்த” கலாச்சாரம் இருக்கிறது. எனவே தான், எப்படி இதைச் சகித்துக் கொண்டு நகர்கிறது நம் சமூகம் என்ற அடிப்படைக் கேள்வியையாவது நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

தான் விரும்பும் ஒருவரை (தலித் சமூகத்தை சார்ந்த ஆண்) பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த ஊரில் இருந்தால் பிரச்சனை வரும் என்பதால் கேரளம் சென்று தம்பதியினர் வாழ்க்கையை நடத்த முடிவு செய்தனர். மகிழ்ச்சியாகவும் இருந்தனர். அவர்களை எப்படியோ கண்டுபிடித்து ஊருக்கு வரச் செய்தனர் லட்சுமியின் பெற்றோர்கள். அப்பொழுது அவள் ஐந்து மாதம் கர்ப்பம். ஊரில் உள்ள கோயிலில் தன் தாயை லட்சுமி சந்தித்துள்ளார். நீண்ட நாள் கழித்துப் பார்ப்பதால் தன் பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும், இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு, லட்சுமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் அந்தத்தாய்.

அதன் பின்னர், தன்னுடைய மனைவியை தொடர்பு கொள்ள முடியாததால் போலீசின் உதவி நாடினார் லட்சுமியின் கணவர். விசாரித்ததில் லட்சுமியின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் தாய் மாமன்கள் மூவர் சேர்ந்து ஐந்து மாதம் கர்ப்பிணியான லட்சுமியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். ஏன் தெரியுமா? அவள் தன் விருப்பப்படி தன் துணையைத் தேர்வு செய்தது மட்டுமல்லாது, வேறு சாதியை சார்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ததால், இவ்வாறு கொன்று விட்டார்களாம்.

சமீபத்தில் கடலூரில் நடந்த மற்றொரு சம்பவம். 19 வயது கல்லூரி மாணவியை அவரின் தாத்தா கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். கழுத்தை அறுத்துக் கொன்றது மட்டுமல்லாது அப்பெண்ணின் உடலை வீட்டில் இருந்து வெளியில் இழுத்து வந்து நடுச் சாலையில் போட்டுள்ளார். கொலைக்கான காரணம்? அப்பெண் தன் கல்லூரியில் தன்னுடன் பயிலும் வேற்று சாதி (தலித்) மாணவர் ஒருவரை விரும்பியுள்ளார். கொலை செய்த அந்தத் தாத்தா அந்த ஊர் நாட்டாமையாம். ஊரில் வரும் பிரச்சனைகளை தீர்த்துவைப்பவராம். பேத்தி வேற்று சாதி ஆணை விரும்பியதால் இவரின் “கௌரவம்” குறைந்து விட்டதாம். எனவே, பேத்தியைக் கொலை செய்து தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றிவிட்டாராம்.

இப்படிப்பட்ட பல பேர் நம் ஊர்களில் நாட்டாமைகளாகவும், ஊர்த் தலைவர்களாகவும் சமூகத்தில் எந்தக் கேள்வியுமற்ற மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டுமா? சமூகச்சூழல் இப்படியிருக்க இதை மாற்ற நாம் என்ன செய்யபோகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வி. இதைப்போலவே பெற்றோர்களாலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட பெண்கள், கடுமையாக தாக்கித் துடிக்கத் துடிக்க இறந்த பெண்கள் என நாம் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்த பத்து மாதங்களில் மட்டுமே 70 பேருக்கும் மேல் குடும்ப “கௌரவம்” போய்விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தாய், தந்தை மற்றும் சகோதரர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகம் கொலை செய்யப்பட்டது பெண்கள்தான் என்பதை நம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவும் கூட நமக்கு பொதுவெளியில் தெரிந்த சம்பவங்கள் மட்டும் தான். தெரியாதவை எத்தனையோ?

சாதியா? கௌரவமா?

சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம் என்று பாடிய மகாகவி பாரதி வாழ்ந்த தமிழகத்தில் அரங்கேறும் இந்தப் படுகொலைகளுக்கு சாதி ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக “உயர்” சாதி என்று சொல்லப்படுகிற ஆதிக்க சமூகத்தில், அவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் மாற்று சாதி (குறிப்பாக தலித்) ஆண்களை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ, அவர்களின் “உயர்” சாதிக்கு கேவலம் ஆகி விடுகிறதாம். மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் சாதியாக பார்க்கும் சமூகத்தின் கொடூர முகம் தான் இந்தக் கொலைகள். மனித ஏற்றத்தாழ்வை கட்டிக்காக்க, சாதிக் கௌரவம் காக்க நடக்கும் கொலைகளை எப்படிக் கௌரவமாக பார்க்க முடியும்? அப்படிப் பார்ப்பவர்கள் மூடர்கள் தானே? இச்செயல்களில் ஈடுபடுபவர்களும், அதை ஆதரிக்கிறவர்களும், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பவர்களும் அடிப்படை மனித நாகரிகம் அற்றவர்கள் தானே?

பொதுவாக, இப்படியான ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடப்பதில்லை, இதுபோன்ற செயல்கள் வட இந்தியாவில் தான் நடக்கிறது என்று நாம் பல நாட்களாக நம்பிக்கொண்டு இருந்திருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதை மேலே நாம் பார்த்த சில சம்பவங்களின் உதாரணம் மட்டுமல்லாது,   நாளேடுகளை வாசிப்பதன் மூலமும் சமூகத்திற்கு தெரிந்துள்ளது. எனினும் இதில் சில கவனிக்க வேண்டிய சில விசயங்கள் உள்ளன.

முதலில் ஆணவக் கொலைகள் நடைபெறுவதற்கான, நடந்ததற்கான சான்றுகள் ஆவணமாக இன்னும் உருவாகவே இல்லை. அரசுத் தரப்போ இப்படியான கொலைகள் நடக்கின்றன என்பதையே ஏற்க மறுக்கிறது. காதலித்ததில் ஒருவர் தலித்தாக இருக்கும் பட்சத்தில் நடக்கும் கொலைகளை ளுஊ/ளுகூ வன்முறைத் தடுப்புச் சட்டதின் கீழ் குற்றம் பதிவு செய்யும் பட்சத்திலும், சிலர் குற்றம் பதிவதன் காரணத்தினாலும் இது போன்ற ஆணவக் கொலைகள் பொது வெளிக்கு வருகின்றன. இல்லையெனில் நிச்சயம் மூடி மறைக்கப்படும். பெண்கள், மற்றும் தலித் அல்லாதோர் காதல் திருமணமோ, அல்லது காதல் செய்கிறார்கள் என்றாலோ பெற்றவர்களால் கொல்லபடுவது வெறும் மரணங்களாகவே பதிவு செய்யப்படுகிறது. இவைகள் ஆணவக் கொலைகள் என்று வெளியில் தெரிவதில்லை.

சாதியக் கட்டமைப்பும் பெண்ணின் மனித உரிமையும்:

சாதியக் கட்டமைப்பும் பெண்ணிய மனித உரிமைக்கான கோரிக்கைகளும் ஒன்றுக்கொன்று அடிப்படை முரண்பாட்டைக் கொண்டது. சாதியம் நிலைத்திருக்க பெண்களை அடிமைப்படுத்தியே செயல்முறைப்படுத்த முடியும். பெண்ணின் மனித உரிமைகள் நிறைவேற சாதியம் வேரோடு அழிந்தே ஆகவேண்டும்.

சர்வதேச மனித உரிமைக் கழகம் கூறுவது என்னவென்றால், இந்த மாதிரியான கொலைகள் பெரும்பான்மையான குடும்பங்களில், அக்குடும்ப ஆண்களால் தான் நிகழ்கின்றன என்கிறது. ஆக, அண்ணன், தம்பி இருந்தால் பெண்ணிற்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது இப்போது கேள்விக்குறிதான்.

சாதிய மனப்பான்மை ஓங்கி உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு விருப்பமான பொம்மை போல் இருக்கும் வரை பெண்களை அலமாரியில் வைத்து அழகு பார்ப்பர். இதைத்தான் பெண்களுக்கான பாதுகாப்பு என்கின்றனர் போலும்.

குறிப்பாக பெண்களை ஏன் கட்டுப்படுத்துகிறார்கள் என்று எண்ணும் பொழுது வெளிப்படுவது என்னவென்றால், பெண் என்பவள் தனிப்பட்ட மனுஷி கிடையாது. அவளுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. அவள் சுயமாக சிந்தித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவே கூடாது (முடியாதது என்பதல்ல, பெண்களால் முடியும், ஆனால் கூடாது). அவளின் உடல் மீது அவளுக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் என்பவள் குடும்பத்தின் சொத்து (வாரிசு அல்ல). ஆகா அந்தப் பொருளின் உரிமையாளர் (ஆண்) அப்பொருளை (அப்பெண்ணை) எப்படி நடத்த வேண்டும் என்று முடிவு செய்வார். குறிப்பாக இந்தப் பொருள் (பெண்கள்) குழந்தை பெறுவதற்கு, அதுவும் குறிப்பாக ஆண் குழந்தை பெறுவதற்கு மட்டுமே என்று இந்த சமூகம் பார்க்கிறது. ஆண் குழந்தை குடும்ப வாரிசு, அந்த வாரிசு சாதிய “கலப்படம்” இல்லாமல் இருக்க வேண்டும் (எவ்வளவு கேவலமான, பிற்போக்குத்தனமான கருத்து ). இப்படி இருக்க வேண்டும் என்றால் பெண்களின் பாலியல் உரிமைகளை அவர்களுக்கு கொடுக்க முடியாது என்பதுதான் இந்த சாதிய சமூகத்தின் நீதி (அநீதி). இப்படியான கட்டமைப்பை உடைத்து மாற்றினால் மட்டுமே நாகரிகமான சமூக அமைப்பை நாம் உருவாக்க முடியும்.

இந்த மாதிரியான அடிப்படை மனித நாகரிகத்தை அசைக்கும் வகையில் பெண்கள் முடிவெடுக்கும் போது தான் நமது அன்பான குடுபங்களின் உண்மை முகங்கள் வெளியில் தெரிகிறது. ஆணவக் கொலைகள் பல வகைகளில் நடைபெறுகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். கொலைகளாக மட்டும் இல்லாமல் பெண்களை தற்கொலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். பல தற்கொலைகளில் கூட சாதிய அரசியல் இருக்கிறது. குடும்ப உறுபினர்களே அவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி பின்பு திருமணம் செய்யும் கொடுமையும் நடக்கிறது. பல நேரங்களில் இவ்வகையான ஆணவக் கொலைகள் வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது. இப்படியாக கொல்லப்பட்ட பல பெண்களை குல தெய்வங்களாகவும், காவல் தெய்வங்களாகவும் மாற்றப்பட்டுள்ள “மேன்மையான” கலாச்சாரத்தை கொண்டுள்ளோம். இவ்வகையான கலாச்சாரத்தை காக்க நினைக்கும் எவருக்கும் நாம் உருவாக்க நினைக்கும் சமூகத்தில் இடம் இல்லை. சாதிய கட்டுப்பாட்டுக்குள் சமூகம் இருக்கும் வரை குடும்பங்களில் உண்மையான அன்பும், உரிமையும் போலியானதாகவே இருக்கும்.

Related Posts