அரசியல் சமூகம்

மேற்கு உ.பி கலவரங்கள்; சஹரான்பூரில் நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரான்பூரில் இரு மதப்பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை – பதற்றச்சூழலையடுத்து 38 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞாயிறன்று அங்கு பதற்றம் நிறைந்த அமைதி நிலவியது. இந்நிலையில், சஹரான்பூர் உட்பட மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து மதவெறி வன்முறைகளும் கலவரமும் ஏற்படுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவையே காரணம் என்று உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதிக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரசும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எனினும், சமாஜ்வாதிக் கட்சி அரசின் கையாளாகாத்தனமே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று பாஜக புகார் கூறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது சஹரான்பூர் மாவட்டம் தலைநகர் தில்லியிலிருந்து டேராடூன் செல்லும் நெடுஞ்சாலையில் 80வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது சஹரான்பூர் நகரம். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து கிட்டத்தட்ட 570 கிலோ மீட்டர் தொலைவில் அந்த நகரம் அமைந்துள்ளது.

ஏற்கெனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பு ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக் கும்பல்கள் வெறியாட்டம் நடத்தி சுமார் 60 பேரை படுகொலை செய்த முசாபர் நகர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது சஹரான்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஜூலை 26 சனிக்கிழமை சஹரான்பூரில் இரண்டு மதப்பிரிவின ரிடையே ஒரு நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது குறித்து பிரச்சனை ஏற்பட்டது. சஹரான்பூர் ரயில் நிலையத்தையொட்டி ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பகுதி, அந்நகரின் பிரதான சீக்கிய குருதுவாராவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஜாட் இனத்தவர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அதே நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இது தொடர்பான பிரச்சனை பல்லாண்டு காலமாக நீடித்து வருகிறது. எனவே அந்நிலப்பகுதியில் இருதரப்பினரும் எந்தவிதமான பயன்பாடும் செய்யாமல் விட்டுள்ளனர்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சீக்கிய மதத்தைச்சேர்ந்த சில கும்பல்கள் அந்நிலப்பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கான செங்கல் உள்ளிட்ட பொருட்களை இறக்கியுள்ளனர். இதைப்பார்த்த இஸ்லாமியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டியே இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை எழுந்து, வன்முறையாக மாறியது.காலை 5 மணிக்குத் துவங்கிய மோதல் கலவரமாக மாறியது. கல்வீச்சு, தீவைப்பு, கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் மூன்று பேர் கொல்லப்பட் டனர்.

இருதரப்புக்கும் சொந்தமான ஏராளமான கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், ஞாயிறன்று காவல்துறை யினர், வன்முறையில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்துள்ளனர். தற்சமயம்அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இயல்பு நிலையை நோக்கி நகர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முசாபர் நகர் முதல் மொராதாபாத் வரை

சஹரான்பூரில் நடந்துள்ள இந்தக்கல வரம், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு முசாபர் நகரில் வித்திடப்பட்ட மதவெறி வன்முறையின் தொடர்ச்சிகளில் ஒன்றே என அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் திட்டமிட்டு மதவெறிப் பதற்றச்சூழல் பரப்பப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முசாபர் நகரில் 60 இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட மதவெறி வன்முறையைத் தொடர்ந்து மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றிபெற்றது. மதவெறி வன்முறையை அரங்கேற்றியதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தைச்சேர்ந்த மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் அணிதிரட்டுவதில் அக்கட்சி வெற்றிபெற்றது.

இந்நிலையில், இதே விதமான முன்மாதிரியை அப்பகுதி முழுவதும் அரங்கேற்றம் செய்ய இந்துத்துவா மதவெறி பரிவாரம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் விளைவே சஹரான்பூரில் நடந்துள்ள கலவரம் என்று டி.என்.ஏ. செய்தி தெரிவிக்கிறது.சஹரான்பூரில் சனிக்கிழமை நடந்த கலவரத்திற்கு முன்பு இதையொட்டியுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் மதவெறி கலவரச்சம்பவங்கள் நடந்துள்ளன. இப்பிரதேசம் முழுவதும் இந்துமதம் மற்றும் சீக்கிய மதத்தைச்சேர்ந்த ஜாட் இனத்தவரும், முஸ்லிம்களும் பரஸ்பரம் எதிரிகளாக மாறும் விதத்தில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இதன் விளைவாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் எங்கேனும் ஒரு சிறு சம்பவம் நடந்தால்கூட அது கலவரமாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்துவதில்போய் முடிகிறது.

அப்படி ஒரு நிலப்பிரச்சனை தொடர்பாக உருவானதுதான் சஹரான்பூர் கலவரம் என்று டி.என்.ஏ. செய்தி விரிவாகத் தெரிவிக்கிறது.சஹரான்பூரை ஒட்டியுள்ள மற்றொரு மாவட்டமான மொராதாபாத்திலும் ஜூலை மாதம் துவக்கம் முதலே மதவெறிப்பதற்றம் நிலவிவருகிறது. இங்குள்ள அக்பர்பூர் கிராமத்தில் வழிபாட்டுத்தலத்தில் ஒலிபெருக்கி வைத்தது தொடர்பாக எழுந்த பிரச்சனை பெரும் மோதலாக மாறி இன்னும் பதற்றம் நீடிக்கிறது. பதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.

இந்த மாவட்டத்தில் எப்படியேனும் பெரும் கலவரத்தை நடத்திவிட வேண்டும் என்பதில் அப்பகுதி பாஜக எம்.பி.க்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.மொத்தத்தில் மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் மதவெறிக்களமாக மாற்றப்பட்டு வருகிறது. மத்தியில் தங்களது ஆட்சி நடக்கிறது என்ற ஊக்கம், பாஜக எம்.பி.க்களுக்கு கலவரம் நடத்த உத்வேகமளித்து வருகிறது. ஆனால் நிலைமை மோசமடைகிறது எனத் தெரிந்தும் அதை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்காமல் சமாஜ்வாதிக் கட்சியின் அகிலேஷ் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

(நன்றி: தீக்கதிர், பிடிஐ, டிஎன்ஏ நாளிதழ்கள்)

Related Posts