தொழில்நுட்பம்

கூகுள் நமக்கு என்ன செய்திருக்கிறது?

கூகுளை ரொம்ப தீவிரமா விமர்சிப்பவர்கள் கூட கூகுளுக்கு எதிரான தீவிரமான வாதங்களைத் தேடுறதுக்காகவோ, இல்ல புதுசா ஒரு ஊருக்குப் போகும்போது வழிதேடுறது போல அல்ப விசயங்களுக்காகவோ, கூகுளோட சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். நேர்மையா பேசலாம்: கூகுள் இல்லாம போனா பல முக்கியமான விசயங்கள்ல வாழ்க்கை ரொம்பவே மோசமாவும் கஷ்டமாவும் இருக்கும்.

ஆனா, இதைக் காரணமா சொல்லி கூகுளையும் பிற தொழில்நுட்ப பூதங்களையும் கண்டுகொள்ளாம விட முடியாது. நேர்மாறா, அந்த நிறுவனங்கள சனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ கொண்டுவரணும் என்பதற்கான முக்கியக் காரணம் அவங்களோட பங்களிப்பின் தன்மையும் முக்கியத்துவமும்தான். பரவலா எல்லோரும் ஆதரிக்கிற தனிநபர் அந்தரங்க உரிமையைப் பாதுகாக்கணும் என்ற நோக்கம் மட்டும் இல்ல.

சமீபகாலத்துல பெரும்-தொழில்நுட்ப நிறுவனங்கள் நுண்ணிப்பான கவனத்துக்கு ஆளானதுக்கு ஒரு காரணம், வணிக தினசரிகள், வானொலி, தொலைக்காட்சிகள் முன்னெடுத்த ஒரு வசிய மந்திரத்தை அவை முழுமைப்படுத்தினதுதான்: அந்த மந்திரம்தான் நம்ம கவனத்தை ஈர்த்துப் பிடிச்சு, காசு கொடுக்கும் விளம்பரதாரர்களிடம் நம் புலனுணர்வுகளுக்கான கதவைத் திறந்துவிடும் கலை.

வாசகர்கள், கேட்பவர்கள், பார்வையாளர்கள் எல்லாருமே ஒன்றை விலைகொடுத்தும் வாங்கும் நுகர்வோர்கள் என்றாலும் கூட, வணிக மின் ஊடகங்கள் நேரடியா விற்பனையாளர்களோடு பரிமாற்றம் நடத்தி இலாபம் அடைவது எப்படி என்று கற்றுக்கொண்டன. நம்மையும் நம்மோட தரவுகளையும் அந்தப் பரிமாற்றத்தோட மையத்தில செயல்படாம இருக்கும் சந்தைப்பொருளாக ஆக்கிவிட்டன.

கூகுளும், முகநூலும், இன்னபிறவும் இந்த வினோதமான உற்பத்தி நிகழ்வை, நமது திரைகளை மாற்றியமைக்கும் அவர்களது பாரிய திறனைக் கொண்டு, வேறொரு தளத்திற்கு கொண்டுசென்றிருக்கின்றன. இதில் நம்மோட கவனம்தான் விற்பனைப் பொருள். அவங்களோட முன்னோடிகளப் போல் இல்லாம, இவங்க நம்ம ஒவ்வொருவரின் கவனத்தையும் தனிநபருக்கேற்ற வகையில் (அல்லது சமயங்களில் மனநிலைக்கேற்ற) ஈர்ப்பான்களைக் கொண்டு கவருகின்றனர். பின் அதிகவிலை கொடுப்பவருக்கு நம்மோட தரவுகள், புலன் உணர்வுகள் இரண்டையும் அணுகும் உரிமையை விற்கின்றனர்.

பெருதொழில்நுட்பத்துக்கு எதிரான இந்த எதிர்ப்புகளின் அடிப்படையில் இருப்பது, நாம் எல்லாருமே உழைக்கும் பயனாளர்களாக மாறிக்கொண்டு வருகிறோம் என்ற புரிதல்தான். 1970களிலும் 80களிலும் வணிகத் தொலைக்காட்சி அலைவரிசைகள், ஒரு திரைப்படத்தின் முடியும் சமயத்திலோ கூடைப்பந்தாட்டத்தில் முக்கியமான தருணத்திலோ விளம்பரங்களைப் போட்டு நம்மை சுற்றிவளைத்தபோது நாம் எரிச்சல் அடைந்தோம். இப்போ, நம்ம கவனத்தைக் கவர்ந்து உடனே விற்றும் விடுகிற நிகழ்காலத் தந்திரங்களை நம்மால அடையாளம் கண்டுகொள்ளக் கூட முடிவதில்லை.

நாம என்ன பார்க்கிறோம், நம்ம தேர்வுகளை முடிவுசெய்வது எது, நாம தேர்வு செய்வது யாருக்கெல்லாம் தெரிகிறது என்பன போன்றவற்றில் நாம இழந்த உரிமையை மீட்டெடுக்க தரவுப் பாதுகாப்பும், தனியுரிமைச் சட்டங்களும் தேவை. ஆனா, பெருதொழில்நுட்பத்தை முறைப்படுத்தி நம்ம தரவுகளைப் பாதுகாப்பதும், ‘நுகர்வோர் இறையாண்மை’யை (அதாவது உற்பத்தி குறித்த முடிவுகளில் நுகர்வோர் தேவையின் ஆதிக்கம்) மீட்டு எடுப்பதும் மட்டும் போதாது.

தானியங்கி மயமாதல்(ஆட்டோமேஷன்), தற்காலிக வேலைகள் அதிகரிப்பது போன்றவற்றின் பின்னணியில், இந்த நிறுவனங்களோட ஏகபோக இலாபங்கள் சமமின்மையைப் பெருக்குது, அதிருப்தியைக் கூட்டுது, பொருட்கள் சேவைகளுக்கான மொத்த தேவையைக் குறைத்துக் காட்டுது, முதலாளித்துவத்தை மேலும் நிலையற்றதாக்குது.

இதில, வழக்கமான அரசாங்கத் தலையீடுகள் அர்த்தமற்ற செயல்பாடுகளா மட்டுமே இருக்கும் என்பதுதான் பிரச்சினை: இலவசச் சேவைகளுக்கு வரிவிதிப்பதில அர்த்தமில்லை. ரோபோட்டுகளுக்கு வரிவிதிச்சு, மனிதர்களுக்கு நிதியளிப்பது என்பது அவற்றை வரையறுப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது. அதுமட்டுமில்லாம, பெருதொழில்நுட்ப இலாபங்களுக்கு வரிவிதிப்பது அத்தியாவசியம் என்றாலுமே, இந்த நிறுவனங்களோட திறமைவாய்ந்த கணக்காளர்களும், இலாபங்களை வெவ்வேறு சட்டங்கள் செயல்படும் நாடுகள், பகுதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் இதைக் கடினமாக்குகின்றன.

ஒரு எளிமையான தீர்வு இருக்கு, நாம வரிவிதிப்பைத் தாண்டி யோசிக்கணும். அதற்கு முதல்ல, குறைந்தபட்சம் கூகுள் போன்றவற்றிலாவது மூலதனம் தனியாரால் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதை நாம் ஏற்கணும்.

ஜேம்ஸ் வாட் தனது புகழ்பெற்ற நீராவி எஞ்சினை உருவாக்கியபோது அது அவரது படைப்பு, அவரது விளைபொருள். அதை வாங்குற ஒருவர், தனது துணித் தொழிற்சாலையில அதைப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம், வாங்கியவர் அதைத் தொடர்ந்து வரும் இலாபத்தை துணிந்து எஞ்சினை வாங்கியதற்கும், அதனை ஒரு இயந்திர நூற்பாலை அல்லது இராட்டையுடன் இணைக்கும் யோசனைக்கும் கிடைச்ச பரிசு என்று கருதலாம்.

இதற்கு நேர்மாறா, கூகுள் தன்னோட தொடர் இலாபத்தை உருவாக்கப் பயன்படும் மூலதனம் முழுக்க முழுக்க தன்னால் உருவாக்கப்பட்டதென சொன்னால், அதை ஏத்துக்கமுடியாது. ஒவ்வொரு முறை ஒரு வாசகத்தை, கருத்தை, பொருளைத் தேடி கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தும்போதும், கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தி ஒரு இடத்துக்குச் போகும்போதும் நீங்க கூகுளோட மூலதனத்தைப் பெருக்குகிறீங்க. அதன் சர்வர்களும் மென்பொருள் வடிவமைப்பும் முதலாளித்துவ முறைகள்ல உற்பத்தி செய்யப்பட்டது என்றாலும், கூகுளோட மூலதனத்தின் பெரும்பகுதி ஏறக்குறைய நாம எல்லோரும் உருவாக்கியது. கூகுளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருமே, கொள்கையளவில், ஏற்கனவே அதில் பங்குதாரரென கோர நியாயமான உரிமை இருக்கு.

பெருதொழில்நுட்பத்தின் மூலதனத்தில் பெருமளவு பொதுமக்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், தனிநபர் பங்களிப்புகளைக் கணக்கிட எந்த சரியான வழியும் இல்லைதான். அதனால நம்மோட தனிப்பட்ட பங்குகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாது. ஆனால் இந்த கணக்கிட முடியாத தன்மையவே ஒரு நன்மையாக மாற்றலாம். கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை, 10% என்று வைத்துக்கொள்வோம், செலுத்தவேண்டிய ஒரு பொது அறக்கட்டளை நிதியை உருவாக்கலாம்.

அப்போது, எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு நிதி இருக்கும், அதில் பெருகும் ஈவுத்தொகை உலகளாவிய அடிப்படை வருமானத்தை உறுதிசெய்யும். இந்த வருமானம் தானியங்கி மயமாக்கலுக்கு ஏற்ப பெருகுவதால், சமமின்மை கட்டுப்படுத்தப்பட்டு பேரியப்

பொருளாதாரம்(மேக்ரோ எகனாமி) நிலையாக்கப்படும்.

இந்த கவர்ச்சியான தீர்வுக்கு இரண்டு தடைகளைத் தாண்டணும். முதலாவது, வரிவிதிப்பை ஒரு சர்வரோக நிவாரணியா பார்க்கிறோம். அப்போ, உழைக்காத பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் சலுகையளிப்பதில் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்ளாத போராடும் உழைக்கும் மக்களிடமிருந்து, வரிவிதிப்பைக் கொண்டு உலகளாவிய அடிப்படை வருமானம் கொடுக்க நிச்சயம் எதிர்ப்புகள் வரும். இரண்டாவது, வழக்கமாக பெருநிறுவனப் பங்குகள் பணியாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுபவை.

ஏழை மக்கள் நலனுக்காக இலாபங்களின் மேல் வரிவிதிப்பதற்கும், தொழிலாளர்-முதலாளியாகும் திட்டங்களுக்கும் பல நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும் பிரச்சினையிலிருந்து இவை மாறுபட்டவை: கூகுளுடைய மூலதனத்தின் சொத்துரிமையை அதை உருவாக்க உழைத்த எல்லோருக்கும் அளித்து சமூகத்தை நிலைப்படுத்துவது எப்படி, இந்த எல்லோரில்  சம்பளமில்லாத கவனிப்பாளர்கள், முறையான வேலை இல்லாதவங்க, சமூகத்தின் உதிரிகள் எல்லோரும் உண்டு.

அடுத்து, எதிர்பார்த்தது போலவே, இப்போதைய நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புவோர் பரப்பும் உள்நோக்கமுள்ள போலிவாதங்களும் இருக்கு. ஃபைனான்சியல் டைம்ஸின் அல்ஃபாவில் பத்தியானது சமீபத்தில் பெருதொழில்நுட்ப பெருநிறுவனங்களின் குறிப்பிட்ட பகுதி பங்குகளை பொது அறக்கட்டளை நிதியொன்றுக்கு மாற்றுவது குறித்த விவாதத்தை நிராகரிச்சு எழுதியது.

இதற்காக அந்தக் கோரிக்கையின் மைய விவாதத்தைத் திரித்து, கூகுள் நமக்கு செய்திருக்கும் விசயங்களோட மதிப்பை உணரத் தவறியதாலயே இந்த விவாதம் எழுவதாக எழுதியது. பயனாளர்களான நாம உருவாக்கிய மூலதனத்தின் இலாபங்கள் மீது சமூகத்துக்கு உள்ள சொத்துரிமையை மறுக்க, பெருதொழில்நுட்பத்தின் ஆதரவாளர்கள் பயனாளர்களுடைய பெருமளவு நுகர்வோர் உபரியைக்[1] குறித்துப் பேசுறாங்க.

[1] நுகர்வோர் உபரி – ஒரு பொருள் அல்லது சேவைக்கு, நுகர்வோர் கொடுக்கத் தயாராக இருக்கும் விலைக்கும், கொடுக்கிற விலைக்குமான வித்தியாசம்தான் நுகர்வோர் உபரி. இங்க, நாம கூகுளுக்கு உருவாக்கித் தர இலாபத்தை விட கூகுள் நமக்குத் தர சேவைகளோட மதிப்பு மிக அதிகம் அப்படின்னு இந்த மாதிரி நபர்கள் சொல்றாங்க.

ஒரு நிறுவனத்தில் உங்கள் பங்கைப் பறித்துக் கொள்ளுவதை, அந்த நிறுவனம் உங்களுக்கும் மத்தவங்களுக்கும் அளிக்கும் மதிப்புமிக்க சேவைகளைக் காட்டி நியாயப்படுத்துவதை போல வேறு மோசமான விசயம் கிடையாது. பெருதொழில்நுட்பத்தின் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அதன் மூலதனத்தின் ஒரு பகுதியை நாம் சமகாலத்தில் உருவாக்குகிறோம். அதனால, அடுத்த படியாக அந்தப் பகுதியின் மீதான சொத்துரிமை – நம்மில் ஒருவருக்கு என்றில்லாம, நம்ம எல்லோருக்கும் – கிடைத்தாக வேண்டும்.

2018, ப்ராஜெக்ட் சிண்டிகேட்

யானிஸ் வருஃபாகிஸ்

தமிழில் – வயலட்.

Related Posts