அறிவியல்

மார்ச் 22, 2020 ஊரடங்கு என்ன சாதிக்கும்?

பாரத பிரதமர் தொலைகாட்சியில் உரையாற்றும்போது வரும் மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


இந்த ஊரடங்கை நாம் எல்லோரும் மதித்து நடந்து கொண்டால் கரோனா வைரஸ் பரவல் வேகத்தை சற்று தாமதம் செய்யலாம். அதன் காரணமாக ஒரேடியாக மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் விதத்தில் காட்டு தீ போல பரவிவிடாமல் மெல்ல மெல்ல பரவ செய்து படிப்படியாக தொற்றுநோயை நீக்கலாம். எனவே அனைவரும் மனம் உவந்து இந்த நாளில் மக்கள் ஊரடங்கை அமுல் செய்யவேண்டும். அதுதவிர எப்போது எல்லாம் சாத்தியமோ, யாருக்கெல்லாம் சாத்தியமோ அவர்கள் பொதுவெளியில் நடமாட்டத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நலம்.

கொரோனா -மரண தண்டனையா?

கரோனா வைரஸ் தாக்கினாலே மரணம் என்று அச்சம் வேண்டாம். சுமார் நூறுபேருக்கு கரோனா வைரஸ் பரவினால் அதில் எல்லோரும் நோயின் உக்கிர பாதிப்புக்கு உள்ளாகமாட்டார்கள்.

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 80.9% பேருக்கு வெறும் மிதமான பாதிப்பு தான் ஏற்படுகிறது. அதாவது ஜலதோஷம் போல. சுமார் 13.8% சற்றே கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவ உதவி தேவை… வெறும் 4.7% தான் உக்கிர நிலையை அடைகிறார்கள். அவர்களுக்கு தான் தீவிர மருத்துவ சிகிச்சை தேவைபடுகிறது.

இது தொற்றுநோய் என்பதால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் நீங்கள் மற்றவர்களின் பாதிப்புக்கு காரணமாக அமைந்து விடக்கூடும்.

எடுத்துக்காட்டாக இதுவரை உலகெங்கும் கரோனா வைரஸ் தொற்றுநோய் அறிகுறியே இல்லாதவர்களால் தான் 80% வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏற்கனவே கிருமி தொற்று இருக்கலாம். எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாக இருந்து உங்களிடம் வைரஸ் தோல்வியுற்றது என்று அர்த்தம். ஆயினும் நீங்கள் கிருமி பரப்பும் வாய்ப்பு கொண்டவர்.

பரவும் விதம்…


எனவே உள்ளபடியே இந்த கிருமி அபாயகரமான கிருமி இல்லை, ஆனால் இதன் மற்ற ஒரு தன்மை தான் நம்மை அச்சுறுத்துகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாக உள்ளவர்களிடம் தோற்று விட்டாலும் இது அவர்களால் சுமார் 2.6 நபர்களுக்கு சராசரியாக பரவும்.

அதாவது நோய் அறிகுறி இல்லாமல் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாக இருந்து நோய்வாய் படாமல் இருந்தாலும் அவர் இரண்டு பேருக்கு இந்த கிருமியை பரப்பிவிடுவார்கள். 2 பேர் 4 பேருக்கு பரப்பி விடுவார்கள்..

முதல் பரவல் 2 பேருக்கு, இரண்டாம் பரவல் 4 பேருக்கு.. மூன்றாம் பரவல் 8 பேருக்கு.. நான்காம் பரவல் -> 16 பேருக்கு.. ஐந்தாம் பரவல் -> 32 பேருக்கு என கிடுகிடுவென பரவும். வெறும் பதினாறாவது பரவலில் 65536 பேருக்கு இந்த கிருமி பரவிவிடும். அதுவரை கிருமி பரவியவர்களின் மொத்த தொகை 131070 ஆகிவிடும்.

வெறும் 4.7% தான் தீவிர நோய்க்கு உள்ளாவார்கள். அதன் பொருள் பதினேழு முறை பரவினால் சுமார் 6160 பேர் கடும் நோய்க்கு உள்ளவர்கள். இவர்கள் ஒரு சில நாட்களில் கடும் நோய்க்கு உள்ளாகி மருத்துவமனைக்கு வந்து குவிவார்கள். இவ்வளவு பேருக்கும் வேண்டிலேடர், ஆக்ஸிஜன் போன்றவை ஒரு சிறு நகரில் இருக்குமா?
அடுத்தநாள் இந்த எண்ணிக்கை எவ்வளவு ஆகும் தெரியுமா? அந்த ஒருநாளில் மட்டும் புதிதாக 131072 பேருக்கு கிருமி தொற்று ஏற்படும். இவர்களில் 4.7% கூடுதலாக 6160 தீவிர நிலை நோயாளிகள் அதாவது மொத்தம் 12320 தீவிர நோயாளிகள் என்று ஆவர்கள். இவ்வளவு பெரும் ஒரே சமயத்தில் வந்தால் மருத்துவமனைகள் சமாளிக்க முடியாது.

இதனைத்தான் அதிவேகமான பன்மடி பெருக்கம் அல்லது எசஸ்பொனன்ஷியல் பெருக்கம் என்பார்கள். இந்த வேகத்தை கட்டுபடுத்துவது எப்படி.??

சங்கிலியை உடை..

கிருமித் தொற்று உள்ளவர் மற்றவர்களை 14 நாட்கள் தனியே இருந்து மற்றவர்களை சந்தித்து பரப்பவில்லை என்றால் அவரால் அதன் பின்னர் கிருமி பரப்ப முடியாது. அதுவரை மட்டுமே அவரது உடலில் கிருமி இருக்கும். அதன் பின்னர் ஒழிந்துவிடும்.
அதற்கு பின்னால் அவரையும் அந்த கிருமி அண்டமுடியாது.

அடுத்ததாக கிருமி தொற்றாதவர்கள் வெளியே வந்து கிருமி தொற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் தனிமையை கடைபிடித்தால் தொற்ற ஆளில்லாமல் வேகம் குறைந்து விடும்.

இதனால் தான் தனிமையை கடைப்பிடித்து சமூக விலக்கம் செய்து கொள்வது உசிதம். உங்களிடம் ஏற்கனவே கிருமிதொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் வெளியே வராமல் இருந்தால் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

மேலும் வெளியே செல்ல வேண்டிவந்தால் மற்றவர்களிடமிருந்து “பாதுகாப்பான” தூரம், அதாவது ஒருமீட்டர் சமூக தொலைவு கையாள்வது என்பன மூலம் சங்கிலியை உடைக்கலாம். சங்கிலி உடைபட்டால் கிருமி பரவும் வேகம் வெகுவாக மட்டுப்படும். ஒவ்வொரு நாளும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சமாளிக்கும் அளவாக இருக்கும் மருத்துவர்கள் பெரும்பாலான நோயாளிகளை காப்பாற்றி விடலாம். இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோய் நிமோனியா போன்ற சுவாச நோய். எனவே அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஒருசிலர் மட்டுமே தீவிர நெருக்கடி நிலைக்கு செல்வார்கள்.

எனவே மார்ச் 22 ஊரடங்கு, அவசியம். பலன் தரும்.. மக்கள் உயிரைக் காக்கும்… ஊர்கூடி தேர் இழுத்தால் தான் சாத்தியம்.

வாட்ஸ்அப் விஷமம்…

ஆயினும் பொய்யான தகவலை சுமந்த படி ஒரு சமூக வலைதள செய்தி பரவி வருகிறது. உங்களுக்கும் வந்து இருக்கலாம்.

வரும் மார்ச் 22, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் பின்னணி என்னவாக இருக்கும்? – ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் சுமார் 12 மணிநேரம் தான், ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் இருப்பதால், கொரோனா வைரஸ் இதுவரையில் பரவி இருக்கும் பொதுப் பகுதிகளின் இடங்கள் அல்லது புள்ளிகள் 14 மணிநேரம் தொடப்படாததால், அதன் தொடர் சங்கிலி உடைக்கப்படக் கூடும்.14 மணிநேரத்திற்குப் பிறகு நமக்கு கிடைப்பது மிகவும் பாதுகாப்பான நாடாக இருக்கும்! ஊரடங்கு பின்னணியில் உள்ள யோசனை இதுதான்..

இது முற்றிலும் தவறான தகவல்.


வைரஸ் படரும் இடத்தை பொருத்து சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரை இருக்கும். எனவே இது பொய்யான செய்தி. காற்றில் மூன்று மணிநேரம் தான் இருக்கும், கார்ட்போர்ட் பரப்பில் 24 மணிநேரம் இருக்கும். பிளாஸ்டிக் மட்டும் ஸ்டீல் பொருள்களில் 72 மணிநேரம் இருக்கும்.

மேலும் அறிகுறியே இல்லாமல் ஆனால் கிருமி தொற்று உள்ளவர்கள் அடுத்த நாளும் பரப்பிக்கொண்டு தான் இருப்பார்கள்.


எனவே இந்த நடவடிக்கை கிருமியை ஒழிக்காது. பரவும் சங்கிலியை உடைக்கும். பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும்.

போலியாக அன்றுடன் எல்லா கிருமியும் கிளோஸ் என்ற தவறான தகவல் போலியான உறுதியை ஏற்படுத்தி பலர் அதன் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கையை கைவிட செய்துவிடும். அப்படி நடந்தால் சங்கிலி மேலும் வலுவுறும். அந்த நாளில் கடைபிடித்த ஊரடங்குக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்…

அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கருத்தை கேட்டு தகவலை பரப்புவதற்கு மாறாக போலி செய்திகள் பரப்புவது பலரின் உயிரை குடிக்கும்…

கிருமியை வெற்றியடைய செய்துவிடும்.

போலிகளை பரப்பாதீர்கள்…

அறிவியலை பேசுங்கள்…

மக்கள் உயிர்களை காப்பாற்றுங்கள்…

கிருமி பரவும் சங்கிலியில் உடைப்பு ஏற்படுத்துங்கள்..

  • த.வி.வெங்கடேஸ்வரன்
    Senior Scientist,
    Vigyan Prachar
    New Delhi

Related Posts