சமூகம்

பெருகும் பாலியல் வன்முறைகள்: ஆண்களுக்கான 10 யோசனைகள் …

நாள் தவறாமல், பாலியல் வன்முறைச் செய்திகள் இடம்பிடிக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது. மரண தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. உடைக் கட்டுப்பாடு தொடங்கி, தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது வரை ஏராளமான ஆலோசனைகளை பெண்களுக்கு சொல்லியாகிவிட்டது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை.

திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை, வீடு/கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறுவதைப் போல நாமும் எத்தனை நாட்களுக்கு செயல்படுவது?

குற்றவாளி உருவாவதற்கு முன்னமே, அதன் காரணிகளை தடுப்பதே மிக அவசியமானதும், உடனடித் தேவையும் ஆகும். மனதளவில் பாலியல் வன்முறையை வெறுக்கும் ஆணும் கூட ஏதேனும் ஒரு வகையில் ‘ஆண் என்ற ஆதிக்கம்/ சலுகை பெறும் உணர்விலிருந்து’ முழுமையாக விடுபட்டவனில்லை.

எனவே, சமூகத்தை மாற்றியமைக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில யோசனைகளை இங்கே தர விரும்புகிறேன்.

1) பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் அப்பாக்களின் பங்கு மிக முக்கியமானது. ஆணைப் பெற்றாலும், பெண்ணைப் பெற்றாலும் அவர்களை சக மனிதர்கள் என்ற உணர்வோடு வளர்த்தெடுப்பது தகப்பன் கைகளில் இருக்கிறது. குழந்தை முதலே, ஆண் பெண் நட்பை வளர்த்தெடுங்கள். குழந்தைகளை இருபாலர் பள்ளிகளில் சேர்க்கவும், அவர்களிடையேயான நட்பையும் புரிதலையும் ஊக்குவித்திடுங்கள்.

2) குழந்தை வளர்ப்பின்போது, உடல் மீதான உரிமையைச் சொல்லிக் கொடுத்து வளருங்கள். உடலைக் கண்டு வெட்கப்படும் விதத்திலும், அச்சப்படும் விதத்திலேயும் குழந்தைகளை வளர்க்காதீர்கள். உடலை பராமறிப்பதில் கவனமெடுக்க சொல்லிக் கொடுங்கள்.

3) ஆண், பெண் என்ற பிரிவுகள் உடற்கூறு சார்ந்தவையே – சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சமம் என சொல்லிக் கொடுங்கள். வேலை, கல்வி, வாய்ப்புக்கள் அனைத்திலும் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுங்கள்.

4) மனைவியாகவோ, காதலியாகவோ இருந்தாலும் அவரின் சம்மதமின்றி உடலுறவு கொள்வது தவறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் முன், மனைவியிடம் நட்பைக் கடைப்பிடிக்க மறக்காதீர்கள். வீட்டு வேலையில் சம பங்கை எடுத்து, செயல்பாட்டின் மூலம் – ஆண் பெண் சமத்துவத்தை வளர்த்தெடுங்கள்.

5) ஆண் பிள்ளைகள் கட்டுப்பாடின்றி வளர்க்கப்படுகிறார்கள். அப்பாவும், அம்மாவும் சொல்லித்தராவிட்டாலும், பெண் உடலை ஆதிக்கம் செலுத்தும் பார்வையை சமூகமே குழந்தைகளுக்கு ஊட்டுகிறது. இதற்கு மாறான சிந்தனையை, சொல்லிக் கொடுத்துத்தான் வளர்க்க முடியும். ஆணைப் பெற்றோர், அதற்கான கூடுதல் அக்கறை எடுங்கள். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்கிறபோதும், தன் நிலை தவறாத உறுதியைக் கற்றுக் கொடுங்கள்.

6) பேருந்திலும், ரயில் பயணத்தின்போதும், நள்ளிரவிலும் ஒரு பெண் நடந்து செல்வதைக் கண்டால் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என ஆண்கள் நினைக்க வேண்டும். பெண்கள் சக மனிதர்கள் ஆண்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் இன்றைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபடுங்கள்.

7) பாலியல் உணர்வு மனிதனுக்கு இயல்பானது. அதனை ஜனநாயகமான முறையிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். இருதரப்பின் சம்மதமில்லாத எந்த உறவும் தவறானது என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

8) திருமணத்திற்கு அடிப்படையாக சாதியும், ஜாதகமும் பார்க்க ஆண்டுகளைச் செலவழிக்கிறோம். திருமண வயதிற்கு வந்துவிட்டவர்கள், சிறந்த வாழ்க்கையை நடத்த மிக அடிப்படையானது இருவரிடையேயான காதலும், அன்பும். உறவுகளுக்கு அடிப்படையாக அன்பே அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

9) பெண் தொடர்பான இரண்டாம் பட்ச சிந்தனைகளே, அவள் மீதான வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. நாம் எழுதினாலும், சினிமா எடுத்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஏன் நகைச்சுவைக்காக பேசும்போதும் கூட பெண்ணை இச்சையின் அடிப்படையில் சித்தரிப்பதையும், பாலியல் அடிப்படையிலான குறை/மிகை மதிப்பீடுகளையும் தவிர்த்திடுங்கள், நண்பர்கள் அவ்வாறு செய்யும்போது தயங்காமல் கண்டித்திடுங்கள்.

10) பெண்ணுடலைக் காட்டி பொருட்களை வியாபாரம் செய்வதன் அரசியலை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி, சக மனிதர்களோடு இணைந்து வாழ்வதில்தான் இருக்கிறது என புரிய வையுங்கள்.

Related Posts