இலக்கியம் விவசாயம்

‘தண்ணி..தண்ணி…’

திருப்பூரின் தலையெழுத்தை ரோலர்க்கோஸ்டர் பயணத்தைப் போல ,ஏற்ற இறக்கங்களுடன் மாற்றியமைத்த ,சாயத் தொழிற்சாலைகளைப் பற்றி,அவற்றின் வருகையைப் பற்றிய தகவல்களை திருப்பூரைச் சேர்ந்த திரு.சோமனூர் செல்லப்பன் தனது ‘தண்ணி..தண்ணி..’ சிறுகதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

திருப்பூரின் கதையும்,ஒரு புளியமரத்தின் கதையும்(சு.ரா) கிட்டத்தட்ட ஒன்று தான்.அந்த பூரம் மகாராஜாவின் ஆணையின் பேரில் புளிக்குளம் மண் மூடி சமநிலைப்பட்டவுடன்,புளியமர ஜங்சனாக பெரிய டவுணாக பரிணமித்ததே!!! அது போல குலாம் காதர் என்பர்,கொல்கத்தா சென்றிருந்த போது,ஒரு ரிப்பேரான நிட்டிங் மிஷனை திருப்பூர் கொண்டு வந்து,பின்னலாடை நூற்க ஆரம்பித்தார்.பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.

இந்தக் கதையைப் படித்தேன் என்பதை விட,அவரே ஒரு மேடையில் கதையை வாசித்து,கதையைப் பற்றிய நினைவுகளை அசை போட்டு,விவாதித்த பின் தான் படித்தேன். கதையை எழுதும் போது,கதைக் கருவுக்காக ஒரத்துப்பாளையம் அணைக்கட்டுக்கு நேரிடையாகச் சென்று தகவல்களைச் சேகரித்திருக்கிறார்.போனவர்,தண்ணீர் தவித்த போது ,ரொம்ப சாதுர்யமாக தான் காங்கேயத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி ஊர் மக்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்திருக்கிறார்.ஆம்! திருப்பூர்க்காரர்களை பரம விரோதிகளாக பாவித்து,தண்ணீர் கூட குடுக்க மறுக்கும் அளவுக்கு திருப்பூர் பாவம் செய்திருக்கிறது.

சரி.இப்போ கதை. அதற்கும் முன் ஒரத்துப்பாளையம் அணையைப் பற்றிக் கொஞ்சம்..காங்கேயத்துக்கு அருகே 1992 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணை.நொய்யல் நதியின் மூலம் நீர் பெற்று, திருப்பூர்,கரூர் என் இரண்டு மாவட்டங்களுக்கு பாசனத்திற்க்கான நீர்மூலமாக இருந்தது.சரியாக ஐந்து ஆண்டுகள் உபயோகிக்கப்பட்ட அணை,பின்னர் உபயோகம் நிறுத்தப்பட்டு விட்டது. காரணம் சாயக்கழிவுத் தேக்கம்.

அணையை நம்பி விவசாயம் துவங்கியவர்கள் ஊரைக் காலி செய்து விட்டு, இப்போது திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் பேட்டர்ன் மாஸ்டராகவோ,கட்டிங் மாஸ்ட்டராகவோ, க்யூ.சி.யாகவோ இருக்கிறார்கள்…அணையைச் சுற்றிய தென்னந்தோப்புகளில் இருந்த இளநீர்கள்,மஞ்சளாகவோ,பச்சையாகவோ நிறமேறி இருந்தனவாம்.பிறகு நிலத்தடி நீரைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.கதையின் வரிகளில்… ‘…அணையிலிருந்து வந்த நாத்தம் மூக்கு மசுரு அல்லாங் கருகி மூச்சுடவே திக்காடிப்போச்சு’.

கதை..

கதையின் நாயகன் மந்தையப்பன் .ஊர்பெரியமனுசன்.அணை கட்டும் திட்டம் வந்த நாளில் ,தான் பண்ணையம் பார்த்து வந்த தோப்பை மனசில்லாமல் ,ஏக்கருக்கு 7000 ரூபாய் வீதமாய் அரசுக்கு விற்றுவிட்டு ,தாயைப் பிரிந்த கன்றைப் போல ஆனார்.அரசு தந்த பணத்தைச் செலவு செய்துவிட்டு மீதத்தை வைத்து தன் பிள்ளைகளை டவுணுக்கு பிழைப்புத் தேட அனுப்பிவிட்டார்.

தனிமரமாக இருக்க வேண்டுமா என நினைத்து வெளியூர் செல்ல நினைத்தவரை,வேறொரு பக்கமிருந்த ஐந்து ஏக்கர் நிலம் இருத்தி வைத்துவிட்டது.அதுவும் போக அந்த ஊர் மக்களுக்கு அணை மிகவும் அத்தியாவசியமாக இருந்திருக்கிறது.அந்த நாட்களில் நீரின்றி வறண்டு போய்க் கிடந்திருக்கிறது.அப்போது பார்த்து அரசின் இந்த அணைத் திட்டம் வர,மக்களும் அதை வரவேற்று அணையைக் கட்ட நிலத்தை விற்றிருக்கிறார்கள்.அணை தங்கள் வாழ்வாதாரத்தையே அழிக்கப் போவதை அறிந்திருக்கவில்லை.அதில் ஒருவர் தான் மந்தையப்பன்.திருப்பூர் அப்போது டாப்க்யரில் உலகச் சந்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.தங்கள் சாயக் கழிவுகளை ஏறக்கட்டத் தான் ஆறு ஒன்று கிடைத்து விட்டதே!!

அணை வந்த மகிழ்ச்சியில் மக்கள் விவசாயத்தை ஜோராக துவக்கியிருந்தனர்.மந்தையப்பனும் தனது ஐந்து ஏக்கரா பண்ணையத்தை வைத்து செல்வந்தராக வேண்டுமென்று ஆசை கொண்டு,விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.கொஞ்ச நாள் சென்ற பின் அணை நீரைக் குடித்த ஆட்டுக் குட்டிகள் தலை சுற்றி விழுந்து இறந்தன.மீன்கள் கரையில் செத்துச் செத்து ஒதுங்கியிருந்தன..இளநீர்கள் நிற நிறமாய் இருந்தன.புற்று நோய் தீவிரமடைந்த மனிதனைப் போல நதி மாறியது.திருப்பூர் உத்வேகத்துடனும்,தன்னம்பிக்கையுடனும் செய்து கொண்டிருந்த தொழில் இப்படி அடுத்தவர் முகத்தில் சாயத்தை வாறி வாறி அடிக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? தெரியவில்லை.

அணையை நம்பி விவசாயம் ஆரம்பித்தவர்கள்,கலங்கிப் போனார்கள்.அவர்களது காய்கறிகளையும் மற்ற ஊர் சந்தைகளில் அனுமதிக்கவில்லை.நிலமும் போச்சு.அணையை நம்பி,சொத்துக்களை விற்று ஆரம்பித்த விவசாயமும் போச்சு.மக்கள் நிர்கதியானார்கள்.மந்தையப்பன்,தளராமல் பரிசல் ஒன்றை வாங்கி நதியில் மீன் பிடித்து விற்றுப் பிழைக்கலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த மீன்களைச் சாப்பிட்டவர்களுக்கு வயிற்று உபாதைகள் வரவே,அந்த நதி மீன்களை யாரும் கொள்முதல் செய்யவில்லை.

மனதொடிந்த நிலையில்,அணையைப் பார்வையிட்டுக் கொண்டே மேலே சொன்ன நிகழ்ச்சிகளை அசைப் போட்டுக்கொண்டிருந்தார்.மழை வரும் போல் இருந்தது.அப்படியே அணையை பார்வையிட்டுக் கொண்டிருந்தவரின் கண்கள் ஓரிடத்தில் நிலைகுத்திக் கொண்டது.அணையின் சைசுக்கற்கள் நீர் மோதி மோதி அடித்து அடித்து பெயர்ந்து போய்க் கொண்டிருந்தது.ஒரு நிமிடம் இவரது மனதுக்குள் ஒரு கடவுள்-சாத்தன் போராட்டம்.மக்களின் வாழ்வைப் பறித்த அணை உடையட்டுமா..உடையக் கூடாதா என்று.அணை உடைந்து விட்டால் நல்லது தான்.ஆனால்,மக்கள் மடிவார்களே!அணையின் நீர் மட்டம் ஏறிக்கொண்டே வந்தது.மதகைத் திருப்பி விட்டால் ஊரைக்காப்பாற்றி விட முயற்சிக்கலாம் என்று மதகடி ரூமில் கிடந்த வாட்ச்மேனை எழுப்பி வர,மதகி சாவி வேலை செய்யவில்லை.மதகுகள் துருவேறி ,சாவி போட முடியாமல் கிடந்தது.

திடீரென ஒரு இடிச் சத்தம்.சுதாரித்து விலகி ஓடிப் போன வாட்ச்மேன் பிழைத்துக் கொண்டான்.அந்த பிணநாற்றம் வீசிக்கொண்டு அலை புரண்டு வந்து கொண்டிருந்த சாயநீரில் நுரையோடு நுரையாக மந்தையப்பன் கலந்து போய்விட்டார்.

குற்றவுணர்வைத் தூண்டிவிடும் கதையிது.கொங்கு மொழியின் அலாதியான நடை.சிலசமயங்களில் வண்ண வண்ணமாய் டி-சர்ட்,பேண்ட் அணிந்து கொண்டு கண்ணாடியில் அழகு பார்க்கவே குற்றவுணர்வாய் இருக்கிறது.விரைவில் நீங்களும் உங்கள் கையிலிருக்கும் இளநீரின் உள்ளே சிவந்த நிறத்தில் நீரைப் பார்க்க நேரலாம், அப்போதும் திருப்பூரை ’குட்டி ஜப்பான்’ என்று மனசாட்சி உறுத்தாமல் சொல்ல உங்களால் முடியுமா??

Related Posts