இதழ்கள் இளைஞர் முழக்கம்

தண்ணீர் அரசியல்: மழையும் ஆயுதம் …

– நக்கீரன்

அது வியட்நாமின் பருவ மழைக்காலம். மழைப் பொழியும் மஞ்சுக் கூட்டத்தினூடே வானூர்தி பறந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க இராணுவத்தின் அவ்வானூர்தியில் குண்டுகளோ அல்லது வேறு வேதி ஆயுதங்களோ இல்லை. குறிப்பாக எந்தவொரு படைநிலையையோ, மக்கள் வாழ்விடங்களையோ தாக்கும் எண்ணமும் அந்த வானூர்திக்கு கிடையாது.

இவ்வளவு நல்ல எண்ணத்தோடு ஓர் அமெரிக்க விமானம் பறக்குமா என்கிற அய்யம் நமக்கு பிறப்பது நியாயம்தான். ஆனால் அந்த வானூர்திக்கு வேறொரு நோக்கம் இருந்தது. அதில் ஆயுதங்களுக்கு பதிலாக ‘டிரை ஐஸ்’ எனப்படும் பொருள் நிரப்பப்பட்டிருந்தது. பெரும்பாலும் சில்வர் அயோடைட் அல்லது ஈய அயோடைட் நிரம்பியதுதான் அந்த பொருள். ஏறக்குறைய நிமிடத்துக்கு 7 கிலோ வீதம் அதை மஞ்சு திரள்களினூடே கொட்ட முடியும். அதன் மூலம் செயற்கை மழையை உற்பத்தி செய்ய முடியும்.

வழக்கமாகப் பெய்யும் பருவமழையின் கால அளவை மேலும் ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை நீட்டிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வியட்நாம் உழவர்களுக்காக மழை பொழிய வைப்பதில் அமெரிக்கா இவ்வளவு ஆர்வம் காட்டுமா? நிச்சயம் இருக்காது. பின் எதற்காக இந்த முயற்சி? இது ஒருவகை இராணுவ நடவடிக்கை. இதற்கு ‘ஆபரேசன் பாப்பாய்’ உள்ளிட்ட நான்கு பெயர்கள் இடப்பட்டிருந்தன. இந்த பாப்பாய் குழந்தைகளை சிரிக்க வைக்கும் கேலிப்பட பாப்பாய் அல்ல. அமெரிக்க இராணுவத்தை சிரிக்க வைக்கும் பாப்பாய்.

ஹோ சி மின் தலைமையிலான புரட்சிப் படையணியின் முன்னேற்றத்தை முடக்கி வைக்கவே இந்த ஏற்பாடு. அப்புரட்சிப் படையின் தொடர் கொரில்லா தாக்குதல்களிலிருந்து தப்பித்து சில காலம் நிம்மதி மூச்சு விடுவதற்காக மட்டுமல்லாது அப்படையின் நடமாட்டத்தையும் முடக்குவதே இதன் நோக்கம். இச்செயற்கை மழையால் அப்படையணி பயன்படுத்தும் சாலைகள் சேதமாகும். மலைப் பாதைகளில் நிலச்சரிவு உண்டாகி அது மூடப்படும். ஆற்றின் குறுக்கேயுள்ள பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்.

1967ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 1972 ஜூலை 5 ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை நீடித்தது. இதன் உபரி விளைவாக வியட்நாம் உழவர்களின் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து சீரழிப்பதால் அவர்களின் பொருளாதாரமும் சீர்குலையும் என்கிற நல்லெண்ணமும் இதில் உண்டு. இப்படி கொரில்லாப் படை முன்னேற்றத்தை தடுத்ததால் அமெரிக்கப் படைக்கு அன்றைய மதிப்புக்கு 9 இலட்சம் டாலர் மிச்சமானது. செலவோ எண்பதாயிரம் டாலர்தான்.

இந்த செயற்கை மழை கமுக்கம் அமெரிக்க நாளிதழ்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியபோது இதை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்தது. பின்னர் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் கோப்புகள் வெளியானதால் வேறு வழியின்றி அது ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது. இப்படி இராணுவத் தேவைக்காக பிறந்ததே செயற்கை மழை தொழில்நுட்பம். இதுதான் இன்று ஒரு நாட்டில் மழை இல்லாத காலத்தில் மழைபெய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் போல திரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தத் தொழில்நுட்பத்துக்கு பயன்படும் சில்வர் அயோடைட் ஒரு தீமையான வேதிப்பொருளாகும். செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்விக்கும்போது அது தீமை பயப்பதாக மாறுகிறது. அய்க்கிய அமெரிக்காவின் சூழலியல் பாதுகாப்பு முகமையின் ‘தூய குடிநீர் சட்டத்தின்படி சில்வர் அயோடைட் ஒரு அபாயகரமான வேதிப் பொருளாக கருதப்படுகிறது.

ஆனால் செயற்கை மழையை ஆய்வுசெய்து பார்த்ததில் அதில் சில்வர் அயோடைட் கலந்திருக்கவில்லை என இதற்கு ஆதரவானவர்களிடமிருந்து பதில் வருகிறது. ஆனால் இந்த ஆய்வானது ஒவ்வோரு ஆண்டும் இரு இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரியைக் கொண்டு இம்முடிவுக்கு வருகிறது. சில்வர் அயோடைட்டை மஞ்சுக்கூட்டத்தில் தூவும்போது அது எந்த திசையில் நகர்ந்து மழையை பெய்விக்கும் என்று உறுதியற்ற நிலையில் இந்த மாதிரி நம்பகத்தன்மை உடையது அல்ல.

இதைக் கண்டறிய சரியானமுறை மாதந்திர அடிப்படையில் அம்மழைநீர் சேருமிடமான அணைப்பகுதிகள், வாய்க்கால்கள், ஏரிகள் ஆகிய இடங்களில் மாதிரிகள் எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமின்றி அம்மழைப்பொழியும் இடங்களின் மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரியவரும்.

எவ்வாறு இருப்பினும் மழைநீர் என்பது தூய்மையானது என்கிற கருத்தாக்கத்துக்கு இது எதிரானது. இன்றைய மாசுபட்ட உலகில் மழைநீர் தூய்மையாக இருப்பதென்பது மிக அவசியமானதாகும். இன்று கார்ப்பரேட்களின் தொழில் நுட்பங்களால்தான் காலநிலை மாற்றம் என்கிற பேராபத்து உருவாகியுள்ளது. இதனால் முறையான நேரத்திலும் காலத்திலும் தேவையான மழை கிடைப்பதில்லை. ஆனால் இத்தகைய கார்ப்பரேட் வகை தொழில்நுட்பம் அவர்களுடைய தவறை மறைக்கவே உதவுகிறது.

செயற்கை மழையானது தொழில்நுட்ப சொற்களில் ‘மேக விதைப்பு’ என அழைக்கப்படுகிறது ஆனால், உண்மையில் இதை ‘மேக திருட்டு’ என அழைப்பதே பொருத்தமாகும். உலகில் செயற்கை மழைக்காக அதிகம் செலவிடும் நாடு சீனா. இத்தொழில்நுட்பத்தின் மூலம் தமக்கு 10 சதவீதம் மழை கூடுதலாக கிடைத்ததாக அது கூறுகிறது. ஆனால் இது தங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை வேறு பகுதிக்கு கடத்திச் சென்று விடுவதாக ஆயிரக்கணக்கான சீன உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது நீரியல் சுழற்சியைப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். சீன இத்தொழிலில் சுமார் 50,000 பேரை ஈடுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் உள்ள இன்னொரு பெருத்த அபாயம் எதுவெனில் ஒரு நாடு நினைத்தால் அது அடுத்த நாட்டுக்கு கடந்துப் போகும் மேகங்களை தடுத்து அந்நாட்டுக்கு மழை கிடைக்காமல் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தொடக்க தினத்தன்று 1000 சில்வர் அயோடைட் ஏவுகணைகளை விண்ணில் ஏவி பெய்ஜிங் நகரில் மழைபெய்ய விடாமல் தடுத்தது. அதாவது பெய்ஜிங் புறநகர் பகுதிகளில் அது மழையை கொட்டித் தீர்த்தது.

இன்று சில நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் பணக்காரர்கள் வீட்டு திருமண நாளன்று அந்நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் மழைப் பெய்யாமல் தடுப்பதற்கு இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் 1983, 1984-87, 1993-94 ஆகிய ஆண்டுகளில் செயற்கை மழைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பெய்யும் மழையை சேமித்து வைக்க முறையான நடவடிக்கைகள் இல்லை. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் செயற்கை மழைத்திட்டம் என்பது தனியாரை வாழவைக்கும் திட்டம்தான்.

மழைநீரைக் குறித்து ஒரு நீரியல் பொறியாளரான மிச்சேல் கிராவிக் சொல்லிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது.

“நீர் துளி விழும் உரிமை மனித உரிமையை விட முதன்மையானது”.

 

 

Related Posts