பிற

NGO மனநிலையிலிருந்து வெளிவர, 100 முறை கக்கூஸ் பாருங்கள் …

(படம் பார்த்ததும் எழுந்த உணர்வை எத்தனை விரைவாய்க் கடத்த முடியுமோ அத்தனை விரைவாய்க் கடத்த வேண்டும் என்று உந்தித்தள்ள இதனை எழுதுகிறேன். தோழர்களே நீங்கள் அவசியம் படம் பார்த்து இதன் மீது விவாதிக்க வேண்டும்)
இன்று ‘கக்கூஸ்’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். படம் டிவிடி இன்னும் 4 நாட்களில் விற்பனைக்கு வரும். இறுதிக்கு முந்தைய பிரதியை திரையிட்டார்கள்.
 
அன்புத்தோழர் Divya Bharathi, ஓராண்டாக தாங்கள் கற்றுக்கொண்டவை, கண்டுணர்ந்தவற்றை கக்கூஸ் ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார். ஆவணப்பதிவு பதிவு மிக வலிமையாகப் பேசியது. ஆவணத்தினூடே இடதுசாரிகள், முற்போக்கு இயக்கங்கள், தலித் விடுதலைக்கான இயக்கங்கள், பெரியாரிய அமைப்புகள் என எல்லோரிடமும் படைப்பு முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. சமூக விடுதலையை நோக்கிய போராட்டத்தில், நாம் இந்த விவாதத்தில் ஈடுபடுவதும், தெளிவுபெறுவதும் மிக முக்கியம்.
 
இந்த ஆவணப்படம் உருவாக உதவிய, ஒவ்வொருவருக்கும், மிகக் கடுமையான உழைப்பை செலுத்தி சிறப்பான ஆவணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
நம் சமூக அமைப்பின் அடிப்படையாக அமைந்திருக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும், முதலாளித்துவச் சுரண்டலுக்கும் – இசைவான கருத்தியலாக பார்ப்பனீயமும், ஆணாதிக்கமும் எப்படி அமைகின்றன என்பதையும் , அதனை வீழ்த்தியாக வேண்டும் – என்பதையும் வலிமையாக முன்வைத்தது ஆவணப்படம்.
 
கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகளோ, அல்லது சுகாதாரத்துக்கான உபதேசங்களோ கொடுப்பதல்ல – ’மனிதர்களே கழிவை அகற்றுதல்’ என்ற தொழிலையே இல்லாமலே செய்ய வேண்டும்.
அப்படியானால், நாம் இந்த சமூகத்தின் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றியமைக்காமல் முடியக்கூடிய  போராட்டம் இதுவல்ல. ஒவ்வொரு அடியாக, ஆனால் நாம் இலக்கை நோக்கி நகர வேண்டியுள்ளது. ஓராயிரம் கால்களும் இந்தப் பயணத்தில் இணைய வேண்டியுள்ளது.
 
படம் பார்ப்போருக்கு ஒரு வேண்டுகோள்:
 
சாமானியமாக படம் பார்ப்போர் இந்தப் படத்தில் தலைப்பைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம், கழிவுகளை ஏன் அப்படி நெருக்கமாகக் காட்ட வேண்டும்? என்பது போன்ற சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களே உற்றுப் பார்க்க முடியாத அந்தக் காட்சிதான், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணி திணிக்கப்பட்டிருப்போர், தங்கள் ஒவ்வொரு நாளும் கடக்கிறார்கள். அதிலேயே வாழ்கிறவர்களின் வாழ்க்கையை உணர சில காட்சிகளையாவது பார்ப்பது அத்தியாவிசயமாகும்.
கூடுதலாக, செயல்பாட்டாளர்களுக்கு … இந்தப் படம் எல்லா அமைப்புகளின் மீதும் விமர்சனங்களை முன்வைக்கிறது. சில வரிகளே இடம்பெற்றாலும், அந்த விமர்சனங்கள் மிக முக்கியமானவையாகும். சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் – ஆனால் இந்த சமூகம் ஏந்தியிருக்கும் கேள்விகள் அவை. அந்த விமர்சனங்களுக்கு பதில் காணாவிட்டால், நம்மால் மாற்றத்தை நெருங்கவே முடியாது. சமூக விடுதலைக்கான முதற்புள்ளி, விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக மனதில் ஏந்தி விடுதலையை நோக்கி சிந்திப்பதும், அதற்கான ஒற்றுமையை வலுப்படுத்துவதும் ஆகும்.
 
என்ன செய்யலாம்?
 
மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை அமலாக்கவும், செத்துப்போனவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவுமே எத்தனை போராட்டங்களை நடத்தவேண்டிவருகிறது என்பதை தோழர் திவ்ய பதிவு செய்திருப்பார். அத்தகைய போராட்டங்களே நடக்காத, பதிவே ஆகாத ஏராளமான கொடுமைகள் அனு தினமும் நடந்துகொண்டிருக்கின்றன. அவை இந்த சமூகத்தால் ஒரு சிக்கலாக உணரப்படுவதும் கூட இல்லை.
மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டத்திலேயே மிகப்பெரிய ஓட்டைகள் இருக்கின்றன, அமலாக்கம் படு கேவலமாக இருக்கிறது. பத்திரிக்கைகளில், செய்திகளில் அனுதினமும் நீதி கொல்லப்பட்டுவருகிறது. இவை எல்லாவற்றையும் தீர்க்க ஒரு இயக்கம், ஒவ்வொருவரின் செயல்பாடும் தேவைப்படுகிறது. 
 
கழிவு அகற்றும் தொழில்நுட்பங்கள் ஏன் பிறப்பதில்லை என்ற கேள்வி மிக முக்கியமானது. நாம் கட்டும் மாடமாளிகைகளில் தொடங்கி, நவீன நகரங்கள் வரையிலும் கழிவு அகற்றும் கட்டமைப்பை எப்படி வைத்திருக்கிறோம் என்ற மிகப்பெரும் கேள்வி எழ வேண்டும். சுகாதாரத்தை சார்ந்து ஒரு பொறியியலை நாம் வளர்த்தெடுத்திருக்கிறோமா? அதனை சகமனிதர்களின் தலையில்தான் இனியும், எப்போதும் சுமத்தப்போகிறோமா? என்ற கேள்வி மிக முக்கியமானது. யோசித்துப்பாருங்கள் இதற்குப்பெயர்தான் ‘ஜனநாயகக் குடியரசா’? இந்தக் கேள்வியை தோழர் பாஷா சிங் முன்வைத்தார்.
 
‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கம் எப்படி இந்தியாவை விசவாயு சவக்கிடங்காக்க போகிறது, நாம் ஏன் இத்தகைய கழிவறைகளைக் கட்ட வெட்கமில்லாமல் இருக்கிறோம் என்று கேட்டார். ஆட்சியாளர்கள் முதல் குடிமகன் வரையில் உணர வேண்டிய கேள்வி இது.
 
எதுவரை பார்க்கலாம்?
படம் பார்த்ததும் எழுந்த முதல் உணர்வை பதிவு செய்திருக்கிறேன். கக்கூஸ் ஆவணப்படத்தை நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சிந்தனைகள் தோன்றும்.
 
‘நமது கழிவுகளை நாமே அகற்றலாம்’, ‘நாமாவது சுத்தமாக இருப்போம்’, ‘பணம் கொடுத்து உதவலாம்’, ‘அந்த மக்களை மீட்கலாம்’ என்றெல்லாம் தோன்றினால் – அந்தப் படத்தை இன்னொரு முறை பாருங்கள். நிச்சயம் அவற்றாலெல்லாம் இப்பிரச்சனைக்கு முடிவுகட்டிவிட முடியாது.
 
சாதியால் கட்டமைக்கப்பட்ட நியாயங்களை, தீட்டு/தூய்மை பற்றி நம்மிடம் இருக்கக் கூடிய புரிதல்களை, சுத்தம் பற்றிய நம்முடைய பார்வையை தலைகீழாக மாற்ற வேண்டும். சுகாதாரம் என் அடிப்படை உரிமை என்பதிலிருந்து சுகாதாரமான ஒட்டுமொத்த சமூகத்தை உருவாக்குவது என் கடமை, அதற்கான எனது வரிப்பணம் செலவாவதும் – அத்தகைய சமூகம் அமைந்திட போராடுவதும் என் கடமை என்று உணர உங்களுக்கு தோன்றும்வரை இந்தப் படத்தைப் பாருங்கள்.
1) படம் வாங்க, தோழர் திவ்யபாரதியின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
2) முடிந்தவரை அதிக பிரதிகளை வாங்கி, பகிர்ந்துகொள்ளுங்கள்.
3) நிச்சயம் குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள், விவாதியுங்கள்.
4) பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தல்ல – நிச்சயம் அவரவர் செயல்படும் எல்லாத் தளங்களில் இருந்தும் மாற்றத்தை தொடங்க முடியும். எல்லா இடத்திலும் திரையிடலை முயற்சியுங்கள்.
ஒரு சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து ஒரு திவ்யா உருவாகியிருக்கிறார். அவரின் ஓராண்டு தேடலில், போராட்டத்தில் உருவான கக்கூஸ் ஆவணப்படம் உங்களையும் ஒரு திவ்யாவாக, ஒரு தோழனாக, சமூக மாற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும்வரை நூறு முறையேனும் பாருங்கள். சாதியற்ற, வர்க்கச் சுரண்டல்களில் இருந்து விடுதலைபெற்ற சமூகம் நோக்கி நாம் நகர வேண்டிய அவசியம் புரியும்.

Related Posts