உலக சினிமா

WASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.

கியூபா மீது அமெரிக்கா படையெடுக்க அஞ்சுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. FBI, CIA போன்ற அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் எத்தனை பேர் கியூப விசுவாசிகள் என்பது தெரியாது. இந்தத் தகவலை எனக்கு ஒரு கியூப அகதி கூறினார். நிச்சயமாக அவர் கியூப கம்யூனிச அரசுக்கு எதிரானவர் தான். பிடல் காஸ்ட்ரோவை வெறுப்பவர் தான். (பல வருட கால மேற்கைய்ரோப்பிய வாழ்வனுபவத்தின் பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.) இருந்தாலும் நேர்மையான நாட்டுப்பற்றாளர். அவர் சொன்னது உண்மை தானென்று Netflix-ல் Wasp Network படத்தை பார்த்த பொழுது புரிந்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் வீழ்ந்த காரணத்தால், கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அதுவரை காலமும் தேசத்தின் செலவுகளை ஈடுகட்டி வந்த சோவியத் நிதியுதவி நின்று போனதால், ஏறத்தாள பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்தது. கடும் சிரமங்களுக்கு மத்தியில், ஒரு கரீபியன் கடல் தீவான கியூபா சுற்றுலாத் துறை மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொண்டது. இது பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்களிப்பை செய்து வந்தது.

பெர்லின் மதில் விழுந்த பின்னர் அன்று உலகில் இருந்த சோஷலிச நாடுகள் அடுத்தடுத்து காணாமல்போயின. அதே போன்று கியூபாவிலும் மாற்றம் வரும் என்று அமெரிக்க அரசு இலவு காத்த கிளியாக காத்திருந்தது. மியாமியில் தளம் அமைத்திருந்த எதிர்ப்புரட்சியாளர்களும் தாம் அதிகாரத்தை கைப்பற்ற சரியான தருணம் இதுவே என நம்பினார்கள். அவர்கள் ஹோட்டல்களுக்கு குண்டு வைப்பது போன்ற பயங்கரவாத செயல்கள் மூலம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க எண்ணினார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அவர்களது நோக்கம்.

எதிர்ப்புரட்சியாளர்களின் நோக்கத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரேயொரு வழி தான் உள்ளது. அந்த இயக்கத்தினுள் ஊடுருவ வேண்டும். அதற்காக கியூப அரசு குறைந்தது பத்துப் பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் அகதிகள் என்ற போர்வையில் சென்றனர். ஒரு பைலட் சிறிய ரக விமானத்தை “கடத்தி”, நேராக பறந்து சென்று மியாமியில் இறங்கினார். இன்னொருவர் கடலில் நீந்திச் சென்று குவாந்தனமோ அமெரிக்க படைத்தளத்தில் தஞ்சம் கோரினார். ஆரம்பத்தில் இவர்களும் உண்மையான அகதிகள் என்று தான் அமெரிக்க அரசும் நம்பியது. அதனால் அகதித் தஞ்சம் கொடுத்தது.

அமெரிக்காவில் அடைக்கலம் கோரிய அகதிகள், அதாவது உளவாளிகள், மெல்ல மெல்ல அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி காஸ்ட்ரோ எதிர்ப்பு இயக்கத்தினுள் ஊடுருவினார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமான மேல்மட்ட உறுப்பினர்களாக உயர்ந்தனர். அவர்கள் அனுப்பிய உளவுத்தகவல்கள் மூலம் கியூபாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கைதுசெய்யப் பட்டனர்.

மியாமியில் இயங்கிய கியூப அரச எதிர்ப்பாளர்கள் சிறிய ரக விமானங்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். அவற்றை பயன்படுத்தி கியூபாவுக்குள் ஊடுருவி அரச எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை வீசி விட்டு வருவார்கள். அத்துடன் இந்த விமானங்கள் போதைவஸ்து கடத்துவதற்கும் பயன்படுத்தப் பட்டன. ஹோண்டூரஸ் சென்று போதைவஸ்து ஏற்றிக் கொண்டு அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று விற்று வருமானம் ஈட்டினார்கள். உண்மையில் கியூபாவை விடுதலை செய்வதை விட போதைவஸ்து கடத்துவதில் தான் அதிக அக்கறை காட்டி வந்தனர். இந்த உண்மை அமெரிக்க அரசுக்கும் தெரியும்.

ஒரு தடவை கியூப வான் பரப்பினுள் அத்துமீறி நுழைந்த எதிர்ப்புரட்சியாளர்களின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இது குறித்து அமெரிக்க அரசும் கியூப அரசை குற்றம் சாட்டி வந்தது. அப்போது அது பெரியதொரு உலகச் செய்தியாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கியூப அரசு FBI, CIA மேலதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அமெரிக்க அனுசரணையில் தமது நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், ஊடுருவலாளர்கள் ஆகிய விபரங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது.

அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றாலும் அவர்கள் கியூப எதிர்ப்புரட்சியாளர்களை கட்டுப்படுத்தவில்லை. இந்தளவு துல்லியமாக தகவல் கொடுக்கும் அளவிற்கு கியூப அரசின் ஒற்றர்கள் ஊடுருவியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். அதற்குப் பிறகு FBI தேடுதலில் பல உளவாளிகள் கைது செய்யப் பட்டனர். இரகசியமான WASP Network அம்பலப் படுத்தப் பட்டது.

இது குறித்து ஊடகவியலாளர்கள் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்: “அமெரிக்க அரசு அனுப்பிய உளவாளிகள் எமது நாட்டுக்குள் இயங்கி வந்தனர். அதையே தான் நாமும் செய்தோம். நாங்கள் அமெரிக்காவை உளவுபார்க்க அனுப்பவில்லை. கியூப அரசுக்கு எதிரான கியூபர்களை மட்டுமே உளவு பார்த்தோம். இதன் மூலம் எமது நாட்டிற்கு வரவிருந்த ஆபத்தை தடுக்க விரும்பினோம்…” என்று பதிலளித்தார்.

Netflix இல் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.

  • கலை மார்க்ஸ்.

Related Posts