இலக்கியம்

முடிவுக்குக் காத்திருக்கும் கதை..

விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டு கொண்டிருக்கிறேன். இந்தக் கதையைச் சொல்ல நாளைக்கு நான் இருப்பேனோ தெரியாது. இதைக் கேட்பதற்கு உங்களுக்கு நேரமிருக்குமா என்றும் தெரியாது. ஆனாலும் இப்போதே இதைச் சொல்லியாக வேண்டும்.

மணி இரண்டைத் தாண்டியிருந்தது. சூரியனின் உக்கிரம் இன்னும் குறைந்த பாடில்லை. கொள்ளனின் இரும்புக் களம் போலக் காற்றில் அனலடித்தது. வெயிலில் உருகும் தார்ச்சாலையின் வெப்பம் செருப்பைத் தாண்டியும் கால்களைச் சுட்டது.

இந்த வெப்பத்திலும் சிலர் செருப்பின்றியும் நடக்கிறார்கள். அவர்களுக்கென்ன நேர்த்திக்கடனா, பொசுக்கும் வெயிலில் இப்படிக் கிடந்து உழல? நூலருந்த பட்டம் காற்றின் போக்கில் போவதுபோல கைவிடப்பட்ட மனிதர்கள் தன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களாக நடக்கவில்லை.

ஏதோ ஒரு உத்வேகம் அவர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. விரக்தியும் ஆற்றாமையும் ஒவ்வொருவரின் முகத்திலும் வேப்பம்பிசினாய் அப்பிக்கிடக்கிறது. தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தை போல மூன்றாவது நாளாய்த் தொடர்ந்து நடந்த என் கால்கள் ஓய்வுக்கு ஏங்கின..

வெள்ளிக்கிழமை காலை நான்கு மணிக்கு நடக்கத் தொடங்கியபோது நாங்கள் ஆறுபேர் இருந்தோம். டில்லி குரு கிராமிலுள்ள டி.எல்.எப் பில்டிங்கின் இரண்டாம் கட்டிடத்தில் என்னோடு பணிபுரிபவர்கள். மேஸ்திரி ஜிதேந்தர், அவனுடடைய மனைவி சாந்தி, இரண்டு பெண் குழந்தைகள், ஜிதேந்தரின் தம்பி மனீஷ் குமாரும் எங்களோடு வந்தான். நாங்கள் இரண்டு வருடங்களாக இந்த கம்பெனியில் வேலை செய்தோம்.

நிறுவனத்தின் பின்பக்கம் ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்டு சுற்றிலும் கலாய்த் தகடுகளால் சுவர் போல மறைக்கப்பட்டிருந்த தற்காலிக ரூம்களை எங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். ஜிதேந்தர் குடும்பம் எனக்குப் பக்கத்து அறை. நாங்கள் ஒரே மாநிலம். நான் உ.பி யின் சாரங்க்பூர் கிராமம். ஜிதேந்தர் குடும்பம் உ.பி யின் புறநகர்ப்பகுதி. ஏதோ ஒரு ஊர்ப்பெயர் சொன்னான். நினைவில்லை.

கொழுத்த பன்றியைப்போன்ற உருவமுடைய பல்ராம் தான் எங்கள் மேஸ்திரி. அவனும் என் ஊர்தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு டில்லி வரும்போது குடிசையாக இருந்த அவன் வீடு இப்போது மூன்று மாடிக் கட்டிடமாக நிற்கிறது. ஊரைச்சுற்றி சில இடங்களில் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறானாம். நாங்கள் இன்னும் கடன்காரர்களாகத் தான் இருக்கிறோம்.

எங்கள் கிராமத்திலிருந்து வந்த எட்டுப்பேரைச் சேர்த்து அவனிடம் மொத்தம் அறுபதுபேர் வேலை செய்தோம். நிறுவனம் கொடுக்கிற அறுநூறு ரூபாய் கூலியில் இவன் எண்பது ரூபாயை சொளையாக விழுங்கிக் கொள்கிறான். கேண்டீனுக்கு நூறு ரூபாய் போக தினமும் நாறூற்றிருபது ரூபாய் கைக்கு வரும். இது பரவாயில்லைதான். ஊரில் தினமும் நூறு ரூபாயே பார்க்க முடியாது.

ஏதோ நோய் பரவுகிறதாம். வெளி நாடுகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் சாகிறார்களாம். ஊரடங்கு அறிவிப்பையடுத்து நிர்வாகம் வேலையை நிறுத்தியதால் நிலைகுலைந்து போனோம். நிர்வாகம் குறைந்தபட்சம் சாப்பாட்டுக்காவது வழி செய்திருக்கலாம்.

கேண்டீன், கடமைக்கு இரண்டு வேளை சமைத்து விட்டுக் கைவிரித்து விட்டது. ஆளுக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டான் பல்ராம். ஒன்றிரண்டு கடைகள் திருட்டுத் தனமாய் இயங்கின. கையிலிருந்த பணத்தில் அடுத்த இரண்டு நாளைச் சமாளித்தோம்.

நிலைமை மாறுவதுபோலத் தெரியவில்லை. உணவுப்பொருட்கள் சரியாகக் கிடைக்கவில்லை. பல்ராமின் அலுவலகம் சென்றோம். எங்களுக்கு இருந்தது ஒரே கோரிக்கைதான். ’உணவுக்கு மட்டுமாவது ஏதாவது செய்யுங்கள்’. அலுவலகத்தில் பெரிய பூட்டு தொங்கியது. முதல்நாளே யாருக்கும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பியிருந்தான். மொபைலுக்கு அழைத்தோம். ’நிர்வாகத்தில் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஊருக்குப் போய்விடுங்கள்.’ என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் சுற்றி வளைத்துத் திரும்பத் திரும்பச் சொன்னான்.

ஆனால் பஸ் இரயில் எதுவும் ஓடாதபோது எப்படி..? இங்கே தங்குவதற்கும் வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எப்படிச் சமாளிப்பது. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் ஊர்களுக்கு எப்படிச் செல்வது? இது எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை. மாதக்கணக்கில் நீடிக்கும் என்கிறார்கள். அதுவரை இங்கே கிடந்து பட்டினியால் சாகவா முடியும்? ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையோடு எல்லோரும் நடக்கத் தொடங்கினார்கள். அதைத்தவிற வேறு வழியுமில்லை.

கைலாசிடம் எனக்குக் கொஞ்சம் பணம் வரவேண்டியிருந்தது. வாங்கிக் கொண்டு கிளம்பலாமென்று அன்று நான் கிளம்பாமலிருந்தேன். செண்ட்ரிங் காண்ட்ராக்டரான கைலாஸ் அவ்வப்போது மேஸ்திரிக்குத் தெரியாமல் என்னையும் மனீஷ் குமாரையும் வேறு பில்டிங் வேலைக்கு அழைத்துச் செல்வான். மாதத்தில் ஏழெட்டு நாட்கள் எங்களுக்கு இப்படி நைட் ஷிப்ட் வேலை கிடைப்பதுண்டு. எனக்கு இரண்டாயிரம் ரூபாய் வரவேண்டியிருந்தது. ஆனால் அவன் அன்று முழுவதும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தான். இரண்டாவது நாள்தான் கிளம்பினேன்.

அரவமற்ற மயானம் போல நீண்டிருந்தது சாலை. எந்தக் கடைகளும் திறந்திருக்கவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் போய்க்கொண்டு இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து டெல்லிக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் கொஞ்சநேரம் பேசிக் கொண்டே நடந்தோம். எங்களுக்குள் பரிமாறிக்கொள்ள நிறைய கதைகள் இருந்தன. எல்லாரும் தினக்கூலிகள் வாரக்கூலிகள் மாதக்கூலிகள் மொத்தத்தில் அற்பக்கூலிகள்.

நல்ல உடை இருக்கிறதோ இல்லையோ இளைஞர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தது. வெளியூர் வேலைகளுக்கு வருகிற எங்களைப் போன்றோரின் முதல் கனவே இந்த செல்போன் தான். குக்கிராமத்தில் ஆடு மாடுகளைப்போல சுற்றித்திரியும் எங்களுக்கு உலகின் வாசலைத் திறந்து காட்டுவது அதுதான். சம்பளம் கிடைத்ததும் ஊருக்கு அனுப்புகிற சிறு தொகை தவிற சேமிப்புக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

நேரமாக ஆக களைப்பால் எங்கள் உற்சாகமெல்லாம் வடிந்திருந்தது. கூட்டமாகப் போய்க்கொண்டு இருந்தவர்கள் தனித் தனித் தீவுகளாய்ப் பிரிந்து விட்டிருந்தனர். நாங்கள் ஆறுபேரும் தனி குழுவாக நடந்தோம். முதுகில் தொங்கிக்கொண்டிருந்த பை, பெரும் பாரமாய்ப் பின்னோக்கி இழுப்பதாகத் தோன்றியது. தினமும் பண்டல் பண்டல்களாக இரும்புக் கம்பிகளைச் சுமந்து பழக்கப்பட்டவன் தான். இந்த தோல் பையைச் சுமக்க முடியாத அளவுக்கு களைத்துப் போயிருந்தேன். வலியில் கால்கள் நடுங்கின. எங்காவது அமர்ந்தால் தேவலாம் போலிருந்தது.

ஜிதேந்தரோ ஆவேசம் கொண்ட மிருகம் போல வேக வேகமாக நடந்தான். அவன் மனைவி குழந்தைகளின் துயரம் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த கழிவிரக்கம் ஆவேசமாய் வெளிப்பட்டது. அவன் விரல் பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக வந்த அவன் எட்டு வயது மகள் பூஜா அழுதுகொண்டே வந்தாள். மனைவியின் இடுப்பில் இருந்த மூன்று வயதுக் குழந்தை அழுதழுது ஓய்ந்து தூங்கிப்போயிருந்தது. எல்லோருக்குமே நல்ல பசி. அதைச் சொல்லும் மனநிலையில் கூட யாருமே இல்லை.

மடியில் கைக்குழந்தையை வைத்து மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு பெண், என்னை அழைத்துத் தண்ணீர் கேட்டாள். இரத்தசோகை பீடிக்கப்பட்டவள் போன்ற வெளிரிய முகம். எப்போதிருந்து நடக்கிறாளோ.. பாவம். துவண்டு வாடிப்போயிருந்த குழந்தை தண்ணீர் குடித்ததும் தாய்முகம் கண்டு லேசாகச் சிரித்தது. அதைச் சலனமில்லாமல் பார்த்துவிட்டு அவளும் குடித்துவிட்டு காலி பாட்டிலைக் கொடுத்தாள். எங்கிருந்து வருகிறாள். எங்கே போய்க் கொண்டு இருக்கிறாள் என்று கேட்டேன். நான் பேசிய மொழி அவளுக்குப் புரியவில்லை போலும். ஒரு வெறுமைப் பார்வையை உதிர்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து நடந்தாள்.

நாங்கள் மரத்தடியில் அமர்ந்தோம். பையிலிருந்த பிரட் பாக்கெட்டுகளைப் பிரித்துச் சாப்பிட்டோம். கிளம்பும்போது உஸ்மான் பாய் பெட்டிக்கடையில் நான்கு பாக்கெட் பிரட்டும். நான்கு ரஸ்க் பாக்கெட்டுகளும் வாங்கியிருந்தேன். ஜிதேந்தரிடம் கொஞ்சம் ரொட்டிகளும் தக்காளிக் கூழும் இருந்தது. சாப்பிட்டு முடித்தபோது இரண்டு பிரட் பாக்கெட்டுகளும் நான்கைந்து ரொட்டிகளும் மிச்சமிருந்தன. இன்று இரவு சமாளிக்கலாம். நாளைக்கு..? வழியில் கடைகள் எதுவுமில்லையென்றால்..? என்னதான் செய்யப்போகிறோம் என்ற கவலை வேறு கரையானாய் அரித்துக்கொண்டு இருந்தது..

தொலைபேசி சினுங்கியது. அம்மாதான். காலையிலிருந்து மூன்று முறை அழைத்து விட்டாள். நான் நடந்து வருவதைச் சொன்னால் பதட்டமாவாள். அவளது பதட்டம் என்னையும் பாதிக்கும் என்று அழைப்பைத் தவிர்த்தே வந்தேன்.

“அம்மா.. இன்னும் இங்கதான் இருக்கேன். வண்டி எதும் ஓடல.. ஊருக்கு வர ஒரு வாரம் ஆகும்.. நானே கூப்பிடறேன் வை..”

கோபமாகப் பேசினாலும் உள்ளுக்குள் ஏதோ உறுத்தியது. அவளது பதட்டம் அவளுக்கு. ஊரெங்கும் கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து மடிவதைக் கேள்விப்பட்டு, உடனே என்னைக் கிளம்பச் சொல்லி நச்சரித்தாள். இங்கிருக்கும் நிலைமைகளைச் சொன்னால் அழுது புலம்புவாள். ஆனாலும் நான் கோபமாகப் பேசியிருக்கக் கூடாது.

‘’எவ்ளோ தூரம் வந்திருப்போம் பைசல்..?”

குரலில் சுரத்தே இல்லாமல் கேட்டான் ஜிதேந்தர். மொபைலில் கூகுல் மேப்பை இயக்கிப்பார்த்தேன். காலைலர்ந்து 30 கிலோ மீட்டர் நடந்திருக்கோம்.

” இன்னும் எவ்ளோ தூரம் போகனும்..?” அப்பாவியாகக் கேட்டாள் சாந்தி.

 ”520 கிலோ மீட்டர்..”

பெரிய வெடிச் சத்தத்தைக் கேட்டதுபோலக் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அதுவரை பொத்தி வைத்திருந்த துக்கமெல்லாம் வெடித்துக் கிளம்ப ஓ… வெனக் கதறியழுதாள். எழும்புக் கூடைப்போல் மெலிந்திருந்த மார்பில் தொம் தொம்மென்று அடித்துக்கொண்டு அவள் அழுவதைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் படபடப்பாய்க்கூட இருந்தது. என்னவென்று புரியாமல் குழந்தைகளும் வீரிட்டு அழுதன. தான் வணங்கிய எல்லா தெய்வங்களையும் வாய்விட்டுச் சபித்தாள். கணவனின் அதட்டல் அவளது கதறலைக் கொஞ்சம் கூட குறைக்கவில்லை. வெகுநேரம் அழுது முடித்து அவளாகவே ஓய்ந்தாள். பெருமழை விட்டது போலிருந்தது. ஜிதேந்தரும் முழுதும் நிலைகுலைந்து போயிருந்தான். வெய்யிலில் நடந்து கந்திப்போயிருந்த பூஜாவின் பிஞ்சுப் பாதங்களை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு விசும்பினான். தொலைபேசியில் யாரிடமோ அழுது கொண்டிருந்தான் மனீஷ் குமார். அவன் கையில் பீடி புகைந்து கொண்டிருந்தது.

“பயப்படாதீங்க.. இன்ஷா அல்லா எதாவது லாரி வரும்.. அதுல ஏறிக்கலாம்..”

என்னுடைய ஆறுதல் வார்த்தையை யாருமே நமபவில்லை. சொல்லப் போனால் எனக்கே நம்பிக்கையில்லை. பரமபதப் படத்தின் இராஜநாகம் வாய்பிளந்து காத்திருப்பது போல முடிவின்றி நீண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

களைப்போ மயக்கமோ தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த சிறுமி எழவே இல்லை. எழுப்பி அமரவைத்தால் கண்களைத் திறந்து பார்ப்பதும் மீண்டும் மூடிக்கொள்வதுமாக இருந்தாள். ஒரு வேட்டித் துணியால் அவளை முதுகோடு சேர்த்து தொட்டிலைப்போல் கட்டிக்கொண்டான் ஜிதேந்தர். மீண்டும் நடந்தோம்.

பயணம் மனிதனுக்கு பல்வேறு அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறது. அதுவரை கண்டிராத வாழ்க்கையின் இரகசியங்களைத் திறந்து காட்டுகிறது. துயரற்றவரின்மீது சுமத்தப்படும் பயணங்கள் இரக்கமற்று நீண்டு போவது துரதிர்ஷ்டவசமானது. உல்லாசப் பயணத்தில் இருக்கும் சுவாரஸ்யங்கள் உயிர் பிழைக்க ஓடும் பயணங்களில் எப்படி இருக்கும்.

ஜிதேந்தருக்குத் தெரியாமல் பீடி புகைப்பதற்காகவே வேகமாக முன்னே சென்றுவிடுகிறான் மனீஷ். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நான் பின் தங்கியிருந்தேன். எனக்குப் பின்னால் ஜிதேந்தரும், அவனுக்குப் பின்னால் அவன் மனைவியும் வந்துகொண்டு இருக்கிறார்கள். தொடைகளிரண்டும் காய்ந்த களிமண்ணைப்போல இருகிப் போய்விட்டன. கெண்டைக்கால்கள் வலி உயிர் போகிறது.

“பைசல்.. தண்ணி இருக்கா..?”

ஜிதேந்தரின் குரல் கேட்டு நின்றேன். பையில் இருந்த பாட்டிலில் கால்வாசிதான் தண்ணீர் இருந்தது. சிறுமிக்குப் போதவில்லை என்பது அவள் ஏக்கப்பார்வையில் தெரிந்தது. மனீசிடமும் காலியாகியிருந்தது. எனக்கு பாவமாய்ப் போனது. வழியில் எதாவது பெட்ரோல் பங்க்குகள் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே நடந்தேன். தூரத்தில் சில பெண்கள் கூட்டமாய் நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் குடங்கள் இருந்தன. அந்த தெய்வங்கள் நடந்து செல்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வயிறு முட்டக் குடித்தோம்.

வெயிலில் காய்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் உலர்ந்து கொண்டிருந்த உடலின் ஜீவனை இந்தத் தண்ணீர் மீட்டுக் கொடுத்து விட்டது. கைகளைக்கூப்பி நன்றி சொன்னேன். நெற்றியில் ஐம்பது பைசா காசு அளவுக்கு பெரிய குங்குமப் பொட்டோடு இருந்த பெண்ணொருத்தி என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள். புது நம்பிக்கை பிறந்தது. பாட்டில்களையும் நிரப்பிக்கொண்டு நடந்தோம்.

சாலையோரமிருந்த ஒரு வயலில் மேய்ந்து கொண்டிருந்த பறவைகள் கூட்டமாக எழுந்து பறந்தன. எங்கே இவ்வளவு அவசரமாய்ச் செல்கின்றன. பொழுது சாய்வதை உணர்ந்து வீட்டுக்குச் செல்கின்றனவா. தன் வீடுகளை இவை எப்படி நினைவில் வைத்துக் கொள்கின்றன. இந்தப் பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் கூடப் பறப்பதாகச் சொல்கிறார்களே. இவைகளுக்கு இறகுகள் வலிக்காதா? பறக்கும்போது பசியெடுத்தால் என்ன செய்யும்? இறைவன் மனிதர்களையும் ஏன் இறகுகளோடு படைக்கவில்லை. வலுவான கால்களைக் இருக்கிறதே? இயந்திரங்களைப் பயண்படுத்தித்தான் கால்களைப் பலவீனமாக்கிக் கொண்டோமா?.

இருட்டத் தொடங்கியிருந்தது. இருட்டுக்கு மத்தியில் ஒரு இடத்தில் மட்டும் விளக்கு எரிந்தது. ஒரு சிறிய கடை இருப்பது போலத் தெரிந்தது. அது கடையாக இருந்தால் நாளைக்கான உணவுக்கு எதையாவது வாங்கி வைத்துக் கொள்ளலாம். நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறமாக தாழ்வாக ஓடிய ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடந்தோம். அது கடை தான். அங்கே தேநீரைத் தவிற ஒன்றுமே இல்லை. தேநீரைக் குடித்துக்கொண்டே கடைக்காரனிடம் பேச்சுக்கொடுத்தேன். இரண்டு நாட்களாக ஒரு வண்டியும் ஓடுவதில்லை, அதிகாலை நான்கு மணிக்கு லக்‌ஷ்மன்புரி டிப்போவிலிருந்து பால் வண்டிகள் பீஜப்பூருக்குப் போகும். கொஞ்சம் பணம் கொடுத்தால் அதில் ஏற்றிக்கொள்வார்கள் என்றான்.

எங்களுக்கு கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. பீஜப்பூர் இங்கிருந்து நாற்பத்தைந்து கிலோ மீட்டர். நடந்தால் ஒருநாள் முழுதும் நடக்க வேண்டும். வண்டியில் ஏறிக்கொண்டால் நேரமும் மிச்சம். கொஞ்சம் ஓய்வெடுத்தது போலவும் இருக்கும். ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்த லக்ஸ்மன்புரி வந்து சேர்வதற்கு ஒன்பது மணி ஆகிவிட்டது. டிப்போ பூட்டியிருந்தது. வாசலிலிருந்த ஷெட்டுக்குக் கீழே அமர்ந்தோம். இடுப்பெல்லாம் கழன்று விடுவதுபோல வலித்தது. தூங்கியிருந்த குழந்தைகளை எழுப்பி சாப்பிட வைத்தாள் சாந்தி. வண்டியில் செல்லப்போகிறோம் என்ற உணர்வே ஒரு குதூகல மனநிலையை எங்களுக்குக் கொடுத்திருந்தது. சுவற்றில் முதுகு சாய்த்து கால்களை நீட்டி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். நடப்பதைப் போன்ற உணர்வு மறந்து அமர்ந்திருக்கிறேன் என்ற எதார்த்தத்துக்குப் பழகவே மனதுக்கு வெகுநேரம் பிடித்தது.

குழந்தையை அனைத்தபடி தூங்கிக்கொண்டிருந்த சாந்தியின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தான் ஜிதேந்தர். அவள் பாதங்களில் கொப்புளங்கள் கிளம்பியிருந்தன. சில இடங்களில் தோல் உரிந்து செதில் செதிலாய் உதிர்ந்திருந்தது. வழியில் செருப்பு அறுந்துபோக மதியத்திலிருந்தே வெறும் காலில் நடந்திருக்கிறாள். வரும் வழியில் சில இஸ்லாமிய இளைஞர்கள் நடந்து செல்வோருக்கு வாழைப்பழங்களும் தண்ணீரும் கொடுத்துக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன்தான் சாந்திக்கு அவன் அணிந்திருந்த செருப்பைக் கழற்றிக் கொடுத்தான் மகராசன்.

அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாகி ஒவிட்டது டிப்போ. வாகணங்களில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு இரண்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டது. டிரைவர் ஆயிரம் ரூபாய் கேட்டான். எங்களிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. அதையும் கொடுத்துவிட்டால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போதே மனீஷ் அவனுடைய மொபைலை டிரைவர் கையில் தினித்தான். முதலில் மறுப்பது போல நடித்த டிரைவர் பின்னர் வாங்கி சட்டைப்பையில் சொறுகிக் கொண்டான்.

ஐந்து மணிக்கெல்லாம் பீஜப்பூரில் இறங்கி விட்டோம். சாந்தியால் கால்களை ஊன்றவே முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்தாள். குழந்தையை மனீஷ் வாங்கிக்கொண்டான். பூஜாவை கொஞ்சதூரம் தூக்கிக் கொள்வதும் கொஞ்ச தூரம் நடக்க வைப்பதுமாக இருந்தான் ஜிதேந்தர். மெதுவாகத்தான் நடந்தோம். வெய்யில் ஏறத்தொடங்கியது. கூடவே பசியும். உடல் முழுதும் வலி, கடும் பசி, முடிவே இல்லாமல் நீளும் பாதை ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையாய்க் கழிந்தது. குழந்தைகள் மாற்றி மாற்றி வாய்விட்டு அழுதன. ஜிதேந்தர் மனதுக்குள் அழுதான்.

அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மினி லாரி ஒன்று வந்தது. நிறுத்தினேன். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சத்து மாவுப்பைகளை ஏற்றிச்செல்லும் வண்டி அது. எங்களை ஏற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டேன். ஏற்கனவே கேபினுக்குள் நான்குபேர் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். வண்டி போய் விட்டது. நான் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னாலிருந்த மாவுப்பைகளில் ஒன்றை மனீஷ் திருடியிருந்தான். அதைத் திருட்டென்று சொல்ல முடியுமா? இது உயிர்வாழ்வதற்கான போராட்டம். மரணத்தோடு நிகழும் தற்காப்பு யுத்தம். ஓரமாக அமர்ந்து அள்ளியள்ளித் தின்றோம். விக்கியது. புரையேறியது. கண்ணீர் வழிந்தது. எப்படியோ தற்காலிகமாக பசி தீர்ந்தது.

நடந்து நடந்து என் உடலே எனக்கு பாரமாக இருப்பது போலத் தோன்றியது. கால்கள் நடுங்கின. வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. மாவைத் தின்றதால் வயிற்று வழி வேறு. சாந்தி துவண்டு போயிருந்தாள். அவள் நடை தடுமாறியது. எப்போது விழுவாளோ என்று அச்சமாக இருந்தது. மனீஷ் குமார் கடுமையாக இருமிக்கொண்டே நடந்தான். அவன் இருமலில் குடல்களெல்லாம் வெளியே வந்து விழுந்துவிடும் போலிருந்தது. இடுப்பு எழும்புகள் உடைந்து ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போல வலித்தது. உள்ளுக்குள் முள்போலக் குத்தியது. இதயத்தின் துடிப்பு பெருஞ்சத்தமாய்க் காதுகளில் கேட்டது. தொண்டை வரண்டு நாக்கு அண்ணத்தில் பசைபோல் ஒட்டிக்கொண்டது. விழுங்கக்கூட வாயில் எச்சில் ஊரவில்லை.

இருட்டத் தொடங்கும் வரை நடந்து கொண்டேதான் இருந்தோம். வழியில் இரண்டு இடங்களில் டீக்கடை மட்டும் இருந்தன. டீயும் பிஸ்கட்டுகளும் சாப்பிட்டு ஒப்பேற்றியிருந்தோம். ஒரு பாலத்தின் கீழ் அமர்ந்தோம். உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல வலித்தது. அப்படியே கன்ணயர்ந்து விட்டேன். பூஜாவின் அழுகுரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன், நன்றாக இருட்டியிருந்தது. தவறாமல் விடிவதுபோல தவறாமல் இருட்டுவதுபோல. தவறாமல் பசிக்கவும் செய்கிறது.

பசியால் துடிக்கும் குழந்தைகளில் அவஸ்தையைச் சகிக்க முடியவில்லை. சமாதானம் செய்ய முடியாமல் சோர்வடைந்து சுருண்டு படுத்துக் கொண்டாள் சாந்தி.  ஜிதேந்தர்தான் அந்த யோசனையைச் சொன்னான். நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஊருக்குள் தனியாக இருந்த பேக்கரியின் பூட்டை உடைத்துத் திருட முடிவெடுத்தோம். பசி ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் செல்லத் தூண்டி விடுகிறது. எங்கள் கெட்ட நேரம் ஊர்க்காரர்களிடம் அகப்பட்டு உதை வாங்கியதுதான் மிச்சம். கையிலிருந்த செல்போனையும் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டார்கள். இளைஞர்கள் விரட்டி விரட்டி அடித்தார்கள். சிறுவர்கள் கல்லெறிந்தார்கள். நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தோம். அடிபட்ட வலியை விட அவமானம் அதிகமாக வலித்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதைக்கூட தவிர்த்தோம்.

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. கண் விழித்தபோது ஜிதேந்தர் தெருக்குழாயிலிருந்து பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு இருந்தான். மரத்தோரம் சாய்ந்து எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் சாந்தி. இரண்டு குழந்தைகளும் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மூலைக்கொன்றாய்க் கிடந்தன. தூரத்தில் நின்று புகைத்துக் கொண்டிருந்தான் மனீஷ் குமார். வாய் கொப்பளித்துத் தண்ணீர் குடித்தேன். எதுக்களித்தது. குமட்டிக்கொண்டு வந்து வாந்தியெடுத்தேன். வெறும் தண்ணீர்தான் வந்தது.

மீண்டும் நடந்தோம். நெடுஞ்சாலையிலிருந்து விலகி குறுக்கு வழியில் நடந்தோம். மலைப்பாதையைப் போல மரங்கள் அடர்ந்து நீண்டது அந்தச் சாலை. ஆள் அரவமே இல்லை. பறவைகளின் சப்தம்கூட இல்லாத ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. எப்போதுமே முன்னால் செல்லும் மனீஷ் குமார் நடக்கவே தெம்பின்றிப் பின் தங்கியிருந்தான். அடிக்கடி இருமினான். வழக்கத்தை விட அதிகமாக மூச்சிரைத்தான். தட்டுத்தடுமாறி நடந்தான். பூஜாவைத் தூக்கிக்கொள்ளும் சக்தியை ஜிதேந்தர் எப்போதோ இழந்திருந்தான். அவனுக்குப் பின்னால் தனக்குத்தானாகவே பேசிக்கொண்டு நடந்துவந்த பூஜாவின் இருண்ட முகம் எதையோ முன்னறிவிப்பதைப்போல இருந்தது. கிட்டத்தட்ட பிணங்களைப் போல்தான் நடந்தோம்.

உச்சி வெயில் ஏறியிருந்தது. பொத்தென்று சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். மனீஷ் குமார் விழுந்து கிடந்தான். ஓடிச்சென்று பார்த்தோம். கடைசியாக இரண்டு முறை துடித்து அடங்கிப்போனான். திறந்திருந்த வாயிலிருந்து கடைசிக்காற்று பொக்கென்ற சப்தத்துடன் வெளியேறியது. தலையில் அடித்துக்கொண்டு அழுதான் ஜிதேந்தர். அழக்கூட தெம்பில்லாமல் மயங்கி விழுந்தாள் சாந்தி. எனக்கு எதுவுமே புரியவில்லை. விழுந்து கிடந்த கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்ததுபோல நின்றிருந்தேன். ஜிதேந்தரின் கதறல் அந்தக் காட்டுப்பாதையின் எல்லை வரை எதிரொளித்தது.

சாந்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினேன். மார்பில் அடித்துக் கொண்டு அழுது புரண்டாள். கத்தி அழுதுகொண்டிருந்த ஜிதேந்தரின் குரல் திடீரென அமைதியானது. எதையோ வெறித்துப் பார்த்தபடி இடிந்து போய் அமர்ந்திருந்தான். அந்தத் திசையில் பார்த்தேன். மனீஷின் பிணத்திலிருந்து பத்தடித் தொலைவில் ரோட்டோரமிருந்த புற்களைப் பிடுங்கித் தின்றுகொண்டு இருந்தாள் பூஜா. என்னையறியாமலே உடைந்து அழுதேன். ஓடிப்போய் அவளை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதேன்.

“பைசல் வண்டி எதாவது வருதான்னு போய் பாத்து கூட்டிட்டு வா..”

திடீரென ஆவேசமாய்க் கத்தினான் ஜிதேந்தர்.

எழுந்து நெடுஞ்சாலை சந்திப்புக்கு ஓடினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை. பதினைந்து நிமிடத்துக்குப் பின்பு அடுத்தடுத்து இரண்டு வண்டிகள் வந்தன. இரண்டுமே நிற்கவில்லை. ஒரு கார்காரன் நிறுத்தினான். விசயத்தைச் சொன்னதும் முடியாதென்று கிளம்பிவிட்டான். கொஞ்சம் நேரம் நின்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தேன். கைக்குழந்தை அசைவின்றிக் கீழேகிடந்தது. மரத்தின் அடுத்தடுத்த கிளையில் மூவரும் தொங்கிக் கொண்டு இருந்தனர்.

நாக்குத் தள்ளிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்த பூஜாவின் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தன. கதறி அழுதேன். யாரோ என்னை நெருங்குவதுபோல இருந்தது. தடுமாறி விழுந்தேன். என்னைப் பிடிக்க முயல்வதுபோலத் தோன்றியது. எழுந்து ஓடினேன். எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் ஓடினேனென்றே தெரியவில்லை. அது என்ன இடமென்று தெரியவில்லை. ஏதோ ஒரு கிராமம் போல இருந்தது. ஒரு மரத்தடித் தின்னையில் அமர்ந்தேன். நுரையீரல்கள் வெடித்துவிடுவதுபோல மூச்சிரைத்தது. பயங்கரமாக இருமினேன். நெஞ்சிலிருந்த சளி கெட்டி கெட்டியாக வந்து விழுந்தது.

அருகில் வந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டேன். என் பெயரைச் சொன்னதும் பேயைக்கண்டதுபோல ஓடினாள். திடீரென்று ஒரு பெருங்கூட்டம் வந்தது. எதுவுமே கேட்காமல் இழுத்துப்போட்டு அடிக்கிறார்கள். டில்லி வாலா முஸ்லிம் என்கிறார்கள்.. கொரோனா ஜிஹாதி என்கிறார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றிலும் எங்கெங்கிருந்தோ அடி விழுந்துகொண்டே இருக்கிறது. ஒருவன் சட்டையைப் பிடித்து இழுத்துச்சென்று தெருவில் போட்டான். போலீஸ்காரர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவன் என் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றுகிறான். ஒரு சிறுவன், அவனுக்கு பதினைந்து வயதுதான் இருக்கும். ஒரு பெரிய கல்லை எடுத்து என் தலைக்கு நேராக ஓங்கியபடி நிற்கிறான். இன்னொருவன் தீக்குச்சியைக் கிழித்துக்கொண்டு இருக்கிறான்..

இனி என்ன நடக்குமென்று எனக்கும் தெரியாது. இந்தக் கதையை நீங்கள்தான் முடிக்க வேண்டும். உங்கள் முடிவுக்காக காத்திருக்கிறது இந்தக் கதை.

Related Posts