அரசியல்

நான் அறிந்த வி.பி.சிந்தன்- ஓர் அனுபவ பகிர்வு ……….


நான் சந்தித்த தொழிற்சங்க தலைவர்களில் பன்முக திறன் கொண்ட, அனைவரையும் ஈர்க்கும் குணாம்சங்களை கொண்டவர் வி.பி.சி அவர்கள்.

நான் இடதுசாரி இயக்கத்தில் பயணிக்க தொடங்கியதில் இருந்து, அவரது இறுதிகாலம் வரை தொழிற்சங்க பணி காரணமாக அவ்வப்போது சந்திக்கவும், அவரது வழிகாட்டுதலில் செயல்படவும் வாய்ப்பு பெற்றவன்.
சென்னை காசிமேடு பகுதியில் இளைஞர்களை முற்போக்கி அரசியல் பேசி இடது இயக்கத்தின் பக்கம் ஈர்க்கும் வேலையை தோழர் ம. செல்லாராம் அவர்கள் மேற்கொண்டார். காசிமேடு மீனவர்கள் பகுதியில் வசித்த என் போன்ற இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டோம்.

1974-76 காலங்களில் எமர்ஜென்சியின் போது நேரடியாக கட்சிக்காக பணியாற்ற பணிக்கப்பட்டோம்.
அப்போது மீனவர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி கிளைகளே கிடையாது. எமர்ஜென்சி காரணத்தால் மறைமுகமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எங்களை கட்சி பெயரில் இல்லாமல் வேறு ஏதேனும் ஒரு பொதுப் பெயரில் செயல்பட அப்போதைய கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் அவர்கள் வழிகாட்டினார். என்ன பெயரில் செயல்படுவது என்ற விவாதம் முன்வந்த போது, ”நீங்கள் ஏன் சிங்காரவேலர் பெயரில் செயல்படக் கூடாது, இந்தியாவின் முன்னோடி பொதுவுடமை இயக்கத் தலைவர் அவர். தொழிற்சங்கவாதியான அவர் பெயரில் செயல்படுவது இந்த பகுதியிக்கு சிறந்ததாக அமையும்” என்று வி.பி.சி முன்வைத்தார். அவரது பரிந்துரையின் பெயரிலே ”சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்” என்ற பெயரில் செயல்பட தொடங்கினோம்
எமர்ஜென்சி காலக்கட்டம் முழுக்க சிங்காரவேலர் சிந்தனைக்கழகம் என்ற பெயரிலே செயல்பட தொடங்கினோம். காசிமேடு பகுதியில் நூலகம் அமைத்து, இரவு பாடசாலை நடத்தினோம். அப்பகுதியில் இருந்த இளம் தோழர்களை இடதுசாரி அரசியலை நோக்கி ஈர்க்க இவ்வமைப்பு பயன்பட்டது.

கலை இலக்கிய பணிகளை மேற்கொள்ள “அன்னை கலை இலக்கிய நற்பணி மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டோம். அதில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டது. பல்கலைகழக பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள் என பலர் பங்கேற்று சொற்பொழிவாற்றினர்.

தோழர் வி.பி.சி கூட ஒருமுறை பங்கேற்று மார்க்சியம் பற்றி சொற்பொழிவாற்றினார். 1976இல் இருந்து சிபிஎம் என்ற பெயரில் நேரடியாக செயல்பட தொடங்கினோம்.

சிங்காரவேலர் சிந்தனைக்கழகத்தின் அலுவலகத்தை 10-9-1982 அன்று சிபிஎம் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் இ.எம்.எஸ் அவர்கள் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உரையில் ”சிங்காரவேலரின் கொள்கையைப் பரப்பிவாருங்கள்” என்று பேசியது முத்தாய்ப்பாய் அமைந்தது. இன்று சிங்காரவேலரின் வரலாறு, பங்களிப்புகள் குறித்து ஆவணப்பூர்வமான பல பதிவுகள் வெளிவந்துள்ளது ஆனாலு பரவலாக எல்லோரையும் சென்றடயாத சூழலே உள்ளது. ஆனால், வி.பி.சி அன்றே சிங்காரவேலரின் பங்களிப்புகள் குறித்து நல்ல பார்வைகொண்டிருந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.


தொழிற்சங்கப்பணியில்..
அதன் பிறகு 1976ஆம் ஆண்டு எண்ணூர் பவுன்டரிஸ் நிறுவனத்தில் (இப்போது இந்துஜா பவுன்டரிஸ்) அரசு பயிற்சி ஊழியராக சேர்ந்து, அடுத்த வருடமே எழுத்தர் பணியில் சேர்ந்தேன். தொழிற்சங்க தலைவராக வி.பி.சி யுடனான உறவும் தொடர்ந்தது. அப்போது திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் நடைபெறும் கட்சி கூட்டங்களில் பங்கேற்பேன். என்னை பார்க்கும் போதெல்லாம் ”திருவொற்றியூரில் பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்க ஜனநாயகம் இருக்கிறது, எண்ணூர் பவுண்டரிஸில் எப்போது ஜனநாயகம் வரும்” என்று வி.பி.சி கேட்பார். பேரவை கூட்டங்களில் பேசும் போதும் ”தொழிற்சங்க ஜனநாயக காற்றையே சுவாசிக்காத தோழர் அருண் இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார்” என்று என்னை சுட்டிக்காட்டியே கிண்டலாகப் பேசுவார். நாம் பணியாற்றும் தொழிற்சாலையில் தொழிற்சங்க ஜனநாயகத்தை நிலைநாட்ட போராட வேண்டுமென்று சந்திக்கும் போதெல்லாம் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்.


வடசென்னை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளாக எவரெடி, டாட்டா ஆயில், மெட்டல் பாக்ஸ் போன்ற நிறுவனங்களில் வி.பி.சி தலைவராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பொதுச்செயலாளர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக இருந்தனர். தலைவராக இருந்த வி.பி.சி தோழரின் மீது பெரும் மரியாதையும் அன்பும் வைத்திருந்தனர். எவரெடி தொழிற்சாலையில் தொழிற்சங்க பொதுச்செயலாளராக எனது அண்ணன் வாசுதேவன் இருந்தார். அவர் திமுகவை சேர்ந்தவர் என்றாலும், விபிசியை தலைவராக ஏற்று அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். வி.பி.சியிடம் தொழிற்சாலை தொடர்பான விசயங்கள் ஏதும் பேச வேண்டும் என்றால், கட்சியின் பொது நிகழ்வுகளுக்கே அவர்களை வரச்சொல்வார். கட்சி பொதுகூட்டங்களில் கூட அவர்களை அழைத்து பங்கேற்க வைப்பார். “ஒரு தொழிற்சங்க ஊழியர் என்ற முறையில் நீங்கள் கம்யூனிஸிட் கூட்டங்களில் பங்கேற்று கருத்துக்களை கேட்க வேண்டும்” என்று வலியுறுத்துவார்.

டாட்டா ஆயில் மில் செயலாளர் இராமசந்திரன், மெட்டல்பாக்ஸ் செயலாளர் அந்தோணி என பலரும் பங்கேற்றதை நான் பார்த்து இருக்கிறேன். வி.பி.சி மாற்றுகட்சியில் உள்ள தொழிற்சங்க ஊழியர்களையும் பயிற்றுவித்து ஜனநாயக மாண்போடு செயல்பட வைத்தார். விபிசியின் காலத்திற்கு பிறகு இம்மாதிரியான அணுகுமுறைகளை பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பிரத்யேகமான தொழிற்சங்க முறை சென்னையில் பின்பற்றப்பட்டது. ஒரு தொழிற்சாலை, ஒரு தொழிற்சங்கம் என்ற நிலைபாடு. அதில் நம் தலைமை வெற்றிப்பெறுவது அரிதாகவே இருந்தது.

வி.பி.சி நமது தொழிற்சஙக நிலைபாடுகளில் மாற்றம் வேண்டும் என்பார், பிற கட்சியினரையும் தொழிற்சங்கம் பணியில் ஒன்றிணைத்தார். அதன் மூலம் பி.&சி மில், சிம்சன் என சென்னையின் பல்வேறு தொழிற்சங்கத் தலைமையில் விபிசி சங்கத் தலைவர் ஆனார். ஆனால் அந்த மாற்றமும் 1980 ஆண்டுகள் வரை திருவொற்றியூர்- எண்ணூர்-மணிலி பகுதியில் மட்டும் மாற்றம் நிகழாமல் இருந்தது. அதையும் உடைத்து முதன்முதலில் எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் சங்கத்தை வி.பி.சி தலைமையில் வென்றோம். அதை தொடர்ந்து திருவொற்றியூரின் அனைத்து தொழிற்சங்கங்களிலும் சி.ஐ.டி.யூ தலைமையிலான அணி வென்று வி.பி.சி தலைவரானார். எஸ்.சி.சி.அந்தோணிபிள்ளை, எஸ்.எம்.நாராயணன் போன்ற நிர்வாகத்தோடு உடன்பட்டு தொழிற்சங்கம் நடத்திய (சீர்திருத்த) தலைமையை அப்புறப்படுத்தி வி.பி.சி தலைவரானார். ஆர்.குசேலர் போன்ற இடது தீவிர தலைவரும் தொழிலாளர்களால் புறக்கணிக்கப்பட்டனர்.

வடசென்னை பகுதியில் எண்ணூர் பவுண்டரிஸ், கார்போராண்டம் இரண்டு தொழிற்சாலைகளை தவிர்த்த அனைத்து நிறவனங்களிலும் விபிசி தான் தலைவராக இருந்தார். வி.பி.சியின் தலைமையில் தொழிற்சங்கத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் கட்சியின் ஊழியர்களாயினர். குறிப்பாக திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதி என்றாலே தொழிற்சங்க ஊழியர்களை கொண்ட கட்சியாக இருந்தது. தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக இருந்ததின் வீச்சுதான் அவரை வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாக மாற்றியது. அப்பதவியை தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்தினார்.

எண்ணூர் பவுண்டிரியில் தலைமை மாற்றே இல்லாமல் 24 ஆண்டுகாலம் தொடர்ந்து தலைவராக இருந்தவர் எஸ்.எஸ்.சி அந்தோணிபிள்ளை. ஜனநாயக முறையிலான தேர்தல் என்பதே கிடையாது. ஜனநாயக உரிமைகள் பற்றி கேள்வி கேட்பவர்கள் அப்பட்டமாக பழிவாங்கப்படுவார்கள். அந்தோணிபிள்ளையின் தலைமைக்கு எதிராக பேசினாலே நிர்வாகம் நடவடிக்கை இருக்கும். தொழிற்சங்க ஜனநாயக உரிமைக்காக தொடா்ந்து போராட வி.பி.சி வழிகாட்டினார். எண்ணூரில் இருந்த கொத்தாரி உரத்தொழிற்சாலை, இ.ஐ.டி.பாரி ஆகிய நிறுவனங்களின் தொழிற்சங்க தலைவராக இருந்த தோழர் உ.ரா.வரதராஜன் அவர்கள் வி.பி.சியின் வழிகாட்டுதலின் படியே பவுண்டரில் தொழிற்சங்க நடவடிக்கைளில் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். 23 ஆண்டுகளாக தொழிற்சங்க தேர்தலே நடைத்தாத சூழலில், ஆலையில் உள்ள அனைத்து தொழிலாளர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஐக்கிய அணியை உருவாக்கிட உ.ரா.வரதராஜன் வழிகாட்டினார். இடதுசாரி தலைவரை நிறுத்தினால் எளிதாக எதிர் அரசியல் செய்வார்கள் என்பதால், அந்தோணிபிள்ளை அவர்களால் பழிவாங்கப்பட்டு, சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளியான தியாகராஜன் அவர்களையே பேரவையில் தலைவராக நிறுத்தினோம். கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பான்மையை பெற்று அந்தோணிபிள்ளையை தோற்கடித்தோம். அந்தோணிபிள்ளையின் மாடல் பைலாபடி அவரை அவரை தோற்கடிக்கத்தோம். சென்னையில் பிள்ளையின் பைலாபடி அவர் தலைமையை தோற்கடித்தது எண்ணூர் பவுண்டிரியில் மட்டுமே.. சென்னை தொழிற்சங்க வட்டாரத்தில் அந்தோணிபிள்ளையின் தோல்வி அன்று பேசு பொருளாக இருந்தது. ஆனால், இந்த வெற்றியை பார்க்க வி.பி.சி அப்போது இல்லை. அவர் இறந்து சில மாதங்கள் கழித்துதான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தது. அவரது நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றினோம் என்ற மனநிறைவு எங்களுக்கு இருந்தாலும், அவரிடம் இதை சொல்லமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எங்களுக்கு இருந்தது.


வி.பி.சி மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த கூடிய மக்கள் கூட்டத்தை நினைத்து பார்க்கிறேன். அவர் மக்கள் தலைவர், அவர் பணியாற்றிய அனைத்து தொழிற்சங்கங்களிலும் தொழிலாளர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று இருந்தார். கட்சி பணியிலும் ஒவ்வொரு தோழரிடமும் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்துக்கூடியவர். அவர் ஜனநாயக மாண்புகளின் அடையாளம். அவரது வெகுஜன தலைமைப்பண்புகள் இன்றும், என்றும் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும்.

  • வீர. அருண்.

Related Posts