அரசியல்

நம்புங்கள் இது நாகரீக சமூகம் . . . விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தின் கொடூரம் . . . . . !

பார்த்தாலே பதைப்பதைக்கச் செய்கின்றன அந்தப் புகைப்படங்கள். கிட்டத்தட்ட முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த உடல்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் ரத்தத்தின் வாடை, உலகின் எந்த மூலையில் இருந்து பார்ப்பவராயினும் குமட்டலை ஏற்படுத்துகின்றன. தாய், மகள் மற்றும் மகன் என இந்தக் கொடூரத் தாக்குதலில் மகனின் பரிதாபச் சாவு நமக்குள்ளும் பாதுகாப்பற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ளது வெள்ளம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் தலித் குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி காலை ஏழு மணியாகியும் ஆராயி வீட்டில் இருந்து கோலம்போடக் கூட யாரும் வராததால், சிறுமி ஒருத்தியை அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாக இருந்ததால், வெளியே இருந்து அழைப்பது சரியாகக் கேட்காது என்று நினைத்த அந்தச் சிறுமி, உள்தாழிடாத கதவை மெல்லத் திறந்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அங்கு முனகியபடி சிறு அசைவுகளுடன் ஆராயி, அவரது மகள் தனம் (14) மற்றும் மகன் தமயன் (8) ஆகியோர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி, அக்கம்பக்கத்தினரை அழைத்து அந்த அதிர்ச்சியான செய்தியைத் தெரிவித்திருக்கிறார்.

தகவல் காட்டுத்தீ போல பரவ, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றுயிரும், கொலையுயிருமாய்க் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிறுவன் தமயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூற, ஆராயி மற்றும் தனத்தை மட்டும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் என்ன நோக்கத்திற்காக, எப்படி, எத்தனை பேரால் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை.

ஆராயி கணவனை இழந்த கைம்பெண். அவருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். மூன்று மகன்கள் பெங்களூருவில் கட்டிட வேலையும், ஒரு மகள் திருப்பூர் ஜவுளி ஆலையிலும் வேலை பார்த்துவர, தனமும், தமயனும் ஆராயியுடன் வசித்து வந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அவர்களது வீட்டிற்கு எதிரே உள்ள நிலத்தின் மீதான தகராறு இதற்குக் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆதிக்க சாதிக்காரர் ஒருவரின் தலையீட்டால் இது நடந்திருக்கலாம் என்றாலும், சந்தேகத்தின் பேரில் கூட காவல்துறை அவர்மீது விசாரணை நடத்தவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆலடியான் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை.

இந்தக் கொடூரத் தாக்குதலின்போது ஆராயியின் மகள் தனம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவரது பிறப்புறுப்பில் 13 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும், அவரது கருப்பை கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக, நிலத்தகராறு காரணம் என்றால் பாலியல் வல்லுறவு செய்யவேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

சம்பவம் நடந்த வெள்ளம்புத்தூர் கிராமம் வறட்சியின் பிடியில் வாடிக் கிடக்கிறது. இங்குள்ள குடும்பங்களின் ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று தங்கியிருக்கின்றனர். எனவே, எப்போதும் ஆண் பாதுகாப்பு இல்லாத கிராமம். இந்த கிராமத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதேபோன்ற தாக்குதல்கள் இரண்டு முறை நடந்திருக்கின்றன. ஆனால், அவை புகார்களாக வெளியே செல்லாமல், உள்ளுக்குள்ளேயே மூடி மறைக்கப் பட்டிருக்கின்றன. ஆராயி வீட்டுத் துயரம் செய்தியான பிறகே, அனைத்தும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு மாத இடைவெளிகளும், ஒரே மாதிரியான தாக்கும் விதங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

இது ஆதிக்கத் திமிராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை எனக்கூறி, ஆராயியின் சமுதாயச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ஆதிக்கத் திமிரின் குரலுக்கு வாலாட்டுபவர்களால் இது நடத்தப்பட்டிருக்காது என்பதில் என்ன நிச்சயம்? ஏனெனில், ஆராயியின் மூத்த மகன் நிலத்தகராறு நடந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆராயியின் வீட்டில் பொருட்கள் அனைத்தும் இருந்த இடத்திலேயே இருக்க, இது திருட்டுக்காக நடந்ததாகவும் இல்லை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆராயி மற்றும் மகள் தனம் இன்னமும் கண்விழிக்கவில்லை. அவர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகே கூடுதல் தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெள்ளம்புத்தூர் கிராமத்திற்குச் சென்ற எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த எவிடென்ஸ் கதிர், விஞ்ஞானப்பூர்வமான விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். இப்போது வரை இடதுசாரிய, முற்போக்கு அமைப்புகள் மட்டுமே களத்தில் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடியின் வருகையால் தாமதாகிப் போன விசாரணையை இன்னமும் காவல்துறை துரிதப்படுத்தவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் படவேண்டும். மனிதர்கள் மீதான நம்பிக்கை சக மனிதர்களுக்கு குறைந்துவிடுவதற்கு முன்பாகவேனும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

  • தேன்சிட்டு

 

Related Posts