அரசியல் இதழ்கள்

சுயவிமர்சனம் தேவை விகடனாரே…!

398682-av

விகடனை ஏன் விமர்சிக்கனும் ? என்றால்

ஏன் விமர்சிக்க கூடாது எனக் கேட்கலாம்.

ரெமோ சாக்கடையில் தன்னை கழுவிக் கொள்ளும் அளவுக்கு யோக்கியம் இல்லை விகடனார்.அரசியல் வார இதழான ஜூனியர் விகடனின் நடுப்பக்கம் முதல் டைம்பாஸ் வரை பெண்கள் மீதான அக்கறைக்கான முன்னெடுப்பாக நடிகைகளின் இலை மறை காய் போஸ்ட்டர்களோடு போராடி மகிழ்வது யாவரும் அறிந்ததே.

நடிகர் நடிகைகளின் பர்சனல் வாழ்வை கிசு கிசு என விகடனும் குமுதமும் குங்குமமும் வார மலரும் பந்தி வைத்து பாலூட்டியதை மறுக்க இயலுமா என்ன? நடிகை என்றால் இப்படித்தான் என பொதுப்புத்தியை வளர்த்தும் அவர்களின் மார்பு, தொப்புள் என ஆராய்ச்சி செய்து பொதுவெளியில் உயிரில்லா பொம்மையாக்கிய இந்த யோக்கியர்களை குறித்து எப்படி பேசாதிருக்க முடியும்?

ஸ்விம்மிங் விளையாடும் பெண்களை அவ்வளவு எளிதில் வக்கிரமாக யாரும் கவனிப்பதில்லை. பீச் வாலிபாலிலும் அப்படித்தான். ஆனால் டென்னிஸ் ஆடும் சானியா மிர்சா ஸ்டெபி க்ராப்ட் வீராங்கனைகளின் குட்டைப் பாவாடைக்குள் கூர்ந்து கவனிக்கும் வக்கிரத்தை பகிங்கரமாக பகடியான வார்த்தைகளில் வாசகர்களிடம் வார்த்ததில் விகடனுக்கு பங்கில்லையா என்ன?

நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு அடுத்து அச்சு தோன்றி அறிவு தோன்றா காலம் தொட்டே நர்ஸ்கள், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரிகளை (மன்னிக்கவும்) குறித்து ஜோக்குகள் என்ற பெயரில் பாலியல் பார்வையை திணித்து வளர்த்ததில் விகடனுக்கு பங்கில்லையா?

காலேஜ் கேம்பஸ், டேட்டிங், ஃபிகர் என கேர்ள்ஸை மடக்கும் விதங்களை விதம் விதமான தலைப்புகளில் எழுதி்ய விகடன் ரெமோக்கெல்லாம் முன்னோடி என்றால் அது மிகையில்லை.

ஜோக்கா கூட எழுதுனா தப்பான்னு கேட்கலாம். அதையே தொழிலா வைச்சிருப்பதுதான் விகடனும் இதர பத்திரிக்கைகளும். இவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் மேலிருக்கும் துறை சார்ந்த பெண்கள் மீது விதைத்த பொதுப்புத்தியின் விளைவுதான் ரெமோக்களின் வரவு.

14681854_1151894558179195_6681239352018303747_n

டைம்பாஸ் விகடன் போதும்…. ஒட்டு மொத்த பெண்களின் மீதான விகடனின் அக்கறைக்கு சாட்சியாக…

சமூக அக்கறைகோடு சாதிப் பெருமைகளை சுமந்து வரும் சின்னக்கவுண்டரை சுட்டியிருந்தால் தேவர்மகன் வந்திருக்கமாட்டார். நாயுடு என்ற பெயரைச் சூட்ட ஒலக பகுத்தறிவு கமல் சிறிது யோசித்திருக்கலாம். சுந்தரப்பாண்டியனை துப்பியிருந்தால் குட்டிப்புலி வந்திருக்காது. ஆக சமூகத்தில் சாதி என்பதும் அதன் அடக்குமுறைகளை வீரமாக பறைசாற்றும் படங்களும் சமூக சீரழிவாக விகடனுக்கும் இதர பத்திரிக்கைகளுக்கும் தோன்றவில்லையா? இல்லை தோன்ற வேண்டிய அவசியமில்லையா?

ரெமோ ரிலீசான காலையில் முதல் ஆளாக விகடன் தனது இணையத்தில் ‘லாஜிக்கை மறக்கடிக்கும் மேஜிக் ‘ என்றுதான் ப்ரமோட் செய்திருந்தது. ஆனால் கலெக்சன் கடந்த ஒரு வாரத்திற்குப்பின் தனது அச்சு பத்திரிக்கையில் கழுவி ஊத்துகிறது.

பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள் சினிமாக்களை அல்லது அதன் நடிகர் நடிகைகளை முன்னிறுத்தியே பக்கங்களை நிறைத்து வந்துள்ளன. இணையத்தின் வரவால் மக்களின் பார்வை விசாலமான நிலையில் தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விகடன் ரெமோவை விமர்சித்ததில் தப்பே இல்லை. அதேநேரம் தனக்குத்தானே ஒரு சுயவிமர்சனம் செய்து பார்த்தால் சமூகத்திற்கு சற்று நன்மை பயக்கும். அனைத்து மாநிலங்களிலும் இப்படியாகத்தான் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. விகடன் ஒரு பருக்கை…

அடுத்த தலைமுறைக்கு, பெண்களைப் பற்றி என்னவிதமான பார்வையை கொடுக்கப்போகிறோம் என அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் கவனத்தில் கொண்டால் சிறப்பான சமுதாயத்தை நோக்கி நகரலாம். இல்லையெனில் மெழுகுவர்த்தி விற்கும் கடைக்கார அண்ணாச்சியை கோடீஸ்வராக்கலாம்.

வியாபாரம் பார்க்கும் விகடனை இந்தளவில்தான் அணுக முடியும். ரெமோனாலும் சரி விகடனானாலும் சரி வேசம் கட்டுனா அதற்குரிய விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். அடுத்து வரும் முத்தையாவின் படத்தை எப்படி பத்திரிக்கைகள் அணுகுகின்றன என்பதில் தெரிந்துவிடும் நிஜமான சமூக அக்கறை.

– சதிஷ் செல்லதுரை.

Related Posts