அரசியல் கலாச்சாரம்

சபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . !

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட பின்பு தான்  நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதிலும் ஐந்தில் நான்கு நீதிபதிகளின் கருத்துக்கு மாறாக ஒரு பெண் நீதிபதி மக்களின் மதநம்பிக்கையில் தலையிடக் கூடாது என ஒதுங்கி நின்ற நிலையில் சமத்துவம்
நோக்கிய பயணத்தின் கடுமை பற்றி  தேசம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மத நம்பிக்கை என்பது கடவுளை வழிபடும் முறையுடன் இணைந்தது. ஒவ்வொரு மதக்கடவுளும் ஒவ்வொரு விதத்தில் வழிபடப்படுகிறார்கள். இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு விதமாய் வழிபடப்படுகிறார்கள். ஐயப்பனே ஊருக்குள் உள்ள கோவிலில் ஒரு வகையிலும் சபரிமலையில் ஒரு வழியிலும் வழிபடப்படுகிறார். இதில் யாரும் தலையிடவும் இல்லை. பெண்களை அனுமதித்து தீர்ப்பு சொன்ன நீதிபதிகளும் கூட இதில் தலையிடவில்லை .

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளும் முதியோரும் சபரிமலைக்கு செல்ல தடையில்லை , இளம்பெண்கள் செல்வதில் தான் பிரச்னை எனும்போது அதற்கு காரணமாய் கூறப்படுவதில் முக்கிய பங்கு வகிப்பது மாதவிடாய் பிரச்னையே !

பொதுவாகவே பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் எந்தக் கோவிலுக்கும் செல்வதில்லை. அக்கம்பக்கத்தார் வீடுகளுக்குள் செல்வதோ தங்கள் வீடுகளுக்குள் செல்வதில் கூட தயங்கும் பெண்கள் இன்னும் உள்ளனர். இந்த
சூழலில் பெண்கள் அங்கு செல்லலாம் என்றதும் மாதவிடாய் பெண்கள் எல்லாம் அங்கு வரிசை கட்டி நிற்பது போல் தோற்றம் ஏற்படுத்தி விவாதிப்பது தேவையற்றது.

ஆணும் பெண்ணும் இணைந்து சென்றால் தவறு நேரும் என்றால் ஆணும் ஆணும் இணைந்து பிறந்த கடவுள் தான் ஐயப்பன் ( ஹரிஹரசுதன் ) என்று கூறும் நிலையில் ஆண்கள் அங்கு செல்வதை எப்படி பார்ப்பது ? விரதம் மேற்கொள்ளும் ஆண்கள் அவ்வளவு பலவீனமானவர்கள் எனில் விரதத்தின் அர்த்தம் என்ன ? பெண்கள்
எல்லாம் மயக்குபவர்கள் எனும் அவமானகரமான கருத்தியலை ஏற்க இயலுமா ?

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரே கழிப்பறைக்குள் செல்ல முடியுமா எனும் அளவு கீழ்த்தரமான விவாதங்கள் உண்மையில் யாரை கேவலப்படுத்துவது என்பதை இந்து மதத்தை உயர்த்திப் பிடிக்க தாங்களே குத்தகைதாரர் என்போர் சொல்ல முடியுமா?

சபரிமலைக்கு செல்ல நினைக்கும் பெண்களும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. மாலை போடும் ஆண்களுக்கு இன்றுவரை தங்கள் சக்தியை பிழிந்து தந்து ஒத்துழைத்துக் கொண்டிருபவர்கள் தான் ! அதனால் தான் பெண்களை விட்டே சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என தீர்மானம் போட வைக்கும் குயுக்தி வேலை செய்கிறது. மாலை போடும் சீஸனில் ஆண்கள் எல்லாம் மாலை போட முன்தினம் வரை குடித்தோ குடியாமலோ உள்ள கணவர்களால் அடிஉதை வாங்கிய பெண்கள் கூட அவர்கள் மாலையிட்டதும் தங்கள் துயரங்கள் எல்லாம் இனி காணாமல் போய் விடும் எனும்
அழுத்தமான நம்பிக்கையுடன் அவர்களை சாமி என அழைத்து , தினமும் இருவேளை வீடு துடைத்து குளித்து, பக்குவமாய் சமைத்து ,உடன் வரும் சாமிகளுக்கு அன்னதானம் செய்து இவைகளுக்கு தேவையான அதிகப்படி தண்ணீர் சுமந்து என பலவகைகளில் அதிகரிக்கும் வீட்டு வேலைகளை எந்த முணுமுணுப்புமில்லாமல்
செய்வதையும், இதனால் அதிகரிக்கும் கடன் சுமையையும் இணைத்தே சுமப்பதையும் அந்த நேரத்தில் தாங்கள் மாதவிடாய் சிரமத்தை சந்திக்க நேர்ந்தால் அது தீட்டு எனும் உணர்வுடன் சாமிகளின் கண்ணில் படாமல் ஒதுங்கி நிற்பதையும் காணாமல் கண் பொத்திக் கொள்ளும் கூட்டமாய் தீர்ப்பை எதிர்க்கும் சக்திகள் !

பெண்கள் தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளும் சூழல் நீடிக்க தேவையான கருத்தியல் ரீதியான செயல்களை செய்து கொண்டே  தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க அதையே காரணமாகவும் பயன்படுத்தும் சூழ்ச்சிக்காரர்களாய்
எதிர்ப்பாளர்கள்!

இந்த இடத்தில் தான் நம் வாழ்வியலுடன் கலந்திருக்க வேண்டிய அறிவியலுக்கு நாம் என்ன இடம் தந்திருக்கிறோம் என சிந்திக்க வேண்டியுள்ளது . ஆணின் விந்தணு வெளியேற்றம் அன்றாட நிகழ்வாகவும் அதன் வெளியேற்றத்தில் இரத்தம் கலக்காமலும் இருப்பதால் அது தனியாகத் தெரிவதில்லை. பெண் உடலில் உருவாகும் பயன்படாத கருமுட்டை மாதம் ஒரு முறை மட்டுமே வெளியேறுவதும் அதனுடன் கருப்பை சுவரின் திசுக்களும் இணைந்து வெளியேறுவதால் மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுகிறது. உயிர் உற்பத்திக்கு விந்தணு எந்த அளவு முக்கியமோ அதற்கு சற்றும் குறையாத அளவில் கருமுட்டையின் தேவை உள்ளது.

இந்த விசயங்கள் பாட புத்தகங்களில் இருந்த போதும் கற்றுத்தருவதில் உள்ள தயக்கம் காரணமாகவும், அதைப் படித்திருந்தாலும் கூட வாழ்வின் நம்பிக்கைகளை அறிவுபூர்வமாக ஆய்ந்து ஏற்க உதவி புரியும் கல்வியாக கல்விமுறை இல்லாததும் பெண்களிடையே தவறான நம்பிக்கைகளை நீடிக்க செய்கிறது. பெருமையாக எண்ணி பூரிக்க வேண்டிய விசயம் தீட்டென ஒதுங்கி நிற்க செய்கிறது !

பெண்கள் சபரிமலைக்கு செல்வதும் செல்லாததும் அவர்களின் சுயவிருப்பம் !  பெண்களின் உடலியல்பை  தீட்டு எனக்கூறி உரிமைகள் மறுக்கப்படுவதும், உடலியல் பலவீனங்களை ஈடு செய்யும் வகையில் உதவாமல் ஒதுக்குவதும் பெண்கள் மீதான உளவியல் ரீதியான தாக்குதலே ! வன்முறை என்பதில் உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்ல  கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதும் அடங்கும்.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் சகலருக்கும் உரியவர் ஐயப்பன் எனும் போது பெண்களை அனுமதிக்க மறுப்பது தீண்டாமை அதை அனுமதிக்க இயலாது எனவும் அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் பாலின சமத்துவம் மறுக்கப்படுவதை ஏற்க இயலாது என தெளிவாக கூறியிருப்பதை வரவேற்போம் !

மறுசீராய்வு மனு தேவை என எதிர்கட்சியான காங்கிரஸ் உட்பட வலியுறுத்தி வரும் நிலையிலும் அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று உறுதியாய் நின்று சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் கேரள இடதுமுன்னணி அரசை பாராட்டுவோம் ! பெண்ணுரிமை மனி உரிமையே ! எனும் உலக பெண்கள் மாநாட்டின் அறைகூவலை வலுவாய் முன்னெடுப்போம்!

  – ஆர்.செம்மலர்.

Related Posts