பிற

‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்?’

‘adultery’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்ததைப் போலக் ‘கலாசாரக் காவலர்கள்’, ‘குடும்ப அமைப்பு’ச் சிதையக்கூடாது என்று அஞ்சுபவர்கள், பெண்ணின் ‘கற்பை’ காக்க அயராது உழைப்பவர்கள் என்று பலரையும் சூடேற்றி இருக்கிறது. இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் தொடுக்கப்பட்ட வழக்கையும், அவர்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் என்பதையும் பொறுமையாகத் தெரிந்து கொண்டால் பாதிப் பேர் அமைதியாகி விடுவார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீக்கப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 என்ன தான் சொல்கிறது:

வேறொரு ஆணின் மனைவி என்று தெரிந்த அல்லது மனைவி எனத்தான் நம்புவதற்கு உரிய ஒரு நபரோடு, சம்பந்தப்பட்ட நபரின் கணவனின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல் உடலுறவு கொள்கிற ஆண் -(இந்த உடலுறவு பாலியல் வன்புணர்வு குற்றமாக இல்லாத பட்சத்தில்) adultery குற்றத்தை புரிந்தவர் ஆகிறார், இந்தக் குற்றத்தை புரிந்தவர் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளுக்கும் ஒருங்கே உரியவர் ஆகிறார். குற்றத்தை தூண்டியவர் என்று மனைவியைத் தண்டிக்கக் கூடாது.

குழப்புகிறதா? சுருக்கமாக இச்சட்டம் சொல்வது இதுதான்: வேறொரு ஆணோடு மணமான ஒரு பெண்ணோடு பாலியல் வன்புணர்வு அல்லாத உடலுறவில் (அதாவது பெண்ணின் விருப்பத்தோடு கொள்ளும் உடலுறவு என்று பொருள் கொள்ளலாம்) ஈடுபடும் ஆண் ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதத்துக்கு உரியவர். இதில் வருகிற முதல் வரி இன்னமும் கவனத்துக்கு உரியது – கணவனின் அனுமதி, விருப்பம் இன்றி உடலுறவு கொள்வது குற்றம். கணவனின் அனுமதியோ, விருப்பமோ பெற்று உடலுறவு கொண்டால் குற்றமில்லையா என்று ஐயம் ஏற்படலாம். அப்படிக் கணவனின் விருப்பமும், அனுமதியும் இருந்தால் அது adultery குற்றம் ஆகாது என்றே சட்டம் சொல்கிறது. இந்த வரிகள் தெரியாமலோ என்னவோ இந்தச் சட்டத்தைப் பெண்ணுக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்!

இன்னொரு சிக்கலும் இருக்கிறது. மேற்சொன்ன சட்டத்தின் படி யார் adultery குற்றத்திற்காக நீதிமன்றப் படி ஏற முடியும் என்று சட்டம் என்ன சொல்கிறது எனக்காண்போம். பெரும்பாலான கிரிமினல் குற்றங்களில் யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என்பதே பொது விதி. அதற்கு விதிவிலக்காக இருப்பவை குறித்து Cr.P.C 190-199 வரையறுக்கிறது. இதில் திருமணம் சார்ந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்குத் தொடரமுடியும் என்று 198(1) தெரிவிக்கிறது. யார் பாதிக்கப்பட்டவர் என்பதைப் பிரிவு 198(2) சொல்கிறது. அது என்ன சொல்கிறது என்றால், பிரிவு 497 அல்லது 498-ல் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது பெண்ணின் கணவரை மட்டுமே குறிக்கும். ஒருவேளை இந்தக் குற்றம் நடைபெறும் போது கணவர் அங்கே இல்லை என்றால், நீதிமன்றத்தின் அனுமதியோடு அப்பெண்ணைப் பார்த்துக்கொள்ளும் நபர் கணவனின் சார்பாக வழக்கு தொடர முடியும்.

அதாவது, Adultery சட்டத்தின் கீழ் திருமணமான ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆண் மீது பெண்ணின் கணவரோ, அல்லது அவரின் அனுமதியோடு அவரின் சார்பாக அனுமதிக்கப்பட்டவரோ தான் வழக்கு தொடர முடியும். கொஞ்சம் உற்றுக் கவனித்தால்,இதில் இருக்கும் விதிவிலக்குகள் அதிர்ச்சி தரும். மணமான பெண்ணோடு வேறொரு ஆண் மேற்கொள்ளும் உறவு தான் ‘adultery’ ஆகிறது. மணமான ஆண் மணமாகாத பெண்ணோடு கொள்ளும் உடலுறவு ‘adultery’ கீழ் வராது. மனைவி சம்பந்தப்பட்டிருக்கும் உடலுறவு முறையற்ற உறவாகிறது. ஆனால், மணமாகாத பெண்ணோடு கணவன் கொள்கிற உடலுறவு கிரிமினல் குற்றமில்லை. அதற்காக நீதிமன்ற படியேறி, ஐந்தாண்டு சிறைத்தண்டனையைக் கணவனுக்குப் பெற்றுத்தரும் உரிமையும் பெண்ணுக்குக் கிடையாது. அதேபோல, பெண்ணை ‘adultery’ குற்றத்தில் ஈடுபட்டார் என்று தண்டிக்க முடியாது. சட்டத்தின் பார்வையில் அவர் பாதிக்கப்பட்டவர். ஆண் தான் பாலியல் உறவை தீர்மானிப்பவன், பெண் என்பவள் அவன் சொல்வதைக் கேட்டு நடப்பவள் மட்டுமே என்கிற விக்டோரியா காலத்து ஆங்கிலேய பார்வையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் இது. பெண்ணுடன் கணவன் விரும்பிய போதெல்லாம் உடலுறவு கொள்ள முடியும், அதற்கு முழுக்கப் பெண் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று ‘conjugal rights’ ஐ முழுக்கக் கணவனுக்கு மட்டுமே வழங்கிய ஆங்கிலேயர் காலத்துச் சட்டத்தை எதிர்த்து ‘ருக்மாபாய்’ என்கிற மருத்துவப் பயின்ற பெண் தொடுத்த வழக்கை படித்துப்பாருங்கள். http://cscs.res.in/dataarchive/textfiles/textfile.2007-09-20.5610179936/file இதன் நீட்சியாகத் தானோ என்னவோ இன்றும் மணமான பெண்ணின் அனுமதியில்லாமல் கணவன் கொள்ளும் உடலுறவை வன்புணர்வு என்று கருத மறுக்கிறோம்.

ஆக, adultery சட்டத்தால் பெண் தண்டிக்கப்படவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை ஆண்கள் மணமாகாத பெண்ணோடு கொண்ட உறவையும் adultery சட்டம் தண்டிக்கவில்லை என்பதும். அதே போல, மணமான பெண்ணோடு தன்னுடைய கணவன் உறவு வைத்துக்கொண்டாலும் அதற்காக அவருடைய மனைவி நீதிமன்ற படியேற முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணுடைய கணவன் மட்டும்தான் நீதிமன்ற படியேற முடியும். இதனால் தான் இந்தச் சட்டம் ‘பெண்ணைக் கணவனின் அடிமையாகப் பார்க்கிறது’ என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கக் காரணம்.

இதற்கு முன்பு இந்த ‘adultery’ சட்டத்தை ஒட்டி மூன்று முறை உச்சநீதிமன்ற படிகள் தட்டப்பட்டிருக்கின்றன. முதல் வழக்கு யூசப் அஜீஸ் எதிர் பம்பாய் மாநிலம். இந்த வழக்கில் பெண் ‘adultery’ புரிய உரிமம் தருகிற சட்டமாக இது இருக்கிறது என வாதிடப்பட்டது. பெண்ணைத் தண்டிக்காமல் இருப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 15(3) பெண்கள், குழந்தைகளுக்குச் சிறப்புச் சட்டங்களை மத்திய அரசு இயற்றலாம் என்பதன் படி செல்லும் எனத்தீர்ப்புத் தரப்பட்டது. அதே வழக்கில், ‘ஆண் தான் பெண்ணை வசியம் புரிபவன், பெண்ணல்ல என்பது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று’ என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

அடுத்த வழக்கு சௌமித்ரி எதிர் இந்திய ஒன்றியம். இந்த முறை எப்படிக் கணவன் மீது மனைவி adultery சட்டத்தின்படி நீதிமன்ற படியேற முடியாதோ, அதே போலக் கணவனும் adultery சட்டத்தின் படி நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது! அதாவது adultery என்பது ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எதிராகப் புரியும் குற்றம் மட்டுமே.

இறுதியாக, 1988-ல் நடந்த ரேவதி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், adultery வழக்குகளில் பெண்கள் மீது வழக்கு தொடர் அனுமதி மறுக்கப்படுவது ‘சமூக நலனை’ வளர்த்தெடுக்கிறது. திருமணம் என்கிற உறவின் புனிதத்தை மீட்டெடுக்கவும், காக்கவும் அது உதவுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது. முத்தாய்ப்பாக, adultery சட்டம் கேடயம் மட்டுமே, அது வாள் அல்ல என்றது. அதாவது மனைவியின் ‘கற்பை’ காக்க உதவும் கேடயமே இந்தச் சட்டம்.

இப்போது தற்போதைய தீர்ப்புக்கு வருவோம். adultery எனப்படும் திருமணத்திற்கு வெளியே கொள்ளும் உறவை விரும்பியபடி வைத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதைக் கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டியதில்லை, சிவில் பிரச்சினையாகக் கருதி விவாகரத்து முதலிய தீர்வுகளை நாடலாம் என்றே தலைமை நீதிபதி தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிமன்றம் இரு நபர்கள் கொள்ளும் உடலுறவு தனிப்பட்ட் அக உரிமையாகும், அதனைச் சமூகப் பிரச்சினையாகக் கருதி கிரிமினல் தண்டனை விதிப்பது தவறு என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. அதாவது மற்றவர்களின் படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பது உங்களின் வேலையில்லை என்றிருக்கிறது.

நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் ‘திருமண அமைப்பில் அடக்குமுறை குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்படுகிறது. கட்டிக்காக்கப்படும் ஆணாதிக்க அமைப்புகளும், பெண்களை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்புத் தங்களுக்கு உரியது என்கிற ஆண்களின் கனவுவாதமும் பெண்கள் சமமான வாழ்க்கை வாழவிடாமல் தடுக்கின்றன… அரசியலமைப்பு உரிமைகளை அமல்படுத்துவதைப் பொறுத்தவரை அக,பொது வெளிகள் என்கிற வேறுபாடுகள் கிடையாது. திருமண உறவு என்கிற நெருக்கமான தனிப்பட்ட வெளியும் அரசியலமைப்பின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது இல்லை. பெண்கள் பாலியல் சுயாட்சியை, பெண்கள் கணவனுக்குக் கட்டாயமாக நேர்மையாக இருக்க வேண்டும் என்பதன் மூலம் கட்டுப்படுத்துகிறோம். இது அடிப்படை உரிமைகளான கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது’ என்றிருக்கிறார்.

நீதிபதி இந்து மல்கோத்ரா, ‘எதோ adultery என்பது கணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல மட்டும் அணுகப்படுகிறது. அவனின் சொத்து திருடு போனதற்காகத் திருடியவனைத் தண்டிக்க ஒரு செயல்பாடாகத் திகழ்கிறது’ என்று எழுதியதன் மூலம் மனைவி எதோ சொத்து போல நடத்தப்படும் இந்தச் சட்டத்தைக் குப்பைக்கூடைக்கு அனுப்ப வேண்டிய அவசியத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். தலைமை நீதிபதி, ‘adultery தான் மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்குக் காரணம் என்பதைவிட, மகிழ்ச்சியற்ற திருமணத்தினால் விளைவதே adultery எனக்கருதலாம். மகிழ்ச்சியற்ற திருமணத்தில் வாழும் ஒருவரை தண்டிப்பதற்கு ஒப்பாகும் இச்சட்டத்தின் படி தண்டிப்பது’ என்று கூறியிருக்கிறார்.

திருமண உறவை நாம் எப்படிக் கட்டிக்காக்க விரும்புகிறோம்? அடக்குமுறை, கற்பு என்கிற கத்தியை கொண்டு மிரட்டுவது, ஐந்தாண்டு தண்டனை இப்படியா? அன்பும், மகிழ்ச்சியும், ஊடலும், கூடலும் நிறைந்து பயணிப்பது தானே சமத்துவமான இல்லறம்? அதனை ஒரு ஆங்கிலேயர் காலத்து அரதப்பழசான சட்டத்தின் மூலம் கட்டிக்காப்பாற்றி விட முடியும் என்று எண்ணுவது எத்தனை பிற்போக்குத்தனமானது. ஆணும், பெண்ணும் இணைந்து இயங்கும் சமமான உறவாகத் திருமணங்கள் மாற உரையாடலும், இருதரப்பு நம்பிக்கையும் அவசியம்.

மனைவியைச் சொத்தாக, ஏன் பெண்ணையே சுய பாலியல் தேர்வும், விருப்பங்களும் இல்லாத ஒரு உயிரற்ற பொருள் போலக் கருதும் சட்டம் ஏன்  ஆண்களாகிய நம்மைக் கோபப்படுத்தவில்லை என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும். படுக்கைக்கு மட்டுமே பெண் என்கிற எண்ணம் எங்கேயோ ஒளிந்து கொண்டிருப்பதால் தான், பெண்ணின் படுக்கையறை தேர்வில் தான் திருமண உறவே ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று அதனைக் கட்டுப்படுத்த இத்தனை எத்தனிப்புகள். இது செல்லாது! விடுதலை வெளிகள் பாய்ந்து எழும் கணங்களில் இன்னமும் முதிர்ந்த உறவுகள் நாடி இரு தரப்பும் இணைந்து முயற்சிக்கக் குரல் கொடுப்போம். குழந்தை வளர்ப்பு, மனமொத்த பிரிவுக்கான வெளிகள் வரை பேசவும், பயணிக்கவும் எவ்வளவோ உண்டு.

– பூ.கொ.சரவணன்

Related Posts