சினிமா தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி: இரண்டு கோணங்கள் …

இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனையான வேலையின்மையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. தான் படித்த துறையில், தனக்கான வேலையைத் தேடி அலையும் இளைஞனின் கதையாக முதல் பாதியும், கிடைத்த வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் போராட்டமாக பிற்பாதியும் கதை நகர்கிறது. உண்மைப் பிரச்சனைகளை தொட்டுக் காட்டினாலே போதும், படத்துக்கு எத்தனை வரவேற்பிருக்கும் என்பதை அரங்கம் நிரூபித்தது. படித்து, வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கூட்டம் – ஆர்ப்பரித்தபடியேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இந்த படம் ஹிட் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

(இரண்டு பட்டதாரி இளைஞர்களின் வெவ்வேறு கோணங்களை, மாற்று வாசகர்களுக்கு விமர்சனமாகத் தருகிறோம்.)

முதல் கோணம்: (ப்ரவின் குமார், ஆடை வடிவமைப்பு கலைஞர், சினிமா ரசிகர்)

படத்தில் கண்ட சில லாஜிக் பிழைகள்:

முதல் காட்சியில் தனுஷ் தன் நண்பர்களுடன் சரக்கடித்து விட்டு போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். நியூசன்ஸ் கேஸ் என மிரட்டி பணம் பிடுங்கிக் கொள்கிறார் காவலர். பணத்தை கொடுத்து விட்டு பாட்டு பாடி நியூசன்ஸ் செய்கின்றனர் ரகுவரனும் நண்பர்களும்.

நம்ம ஊர் தேவதைகள் எண்ணெய் வழியற மாதிரி தெரியக்கூடாது என்று தானே மேக்கப் போடுகிறார்கள்? அமலா பாலுக்கு மேக்கப் போட்டு அந்த எஃபக்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கண்களிலேயே வசனங்கள் பேசிவிடும் சுரபி, அமலாபால் இருவருக்கும் வசனம் வைத்தது தான் அபத்ததிலும் அபத்தம்.

தனுஷ் – அம்மா அப்பாவால் திட்டி அடித்து மொட்டை மாடிக்கு விரட்டப்படுகிறார். அங்கே மாடியில் அமர்ந்து சரக்கடிக்கிறார். அடித்து முடித்து விட்டு பக்கத்து மாடியில் சரக்கடித்து கொண்டிருக்கும் நண்பர்களை கம்பனிக்கு அழைக்கிறார். நாம் எல்லோரும் அவர்கள் சரக்கடிப்பார்கள் என்று எதிர்பார்த்த போது அவர்கள் பாட்டு பாடுகிறார்கள். பாட்டு பாட தான் கம்பனி கேட்டிருக்கிறார்.

படத்தின் இசை முழுக்க முழுக்க இரண்டாம் உலகத்தை நினைவுட்டுகிறார் அனிருத். ‘Rock Star திரைப்படத்தின் சட்டா ஹக் பாடலை லைட்டா ஊறுகாயளவுக்கு தொட்டு நக்கிய மாதிரி இருந்தது வேலையில்லா பட்டதாரி பாடல் அதுக்கு இருக்கியணச்சு உம்ம தரலாம் அனிருத்துக்கு. ‘பொயட்டு’ தனுஷின் வரிகள் பாடல்களில் அட்டகாசம் என்று சொல்லலாம் ப்ளாஸ்டிக் பூ கூட வாடி போச்சே…வரி. செம்மய்யா!!!!

இதுக்கு மேல எவ்ளோ சீரியஸா யோசிச்சாலும் என்னால சீரியஸ் விமர்சனம் எழுதவே முடியாதுங்க.. டெரண்டினோ ஸ்கார்கவஸ்கி நொலன் போன்ற உலக படங்களை வெறித்தனமா பார்க்கும் ரசிகர்ளே!.. படத்துக்கு போய்ட்டு மூணு மணி நேரம் திட்டுங்க அப்பறம் மறந்துடுங்க.. விமர்சனம் எழுதி வெறுப்பேத்தாதிங்க. சாமி படம் அவ்ளோ வொர்த் இல்ல.

பொயட்டு. தனுஷ் அவர்களே மரியான், நய்யாண்டி, மயக்கம் என்ன என தொடர்ந்து ‘ஃப்ளாப்’ கொடுத்த தனுஷ் அவர்களே உங்களுக்கு இப்படியொரு படம் தேவை தான். ப்ரியா இருக்கோம் டிக்கெட் கெடச்சிடுச்சுனு ப்ரண்ட்ஸ் கூட போலாம் போனோமே – எங்களுக்கும் அது தேவை தான். இது ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமைந்தால். இனி வரும் நாட்களில் B.Tech IT, B.E EEE, ECE, B.Sc Fashion Tech என ஒவ்வொரு துறை பட்டதாரிகளையும் நாயகனாகக் கொண்டு, ஒரு படம் வந்து வெறுப்பேற்றும் என எதிர்பார்க்கலாம்.

லாஜிக் பிழை என தொடங்கிவிட்டு சில்லுண்டி தனமான குறையெல்லாம் கண்டுபிடிக்குறியே ன்னு கேக்குறிங்களா ?? படம் மட்டும். பெரிய புள்ளதனமாவா எடுத்துருக்காங்க.


இரண்டாம் கோணம்: (உமா சங்கர், பொறியியல் பட்டதாரி, சினிமா ரசிகர்)

“ரெண்டுவார்த்த சேர்ந்தாப்புல இங்கிலீஸ்ல பேச முடியாம” என ரகுவரன் (தனுஷ்) பேசும்போதே தியேட்டரில் விசில் பறக்கிறது. தமிழ் வழியில் … ஏன் ஆங்கில வழியிலும் கூட சாதாரண கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்களின் உண்மை நிலை இதுதானே. ஒரு பொறியியல் பட்டதாரியாக வேலையற்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, படத்தின் முதல் பகுதி நெகிழச் செய்கிறது. “ரகுவரனை எனக்கும் பிடிக்கும்” 😉 என்று சொல்லச் செய்கிறது.

இந்தப் படத்தில் தனியார் முதலாளிகள் அதிக லாபத்துக்காக தரமில்லாத கட்டடங்களைக் கட்டுவது காட்டப்படுகிறது. அதே தனியார் முதலாளிகள்தான் பொறியியல் உள்ளிட்டு கல்வியில் கல்வியின் தரத்தை குறைத்தார்கள் என்ற உண்மையை இந்தப் படம் சொல்வதில்லை. தமிழகத்தில் சமூகப் பிரச்சனைகள் எத்தனையோ தொடர்கின்றபோதும், தீர்வு கிடைக்காததற்கு நமது மாணவர்கள் அதற்கேற்ற தரத்தில் வெளிவராதது ஒரு காரணம்.

வேலையில்லாத நிலையை மட்டும்தான் இந்தப் படம் காட்டுகிறது. உண்மையில், பல தனியார் கட்டுமான நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் பொறியாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனை. அதுவும் ஒப்பந்த அடிப்படையில், எப்போதுவேண்டுமானாலும் நாம் நீக்கப்படுவோம் என்ற நிலையில், நிரந்தரமில்லாத வேலையே பொறியாளர்களுக்கு கிடைக்கிறது. அப்படிப்பட்ட பணியாளர்கள் அதிகரிப்பதும், வேலையின்மையின் மற்றொரு கொடுமையான வடிவமாகும். கல்விக்கடன் வாங்கிப் படித்து, வேலையில்லாமல் திருப்பி செலுத்த முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களின் பெரும் பகுதியை இந்தப் படம் காட்டவே இல்லை.

அரசு, தனியார் கட்டுமானப் பணிகளில் மலிந்திருக்கும் ஊழலுக்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணம் காட்ட முடியும். சமீபத்திய மடிப்பாக்கம் விபத்து ஒரு உதாரணம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் பொறியாளர்கள் படித்து வெளிவருகிறார்கள். அவர்களை, அரசு திட்டமிட்டு பயன்படுத்தினால் – தரமான வேலைகளும் நடக்கும். பட்டதாரிகளின் திறமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் புதுமை படைக்க வாய்ப்பாகும் என்பதை இந்தப் படத்தின் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.


மொத்தத்தில் …

வேலையற்ற இளைஞர்கள் தங்கள் கதையையே திரையில் பார்த்து, கண்ணீரை விசில் சத்தத்தில் மறைத்தபடி குவிந்திருந்தனர். அவர்களுக்கு திரைப்படம் கொடுத்த தீர்வு என்ன என்பதைப் பார்த்தால்… ரகுவரன் என்ற கதாப்பாத்திரத்துக்கு கிடைத்ததுபோல ‘நல்ல முதலாளி’, ‘லாபம் எதிர்பார்க்காத திட்டம்’ போன்றைவை எல்லோருக்கும் அமைந்துவிடுமா?, அரசியல், பெரும் தொழில் நிறுவனங்கள், அதிகாரிகள் என வலுவான கூட்டணி அமைத்திருக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்க்க இந்த முயற்சி போதுமானதா? என்பவை முதலில் எழும் இரண்டு கேள்விகள்.

ரகுவரன் ஒரு கட்டத்தில் எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்பட்டு சிக்கிவிடுகிறான். அப்போது, குப்பத்தில் வாழும் சாமானிய தொழிலாளர்களும், பொறியியல் படித்த முகம் தெரியாத நண்பர்களும் திரண்டு வந்து உதவுகிறார்கள். உண்மைதான், உழைப்பதும் உருவாக்குவதும் நாமாக இருக்கும்போது, எல்லா வழிகளும் அடைக்கப்பட்டால் என்ன?. முற்களை உடைத்து சாலை அமைத்தவை இந்தக் கைகள்தானே? … என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இந்த ஒற்றுமையைக் கண்டு அச்சமடையும் – கட்டுமான முதலாளி, அரசியல்வாதிகள் கூட்டம் வன்முறையை ஆயுதமாக்கி அடிக்கவும் தொடங்குகிறது. ஆனால், இந்த இடத்தில் தமிழ் சினிமா எப்போதும் போல நாயகனை நோக்கி திரும்பிவிடுகிறது. தனுஷ், தனுஷ், தனுஷ் … தீர்வு அவ்வளவுதான். சட்டையை அவிழ்த்தபடி எல்லோரையும் துவம்சம் செய்யும் நாயகனுக்கு இன்னுமா தேவை இருக்கிறது தமிழகத்தில்?… ‘Second half’ சரியில்லை என்ற ஒரு வரிக்குள், இந்தப் படத்தின் முடிவில் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்திவிடுகிறான் சாமானிய பார்வையாளன்.

Related Posts