அரசியல்

சாமியே சரணம் ஐயப்பா….! வனிதா மதிலில் நீயும் நில்லப்பா …. !

ஆதியிலிருந்தே  சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற போலிவாதங்களைத் தள்ளுபடி செய்து வழிபாட்டில் பாலினப் பாகுபாட்டைத் தகர்த்திடும் தீர்ப்பை  உச்சநீதிமன்றம் அளித்தது.  தீர்ப்பைச் செயல்படுத்த கேரள மாநில இடதுசாரி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.  அதை ஏற்க மறுத்துக் கிளப்பிவிடப்படும் எதிர்ப்புகளுக்கு கேரள பெண்கள் தங்களுக்கே உரிய போராட்ட மரபோடு எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த எதிர்வினையைப் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவு.

சபரிமலை கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாமல் ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்கள் தொடர்ந்து கலவரம் செய்து வருகின்றனர்.  இதனால் ஐயப்பன் மீது பக்தி உள்ள பெண்கள் நேரில் சென்று வழிபடக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். வழிபடப் புறப்படும் பெண்களை தடுப்பதும், மிரட்டுவதும், விரட்டுவதுமாக ஆணாதிக்க பக்தர் கும்பல்கள் இறங்குகின்றனர். அதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக  கும்பல்கள் துணை செய்கின்றன. பணியாக இருக்கிறது. பெண்ணாகப்பட்டவள் ஆணின் அடிமை என்ற மனுதர்மப் பாதுகாவலர்களாகச் சுற்றிவருகிறார்கள்.

“பெண் ஏன் சபரிமலை கோவிலுக்குள் செல்லக்கூடாது? எந்த அடிப்படையில் அவளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? சபரி மலைக்குப் போகலாம்; போகாமல் இருக்கலாம்; அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம்.  வயது, பாலினம், ஜாதி போன்ற வேற்றுமைகள் பார்க்கப்படுவதை அரசமைப்பு சாஸனம் எதிர்க்கிறது. ஆகவே, சபரி மலை வழிபாட்டிற்குக் குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இதனைச் செயல்படுத்துவதே அரசமைப்பு சாசனப்பூர்வமான அமைப்புகளின் கடமை. கேரள அரசாங்கம் செய்வது அதைத்தான்.

இந்தப் பின்னணியில்தான் தனது கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் வருவதைத் தடுப்பது ஐயப்பனா, இல்லை மதவாத ஆணாதிக்கக் கும்பலா  என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த டிசம்பர் 1ம் தேதி 50க்கும் மேற்பட்ட சமூக கலாச்சார அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து ஆதரவு கோரினார். இந்நிலையில் கேரளத்தின் பெருமைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையிலான பெண்கள் அமைப்புகள்  புத்தாண்டு தினத்தில் வனிதா மதில் (பெண்களின் சுவர்) என்ற இயக்கத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன. இது கேரளத்தின் 2வது சமூக சீர்திருத்த இயக்கம் என கூறப்படுகிறது. கேரளத்தின் வடக்கு எல்லையான காசர்கோடு முதல் தெற்கு எல்லையான திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெண்கள் கரம் மனிதச் சுவராய் நிற்கப்போவதாக  அறிவித்துள்ளனர்.

“மதச்சார்பற்ற முறையில்  முற்போக்குக் கருத்துகளை மக்களிடையே பிரச்சாரம் செய்துவருகிறோம். இப்போது இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டுள்ளோம். இந்த மகளிர் மதில் இயக்கத்தில் சுமார் 30 லட்சம் பெண்கள் பங்குபெறவுள்ளனர் என்று அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.  இந்த நிகழ்வில் அரசு ஊழியர்களோ அதிகாரிகளோ கலந்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட மாட்டாது. அதேபோல இந்த அரசு பொது நிதியிலிருந்து பணம் எடுக்கப்பட மாட்டாது. இந்த இயக்கத்திற்கு ஆகும் மொத்தச் செலவையும்   மாதர் சங்கமே பார்த்துக்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கப் பணத்திலிருந்தே சுயவிளம்பரம் செய்து அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ஆட்களைத் திரட்டும் சேர்க்கும் மோடி கூட்டத்திற்கு இந்த ஏற்பாடு கசப்பாகத்தான் இருக்கும்.

பெண்களை சந்தித்து ஆதரவு கோரும் வகையில் சுமார் 15,000 மையங்களில் பொதுக் கூட்டம் நடத்திப் பேசியுள்ளனர். 30 லட்சம் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். புத்தாண்டு பிறக்கிறபோது  40 லட்சம் வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துவிடுவார்கள். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொள்ளும் இந்த வனிதா மதில்   கின்னஸ் சாதனையை நிகழ்த்தும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இதைப் பழமைவாதக் கூட்டம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? கேரள பாஜக நிர்வாகியான சோபா சுரேந்திரன் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்து கடந்த ஒரு வாரமாத்துக்கு மேலாக தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். ஐயப்ப  ஜோதி என்ற பெயரில் பாஜக கடந்த டிசம்பர் 26ம் தேதி சாலையில் விளக்கு ஏற்றி நிற்கும் போராட்டத்தை நடத்தியது. இதில் பல லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என்று அறிவித்தது. ஆனால் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரே கலந்து கொண்டனர். அதிலும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இதற்கிடையில் அந்த மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் நாங்கள் ஐயப்ப ஜோதி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டோம், வனிதா மதில் இயக்கத்திலும் கலந்துகொள்ளமாட்டோம் என்று வழக்கம்போல என்று அறிவித்துத்  தனது இரட்டை முகத்தைக் காட்டியுள்ளது.

எதற்காகப் பெண்களின் இந்த பிரம்மாண்டமான மனிதச் சுவர்? ஏன் இத்தனை லட்சம் பேர் திரள்கிறார்கள்? இதற்கான பதில் கேரளத்தின் சமூக பொருளாதார அரசியல் வரலாற்றில் இருக்கிறது.  வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் கடந்து வந்த பாதை தெரியாமலே போய்விடும்.

கேரள வரலாற்றில் நடந்த சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன.  பல  கொடுரமான வரிகள் மூலம் மக்கள் சுரண்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

விவசாயப் பயிருக்கு வரி, நிலத்துக்கு வரி, நகைகள் வாங்கினால் வரி… இதோடு நிற்கவில்லை. வாங்கிய நகைகளை  அணிந்துகொண்டால் வரி! மீசை வைத்தால் வரி, ஆண்களுக்கு ‘தலக்காரம்’ என்னும் வரி, பெண்களுக்கு ‘முலக்காரம்’ என்னும் வரி! அதிலும் மார்பக அளவிற்கு ஏற்ப வரி!

1803ம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஆலப்பூலா மாவட்டம், சேர்த்தலையில் முலச்சிப்பரம்பு என்ற இடத்தில் நாங்கேலி என்ற ஈழவ சமூகப் பெண் முலை வரியை எதிர்த்தும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பெண்கள் மேலாடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையைக் கண்டித்தும் போராடினார். முலை வரியைச் செலுத்த மறுத்தார்.  அரசாங்க அதிகாரிகள் அந்த வரியைச் செலுத்தும்படி தினமும் வந்து கெடுபிடி செய்துகொண்டிருந்தனர். ஒருநாள்  நாங்கேலி, வரி கேட்டு வந்தவர்கள் நீட்டிய கைகளில், தனது இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்துக் கொடுத்தாள். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே இறந்தாள். அந்த போராளி செத்து விழுந்த இடத்திற்கு முலச்சிப்பரம்பு என்ற பெயரே வந்தது.

நங்கேலி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த, அவள் மீது பெருங்காதல் கொண்ட  கணவன் உடன்கட்டை ஏறினான்!  அவர்கள் எரிந்த நெருப்பு பல பகுதிகளில் போராட்ட தீயாக மூண்டெழுந்தது. அதன் விளைவாக திருவிதாங்கூர் ராஜா உடனடியாக முலக்காரம் வரியை விலக்கி ஆணையிட்டார்.

இதனைத் தொடர்ந்து 1813 முதல் 1859 வரை சாணார் சமூகத்தினர் நடத்திய எழுச்சிகரமான இடைவிடாத போராட்டத்தின் விளைவாக ஆங்கில அரசாங்கம் வேறு வழியின்றி 1859ல், அந்தச் சமூகப் பெண்கள் மேலாடை அணிய அனுமதித்து ஆணை பிறப்பித்தது.

மேலும் ஆடையணியும் நடை முறைகளிலும் நிறையக் கட்டுப்பாடும் இருந்தன. பெண்களின் இடுப்பாடை தொப்புளுக்குக் கீழ் இறங்கியும் கால் முட்டிக்கு மேலே ஏறியும்தான்  இருக்க வேண்டும். மேலாடை அணியக் கூடாது.    நாயர் சமூகத்தவர்கள் கோயில்களுக்கு வரும்போதும், ராஜாவைக் காண வரும்போதும் மேலாடை  அணிந்திருக்கக்கூடாது.  18ம் நூற்றாண்டில் ஐரோப்பா சென்று படித்துவிட்டுத் திரும்பி வந்த நாயர் சமூகத்தை சேர்ந்த பெண் மேலாடை அணிந்து மார்பை மறைத்து ஆட்டிங்கால் ராணியை பார்க்க சென்றால் ராணியின் முன் வைத்து அவள் மார்பு அறுக்கப்பட்டது என்ற கதையும் உண்டு.

1818 திருவிதாங்கூர் சமஸ்தானம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்களும்  நகை  அணியலாம் என்று உத்தரவு போட்டது. இருப்பினும் அது 1859 வரை நடைமுறைக்கு வரவில்லை. பந்தலம் என்னும் இடத்தில் ஈழவப் பெண்ணொருத்தி மூக்குத்தி அணிந்ததைக் கண்டித்து மேல் சாதிப் பெண்கள் அவளின் மூக்கிலிருந்து முக்குத்தியைப் பிடுங்கி எரிந்தனர்.  இந்தக் கொடுமையைக் கண்டித்து ஆராட்டு புழ என்ற இடத்தில் வேலாயுதன் பணிக்கர் என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு தங்க மூக்குத்திகள் வாங்கிக் கொடுத்து அணிய வைத்துப் போராட்டம் நடத்தினார்.

மேல்சாதியினர் மட்டுமே கடவுள் வழிபாடு செய்துவந்த நிலையில் தீண்டதகாத மக்களும் கடவுளை வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1888ம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு  நெய்யாறு என்ற இடத்தில் சங்காரன் குழியிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவன் சிலையை உருவாக்கினார். பல மேல்சாதிக்காரர்கள் எங்கள் கடவுள்தான் சிவன் என்று கூறி எதிர்த்தனர். அவரோ இந்த சிவன் தீண்டதகாதவரின் சிவன் என்று கூறினார்.  மேலும் தொடர்ந்து பல போராட்டத்திற்கு மத்தியில் சிவன், முருகன் மற்றும் பெண்தெய்வங்களின் சிலைகளைப் பல இடங்களில் நிறுவி தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்களும்  வழிபடும் உரிமையை உறுதிப்படுத்தினார்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த  மக்கள் கல்லிலும் உடைந்ந கண்ணாடி துண்டுகளிலும் கோர்க்கப்பட்ட மாலை அணிந்து தங்களது சாதியை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அக்காலத்தில் கேரளத்தில் கட்டாயமாக இருந்தது. இதனை எதிர்த்து 1915ல் தலைச்சேரியில் பீரங்கி மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி தங்கள் கழுத்திலிருத்த கல், கண்ணாடி மாலைகளை அறுத்தெறிந்து போராட்டம் நடத்தினர்.  சமூக சீர்திருத்தப் போராளி ஐயாங்காளி அந்தப் போராட்டத்திற்குத்  தலைமை தாங்கினார்.

1915ல் திருவனந்தபுரத்தில் ஊரோட்டம்பளம் கிராமத்தில் புலையர் இனத்தை சேர்ந்த  பஞ்சமி என்ற பெண் குழந்தை அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினாள். அதற்கும் ஐயங்காளி தலைமை தாங்கினார்.  போராட்டம் வெற்றி பெற்றது. அவள் அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். பஞ்சமி பள்ளிக்கு சென்றாள். இதனை பொறுத்துக்கொள்ள  முடியாத சாதி ஆதிக்கவாதிகள் அவள் வகுப்பறையை எரித்தனர். அன்றிருந்த சாதிக் கொடுமையின் அடையாளமாக  இன்றும் அந்தப் பள்ளியில் எரிக்கப்பட்ட நிலையில் உள்ள  பஞ்சமி நாற்காலி பராமரிக்கப்பட்டு வருகிறது.

1931ல் திருசூர் குருவாயூர் கோவிலுக்கும் சாதி, பேதம் இல்லாமல் அனைவரும் போக வேண்டும் என்று கம்யூ கட்சியின் மகத்தான மக்கள் தலைவர்கள் ஏ.கே கோபாலன் மற்றும் மாஸ்டர். பி. கிருஷ்ணபிள்ளை தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தினர். இந்த ஈடற்ற போராட்டத்தின் விளைவாக 1936ல் நவம்பர் 12ம்தேதி திருவதாங்கூர் மகாராஜா அனைத்து சாதியினரும் கோவிலுக்குச்  செல்ல அனுமதி அளித்தார். இதன் எதிரொலி நாடெங்கும் பரவியது. குறிப்பாக 1947 ஜூன் 12ம் தேதி மெட்ராஸ் மாகாண அரசும், 1948ல் கொச்சி அரண்மனையும் அனைத்துச்சாதியினரும் கோவிலுக்கு செல்லலாம் என்று ஆணையிட்டன.

இப்படி வீரம் நிறைந்த எழுச்சி மிக்க பல போராட்டத்தின் விளைவாகத்தான் அனைத்து சாதியினரும் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. குறிப்பாக கேரள சமுகத்தில் பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

ஆக ஐயங்காளி, நாராயண குரு, சட்டம்பி சாமிகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமைதாங்கி பல போராட்டங்களை நடத்தி முன்னேறிய கேரளம், முன்பு தன்னைப் பற்றி விவேகானந்தர் சொன்ன நிலைக்குத் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று உறுதியாக நிற்கிறது. “பைத்தியக்கார சமூகம்” என்றார் விவேகானந்தன். இனி கேரளம் மீண்டும் பின்னோக்கி போகாது, பின்னோக்கிப்போக விட மாட்டோம் என்று முழங்கிய இந்த பிரச்சார இயக்கம் நடக்கிறது.   ஜனவரி 1ல் நடைபெறவுள்ள வனிதா மதில் இயக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் ச.ங்க தலைவர்கள் பிருந்தாகாரத், சுபாஷினி அலி, மரியம் தவ்லே தலைமையில் லட்சக்கணக்கான பெண்கள் கைகோர்க்கின்றனர்.  பெண் உரிமை மற்றும் பெண் சமத்துவத்துவத்தை பாதுகாக்கும் வனிதா மதில் இயக்கத்தில் நாமும் பங்கேற்போம். நமது கைகளையும் கோர்ப்போம். முடிந்தால் நம் ஊரிலேயேயும் உரிமைச் சுவர் எழுப்புவோம்.

பின்குறிப்பு: சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப்  பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் ஆர்எஸ்எஸ்-பாஜகவினர்தான். அதை மறைத்து, வழக்கில் கிடைத்த உத்தரவை அமல்படுத்தக் கூடாதென்று கேரள அரசுக்கு எதிராகக் கலவரம் நடத்துகிறவர்களும் அவர்கள்தான். காரணம் வெளிப்படையானது. இழிவான முறையில் மத உணர்வுகளைக் கிளறிவிட்டு வாக்குவங்கியை ஏற்படுத்தும் அரசியல்தான்.  அவர்களது இந்த வியூகம் என்ன ஆகும் என்பதற்கு பந்தலம் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் பெற்ற 12 வாக்குகள் சாட்சியாக இருக்கின்றன. அதனாலெல்லாம் திருந்திவிடவில்லை.  இப்போதும் அவர்கள் அச்சன் கோவில்  அரசனைப்  பெண்கள் சந்திக்கவிடாமல் தடுப்பதில் மூர்க்கமாகத் தொடர்கின்றனர்.  பந்தலத்தின் படிப்பினையை நாடே தருவதற்குக் காத்திருக்கிறது.

நான் அன்று வனிதா மதிலோடு நிற்கிறேன்…

நீங்கள்?

– ஹேமாவதி.

Related Posts