கலாச்சாரம் காதல்

காதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாடும்!

(காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான நிகழ்வல்ல.

ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் – சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. இன்றைய நிலையில் காதலர்கள் பிரியவும், புரிதலற்று வாடவும் காரணிகள் என்ன? அவற்றிலிருந்து தங்கள் காதலை பாதுகாத்துக் கொள்ள – காதலர்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற வெளிச்சத்தை பாய்ச்ச முயற்சிக்கிறது இந்தக் கட்டுரை)

– அருண் பகத்

“மாப்ள உன் லவ்வு என்னடா அச்சு ?
அது முடிஞ்சு போச்சுடா மச்சி.. வேற பாப்போம்..
ஏய் என்னடி உன் ஆளு ராஜ் எப்படி இருக்கான் ?
ஏய் அவன் பேச்ச எடுக்காத we broke up..

ப்ரியா கடைசியா என்னதாம்மா சொல்ற ?
இல்ல மகேஷ் இது நடக்காது..
எங்க வீட்ல நம்ம விஷயத்த சொல்றத பத்தி என்னால நினைச்சுக் கூட பாக்க முடியல.. என்ன வெட்டி போட்ருவாங்க…

இன்று காதல் முறிவு என்பதும் திருமண முறிவு என்பதும் வெகு சாதாரண புழங்குச் சொல் ஆகி விட்டது. காதல் அதிகரித்திருக்கும் அதே வேளையில் இந்த முறிவும் பிரிவும் அதிகரித்தே இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் அந்த காலக்கட்டத்திய சமூக நிலை உறவுகளை தீர்மானிக்கிறது , இன்றைய சூழலில் உலகமயமாக்கலும் நுகர்வு கலாச்சாரமும் இன்றைய உறவுகளை வெகுவாக தீர்மானிக்கிறது.

அதென்ன நுகர்வுக் கலாச்சாரம்?

நுகர்வு கலாச்சாரத்தை சுருங்கக் கூறுவதானால் ‘பண்டங்களுக்காக மனிதர்கள்’ என்பதே ஆகும். இப்படி கலாச்சார களத்தில் பண்டமாக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வு ‘கேளிக்கை சர்ந்த ஒன்றாகவும் பணம் சார்ந்த ஒன்றாகவும் மாறி இருக்கிறது’. செல்பேசிகள், மால்கள், கேஎஃப்சிகள், வாராந்திர மாதாந்திர கொண்டாட்டங்கள் என கேளிக்கைகளின் மடியில் ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே பக்கா கடைச்சரக்காகி விட்ட கல்வியும் ஊடகங்களும் கிஞ்சித்தும் சமூக அறிவும் அக்கரையும் இல்லாத மகிழ்வுக் ‘குஷால் பேபிகளை’ உருவாக்குகிறது. வாழ்வையே எதிர் கொள்ளத் தெரியாத, உறவுகளை மதிப்பிடத் தெரியாத இந்தத் தலைமுறையிடம் – ஒன்று கூடுதலின் அர்த்தம் நேசங்களின் பகிர்வு என்பதனை தாண்டி கேளிக்கைகளின் பகிர்வாக மாற்றமடைகிறது.

சுய உணர்வற்று, சமூகத்தால் வழிநடத்தப்படும் ஒரு இளைஞன். காதலின் மெல்லுணர்வுகளை, இறகு வருடலை புறந்தள்ளி, காதலையும் ஓர் நுகர்வு உணர்வின் கையில் சிக்குகிறான். காதலை ஒரு போக உணர்வாக அதி விரைவாக நடத்துகிறான். இப்படி நுகர்வு நீட்சியின் கையில் சிக்கும் காதல் தன் தேவைப்பாட்டை இழந்துவிடுகிறது.

பழமைவாதக் கூட்டு:

காதல் நுகர்வாக மாறும் போது – ஆணாதிக்க பழைமைவாத உணர்வு அத்தோடு கைகோர்க்கிறது. ஒருவரை ஒருவர் நேசித்தல் என்ற நிலை மாறி – எனக்கான பெண் என்ற நிலைக்கு செல்ல பழமைவாதம் உதவி செய்கிறது.

காதலெனும் பரஸ்பர பகிர்தல், உத்தரவு அனுமதி என்கிற போக்கிற்குள் சிக்குகிறது. இந்த அசவுகரியச் சூழலில் பெண்களின் இயல்பான எதிர்வினையும் ‘பரஸ்பர’ நேசம் என்பதை வலுப்படுத்துவதாக பெரும்பாலும் இருப்பதில்லை. அது உறவுகளை மேலும் சிக்கலானதாக்குகிறது.

ஏற்கனவே, பெண்களிடத்தில் காதல் குற்ற உணர்வாகவும், ‘சாதியத்தை காப்பாற்றும் ஆணாதிக்கத்திடம் அடங்கி சுயம் இல்லாமல் கிடப்பதையே புனிதமாகவும் போதித்திருக்கிறது’ என்பது நன்கறியப்பட்ட விடயம். சாதியாவான்களின் வெட்டி மீசை முறுக்கலுக்காக , கழுத்தில் விருப்பமற்ற தாலிக் கயிர் முறுக்கப்பட்ட பெண்கள் நம் மண்ணில் லட்சோப லட்சம்.

ஆக இன்றைய யுவதிகள் மீது இந்த பழமைவாத உணர்வு காதலன் வடிவிருந்தும் குடும்ப வடிவிலிருந்தும் இரு பக்க தாக்குதலைக் கொடுக்கும் போது காதலுறவு சுலபமாக முறிந்து விடுகிறது. இந்த நுகர்வு கலாச்சாரம் மற்றும் பழமைவாதம் ஆண்களுக்கு இரட்டை வசதியை செய்துக் கொடுக்கிறது. உடைமையாக இருந்த பெண் அதன் நீழ்ச்சியாக இன்றைய நுகர்வு கலாச்சார சூழலின் போகப் பொருளாக்கப்பட்டதன் விளைவாகவும், மனித அறங்கள் மலிவாகும் பின்னணியிலும் – பெண்களை முழு நுகர்வு பொருளாக மட்டுமே பாவித்து கேளிக்கையின் உச்சமாக பெண்ணை கடந்து செல்வதும் மிக எளிய தேர்வாகிறது.

இதனால் ‘காதலின் முடிவே, பிரிவுதான்’ என்கிற நிலை பொதுப்புத்தியாகிவிட்டது. உண்மையான, பரஸ்பர காதலிலும் இந்தப் பொதுப்புத்தி ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. இந்தத் தாக்கத்திலிருந்து காதலர்கள் தங்களை காத்துக்கொள்ள -பழமைவாதத்தையும் நுகர்வு கலாச்சாரத் தாக்கத்தையும் புரிந்து, தம்மை அதிலிருந்து தற்காத்துக் கொள்வது அவசியமாகும்.

பழமைவாதத்தோடு நவீனம் அமைத்துள்ள கூட்டு இத்துடன் நிற்பதில்லை. தனிக் குடித்தனங்கள் நவீன கால விசயமாக இருந்தாலும், அதன் மைய அச்சாக இருப்பது பெண்ணடிமைத்தனமே. கல்லூரிகள் அறிவியலை போதித்தாலும், ஆண் பெண் நட்புகளை மறுக்கும் ஓர் பாலர் கல்லூரிகள் நிலவுடைமையின் மிச்சமே. இன்றும் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும், பெண்ணை உடைமையாக பார்க்கப் பழக்கிய பழமைவாதத்தின் குணாம்சமும் ,பெண்ணை நுகர்வு பொருளாக்கிய நிலையுமே காரணமாக உள்ளது.

காரணங்களைப் புரிந்து கொள்வதே விடுதலையின் தொடக்கம்…

Related Posts