காதல்

காதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்!

காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து இவற்றை காப்பாற்றிக் கொண்டிருக்கையில், மிக எளிதாக காதல் என்ற பெயரில் அவற்றை சீர்குலைத்தால் எப்படி அவர்களால் ஏற்க முடியும், பாவம்!

ஒவ்வொன்றாக பார்ப்போம்…

கற்பு:

கற்பு அல்லது கன்னித்தன்மை என்னும் கருத்தாக்கமே அறிவியல் ரீதியாக அர்த்தமற்றது. Non existent என்றே கூட சொல்லலாம்.

அப்ப இந்த கன்னித்திரை?

அது உடலுறவின் போது தான் கிழியும் என்றில்லை. சைக்கிள் ஓட்டும்போதே கூட அவ்வாறு ஆகலாம்.

சரி, காதல்ன்ன உடனே ஏன் கற்புக்கு செல்கிறார்கள். காதல் என்பது உடல் சார்ந்ததாக(வும்) இருப்பது இவர்களின் moral standards க்கு உட்படாமல் இருப்பது இவர்களுக்கு பிரச்சனை. ஆனால் இயற்கையில் காதலும் காமமும் இணைந்தே இருக்கிறது. அடிப்படையில் பெண்ணின் sexuality யை மதங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே இது.

கலாச்சாரம்:

பெண்ணின் non existent கற்பைப் பாதுகாத்தலும் கலாச்சாரத்தின் இன்றியமையாக் கூறாகும். சாதி,மதம் மாறி காதலிக்கிறார்கள், கல்யாணமும் கூட செய்து கொள்கிறார்கள். இது சாதிய/மத hierarchy களை உடைக்கிறது.

காதலில் பெண்ணின் தேர்வு இடம்பெறுகிறது. தான் யாருடன் வாழவேண்டும் , யாருடன் பிள்ளைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவளும் சமமாகத் தெரிவு செய்வதற்கான வெளி இருக்கிறது. இதனை அடிப்படைவாதிகளால் ஏற்கமுடிவதில்லை. காதலின் பெயரில் நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் எல்லாம் கற்பைச் சூறையாட நிகழ்த்தப்படும் சதிகள் என்று கூறுவதின் மூலம் வெளிப்படும் கருத்து என்ன?

பெண் சுயமாக முடிவெடுக்க தெரியாதவர். தனது பாலியல் தேவைகளை சொந்த விருப்பம்/தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்துகொள்ள முடியாது/கூடாது என்பதாகத்தான்.

இந்தப் புள்ளியில்தான் சங் பரிவாரமும் (Hindu right wing) தவ்ஹீத் ஜாமாத் போன்ற அமைப்புகளும் (Muslim right wing) ஒன்றிணைகின்றன. பெண்களின் தற்சார்பை (autonomy) மதங்கள் ஏற்பதே இல்லை.

காதல் புரட்சிகரமானது, எதிர்ப்பின் அடையாளமாக இருக்கிறது என நம்புவோர் இச்சமூகத்தில் எந்த அடையாளம் கொண்டோருக்கும் காதலுக்கான வெளி இருக்கிறதா / நாம் inclusive மனநிலையுடன் இருக்கிறோமா?  என பரிசோதித்தல் அவசியம். காதல் என்பது எதிர்பாலீர்ப்பு கொண்டோருக்கு மட்டுமேயானது எனும் கட்டமைப்புதான் இங்கிருக்கிறது.

ஓர் பாலீர்ப்பு, மாற்று பாலீர்ப்பு கொண்ட பால்புதுமையினர் (Queer), அவர்கள் காதலிப்பதை இங்கு எவ்வாறு அணுகுகின்றனர். (அவர்களை தனிநபர்களாக முதலில் இப்பெரும்பான்மைச் சமூகம் exclude/discriminate செய்யாமல் நடத்துகிறதா என்பது தனி விவாதம்) Queer love/life சொத்துறவுகளை, சாதி/மத ரீதியான அமைப்புகளையும் கருத்தியல்களையும் இன்னும் தீர்க்கமாக கேள்விக்குள்ளாக்குகிறது. காதலை ஒன்று மனம் சார்ந்ததாக மட்டும் உருவகித்து புனிதப்படுத்துவது அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியுடைய இருவர் இணைதலாக மட்டுமே பார்ப்பது. Social conditioning/ structures இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்பட்ட நம் சிந்தனைகளைக் கொண்டு, காதலை குறித்த போதாமையுடன் கூடிய புரிதலைத்தான் நாம் வளர்த்திருக்கிறோம்.

காதலின் பெயரில் வணிகம்:

லாபம் வேண்டுமென்றால் எதை விற்கவும்/commercialize செய்யவும் முதலாளித்துவம் தயங்காது. மனித உணர்வுகளும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. அதன் கொள்கைப்படி, காதலும் சந்தைப்படுத்தப்படுகிறது. அதீத விளம்பரம்/campaigning வழியாக ஆடம்பரப் பரிசுப் பொருட்களை வாங்கி பரிமாறிக் கொள்வதும் அதிக செலவு செய்து Club/Pub அல்லது restaurantல் நடக்கும் காதலர் தின eventகளுக்குச் செல்வதும் கிட்டத்தட்ட கட்டாயம் என்னும் அளவுக்கு மக்களை கொண்டு வந்திருக்கிறது.

தனிநபர்களின் சொந்த வாழ்க்கைக்கான நேரத்தை முதலாளித்துவ வேலைச் சூழல் முழுவதுமாகப் பிடுங்கிக் கொண்டுவிட்டு பணத்தையும் பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொள்வதே அன்பை வெளிப்படுத்தப் போதுமானது என்பதாக உறவுகளைச் சுருக்கியுள்ளது.

இவ்வாறு கட்டமைக்கப்படும் சமூகப் போக்குகளையும் சேர்த்து எதிர்க்கும்போதுதான் நுட்பமான மனித உணர்வுகள் அதன் இயல்பில் வெளிப்படுவதும் ஏற்கப்படுவதும் நிகழும். நேரத்தையும் உழைப்பையும் (Bill எப்பவும் பையன்தான் தரணும்னு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஆணாதிக்கம் ஆண்களுக்கும் அழுத்தம் கொடுக்காமலில்லை) ஒருவருக்கொருவர் சமமாகப் பகிர்ந்து செலவழித்துக் கொள்ளும் சூழலில்தான் ஆதிக்கமற்ற ஆரோக்கியமான உறவுகள் சாத்தியப்படும்.

என் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருக்கிறது என்பதை சாராமல், எவரும் எந்த அடையாளம் கொண்டோரும் எவரையும் பயமின்றி நேசிப்பதற்கான நிலையை அடையும்போதுதான் காதலர் தினத்தையும் கொண்டாட்டங்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். எனும்போதும், இன்றைய சூழலில், அதிலும் முக்கியமாக சாதியாகவே நீடித்திருக்கும் இந்தியச் சமூகத்தில் தற்போதைய காதலர் தின அனுசரிப்புகளும் ஓர் எதிர்ப்பின் அடையாளமே!

சமத்துவத்தை நோக்கிய பயணத்திற்கான ஆயுதமாக காதலை செழுமைப்படுத்துவோம்.

Related Posts