சினிமா தமிழ் சினிமா

பூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . ?

என்னடா பெரிய மதுரை…
வந்து பாருடா வடசென்னையை…
வெற்றிமாறனின் ஆசை நிறைவேறியதா?

வடசென்னை பார்த்தபின் தான் செக்கச் சிவந்த வானத்தப் பார்த்தேன். அதுவும் ஒரே நாளில்…. இரண்டு படங்களின் கதையையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி மனதிற்குள் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்… ஏதாச்சும் தோணுதா?

சரி வடசென்னைக்கு வருவோம். இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநராக மிக நுட்பமாக உழைக்கிற உழைப்பாளி. அதனால் வடசென்னை படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் வெற்றி மாறன்… அசத்தி இருக்கிறார். அதைப்போலவே நடிகர்கள் பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய நிறைய பேர் இருப்பதால் அதைப்பற்றியும் எதுவும் எழுதத்தோன்றவில்லை. வடசென்னையில் எனக்குப்பிடித்த நடிகர் நடிகையர் நிறைய பேர் இருக்கிறார்கள். மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வடசென்னையை பார்த்துமுடித்த கையோடு அதற்கான வாழ்த்துகளை இயக்குநர் வெற்றிமாறனிடம் சொன்னபோது கூடவே உங்கள் படத்தில் எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு, விமர்சனங்கள் இருக்கு எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று சொன்னேன். தாடிக்குள் பற்கள் தெரிய சிரித்தார்.

வடசென்னை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாததால்… வடசென்னை மக்களும் வடசென்னையில் வாழ்பவர்களும் வாழ்ந்தவர்களும் வடசென்னையோடு தொடர்புடையவர்களும் இந்தப்படத்தின் உட்கூறுகள் பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

முதலில் வடசென்னை என்ற பெயர் இந்தக்கதைக்கு சரியான தேர்வா? அல்லது இதுதான் வடசென்னை என்று வெற்றிமாறன் காட்சிப்படுத்துவது சரியா?

அமீர், தனுஷ் கேரக்டர் உள்பட கிட்டத்தட்ட தோலான் துருத்தி வந்தவன் போனவன், ஊர் மக்கள்… என ஆண்கள் பெண்கள் வித்தியாசமில்லாமல் அத்தனை கேரக்டர்களுமே ஏதோ ஒருவகையில் மோசமானவர்கள் தான் என்பது போலத்தான் படம் நெடுகவும் வருகிறது. தெரிகிறது.

விதிவிலக்காக டேனியல் பாலாஜி கேரக்டர் மட்டுமே அத்தனை கேரக்டர்களிலும் நல்லவனாய் சுயபுத்தி உள்ளவராகத் தெரிகிறது. மற்றபடி இந்தப்பகுதி மக்கள் இப்படித்தான் இருப்பார்களா? இதை வாழ்வியல் என்றெல்லாம் சொல்லாதீர்கள்… கடுப்பாயிருவேன்.

மெட்ராசுக்கும் வடசென்னைக்குமான வித்தியாசங்கள் என்னென்ன இருக்கலாம் என்று யோசியுங்கள். வடசென்னை என்கிற நிலப்பரப்பு பற்றியும் அதன் பூர்வீக குடிமக்கள் பற்றியும் நமக்கெல்லாம் என்ன தெரியும்? சரி, இல்லை அந்தப்பகுதி மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்… அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்… வாழ்கிறார்கள்… எத்தனைக்காலமாக அப்படி வாழ்கிறார்கள்… பின்னணிக்காரணங்கள் என்ன என்று நாம் எப்போதாவது தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறோமா?

ஏன், வெற்றிமாறனுக்கும் கூட அது தோணவில்லை… இவர்கள் இப்படித்தான் என்று சித்தரிக்க நினைத்தவர் அதையும் செய்திருக்கலாமே… அதை விட்டுவிட்டு நீளமான மன்னிப்பைக் கோருகிறார் வெற்றிமாறன்… படம் தொடங்குவதற்கு முன்பாகவே…

ஏன் அந்த நீள மன்னிப்பு…ப்பு…

இந்தப்படம் பார்க்கும்போது எனக்கு பாஸிட்டிவ்வா(???) தெரிஞ்சதுல முக்கியமான விசயம்… மதுரை வடசென்னை ஒப்பீடு தான். மதுரையின் வீரமான வீராப்பான திமிரான பெண் கதாபாத்திரங்களை எல்லாம் ஓரங்கட்டுமளவுக்கு ஆன்ட்ரியா கேரக்டர்… அடடே. அதே மாதிரி சொந்தக்காரன் தெரிஞ்சவன் அண்ணன் தம்பியெல்லாம் அசால்டா கொலை பண்ணிட்டு… அடுத்த வேலையை கூலா பாக்கிறதுக்கு எங்களால மட்டுந்தான் முடியும்னு ஒரு கூட்டம் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருந்தது… வடசென்னையை அந்தக்கூட்டம் தான் முதல்ல பார்க்கணும். சமீபத்துல கூட ஒருத்தர் நாங்கல்லாம் பல் வௌக்கிறதுக்கு முன்னாடியே … என்று வள்ளுவர் கோட்டம் முன்னாடி முறுக்குன வரலாறு எல்லாம் ஊருக்கே தெரியும். அய்யா பல் வௌக்காம சம்பவம் பண்றவரே வடசென்னையை பாருங்கோ… மதுரைப்படங்களுக்கும் வடசென்னைக்கும் பெரிசா ஒரு வித்தியாசம் இருக்கு… மதுரைப்படங்களில் ஓவர் சவுண்டா இருக்கும்… பஞ்ச் டயலாக் பேசியே நம்மளைக்கொல்வாங்க. ஆனா வடசென்னையில பூரா பேரும் சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க.

(இந்த பாராவை நான் காமெடியாத்தான் எழுதினேன்… உங்களுக்கு சீரியஸா தோணுச்சின்னா கம்பெனி பொறுப்பில்ல.)

– முருகன் மந்திரம்.

 

Related Posts