சினிமா தமிழ் சினிமா

நல்ல சினிமா பட்டியலில் V1 மர்டர் கேஸ்…

சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சிறு பங்களிப்பையும் செய்யாமல் பொழுதுபோக்கு என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டுகிற, வன்முறையைத் தூண்டுகிற, மக்களின் ரசனையை மழுங்கடிக்கிற வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்படங்களின் மத்தியில் ஏதோ ஒரு நல்ல சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த பட்டியலில் V1 மர்டர் கேஸ் கட்டாயம் இடம் பிடிக்கும்.


போலீஸ் அதிகாரியான விஷ்ணு பிரியா உடன் ஃபோரன்சிக் டிபார்ட்மென்டை சேர்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோ சேர்ந்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே V1 மர்டர் கேஸ் கதை.


ஓர் இளம்பெண் கொலை செய்யப்படுகிறார் அதனை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து இருக்கின்றனர் அந்த கொலையை செய்தது யார் என்ற பின்னணியில் மர்மமாகவே காட்சிகள் நகர்கின்றன. நான் கடைசியில் பார்த்து பிரமிப்பு அடைந்த க்ரைம் கதையான ராட்சசனை மிஞ்சி நிற்கிறது இந்த V1. ஏனென்றால் சமூகத்தின் கோரமுகமான ஜாதியின் துர்நாற்றத்தையும் ஆணவப்படுகொலைகளின் கேவலத்தையும் ஒரு க்ரைம் கதை சொல்லுகிறது என்றால் அதனை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

V1திரைப்படம் ஒரு க்ரைம் நாவலை வாசித்த அனுபவத்தையும், திரைப்படமாக சற்றும் சலிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த இளம்பெண்ணை கொலை செய்தது யார் அதன் பின்னணி என்ன என்பதில் திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. சுவராசியம் குறையாமல் திரில்லர் மூவிக்கான எல்லா அம்சமும், திரைக்கதயை கையாண்ட விதமும் இயக்குனர் பாவெல் நவநீதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


சினிமாத்தனம் இல்லாமல் ஒரு தைரியமான மிடுக்கான தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் கேஸ்ட்ரோ தனது இயல்பான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்கிறார். இருட்டை கண்டால் பயந்து நடுங்கும் காட்சியில் மிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

கொலையுண்ட இளம்பெண்ணின் காதலனாக நடித்திருப்பவரின் உடல்மொழியும் அவரது பேச்சு வழக்கும் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை தந்த ரோனி ரெபெவல் மற்றும் சிறப்பான ஒளிப்பதிவை துரத்தும் காட்சிகளில் இருட்டையும் விசாரிக்கும் காட்சியில் பகலையும் தந்திருக்கும் பிரேம்குமார் மிக நேர்த்தியான ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

ராம் அருண் காஸ்ட்ரோ உடன் போலீஸ் அதிகாரியாக விஷ்ணுபிரியா நடித்திருக்கும் நடிகை விசாரிக்கும் காட்சிகளிலும் துரத்தும் காட்சிகளிலும் தனது ஒப்பற்ற நடிப்பை தந்திருக்கிறார். இறுதியில் தந்தையே தன் மகளையே கொலை செய்தார் என்பதும் அதுவும் படித்த மேல்தட்டு வர்க்கமான அவளது தந்தை மருத்துவர் (நான் இங்கு மருத்துவர் என்று குறிப்பிட்டது எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் குறிப்பிடவில்லை. உண்மையில் அந்தக் கதையில் வருபவர் ஓர் மருத்துவர்) என்பது வியப்புக்கு உரியது.


அவள் எதற்காக கொல்லப்படுகிறாள் ஜாதியத்திற்காக…. தன்னைவிட கீழ் ஜாதியில் ஒருவனை காதலித்த காரணத்தினால் மட்டும் அவள் கொல்லப்படுகிறாள். அவள் தந்தையின் வாக்குமூலத்தில் “தன் சாதியின் விந்து மற்றொரு சாதியில் போய் விழுந்து விடக்கூடாது அதனால்தான் படிக்காத ஒரு பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன்” என்று சொல்வது வெட்கக்கேடான அருவருப்பான இந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதில் உடல் முழுக்க கூசுகிறது.

கடைசி காட்சியில் அவளது அம்மா “ஏண்டா என் பொண்ண கொன்னுட்டே” என கேட்கும் போது ஆணாதிக்க சமூகமும் சாதிய சமூகமும் அந்த தாயின் முன் அம்மணமாக நிற்கிறது. மொத்தத்தில் V 1 மர்டர் கேஸ் நம்மை ஓட ஓட துரத்தி குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கிறது. இதற்கான விடையை தேடி நாம் பயணிப்போம்.
“அகமண முறையில்தான் சாதி இருக்கிறது சாதி ஒழிய வேண்டும் எனில் காதலித்து திருமணம் செய்துகொள்ளுங்கள்” -புரட்சியாளர் அம்பேத்கர். “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தவரே” மகாகவி பாரதி.

-M.தேவந்திரன்

Related Posts