இதழ்கள் விவசாயம்

’மூன்றாம் உலகப்போர்’ படித்தவர்கள் – தவறவிடக் கூடாத இன்னொரு புத்தகம் …

uir nelam-800x1200(கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ உங்களில் பலரை ஈர்த்திருக்கலாம். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடிகளை அது பேசுகிற விதமும், கதையாடலும் உங்களுக்கு விருப்பமானதென்றால் – அதைக் காட்டிலும் மிக முக்கியமான, வாசிக்கத் தவறவிடக் கூடாத ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.)

இயற்கை விவசாயமே நிலத்தை காக்கும், மன்னை பொன்னாக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வைத்து உழைப்பை மூலதனமாக்கி அதில் வெற்றியும் கண்ட விவசாய பாரம்பரியத்தில் வந்த சம்சாரி பரமசிவத்திற்கும் அய்யா பழமை பேசி திரியிறாரு நவீன விவசாயமே வெள்ளாமையை அதிகம் எடுக்கும் லாபம் கொட்டும் என்று திருமணத்திற்கு முன்பே ஊரில் எங்கும் இல்லாத வழக்கமாக நிலத்தை பிரித்து வாங்கி அதில் தோல்வியடையும் எளையவன் முருகேசனுக்குமான மனப்போராட்டத்தை ரத்தமும் சதையுமாக விவரிக்கின்ற கதையே உயிர்நிலம்.

ஆட்டுக்கிடையும், மாட்டு சாணியும், ஆவாரங்கொழையும், கரிசல் மண்ணும் நிலத்தில் போட்டு ஏர்கலப்பை பிடித்து நிலத்தை உழுது யாரிடமும் கடன் பெறாமல் விளைந்ததிலிருந்தே விதை எடுத்து மறு சுழற்சி முறையில் இயற்கை விவசாயம் செய்து வெளைச்சலுக்கான பணத்தை கடனில்லாமல் பெறும் சம்சாரி பரமசிவம். விவசாய வேலைகளுக்கு துணையாக அவர் மனைவி காமாட்சி. ஆண் வேலை பெண் வேலை என்று பாரபட்சம் பார்க்காமல் தோட்டம் மற்றும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கிற அழகான உழைக்கும் தம்பதிகள். அவர்களை பின்பற்றும் மூத்தவன் அழகேசன்.

கொஞ்சம் படித்து விட்ட காரணத்தினால் அய்யாவின் விவசாய முறைகளை ஏளனம் செய்து நகத்தில் அழுக்கு படாமல் உடலை வளைக்காமல் வியர்வை வழியாமல் உழைக்காமல் ஓரமாக உட்கார்ந்து பார்த்து வேலையாட்களை வைத்து செய்யும் நவீன விவசாயமே அனைத்திற்கு தீர்வு என வாதிடும் எளையவன் முருகேசன்.

முருகேசன் ஊரைக்கூட்டி நிலத்தை பிரித்து வாங்கும் முன் தானாகவே முன் வந்து தன் நிலத்தில் ஒரு பகுதியை கொடுக்கிறார் பரமசிவம். காசு கொடுத்து விதைப்பைகள் வாங்கி விதைத்து அதில் டி.ஏ.பி, பொட்டாஷ், யூரியா என கொட்டி நிலத்தை விஷமாக்கி விவசாயத்தை தொடங்கும் முருகேசன் உரிய விளைச்சலின்றி கடன் சுமையில் தவிக்க கடனை வசூலிக்க வரும் பத்துவட்டி பழநிசாமி ஒரு வாரத்துல கடன திருப்பி குடு இல்லன்னா 3 மாசத்துக்கு உன் பொண்டாட்டிய குடு என்று கேட்கிறான். இப்படித்தான் விதர்பா விவசாயிகளும் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பார்களோ என்ற நினைப்போடு துக்கம் தாளாமல் எவ்வளவு தெளித்தாலும் பூச்சியை சாகடிக்க வக்கில்லாத பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொள்கிறான் முருகேசன் என்று நிறைவடைகிறது நாவல்.

முறை தவறிய காமத்தில் விரும்பியே ஈடுபடும் இருவரில் ஆணை தவிர்த்து பெண்ணையே குற்றவாளியாக்கும் பொது புத்தியை சாடும் இடம், நவீன விவசாயம் முருகேசனுக்கு மன அழுத்தத்தை கொடுத்து வாழ்க்கையின் நிம்மதியை கெடுப்பதை அழகாக விவரிக்கும் இடம் என நாவலில் பல்வேறு குறிப்பிடத்தக்க விஷயங்கள் அருமை.

கிராமத்து வாழ்க்கை முறையை மிக இயல்பாக மிக அழகான மொழி நடையில் நகர்த்தி செல்லும் ஆசிரியரின் சொல்வன்மை அழகு. தனியார்மயத்தையும் நவீன விவசாயத்தையும் தனி தனியே பிரித்து பார்க்க முடியாது என்கிற ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான வாதம் நாவலின் சிறப்பம்சத்தில் மற்றொன்று. செயற்கை உரங்களை விஷம் என்றே குறிப்பிடும் ஆசிரியரின் கோபம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

”உழைப்புங்கிறது சூரியன் மாதிரி அதுக்கு ஓய்வே கிடையாது. ஒரு பக்கம் மறைஞ்சாலும் இன்னொரு பக்கம் ஒளி குடுத்துகிட்டுதான் இருக்கும்” போன்ற வசனங்களால் உழைப்பை உயர்த்திப் பிடிக்கும் நாவல்.

இந்த நாவலை படித்து முடிக்கும் போது நவீன விவசாயத்தின் மீதும் செயற்கை உரங்களின் மீதும் ஒரு இயல்பான அருவெருப்பு தோன்றியிருக்கும் இதுவே ஆசிரியரின் வெற்றி.

நிலம் என்பது மண்ணும் மரமும் செடியும் சூழ்ந்துள்ள வெறும் நிலமல்ல அது உயிர். அதை பாதுகாப்பதற்கு இயற்கை விவசாயமே சிறந்தது என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல தீர்க்கமாக எடுத்து சொல்லும் நாவல்.

எமிலி, இஷிமுரா, சின்னபாண்டி என்று வேறு வேறு நாட்டவர்கள் ஒன்றிணைந்து இயற்கை விவசாயம் குறித்தும் சுற்று சூழல் குறித்தும் கவலை கொண்டு களத்தில் இறங்கி செயல்படுவதை புள்ளி விபரங்களோடு மேல்தட்டு மக்களின் ரசனைக்கேற்ப படைத்த வைரமுத்துவின் மூன்றாம் உலப்போர் நாவலை காட்டிலும் உழைக்கும் மக்களின் மொழியில் படைக்கப்பட்ட மிக சிறந்த படைப்பு மேலாண்மை பொன்னுசாமியின் ”உயிர் நிலம்”.

(பெரிய அழ கிய நாயகி அம்மாள் (நாவ லாசிரியர் பொன்னீலனின் தாயார் ) பரிசுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர் நிலம் நாவல் தேர்வு செய் யப்பட்டுள்ளது.)

 

உயிர் நிலம்

மேலாண்மை பொன்னுச்சாமி
நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.
விலை: 270

Related Posts