பிற

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன ஊதிய நிறுத்தம்?

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊதிய நிறுத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வார்த்தையை வைத்தே அது என்னவாக இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள். ஆம், தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் முதலாளி ஸ்ட்ரைக் செய்வது தான் ஊதிய நிறுத்தம். அந்த முதலாளி ஒரு அரசாங்கமாக இருந்து, அந்த தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஐயயோ, அப்படியொரு கொடூர அரசும் நாடும் இருக்க முடியுமா என்றா கேட்கிறீர்கள். ஆம் இருக்கிறது. இது ஏதோ கடந்தகால வரலாறும் அல்ல, எங்கோ ஒரு மூலையிலிருக்கும் அதிகப்பிரபலமில்லாத நாடுமல்ல. கடந்த 25 நாட்களாக ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டின் 8,00,000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது என்று ஸ்ட்ரைக் செய்துகொண்டிருக்கிறது. அதுவும் அரசு கஜானாவில் பணமில்லாத காரணத்தால் அல்ல. அரசியல் காரணங்களுக்காக இதனைச் செய்கிறது அந்த அரசாங்கம்.

அந்த நாடு வேறெதுவுமல்ல, ஜனநாயகத்திற்கு எவ்விதத் தொடர்புமில்லாத சர்வாதிகார அமெரிக்கா தான். எட்டு இலட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வயிற்றில் அடிக்கும் இக்கொடூர செயலைச் செய்துகொண்டிருப்பது அந்நாட்டின் ட்ரம்ப் அரசாங்கம் தான்.

2017இல் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டபோது, அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் மிகப்பெரிய சுவர் எழுப்பி, மெக்சிகோவிலிருந்து யாரையும் அகதிகளாக வரவிடமாட்டேன் என்று போகிற இடமெல்லாம் பேசினார். உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையில் தலைவிரித்தாடுகிற போதெல்லாம் பக்கத்து நாட்டையும் அகதிகளையும் குறைசொல்லியே மக்களை திசைதிருப்புவது அதிதீவிர வலதுசாரிகளின் வழக்கமான பழக்கம். இந்தியாவில் ஆனாவூனா பாகிஸ்தான் போ என்றும், சீனா தான் இந்தியாவின் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றும் வலதுசாரி பாஜக சொல்லிக்கொண்டிருக்கவில்லையா? அப்படித்தான் வலதுசாரி குடியரசுக் கட்சியும் ட்ரம்பும் மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்பி அத்தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். ட்ரம்ப் இன்னும் ஒருபடி மேலே சென்று, அமெரிக்காவுக்கும் மெக்சிகோவிற்கும் இடையில் மெக்சிகோவின் செலவிலேயே சுவர் எழுப்புவேன் என்றும் வாக்குறுதி கொடுத்தார். இது அப்போதே பல அதிர்வலைகளை எழுப்பியது.

ட்ரம்ப்பும் 2017 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபரானார். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் அடுத்த ஆண்டின் பட்ஜெட்டை அமெரிக்க காங்கிரசும் இறுதியில் அதிபரும் ஒப்புதல் வழந்தினால் தான், அரசின் பெரும்பாலான துறைகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படும். இப்போது இவ்வாண்டு அமெரிக்க பட்ஜட்டில் 40,000,00,00,000 (நாற்பதாயிரம் கோடி ரூபாய்) ரூபாயினை மெக்சிகோ சுவர் எழுப்புவதற்கு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை ஒதுக்கீடு செய்தாக வேண்டும் என்று ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் அமெரிக்க காங்கிரசோ அதனை முற்றிலுமாக நிராகரித்தது. மெக்சிகோவின் பணத்தில் சுவர் எழுப்புவோம் என்று நிறைவேற்றமுடியாது என்று தெரிந்தும் கண்மூடித்தனமான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, தற்போது அமெரிக்க மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுவது ஏற்கமுடியாது என்பது தான் ஜனநாயகக் கட்சியின் குற்றச்சாட்டு.

இச்சூழலில் சுவர் எழுப்புவதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தால் தான், பல்வேறு அரசு துறைகளுக்கான நிதிஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்குவேன். அதுவரையில் அதில் கையெழுத்துப் போடவே மாட்டேன் என்று ட்ரம்ப் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டின் டிசம்பர் 11 ஆம் தேதியன்றும்,

“இந்த தேசத்தின் எல்லைப் பாதுகாப்பிற்காக ஊதியநிறுத்தம் செய்வதில் பெருமை கொள்கிறேன். அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன்.”

என்று அறிவித்தார் ட்ரம்ப்.

அவருடன் அடுத்த ஒருவாரம் தொடர்பேச்சுவார்த்தைகளை பலரும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 18 ஆம் தேதியன்று ஊதிய நிறுத்தத்தை ட்ரம்ப் கைவிடுகிறார் என்று செனட்டின் பெரும்பான்மை தலைவரும், சிறுபான்மைத் தலைவரும் அறிவித்தனர். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 20 ஆம் தேதியன்று, சுவர் எழுப்ப நிதியைக் கோரும் பட்ஜெட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆதரிக்கவில்லையென்றால், அமெரிக்க துறைவாரி நிதிக்கான பட்ஜெட்டில் கையெழுத்துப் போடமாட்டேன் என்றும் மீண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். உடனடியாக அன்றே பட்ஜெடிட்டில் 40,000 கோடி ரூபாயினை சுவர் எழுப்பவும், சுவரின் பாதுகாப்பு உதவித்தொகையாக மேலும் 57,000 கோடி ரூபாயினையும் ஒதுக்கீடு செய்வதற்கு தகுந்தவாறு பட்ஜெட் மசோதாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அக்கருத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், சென்னடில் ஒப்புதல் பெறவில்லை. இதனால் டிசம்பர் 22ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக ஊதிய நிறுத்தம் அமலுக்கு வந்தது.

ஊதிய நிறுத்தத்தால் நேரடியாகவே எட்டு இலட்சம் ஊழியர்கள் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகத் துவங்கினர். அதில் 4.2 இலட்சம் தொழிலாளர்கள் ஊதியமில்லாமல் வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது வேலையினை வழக்கம்போல செய்துகொண்டிருக்க வேண்டும், ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. மீதமுள்ள 3.8 இலட்சம் தொழிலாளர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு வேலையுமில்லை, ஊதியமுமில்லை. அந்த எட்டு இலட்சம் தொழிலாளர்களின் குடும்பம், குழந்தைகள் என பல இலட்சம் பேர் வருமானமில்லாதவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஊதிய நிறுத்தத்தால் குடும்பத்தை சமாளிக்க முடியாமல், தங்களது வீட்டிலிருக்கும் பொருட்களை ஆன்லைனிலும் வீட்டு வாசலிலும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் குடும்பத்தினர்.

பல்வேறு துறையில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்:

 1. விவசாயத்துறை: 40% தொழிலாளர்கள் (95,383 பேர்)
 2. வர்த்தகத்துறை: 87% (47,896 பேர்)
 3. உள்நாட்டு பாதுகாப்பு: 13% (2,32,860 பேர்)
 4. வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை – 95% (7,497 பேர்)
 5. உள்துறை – 78% (68,469 பேர்)
 6. சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை – 95% (13,872 பேர்)
  7. நீதித்துறை – 17% (1,14,154 பேர்)
 7. மாநில விவகாரத்துறை (உள்நாட்டில்): 42%
 8. மாநில விவகாரத்துறை (வெளிநாட்டில்): 26%
  10. கருவூலம் – 83% (87,267 பேர்)
 9. போக்குவரத்துத் துறை – 34% (54,230 பேர்)

 

பல்வேறு தரப்பினர் ட்ரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தனர். ஆனால் அவர் எதற்கும் மசிவதாக இல்லை. யார் பேச்சையும் காதுகொடுத்துக் கேட்பதாகவும் இல்லை. ஜனவரி 9 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரசின் முதன்மை செயலரான பெலோசி, ட்ரம்பை சந்திக்கச் சென்றார்.

ட்ரம்ப்: “சுவர் எழுப்ப ஆதரவு தெரிவிக்கவா வந்திருக்கிறாய்?”

பெலோசி: “இல்லை”

ட்ரம்ப்: “அப்போ கெளம்பு. பாய் பாய்.”

என்று பேச்சுவார்த்தைக்கு வருகிறவர்களை அவமானப்படுத்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

ஊதிய நிறுத்ததின் அடுத்தகட்டமாக, மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் ட்ரம்ப். அவரின் விருப்பப்படி சுவர் எழுப்புவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் இலட்சக்கணக்கான கோடிகளை அமெரிக்க காங்கிரஸ் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தப் போவதாக எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப். அதன்பின்னர், தனக்குப் பிடித்த எதையும் செய்துகொள்ளும் வகையில் ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் அதிகாரமற்றவையாக மாற்றுவிடும் நோக்கத்தில் இருக்கிறார் ட்ரம்ப்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று எனத் தன்னைப் பெருமையோடு கூறிக்கொண்டு, மத்திய கிழக்கு மற்றும் தென்னமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் குறித்து ஆயுதங்களால் பாடமெடுக்கக் கெளம்பிய அமெரிக்காவின் ஜனநாயகம் சிரிப்பா சிரிக்குது. ஆனால் ஆனாவூனா உலகின் மற்ற நாடுகளில் சின்னஞ்சிறிய பிரச்சனை என்றாலே ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது எனக் கத்திக்கதறும் சர்வதேச ஊடங்கள் அனைத்தும் தற்சமயம் பெருத்த அமைதி காக்கின்றன.

ஒரே நாளில் ஒட்டுமொத்த மக்களையும் நடுத்தெருவில் இழுத்துக் கொண்டுபோய்விடுகிற சர்வாதிகாரிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை செல்லாது என்று அறிவித்த நரேந்திர மோடியும், உழைத்தவனின் ஊதியத்தைக் கொடுக்கமுடியாது என்று மறுக்கும் டொனால்ட் ட்ரம்பும் ஒரேபுள்ளியில் இணையும் சர்வாதிகார பாசிஸ்ட்டுகள். இவர்களுக்கு எதிராக உலகின் குடிமக்களான நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்பவேண்டும்.

-இ.பா.சிந்தன்

 

Related Posts