அரசியல் சித்திரங்கள்

மக்களை திவாலாக்கும் டாலர் தேசம்…!

அசைக்கமுடியாத ”பொருளாதார வல்லரசாக” தன்னைக் குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிறைவேற்றப்படாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் ”ஒபாமா கேர்” என்று அழைக்கப்படும் ”தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கு” நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வரவு – செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது.

அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 – ஆம் தேதி முடியும். நேற்று அக்டோபர் 1 – ஆம் ஆண்டு புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரும் ஆண்டிற்கு எவ்வளவு ”பொதுக்கடன்” வாங்கலாம் என்று தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்புவது என்பது வழக்கம்.

அதே போன்று அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு ”பொதுக்கடன் தொகை” உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும். ஆனால் இம்முறை கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி அனுமதிக்கவில்லை. அதனால் அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது.

”டாலர் தேசம்” தத்தளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

”ஒபாமா கேர்” என்ற பெயரில் அமெரிக்காவில் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்ட மசோதாவிற்கு எதிர்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்துடன். இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிவடிந்துவிட்டது. மக்களுக்கு சுகாதாரத் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதென்றுதான் கொள்ளவேண்டும்.

ஒருபகுதி அரசு நிறுவனங்கள் ”தற்காலிகமாக” மூடப்பட்டதால் சுமார் 8லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கும் என்பதையும் ஒபாமா அறிவிக்கவில்லை.

வேலையை இழந்து – வருமானத்தை இழந்து குடும்பங்கள் கடுமையாக பாதிக்கும், வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ”வால் ஸ்ட்ரீட்” ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும் ஒபாமா மீது வெறுப்பும், கோபமும் அடைந்திருக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள் மூடப்படுவது என்பது அமெரிக்காவிற்கு புதிதல்ல. இதற்கு முன்பு 1995 – 96 நிதியாண்டிலும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை அமெரிக்கா சந்தித்து அரசு நிறுவனங்களை மூடியிருக்கிறது. அந்த மோசமான காலகட்டத்தில், மக்கள் கடுமையான நெருக்கடியில் தவித்தார்கள். 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.

Related Posts