தமிழ் சினிமா

உறியடி 2 தெறியடி . . . . . . . . !

சில பண்டிதர்கள் வந்து ‘சினிமான்னா என்ன தெரியுமா?’ என பாடம் எடுப்பார்கள். திபுதிபுவென ஓடிவிடுங்கள்.

மக்களை பேசாத எதுவும் கலை இல்லை. மக்களை பேசுகின்ற எதற்கும் வடிவமும் தேவையில்லை. அங்கெல்லாம் மக்கள் தங்களை மறந்து திரைக்குள் செல்லும் அற்புதத்தை உங்களால் பார்க்க முடியும். இன்று நாங்கள் பார்த்தோம்.

தியேட்டரில் பார்த்த 600 பேருக்கு லாஜிக்குகளின் தேவை இருக்கவில்லை. Infact லாஜிக்கை பற்றிய சிந்தனை வராத அளவுக்கு மிகச்சரியாக இருந்தது.  படம் கொண்டிருந்த முக்கியமான லாஜிக்கில் மக்கள் அனைவரும் ஒன்றியிருந்தனர்.

அதிகாரம், ஆளுங்கட்சி, எதிர்கட்சி, போலீஸ், சட்டம் என இங்கிருக்கும் எல்லாமும் மக்களுக்கு எதிராகத்தான் இயங்கும் என்கிற ஒற்றை simple and unbeatable லாஜிக்!

நாள்தோறும் பார்க்கும் போலீஸும், எல்லா கட்சிகளின் குடுமிகளை பிடித்திருக்கும் முதலாளித்துவமும் நம் மக்கள் அறிந்திராத விஷயங்களா என்ன?

மக்களின் மொத்த கோபத்தையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் Vijay Kumar.

‘என்னடா பண்ற’ என கேட்கும் போலீஸ்காரனுக்கு ‘இங்க வந்து பேசுடா’ என நாயகன் சொல்லும்போது மொத்த தியேட்டரும் ஆர்ப்பரிக்கிறது. இரண்டு தரப்பு அரசியல்வாதிகளும் முதலாளியுடன் டீல் பேசும்போது ‘அவனை முதல்ல கொல்லணும்டா’ என குரல்கள் எழுகின்றன. ‘அரசியல்ல தலையிடணும்.. இல்லன்னா அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்’ என்ற வசனம் வருகையில் கைதட்டலும் விசில்களும் பறக்கின்றன.

போராட்டத்துக்கு கிளம்பி வரும் காட்சியில் மொத்த பேரும் கறுப்பு சட்டைகளில் வருகின்றனர். போராட்டத்துக்கான பாடலின் முதல் வரி ‘தோழா’வில் தொடங்குகிறது. தமிழ்நாட்டின் போலீஸ் தொடங்கி ஹிப்ஹாப் புரட்சிக்காரர்கள் வரை பதற வைக்கும் நிறமும் வார்த்தையும் அவை.

தமிழ்நாடு தமிழ்நாடானதுக்கான அடிப்படையே எம்பெருங்கிழவன் அணிந்த கறுப்புச்சட்டையும் சிகப்பு சித்தாந்த தோழர்களும்தான் என்ற உண்மையை புறக்கணிக்கும் நன்றி மறந்த கூட்டத்தின் முகத்தில் செருப்பை வீசியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் எங்குமே தூத்துக்குடி என ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஆனால் தியேட்டரில் இருந்த மொத்த மக்களும் தூத்துக்குடியில்தான் இருந்தோம். க்ளைமேக்ஸ் காட்சியின் போது மொத்த தியேட்டரும் கோபம் கொண்டு கொந்தளிக்கிறது. மக்களின் கோபத்தை திரையில் வடிவமாக்கி மீண்டும் மக்களுக்கே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படம் பார்க்கையில், கண் கலங்கி மனம் குமைந்து, கொதித்தெழுந்து, கடைசி காட்சியில் சினந்து, நீங்கள் குரல் கொடுக்கவில்லையெனில் அதிகாரம் தேடும் ஆடுகள் நீங்கள்தான் என புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் நிச்சயமாக குரல் கொடுப்பீர்கள்!

எந்த கட்சிக்கான அரசியலும் படத்தில் இல்லை. உங்களுக்கான அரசியல் மட்டும்தான் இருக்கிறது.

குடிக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கும் காற்றுக்கும் ஏன் போராட வேண்டியிருக்கிறது என்பதை தெளிவாக முன்வைக்கும் அரசியல்!

இன்னும் சில வருடங்களுக்கேனும் நீங்களும் நானும் நம் சந்ததியும் வாழ வேண்டுவதற்கான அரசியலை படம் பேசியிருக்கிறது. தவறியும் படத்தை பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்.

– ராஜசங்கீதன் ஜான்.

Related Posts