அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)

தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)

தொடரின் இரண்டாவது  பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)

அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்:

பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், போர்டோரிகோவிற்கும் ஒரு வழியினைக் கண்டறிந்தார். போர்டோரிகோவில் துவங்கி இருந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களை மிகக்கடுமையாக நசுக்கினார். அதே வழிமுறைதான் பின்னாளில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய அமெரிக்காவின் “Black Panther” கட்சியின் மீதும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் போர் செயலாளர் லூயி ஜான்சன் போர்டோரிகோவிற்குச் சென்று அங்கிருக்கும் அமெரிக்க இராணுவத் தலைவர்களைச் சந்தித்தார். போர்டோரிகோவின் தேசியக்கட்சியினை உடைக்க வேண்டும் அல்லது அதன் தலைவர் அல்பிசு கேம்பசை கொல்லவேண்டும் என்று உத்தரவுபோட்டார். இச்செய்தி தேசியக்கட்சியினரைச் சென்றடைந்ததும், அவர்கள் மக்களைத் தயார்ப்படுத்தினர். மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், இச்செய்தியினை ஊடகங்கள் மறைத்தன. எந்த ஊடகமும் தேசியக்கட்சியினரின் செய்திகளை விளம்பரமாகக்கூட வெளியிட முன்வரவில்லை. அதனால் போர்டோரிகோ தேசியக்கட்சியினர், ஆங்காங்கே பொதுக்கூட்டங்களும், தெருமுனைக்கூட்டங்களும் நடத்தி மக்களுக்கு செய்தி சொல்லினர்.

அடக்குமுறையும் மக்கள் எழுச்சியும்:

அதற்கிடையில் 1950 அக்டோபர் 27 இல் தேசியக்கட்சியினரின் வாகனத்தை நிறுத்தி அதனுள்ளிருந்த நான்கு கட்சி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றது இராணுவம். இனியும் பொறுப்பதற்கில்லை; போராடுவதற்கு வேறுவழியும் இல்லை. எனவே, ஆயுதம் ஏந்திப் போராடுமாறு தேசியக்கட்சியின் தலைவர் அல்பிசு கேம்பஸ், தன்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே போர்டோரிகோ மக்கள் வெகுண்டெழுந்து ஹையுயாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தைத் தாக்கி, தீயிட்டு கொளுத்தினர். அமெரிக்க அரசு அலுவலகங்கள் பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. போர்டோரிகோ விடுதலை அடைந்து விட்டதாக மக்கள் அறிவித்தனர். சும்மா இருக்குமா அமெரிக்க இராணுவம். நவீனரகக் குண்டுகளை எல்லாம் வான்வழியே போர்டோரிகோ மக்கள் மீது வீசியது. மக்கள் மீட்ட பகுதிகளை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டது அமெரிக்க இராணுவம்.

“சரணடைந்த மக்களையும் கொன்று குவித்தது அமெரிக்க ராணுவம்”

என்று யயுயாப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய போர்டோரிகோ பெண் போராளி ப்ளான்க் கன்னபிஸ் தெரிவித்தார்.

இப்போராட்டம் யயுயாவில் மட்டுமல்லாமல்; அகிபோ, மயகேஸ், நரங்கிடொ, சான்யுவாங்க் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவியது. போர்டோரிகோவின் கவர்னர் மாளிகையையும் தாக்கும் அளவிற்கு மக்களின் கோபமிருந்தது. ஆனால் இக்காலகட்டம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளவில் கோரமுகம் கொண்டதாக விளங்கிய நாட்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைபடாமல் தங்கள் நாடு விடுதலையடைய வேண்டும் என்று போர்டோரிகோ மக்கள் போராடினர். தேசியக்கட்சியின் தலைவரான அல்பிசு கேம்பஸின் வீட்டைச் சுற்றிவளைத்தது அமெரிக்க இராணுவம். அவரால் இப்போராட்டத்தைக் கண்காணிக்கவோ, தலைமையேற்று நடத்தவோ இயலாமற்போனது. ஒவ்வொரு பகுதியாகப் போராட்டத்தினை ஒடுக்கிக் கொண்டே வந்தது அமெரிக்கா.

போராளிகள் சிறைவைப்பு:

போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆஸ்கார் கோலச்சோ மற்றும் க்ரிசெல்லோ டொரொசில்லோ ஆகியோர் அமெரிக்க அதிபரான ட்ருமனின் தற்காலிக வீட்டைத் தாக்கி சர்வதேச கவனத்தை ஈர்க்க முடிவுசெய்தனர். போர்டோரிகோ மக்களின் விடுதலைப் போராட்டங்களை உலகிற்குச் சொல்லாமல் மறைத்த மேற்குலக ஊடகங்கள், ட்ருமனின் வீடு தாக்கப்பட்டதை மட்டும் மக்களுக்குச் சொல்லினர். அவர்கள் தீவிரவாதிகளைப் போன்று உலக மக்களிடத்தில் சித்தரிக்கப்பட்டனர். அத்தாக்குதலில் ஈடுப்பட்ட டொரொசில்லோ அங்கேயே கொல்லப்பட்டார். ஆஸ்கர் கொலொச்சொ கடுமையாகத் தாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 3000 த்திற்கும் மேற்பட்ட போர்டோரிகோ மக்கள் கைதுசெய்யப்பட்டனர். எவ்வித சட்டமோ, வழிமுறையோ இன்றி யாரை,எங்கு,எப்போது வேண்டுமென்றாலும் கைது செய்யக் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

போர்டோரிகோவின் விடுதலைப் போராளி கார்லோஸ் மற்றும் மேலும் 12 பேரைக் கைது செய்து, நான்கு காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது அமெரிக்கா. அமெரிக்க ஆதரவு நீதிமன்றம் அவர்களுக்கு 465 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. பின்னாளில் அவர்கள் அக்கொலைகளைச் செய்யவில்லை என நிரூபணமான போதும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் மீது தேசியக்கட்சியின் உறுப்பினராக இருந்தது மற்றும் வேறு பல பிரிவுகளில் வழக்குகள் போட்டு, அவர்கள் விடுதலை செய்யப்படாமலிருக்க சாமர்த்தியமாகக் காய் நகர்த்தியது அமெரிக்கா. போர்டோரிகோவின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது அமெரிக்காவின் உளவுப்பிரிவான எஃப்.பி.ஐ. 1988 இல் அவ்வாறு சேகரித்த விவரங்கள் அடங்கிய கோப்பில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான போர்டோரிகோ மக்களின் தனி நபர் விவரங்கள் சேகரித்து வைத்திருந்தது எஃப்.பி.ஐ.

போலி ஜனநாயகம்:

போர்டோரிகோவில் அமெரிக்கா நடத்திய தேர்தல்களில் நம்பிக்கையில்லாததால் அம்மக்கள் தேர்தல்களில் பங்கெடுக்காமலேயே இருந்தனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க ஆதிக்கத்தை ஆதரிக்கும் நிலையினைக் கொண்ட ‘பாப்புலர் ஜனநாயக கட்சி’ என்றொரு கட்சி புதிதாக போர்டோரிகொவில் உருவாகியது. அவர்கள் 1952 இல் ஆட்சிக்கும் வந்தனர். அமெரிக்காவும் அக்கட்சியுடன் இணைந்து போர்டோரிகோவில் புதிய சட்டங்கள் பலவற்றை இயற்றி போர்டோரிகோவை வாஷிங்டனே முழுமையாக ஆட்சி செய்யும்படியான நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். போர்டோரிகோ இனியும் அமெரிக்கக் காலனி அல்ல. அதனை ஆட்சிசெய்யும் உரிமை அம்மக்களிடமே இருக்கிறது என்கிற ஒரு மாயையை உருவாக்கும் சட்ட(சதித்)திட்டங்கள் தான் அவையனைத்தும்.

தேசியக்கட்சியின் தலைவரான அல்பிசு கேம்பசை மீண்டும் கைது செய்தது அமெரிக்க இராணுவம். பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு மிகுந்த சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அவர்மீது உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் ரேடியோ கதிர்களைச் செலுத்தி வெளிக்காயங்கள் ஏதுமின்றி அவரை மெல்ல மெல்ல சாகடித்தது அமெரிக்க இராணுவம். 1965 இல் அவர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி, எந்தநிமிடமும் அவர் இறந்துவிடக்கூடும் என்று உறுதியானப்பின்னர், அவரை விடுவித்தது அமெரிக்க அரசு. சிறையில் இருந்து விடுதலையடைந்த ஓரிரு மாதங்களிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார் அல்பிசு கேம்பஸ்.

1954 இல் ரபேல் கேன்சல் மிரெண்டா உள்ளிட்ட நான்கு பேர் அமெரிக்க காங்கிரசிற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். உலகநாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் நால்வரையும் கைதுசெய்து தனது பெடெரல் சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா. ரபேல் கான்சல் மிரெண்டாவை 30 ஆண்டுகள் சிறையில் வைத்து சித்திரவதை செய்தது அமெரிக்க அரசு. அல்பிசு கேம்பஸின் மறைவும், மேலும் பல விடுதலைப்போராட்ட தலைவர்கள் அமெரிக்கச் சிறைகளில் வெளிவரமுடியாமல் அடைப்பட்டு இருப்பதும் போர்டோரிகோவின் விடுதலைப் போராட்டத்தை வெகுவாகப் பாதித்தது. அடுத்தகட்டம் என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க வல்லரசு, போர்டோரிகோவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது…

(தொடரும்….)

– இ.பா.சிந்தன்

– தீபா சிந்தன்

Related Posts