அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 4)

துணையதிபர் வாலேசின் சீன சுற்றுப் பயணம்:

அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுக்கவிருக்கிற ஜனநாயகக் கட்சியின் மாநாடும் நெருங்கியது. ஆனால் ரூசுவெல்டின் நிலையென்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. வாலேசை சீனாவிற்கு அனுப்பி போர்ச்சூழல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கச் சொன்னார் ரூசுவெல்ட்.Chiang_Kai-shek_in_full_uniform

சீனாவில் சன்யாட் சென்னிற்கு பிறகு கட்சியில் குழப்பம் விளைவித்து, தலைமைப் பதவியினை எடுத்துக்கொண்டு, சீனாவை ஆட்சி செய்வதாக அறிவித்துக் கொண்ட சியாங்குடன் 20 ஆண்டுகளாக நட்பில் இருந்தது அமெரிக்கா. சியாங்கின் அமெரிக்க வாழ் மனைவி மேடம் சியாங்கிற்கு அமெரிக்க கண்செர்வேடிவ் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதனை பயன்படுத்தி, சீனாவின் எதிர்காலம் சியாங் தான் என்கிற பரப்புரை அமெரிக்காவில் செய்யப்பட்டு வந்தது.

ரூசுவெல்ட், ஸ்டாலின், சர்ச்சில், வரிசையில் தாமும் உலகத்தலைவர்கள் பட்டியலில் இடம் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டார் சியாங் . அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் சீன மக்களின் நன்மதிப்பை பெறவில்லை. குறிப்பாக சோசியலிசத்துடன் இணைந்த தேசியவாதம் பேசிய சன்யாட் சென்னின் கொள்கைகளை குப்பையில் வீசியது, தொழிலாளர் நலன்களையும் தொழிற்சங்கங்களையும் நசுக்கியது, கம்யூனிஸ்டுகள் என அடையாளங்காட்டி வேண்டாதவர்களைக் கொன்றது, ஜப்பானியர்களின்  ஆக்கிரமிப்புப் போரை தடுக்கிறேன் பேர்வழி என்று மஞ்சள் ஆற்றின் பாலத்தை இடித்து 10 லட்சம் சீன மக்களின் இழப்புக்கு காரணமாக இருந்தது, போன்ற நடவடிக்கைகள் சியாங்கை சீனாவின் மக்கள் விரோத பாசிசத் தலைவராகவே மாற்றியிருந்தன.

இருந்த போதும் சியாங் மற்றும் அவரது மனைவி மேடம் சியாங் ஆகியோரே சீனாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகள் என்று அமெரிக்க மக்களை நம்ப வைத்துக்கொண்டிருந்தது அமெரிக்க அரசு. இப்படிப்பட்ட சூழலில் தான் போர்ச்சூழல் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள சீனா சென்ற அமெரிக்க துணை அதிபர் வாலேஸ், மிகப்பெரிய மக்கள் சக்தியாக மாறிக்கொண்டிருந்த மாவோவைக் கண்டார்.

மாவோவும், அவரது மக்கள் சார்ந்த அரசியலுமே சீனாவின் எதிர்காலம் என்று விரிவான அறிக்கை எழுதினர். ஆனால் அமெரிக்க ஆட்சியாளர்களால் அவரது அறிக்கை நிராகரிக்கப்பட்டு மறைக்கப்பட்டது.

சீன சுற்றுப்பயணம் முடிந்து வாலேஸ் அமெரிக்கா வந்ததும், ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் வருகிறது. வாலேஸ் அமெரிக்காவில் இல்லாத காலகட்டத்தைப் பயன்படுத்தி , அவருக்கு எதிராக கட்சிக்குள் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தனர் கட்சியின் முதலாளிகள். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அந்த ஜிம்மி பேர்ன்சையே துணை அதிபர் வேட்பாளராக களமிறக்க முயற்சி செய்தனர் ஜனநாயக கட்சி முதலாளிகள். ஆனால் கட்சியின் தொழிற்சங்கத்தலைவர்களின் கடும் எதிர்ப்பினால் அது ஈடேரவில்லை .

வாலேசை சீனாவிற்கு அனுப்பிவிட்டு, அவரை துணை அதிபர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அணைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர் ஜனநாயக கட்சி முதலாளிகள். அதிபர் ரூசுவெல்டின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருந்தது , அமெரிக்க சட்டப்படி பதவியில் இருக்கும் போது அதிபர் இறந்து விட்டால் மீதம் இருக்கும் பதவிக்காலம் முழுவதும் துணை அதிபர் அதிபர் ஆகிவிடுவார். இதனால் எப்படியாவது வாலேசை துணை அதிபர் வேட்பாளராக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் ஜனநாயக கட்சி முதலாளிகள்.
1944 ஜூலை 11 ஆம்  தேதி, வேட்பாளர்களை தீர்மானிப்பதற்கான கூடம் நடந்தது . முதலாளிகளின் உற்ற தோழனாக விளங்கிய ஜிம்மி பேர்ன்சையே  துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது முதலாளிகளின் கோரிக்கையாக மட்டும் இல்லாமல் ரூசுவல்டின் விருப்பமாகவும் இருந்தது. ஆனால் கறுப்பின மக்களின் வெறுப்பையும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளினால், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் சேர்த்து வைத்திருந்த ஜிம்மி பேர்ன்சை வேட்பாளராக்கினால் வாலேஸ்  எளிதில் வென்று விடுவார் என்று அஞ்சினர் ஜனநாயக கட்சி முதலாளிகள் . கட்சியில் எவருக்கும் அதிகமாக அறிமுகம் இல்லாத ட்ருமனின் பெயர் ரூஸ்வெல்டின் முன் பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ‘இக்கூட்டத்தில் இருக்கிற எல்லோரும் ட்ருமனையே ஆதரிக்கிறார்கள்’. அதனால் ட்ருமனே இருக்கட்டும் . ஜிம்மி பேர்ன்சிடமும் , வாலேசிடமும் இதனை தெரிவித்துவிடுங்கள்’ என்று சொன்னார் ரூசுவெல்ட் . இதனை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு முதலாளிகள் கேட்டனர். ரூசுவெல்டும் அதைச் செய்தார்

அன்பிற்குரிய ,

   டக்ளஸ் மற்றும் ட்ருமன் ஆகியோரை துணை அதிபர் வேட்பாளர் பரிந்துரைக்கு அனுப்பியிருந்தீர்கள் , இருவரில் யாராக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
இப்படிக்கு,

பிராங்க்ளின்.டி .ரூசுவெல்ட்.

 

என்று எழுதிக் கொடுத்தார் .

அக்கடிதத்தை, கட்சியின் முதலாளிகள் தட்டச்சு  செய்து  ரூசுவெல்டின் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். ரூசுவேல்ட் எழுதிய கடிதத்தில் டக்ளஸ் பெயர் முதலில் இருந்தது, ஆனால் தட்டச்சு செய்கையில், ட்ரூமன் பெயர் மாற்றப்பட்டது . இதனை பின்னாளில் ரூசுவேல்டின் உதவியாளராக இருந்து தட்டச்சு செய்த  க்ரேஸ் ட்ருலி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்
மறுநாள் ஹனேகம் மற்றும் வாக்கர் உள்ளிட்ட கட்சியின் முதலாளிகள் வாலேஸ் மற்றும், ஜிம்மி பேரன்ஸ் இடம் கூடத்தின் முடிவு குறித்து பேசினர். ரூசுவெல்டே நேராக வந்து சொன்னாலொழிய தாங்கள் போட்டியிலிருந்து விலகப்போவதில்லை என்று இருவரும் தெரிவித்துவிட்டனர் . வாலேசை போட்டியில் இருந்து வெளியேற்றுகிற திட்டத்திற்கு ரூசுவெல்டும் உடந்தை என்று அறிந்திருக்கவில்லை வாலேஸ். தன்னுடைய நல்லவர் வேஷத்தை காப்பாற்றிக்கொள்ள இருவரிடமும் தனித்தனியே ஆதரவு தெரிவிப்பது போன்றே நடந்து கொண்டார்.
வாலேசிடம்,
“தேர்தல் நாளன்று நான் கலந்து கொண்டால் உனக்கு தான் வாக்களிப்பேன்”

என்றும்,

ஜிம்மி பேர்ன்சிடம்,

“பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் நீதான் மிக பொருத்தமான வேட்பாளன். நீ மட்டும் போட்டியிட்டால் நிச்சயம் வெல்வாய். அதனால் போட்டியிலிருந்து விலகாதே”

என்றும் இரட்டை வாக்குறுதி அளித்தார் ரூசுவல்ட்.
Roosevelt_Truman_Wallace

ஒரு வழியாக வாலேசுக்கு எதிராக ட்ருமன் மற்றும் ஜிம்மி பேர்ன்ஸ்சை களமிறக்கிவிட்டனர் ஜனநாயக கட்சி முதலாளிகள். ஆனாலும் வாலேசுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் இவிருவருக்குமிடையில் வீணாகிவிடக்கூடதே என்கிற அச்சத்தில் யாரேனும் ஒருவரை கழட்டிவிட முடிவுசெய்தனர். தொழிற்சங்கத்தலைவரான ஹில்மனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . ஹில்மனோ வலேசையே தான் ஆதரிப்பதாக தெரிவித்தார். ஆனால் வேறுவழி இல்லாமல் போனால், தொழிலாளர் விரோத ஜிம்மி பேர்ன்சைத்தவிர வேறு யாரையும் ஆதரிக்கத்தயார் என்று உறுதி அளித்தார் .

ஜனநாயகக்கட்சியின் மாநாட்டுத் துவக்கம்:

ஜனநாயக கட்சியின் மாநாடு துவங்கியது . மாநாட்டிற்கு வந்தவர்களிடம் கேலப் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 65% பேர் வாலேசிற்கு ஆதரவு தெரிவித்தனர்.3% பேர் ஜிம்மி பேர்ன்சிர்க்கும் , 2% பேர் ட்ருமனிற்கும் ஆதரவு தெரிவித்தனர் .

“வாலேஸ்! சமமான வேலைக்கு பாலினம், நிறம் தாண்டி எல்லோரும் சமவூதியம் பெறுகிற வருங்காலம் உருவாகட்டும்”
என்று தொழிற்சங்கத்தலைவர் முர்ரே வாலேசை வரவேற்றார்.
மாநாட்டிற்கு வருக தந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், “வாலேஸ்! வாலேஸ்!” என்று விண்ணதிர முழங்கினர். வாலேசிற்கு ஆதரவான அலை பெரியளவில் எழும்பியிருப்பது கண்டு கட்சியின் முதலாளிகள் பதறினர். எப்பாடுபட்டாவது ஓட்டெடுப்பை ஒருநாள் தள்ளிப்போடுமாறு மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய சேமுவேல் ஜாக்ஸனிடம் ஆணையிட்டனர் முதலாளிகள். அவரும் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் கேட்காமலேயே, “ஓட்டெடுப்பு ஒருமனதாக ஒருநாளைக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று அறிவித்து பிரதிநிதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அன்றிரவு கட்சியின் முதலாளிகள் இரண்டு குழுவாக பிரிந்து வாலேசின் வெற்றிவாய்ப்பினை பறிக்கிற பணியில் ஈடுபட முடிவு செய்தனர். ஒரு குழு, ரூசுவல்டின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ட்ரூமன் தான் என்று அவரெழுதிய கடிதத்தை மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் காண்பித்து ட்ரூமனிற்கு ஆதரவு திரட்டினர். மற்றொரு குழுவோ, ஒவ்வொரு மாநிலத்தின் முக்கியமான தலைவர்களிடமும் பேரங்களைத் துவக்கினர். ஏராளமான பதவிகள் வழங்கப்படும் என்கிற அளவில்லாத வாக்குறுதிகளை அள்ளிவீசினர். அமெரிக்க டாலர் பரிமாற்றங்களும் கணக்கில்லாமல் நடந்தன. கட்சியின் முதலாளிகளில் ஒருவர்கூட அன்றிரவு தூங்கவில்லை. விடிய விடிய வியாபாரத்தை நடத்தினார்கள்.
மறுநாள் காலை ஓட்டெடுப்பும் நடந்தது. வாலேஸ் 429 வாக்குகளும், ட்ரூமன் 319 வாக்குகளும் பெற்றனர். பெரும்பான்மை ஓட்டுகள் வாங்கியிருந்தாலும், வாலேசின் வெற்றிக்கு மேலும் 159 வாக்குகள் தேவைப்பட்டன. முடிவு எட்டப்படாததால், இரண்டாம் கட்ட தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இடையில், அயல்நாட்டு தூதர் உள்ளிட்ட பதவிகள், பெரும்பணம் போன்று வாக்குறுதிகள் மறைமுகமாக நினைவூட்டப்பட்டன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், ட்ரூமன் 1031 வாக்குகளும், வாலேஸ் 105 வாக்குகளும் பெற்றனர். ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ துணையதிபர் வேட்பாளராக ட்ரூமன் அறிவிக்கப்பட்டார்.

“இனி வரும் நூற்றாண்டு பாட்டாளிகளின் நூற்றாண்டு” என்று முழங்கிய ஒரு மனிதரை பணம், அதிகாரம் உள்ளிட்ட அனைத்துவகை ஆயுதங்களையும் பயன்படுத்தி அரசியலின் மையப்பகுதியிலிருந்து வெளியேற்றினர் பெருமுதலாளிகள். கட்சிகள் இரண்டாயினும், அவற்றின் வேட்பாளரைத் தேர்வுசெய்து அரியணையில் அமர்த்தி சட்டதிட்டங்கள் இயற்றுவதுவரை அனைத்தும் அமெரிக்க முதலாளிவர்க்கம்தான் என்பதனை நாம் விளங்கிக்கொள்வதற்கு வாலேசின் தோல்வியே மிகப்பெரிய உதாரணம். இதனையே உண்மையான ஜனநாயகம் என்று உலகமக்களை நம்பவைக்கிற முயற்சியில் எப்போதும் தொடர்ந்து இயங்கிவருகிறார்கள்.

ஒரு வேளை வாலேஸ் வெற்றிபெற்று பிற்காலத்தில் அமெரிக்க அதிபராகியிருந்தால், மூன்றாம் உலக நாடுகளை அழிக்க நினைக்காமல் நட்பு பாராட்டியிருக்கக்கூடும். யாருக்கும் தெரியாதவராக இருந்த ட்ரூமன் துணையதிபர் வேட்பாளராகி, துணையதிபராகி, பின்னாளில் அமெரிக்க அதிபராகவும் பதவிவகித்தார். யாரந்த ட்ரூமன்? என்னவெல்லாம் செய்தார் அவர்?

Related Posts