அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 3)

அமெரிக்காவிலும் ஸ்டாலின் புகழ்:

stalin

ஸ்டாலினின் படத்தை அட்டையில் தாங்கி வந்தை டைம் பத்திரிக்கை

சோவியத்தின்  ஸ்டாலின்க்ராடில் ஜெர்மனியை சரணடைய வைத்த பின்பு, ஸ்டாலினிற்கு உலக அளவில் ஆதரவு பெருகியது. அஃது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. சோவியத்தைத் தொழில் மயமாக்கியதிலும், புதுமையான யுத்திகளால் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்கியத்திலும் ஸ்டாலினின் பங்கைப் பாராட்டியெழுதின அமெரிக்கப் பத்திரிகைகள். 1942 -இன் சிறந்த மனிதராக ஸ்டாலினை ‘டைம்ஸ்’ அறிவித்தது. மற்றுமொரு பத்திரிக்கையான ‘லைப்’ கூட அவரை வெகுவாகப் பாராட்டியது. சோவியத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திராத  அமெரிக்க அரசு கூடத் தன்னுடைய படைகளை அனுப்பி சோவியத்திற்கு உதவப்போவதாக அறிவித்தது. ஆனால் அது  வெறும் அறிவிப்பாகவே பல ஆண்டுகள் நீடித்தது வேறு கதை.

சோவியத்திற்குள்ளும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் நுழைந்து ஆக்கிரமிப்பு நடத்திய ஜெர்மனியை  சோவியத்தில் சரணடைய வைத்தால் மட்டும் போதாது, ஜெர்மனியிலேயே வீழ்த்தி ஹிட்லரை  சரணடைய வைத்தால்தான் உண்மையான வெற்றி என்பதை ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தார். ஆனால் இதனைக் கண்டும் காணாமல் அமெரிக்காவும், பிரிட்டனும், ஆப்ரிக்காவின் வடக்கே இத்தாலியின் சிசிலி தீவை ஆக்கிரமிக்கப் புறப்பட்டன. மேலும் தெற்காசியாவிலுள்ள காலனிகளைத் தனது வசம் வைத்துக்கொண்டிருக்க, அக்கடல் வழிப்பாதை பிரிட்டனிற்கு அவசியமாக இருந்தது. சிசிலியில் இத்தாலி தோற்றிருந்தாலும், அஃது அவர்களுக்கு மிகபெரிய இழப்பாகவோ தோல்வியாகவோ இருக்கவில்லை.

மறுபுறம் சோவியத்தோ, பலம் பொருந்திய ஜெர்மனியை எதிர்த்துப் போலந்தில் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தது. போலந்து வழியாகத்தான் இரண்டுமுறையும் சோவியத்திற்குள் ஜெர்மனியப்படைகள் நுழைந்தன. ஆகையால் என்ன விலை கொடுத்தேனும் போலந்தை வென்று அங்கு ஒரு நட்பரசு அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சோவியத். ஒட்டு மொத்த இரண்டாம் உலகப் போரிலும், போலந்து மக்களைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்கிற அளவிற்கு அந்தத் தேசம் முழுமையும் சேதத்திற்குள்ளாகியது. 30 லட்சம் யூதர்கள் உட்பட மொத்தம் 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். அங்கு ஜெர்மன் படைகளால் தோற்றுவிக்கப்பட்ட கொடுரமான கொலைகாரக் கேம்ப்புகள் சோவியத் படைகளால் உலகுக்கு வெளிக்கொண்டுவரப்பட்டன. பின்னர் ரொமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, செச்கோஸ்லோவோக்கியா, யுகோஸ்லாவியா என ஜெர்மனியின் தோல்வியும் சோவியத்தின் வெற்றியும் ஒரு சேர தொடர்ந்தது. ஜெர்மனியும் அவ்வளவு எளிதில் தோற்றுவிடாமல் மிகக்கடினமாகப் போராடியது. பார்சா, பூடாபெஸ்ட், வியென்னா போன்ற பல நகரங்களை ஜெர்மனியிடமிருந்து மீட்டு விடுதலைசெய்ய 10 லட்சம் படைவீரர்களை சோவியத் இழக்கவேண்டியிருந்தது.

ஏறத்தாழ வெற்றியை சோவியத் நெருங்கி உறுதியாகிவிட்ட சமயத்தில்தான் பல ஆண்டுகளாக தன்னுடைய படைகளை அனுப்புவதாக  அறிவித்துக் கொண்டிருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களின் படைகளை அனுப்பின. சோவியத்தின் கரம் உலக அரங்கில் உயர்ந்து கொண்டிருக்கையில், அமெரிக்க உள்நாட்டு ஜனநாயகத்தில் பெரியளவில் குழப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்தன.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தொழிலாளர் வேலைநிறுத்தங்கள்:

ஒரு போரை  வைத்து தங்களுடைய இலாபத்தினைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்ள முடியும் என்கிற யுத்தியை அமெரிக்கப் பெருமுதலாளிகள் கண்டறிந்தது இரண்டாம் உலகப்போரில் தான். போர் என்று சொல்லி எல்லாப் பொருட்களின் விலையையும் ஏற்றினர்; போருக்குத் தேவையான பொருட்கள் விற்பது, கடன் வழங்குவது  எனப் பண வரவைப் பெருக்கினர்; போர்ச் சூழலால் நிதிநெருக்கடி எனச் சொல்லி தொழிலாளர்களின் எண்ணிக்கையையும், ஊதியத்தையும் இன்ன பிற சலுகைகளையும் குறைத்தனர்; இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்தான் அமெரிக்காவில் பெரிய அளவிலான தொழிலாளர் போராட்டமெல்லாம் நடத்தப்பட்டது. 10 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.1940 ல் 6 பில்லியன் டாலராக இருந்த பெருநிறுவனங்களின் இலாபம், 1944 இல் இருமடங்காக உயர்ந்தது. ஆனால் தொழிலாளர்களின் ஊதியமோ பாதிக்கும் கீழே குறைந்தது. அமெரிக்காவின் வடக்கில் போர் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாகின. தெற்கிலிருந்து ஏராளமான மக்கள் அத்தொழிற்சாலைகளுக்கு வேலை தேடி இடம் பெயர்ந்தனர். அதனால் கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் ஓரிடத்தில் கூடி வேலை பார்க்க வேண்டிய நிலையும், அதனைத்தொடர்ந்து இனக்கலவரங்களும் நடந்தன.

“இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், ஹிரோஹிடோவும் (ஜப்பான் மன்னர் ) வென்றால் கூட பரவாயில்லை ஆனால் இந்த கறுப்பின மக்களோடு சரிக்கு சமமாக வேலை பார்க்க முடியாது”

என்றெல்லாம் வலதுசாரி வெள்ளையின அமைப்புகள் குரலெழுப்பி குழப்பம் விளைவித்தன. அப்போது நடந்த கலவரங்களால் 25 கறுப்பின மக்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். துணையதிபர் ஹென்றி வாலேஸ், கலவரம் நடந்த இடங்களுக்குச் சென்று அமைதி மீண்டுவர கடுமையாக முயற்சித்தார்.

அமெரிக்க துணை அதிபரான ஹென்றி வாலேஸ், தொழிலாளர்களுக்குச் சாதகமாகவே பேசிவந்தது, அமெரிக்க முதலாளிகளுக்கு எதிரானவராக மாற்றியது. தொழிற்சங்கத்தை அடக்கி ஒடுக்கி, வேலைநிறுத்தங்கள் செய்யாமல் தடுப்பதற்கு முதலாளிகளின் உற்ற தோழனான ஜிம்மி பேர்ன்சைப் போன்றதொருவர் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டுமென்று அமெரிக்க முதலாளிகள் விரும்பினர்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்தல்:

1944 ஜூலை மாதத்தில் அமெரிக்க மக்களால்கூட மறக்கப்பட்ட, உலக வரலாற்றின் பாதையையே  மாற்றியமைத்த நிகழ்வொன்று நடந்தது. அதுதான், ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிடப்போகிற அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதற்காகக் கூடிய மாநாடு. அமெரிக்க வரலாற்றிலேயே

Henry-A.-Wallace-Townsend

நான்காவது முறை அதிபர் வேட்பாளராக ரூசுவெல்ட் தேர்ந்தெடுக்கபடுவார் என்பதில் அப்போது எந்த ஐயமும் இருக்கவில்லை. அந்த அளவிற்கு புகழ்பெற்ற அதிபராகத் திகழ்ந்தார் ரூசுவெல்ட். அவரை எதிர்க்கி

ற பலமும் திட்டமும் யாரிடமும் இல்லாமலும் இருந்தது. அதனால் கட்சியில் எல்லோருடைய பார்வையும் துணை அதிபர் பதவியின் மீது தான் இருந்தது. ரூசுவெல்ட்டின் உடல்நிலையும் மிக மோசமாகிக் கொண்டிருந்ததால், துணை அதிபரானாலே அடுத்த அதிபராகிவிடலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

அப்போதைய  துணை அதிபராக இருந்த ஹென்றி வாலேஸ்தான் மீண்டும் துணை அதிபர் வேட்பாளராக வேண்டும் என்பது கட்சிக்குள்ளும் வெளியேயும், பரவலான மக்கள் கருத்தாகவும் இருந்தது. ரூசுவல்ட் அளவிற்கு அமெரிக்காவின் பிரபலமான மனிதராக திகழ்ந்தார் வாலேஸ்.

“இனி வருகிற நூற்றாண்டு அமெரிக்காவின் நூற்றாண்டாக இருக்கப் போகிறது என சிலர் பேசி வருகிறார்கள். ஆனால் உலகமே போர்களிலிருந்து மீண்டு வரவேண்டிய, வரக்கூடிய பாட்டாளிகளின் நூற்றாண்டாக மாற வேண்டும். இராணுவ ஏகாதிபத்தியமோ பொருளாதார ஏகாதிபத்தியமோ உலகில இனி இருக்கக் கூடாது. அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, லத்தின் அமெரிக்கப் புரட்சி, ரசியப் புரட்சி என கடந்த 150 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிற ஒவ்வொரு புரட்சியும் மக்களுக்கான விடுதலையைக் கோரும்  புரட்சிகள்.”

சர்வதேச மக்கள் புரட்சியின் அவசியத்தையும், காலனிய ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தேவையையும் விளக்கினார் வாலேஸ். அன்றைய காலகட்டத்தில் அவருடைய மக்கள் ஆதரவு நிலையினை, தீவிர இடதுசாரி கருத்துக்களாகவே எல்லோரும் பார்த்தனர். சர்ச்சில் கூட வாலேசை கண்காணிப்பதற்காக அமெரிக்கவிலிருந்த தனது ஒற்றர் படையினை பணித்தார். ஆனால் வாலேசோ, சர்ச்சிலையும் பிரிட்டனின் ஏகாதிபத்திய எண்ணங்களையும் வெளிப்படையாகவே விமர்சித்தார். வாலேசின் ஏகாதிபத்திய எதிர்ப்புநிலை உலகம் முழுக்க பெரும் வரவேற்பினை பெற்றது.

1943 மார்ச்சில் தென் அமெரிக்காவின் (லத்தின் அமெரிக்காவின்) பல நாடுகளுக்குச் சென்று ஜெர்மனிக்கு எதிராக ஆதரவு திரட்டினார் வாலேஸ். அவர் சென்ற இடமெல்லாம் லட்சக் கணக்கான மக்கள் கூடி வரவேற்றனர். லத்தின் அமெரிக்காவில் 12 நாடுகளை ஜெர்மெனிக்கு எதிராக திரட்டிய பின்னரே நாடு திரும்பினார். ரூசுவல்டிற்குப் பிறகு அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என்ற கேள்வியுடன் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 57% ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், வாலேசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

மக்களின், கட்சி உறுப்பினர்களின் அன்பை பெற்றிருந்தாலும், ஜனநாயகக் கட்சியின் தலைவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை.

எட்வின் பாலே –  கட்சியின் பொருளாளர்
ஹன்னேகன்   –  கட்சித்தலைவர்
பிரான்க்  –  அஞ்சல் துறைத் தலைவர்
ஜார்ஜ் ஆலன் – கட்சியின் செயலாளர்
எட்வர்ட் – நியூயார்க் அரசியல் தலைவர்

கட்சியின் பொருளாளரும், எண்ணெய் நிறுவன முதலாளியும் மிகப்பெரிய  கோடீஸ்வரருமான எட்வின் பாலே, தொழிற்சங்கங்கள் உருவாகாமல் தடுப்பதையும், உருவானவற்றை  நசுக்குவதையும் தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றுவதையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வந்த ஜிம்மி பேர்ன்ஸ் ஆகியோர் வாலேசை மீண்டும் ஒரு முறை துணையதிபராக விடக்கூடாதென அவர்களுக்குள் முடிவெடுத்து அதற்கான வேலைகளை துவங்கினர்.

அதற்கேற்றாற்போல் பெருமுதலாளிகளின் உற்ற தோழனான ஜிம்மி பேர்ன்ஸ் வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் பெறத்துவங்கினார். போர் நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை எடுக்க அமைக்கப்பட்டிருந்த குழுவிலிருந்து வாலேஸ் நீக்கப்பட்டு ஜிம்மி பேர்ன்ஸ் நியமிக்கப்படுகிறார். வெள்ளை மாளிகையில் எந்த வேலை நடைபெற வேண்டுமென்றாலும் ஜிம்மி பேர்ன்ஸ் நினைத்தால் போதும் என்கிற அளவிற்கு அதிகாரம் பெற்றிருந்தார் பேர்ன்ஸ்.

தொழிலாளர் உரிமைகளை பறித்தும், தொழிற்சங்கங்களை உடைத்தும்,  தன்னுடைய முதலாளித்துவ கொள்கையை செவ்வனே செய்து வந்து பேர்ன்சை தொழிற்சங்கத் தலைவர்களான சிட்னி ஹில்மன் மற்றும் ஃபில் முரே ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். மீண்டும் வாலேசே துணை அதிபராக வருவதையே அவர்கள் விரும்பினர்.

ஆனால் வாலேசை வேட்பாளராக அறிவித்தால் கட்சிக்குள் பிளவு ஏற்படுமென்றும், அதனால் தேர்தலில் தோல்வியே மிஞ்சுமென்றும் ரூசுவெல்டிடம் சொல்லி வைத்தனர் ஜனநாயகக் கட்சியின் முதலாளிகள் (தலைவர்கள்). ரூசுவெல்டின் மனைவி இலியானா ரூசுவெல்டும் வாலேசுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால் ரூசுவல்டோ பிடிகொடுத்து பேசாமல் நழுவினார்.

தனக்குப் பின்னால் நடக்கிற சதியினை சிறிதும் அறியாத வாலேசோ, தன்னுடைய பணியினை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்…

முதலாளிகள் என்னவெல்லாம் திட்டம் தீட்டினர்?

தேர்தல் என்னவாயிற்று?

வாலேஸ் வென்றாரா?

(தொடரும்…)

பாகம்: 1 I 2

Related Posts