அரசியல் சமூகம்

நடைமுறையில் உள்ள சாதியமைப்பையும், அதன் ஒடுக்குமுறையையும் புரிந்துகொள்வது

– ஆனந்த் டெல்டும்ப்டே

(மாற்று – இணைய இதழ் தன் முதல் ஆண்டை நிறைவு செய்திருக்கும் இந்தத் தருணத்தில் – நடப்பில் உள்ள சாதியையும், அதன் ஓடுக்குதலையும் புரிந்துகொண்டு வெற்றிகொள்ள உதவும், அர்த்தச் செரிவுள்ள கட்டுரையை வழங்குகிறோம்)

 

நான் கீழ்க்கண்ட ஐந்து கருத்துக்களை முதன்லில் முன்வைக்கிறேன்.

 • மரபான வர்ணாசிரம அமைப்பு ஏறக்குறைய வழக்கொழிந்து போய்விட்டது
 • தற்போது இருப்பில் இருக்கும் சாதிய அமைப்பு என்பது சாதிய கட்டமைப்பின் கீழ்மட்டத்தில் அதிக அழுத்தத்தோடு, சாதியுற்ற மற்றும் சாதியற்றவர்கள் என்ற பிரிவுகளை உருவாக்குகின்றது.
 • சாதி என்பது நகர்புறங்களை பொறுத்தவரை அனுகூலங்களும், சலுகைகளாகவுமே இருக்கின்றது. அதன் உள்ளார்ந்த பயங்கரம் என்பது பரவலான கிராமப்புறங்களில் சாதிய ஒடுக்குமுறைகளாகவே வெளிப்படுகின்றன.
 • சாதிய ஒடுக்குமுறைகள் என்பதுதான் சாதி அமைப்பின் இயங்குதலை கண்டறியும் ஒரு எளிய வழி. அதன் வழியாகத்தான் சரியான அளவுகோல்களை உருவாக்கி, சாதியின் சமகால தன்மை மற்றும் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அவற்றைக் களைவதன் மூலம்தான் சாதியின் மிச்சங்களை அழித்தொழிக்க முடியும்.
 • சமகால சாதி அமைப்பை புரிந்து கொள்வதற்கு மேலும் கடினமான வடிவம் கொடுப்பதென்பது மேலும் குழப்பத்தை உருவாக்குவதும், குழப்பங்களை உருவாக்குவதோடு, ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் செயலாகத்தான் அது முடியும்.

காலனிய காலத்திலேயே சாதி குறித்து அறிவுஜீவிகளுக்கு அக்கறை இருந்திருந்தாலும், சாதி ஒழிப்பு போராட்டத்தின் வரலாறு நெடியதாக இருந்தாலும், சாதியின் இயங்குதல் குறித்து புரிந்து கொள்ளும் விவாதங்கள் என்னவோ, முந்தைய ‘மாதிரி’யிலிருந்து பெரிய அளவில் வேறுபடாது, சாதி என்பது இந்து சாஸ்திரங்களிலிருந்து மரபு தொடர்ச்சி என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில், நவீனத்தின் அழுத்தத்தில் சாதி அமைப்பு தகர்ந்து போகும் என்று எதிர்ப்பார்த்த மார்க்ஸ் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பையும், இன்னும் பலரின் எதிர்ப்பார்ப்பையுமே சாதி என்னும் இந்த கொடிய அமைப்பு முறை மீறிவிடுகின்றது என்று உள்ளார்ந்து சிலர் மகிழ்ச்சியடைவதை நம்மால் அனுபவத்தில் உணர முடிகின்றது. இப்படியான புரிதல்கள் மற்றும் மகிழ்ச்சி என்பது சிறிதும் பயனற்றவையாக இருப்பதோடு, அறிவுஜீவி முகமூடிக்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்குமே பயன்படும்.

முதலாவதாக , சாதிப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து போராடுவதற்காக, இதுபோன்ற ஒழுங்கற்ற அமைப்பை பிரதான முரண்பாடுகளை கொண்ட இரண்டு முகாம்களாக பிரிப்பதென்பது இயலாத காரியமெல்லாம் இல்லை. அப்படி பிரித்து அடையாளம் காண்பதென்பது சாதி ஒழிப்பிற்கான தீர்வாக இருப்பதற்கு அநேக சாத்தியங்கள் இருக்கின்றன.

இரண்டாவதாக, சாதி என்பதற்கு மதத்தின் அங்கீகாரம் இருப்பதால், இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்ற தவறான வழிகாட்டுதலுக்கு ஒருவர் செல்லும் கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.

மூன்றாவதாக, இந்த தொடர்ச்சியானது, கணக்கில்லாத சாதிகளை படிநிலையில் இருத்தி வைப்பதோடு, அவற்றுக்கிடையே தொடர் மோதல்களை ஊக்குவிப்பதோடு, தன்னை தானே தக்கவைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் சாதி இருக்கின்றது.

நான்காவதாக, இப்படியான சிக்கல்களை எதிர்கொள்வதால் நஞ்சு பரவியிருக்கும் இந்த அமைப்பை தகர்க்க தேவைப்படும் புரட்சிகர திசையில் பயணிப்பதற்கு மாறாக, ’போகாத ஊருக்கு வழி’ தேடும் செயலாக மாற்றப்பட்டு விடுகின்றது.

சாதி என்பது அடிப்படையிலேயே படிநிலை ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டிருப்பதால் பிரிவினை எண்ணத்தை பரவலாக விதைத்துவிடுகின்றது. வர்க்கங்களை பிரித்து, குழு மனப்பான்மையையும், எதிர்வினையாற்றும் உளவியலையும் மட்டும் வளர்த்துவிடுவதால் எந்தவிதமான முற்போக்கு தன்மையிலான போராட்டங்களுக்கு இவர்களை பயன்படுத்த முடியாததாகின்றது.

அதற்காக, சாதியை அடிப்படையாக கொண்டு கடந்த நூற்றாண்டில் நடந்த போராட்டங்கள் முற்போக்கு தன்மை சிறிதும் கொண்டிருந்தது அல்ல என்று கருதத் தேவையில்லை. அந்த போராட்டங்கள் முற்போக்கு தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு சாதியின் கொடுங்கரங்களால் கடும் துன்பத்திற்குள்ளான இந்தியாவின் சூத்திர, ஆதி-சூத்திர மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தியதுதான். ஆனால், காலப்போக்கில், அது சாதிய உணர்வையும், சாதிய அடையாளங்களையும் மீட்டுருவாக்கம் செய்வதாக மாறிவிட்டது, சாதி ஒழிப்பு என்ற தன்னுடைய கொள்கையிலிருந்து முற்றிலும் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

 சாதியின் சாரத்தை தொடக்க காலங்களில் ஓரளவு சரியாக புரிந்து கொண்டதும், அதன் போதாமையை நிவர்த்திச் செய்ய பின்னாட்களில் முயற்சி செய்யாமல் போனதும்தான் இவர்களைப் பற்றிய எனது இந்த ஆய்வு முடிவுக்கு காரணம்.

சாதியை பற்றிய புரிதல்களின் வரலாற்றை சிறிது ஆய்ந்தோமானால், ஆய்வாளரின் நோக்கத்தைப் பொறுத்து நமக்கு பல்வேறு விதமான புரிதல்கள் உருவாகக் கூடும்.

காலனிய ஆட்சியாளர்களை பொறுத்தவரை சாதியின் பிளவுப்படுத்தும் தன்மையை கொண்டு இந்தியா என்பது தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு குழுக்களின் கதம்பம் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கினர். 1869 –ம் ஆண்டு மாவட்ட ரீதியான தரவுகள், 1871லிருந்து பத்தாண்டுக்கு ஒருமுறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி மற்றும் பழங்குடியின பட்டியல், 1891 மாகாணரீதியான தரவுகள் போன்றவற்றின் மூலம் சாதிய உணர்வுநிலையை மீட்டுருவாக்கம் செய்தனர் ஆங்கிலேயர்கள்.

பார்ப்பன எதிர்ப்பு இயக்கமோ இன்றைய பார்ப்பனர்களின் முன்னோர்களான ஆரிய படையெடுப்பாளர்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தும் முயற்சிதான் சாதி என்பதாக புரிந்து கொண்டதோடு, பார்ப்பனர்களை எதிர்தரப்பில் நிறுத்தி அவர்களின் பண்பாட்டை நிராகரிக்கக் கோரியது.

குறிப்பாக அம்பேத்கர் தலைமையிலான தலித் இயக்கமோ, பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சாதிபற்றிய இனவாத புரிதலை நிராகரித்ததோடு, தனது முதன்மை எதிரியாக சுரண்டும் அமைப்பாக, முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும்தான் கருதியது. ஆனால், இறுதியாக சாதி என்பது இந்து மத பண்பாட்டின் தனித்தன்மையான அங்கம் என்பதாகவும், இந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டால் சாதியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தடைந்தது.

கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில், சாதி என்பது நிலவுடமையின் வெளிப்பாடுதான், அதாவது மேற்கட்டுமானம் என்று கருதினர். பொருளாதார அடிக்கட்டுமானத்தை புரட்சியின் மூலம் தகர்ப்பதன் மூலம் இலகுவாக இந்த மேற்கட்டுமானத்தை ஒழித்துவிடலாம் என்று நம்பினர்.

பஹுஜன் அல்லது மூல்நிவாசிஸிகளை(மாயாவதி போன்ற) பொறுத்தவரையில் சாதி என்பது 85% மக்களை திரட்டி (நாடாளுமன்ற) அதிகாரத்தை கைபற்றி, 15% ஆதிக்கச்சாதிகளை வீழ்த்த பயன்படும் முக்கியமான கருவியாக கருதினர்.

 இந்த கருத்துருக்கள் அனைத்துமே ஒருவகையான குழப்பத்தை உண்டு பண்ணுவதோடு, சாதியின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ள தவறி விடுகின்றன. இதன் காரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கமோ, தலித் இயக்கமோ ஆதிக்க சாதிகளின் கையில் இருக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு கொஞ்சம் நெருக்கடியை கொடுப்பது போல தோன்றினாலும், சாதிய கொடுமையால் துன்புறுவதை கொஞ்சம் குறைத்தாலும், இந்த இயக்கங்களால் இந்த தீமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. மாறாக, சாதிகள் நிலைபெற்றதோடு, அதன் ஒடுக்கும் உள்ளடக்கத்தை தன்னகத்தே கூடுதலாக வளர்த்திருக்கின்றது.

வழக்கமான புரிதல்களுக்கு மாறாக, சாதி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுதலுக்குட்பட்டே வந்திருக்கின்றது. அதேபோல, சாதிய அமைப்பானது காலனிய ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டதையும் (சிறிது ஆய்ந்தால் ) ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். காலனிய காலத்திற்கு முந்தைய மனதையும் கட்டுப்படுத்திய இந்தியச் சமூகத்தில் குடும்பம், ரத்த உறவு போன்ற நிறுவனங்கள் மதம் மற்றும் சாதிய அடையாளங்களோடு பிணைந்திருந்த நிலை மேற்கத்திய தாரளமயம், காலனிய கலாச்சாரம் மற்றும் அதன் கருத்தாக்கங்களின் விளைவால் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகின.

வாரன் ஹாஸ்டிங் என்பவர் இந்தியாவிற்கு முதல் கவர்னர் ஜெனரலாக ஆங்கிலேய அரசால் அனுப்பப்பட்டார், அவர் கொண்டு வந்த தொடக்க கால சீர்திருத்தங்களான, 1773 ஆண்டு ஒழுங்குமுறை சட்டம், நிலத்தின் மீதான தனியார் உடமை சட்டம், அவர்களுக்கான மத நூல்களை அடிப்படையாக கொண்டு இந்து/முஸ்லீம்களுக்கான சட்டம் போன்றவை பரவலாக இந்திய உயர்சாதியினரை பலப்படுத்தியது.

ஒரே அரசியல்-நிர்வாக அமைப்பாக ஒன்றிணைத்து குடிமுறை பணி, இராணுவம், நீதுத்துறை ஆகிய துறைகளையும் ஒருங்கிணைந்ததாக மாற்றி இந்தியாவை ஒருங்கிணைத்தது இந்தியாவின் சமூக – பொருளாதார அமைப்பின் மீது பல்வேறு வகையில் தாக்கம் செலுத்தியது. ஒரே கிரிமினல் சட்டம் பஞ்சாயத்து அமைப்பை பலவீனமடையச் செய்தது. காலனிய முதலாளித்துவம் இதுபோன்ற பிற மாற்றங்களை கொண்டு வந்ததோடு சாதிய அமைப்பில் பாரிய மாற்றத்தை கொண்டு வந்தது.

ஐரோப்பாவை போலல்லாமல் இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு நிலவுடமையோடு போட்டி போட தேவை ஏற்படவில்லை. மாறாக, தனது விநியோக சங்கிலியின் முக்கிய கூட்டாளியாக அதை கருதிற்று. தொடக்ககால இந்திய முதலாளித்துவ வர்க்கம் பார்ப்பன பனியாக்களையே முதன்மையாக கொண்டிருந்தது, இந்த திரள் சாதியின் முக்கிய அம்சமான வழிவழியாக வரும் சடங்காச்சார மனப்பான்மையை இழந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களின் சாதிய பண்பாடு மற்றும் சடங்குகளின் மீது முதலாளித்துவ கலாச்சாரம் கடுமையான தாக்குதலை தொடுத்ததோடு இந்த சாதிகளின் சடங்கு மனப்பான்மையை களைந்து அவர்களுக்குள்ளேயே ஒரே சமூகமாக திரளும் திசையை நோக்கி தள்ளியது.

தொழில்முனைவோர் மற்றும் மேலாளர்களை கொண்ட பார்ப்பன, பனியாக்களோடு வணிக சாதிகளான பார்ஸிஸ், கோஜாஸ் மற்றும் போஹ்ராஸ் உள்ளிட்ட சாதிகளும் சாதிக்குரிய மரபுவழி பண்பை கடந்து வந்ததோடு, கிட்டத்தட்ட ஒரே வர்க்கமாக உருமாறும் நிலைக்கு வந்தனர். ஆனால், உழைக்கும் மக்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு ‘எல்லாம் தலைவிதி ’ என்று கட்டுப்படுத்தி வைக்கவும், அவர்களிடையே பிளவுப்பான்மையை ஊக்குவிப்பதன் மூலம் கீழ்மட்ட சாதிகளில் பிளவுகளை இருத்தி வைத்திருப்பதை தங்களுடைய நிலவுடமை சகாக்களை குளிர்விப்பதற்காக இந்த முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து செய்து வந்தது.

இந்திய விடுதலைக்கு பிறகு, வளர்ந்து இந்தியாவில் பூர்சுவாத்தன்மையுடைய பண்ணை வர்க்கம் நவீன அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது. அந்த அரசியல் அமைப்புச் சட்டமானது சாதிய அமைப்பின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் தலித் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கான விரிவான அமைப்புகளை உள்ளடக்கியிருந்தது. இந்த அமைப்பிற்குள் நவீனத்தை அனுமதிப்பதன் மூலம் நிலவுடமை வர்க்கம் தனக்கு நலன் பயக்கும் என்று கருதிற்று.

நிலச்சீர்திருத்தத்தையும் பசுமை புரட்சியையும் உள்ளடக்கிய நேருவின் நவீனப்படுத்தும் திட்டமானது, விவசாயத்தை மரபாக மேற்கொண்டு வந்த சூத்திர சாதியினரை நிலத்திற்கு உரிமையாளர்களாக ஆக்கி நிறைவான மகசூலை அவர்களுடையதாக்கி அவர்களை வளப்படுத்தியது. உயர்சாதி நிலவுடமையாளர்களோ நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்ட நிலையில் ’வளமான’ சூத்திர விவசாயிகளின் அதிகாரத்தின் கீழ் கிராமங்களை விட்டுச் சென்றனர். இடைநிலை சூத்திர சாதிகளின் ஒருங்கிணைந்த எண்ணிக்கை பெரும்பான்மையும், பொருளாதார உயர்வும் இரண்டும் இணைந்து அரசியல் அரங்கில் அவர்களை முக்கியமான பங்காளிகளாக்கியது.

சாதியை பொருத்தமட்டில், கிராமப்புறங்களில் பணம் சார் பொருளாதாரத்தையும், விவசாய இடுபொருள், விளைபொருள் ஆகியவற்றிற்கான சந்தையையும் வளர்த்ததன் மூலம் பசுமை புரட்சியானது முதலாளித்துவ உறவை உருவாக்கி வளர்த்தது. தலித் மக்களை பொறுத்தவரை குலத்தொழில் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஒழித்ததை ஆக்கப்பூர்வமான மாற்றமாக பார்த்தாலும், மறுபுறம் அவர்களின் நீண்ட கால கைத்தொழில்களையும் அழித்தது. எந்தவிதமான மாற்றுமில்லாமல், தலித் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நிலமற்ற கூலித் தொழிலாளிகளாக சூத்திரர்களின் வேளாண் நிலங்களில் பணி புரியும் கட்டாயத்திற்கு ஆளாயினர்.

கிராமங்களில் மேல்சாதியினரின் இருப்பு என்பது இல்லாது போன நிலையில், முந்தையவர்களின் கலாச்சார வாரிசுகளாக கருதிக் கொண்ட புதுப்பணக்கார சூத்திரச் சாதிகளின் கையில் பார்ப்பனியத்தை காக்கும் ‘தண்டம்’ கையளிக்கப்பட்டது. தாங்கள் உயர்சாதியினருக்கு காட்டிய விசுவாத்தை தலித் மக்கள் தங்களுக்கு காட்ட வேண்டும் என்று இந்த சூத்திரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட கால இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளின் வழியாக ஏற்பட்ட தலித் தன்னுணர்வின் காரணமாக இப்படியான எதிர்ப்பார்ப்புகளோடு முரண்பட்டதன் காரணமாக தலித் மக்கள் மீது சூத்திரர்களுக்கு வன்மத்தை வளர்ந்தது. அது கொஞ்சம் , கொஞ்சமாக திரண்டு சின்ன அக/புறத்தூண்டல்களினால் கூட தலித் மக்கள் மீதான அடக்குமுறையாக உருவெடுக்கும் வாய்ப்பானது.

இந்தியாவின் தற்போதைய அரசியல் வெளியில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் சூத்திர சாதியினர் தற்போது தொழில் முனைவோர்களாகவும் வேகமாக உருமாறி வருகின்றனர். முதலாளித்துவ அமைப்பை முதலில் கைப்பற்றியவர்கள் என்ற வகையில் வைஸ்யர்களும், பார்ப்பனர்களும் வெளிப்படையாக தெரிந்தாலும், சூத்திரர்கள் மிக வேகமாக அந்த நிலைக்கு நகர்ந்து வருகின்றனர். திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளை தமிழகத்தின் விவசாய குடிகளில் ஒன்றான கவுண்டர்களும், பட்டாசு தொழிற்சாலைகளை பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கும் நாடார் சாதியினரும், கல்வி மற்றும் கரும்பு தொழிற்சாலைகளை மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தாக்களும், மிகப்பெரிய தொழிற்சாலை அதிபர்களாகவும் தொழிலதிபர்களாகவும் குஜராத்தின் படேல்களும், உருவாகியிருப்பது சில எடுத்துக்காட்டுகள் ஆகும். பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த சூத்திர சாதியினர் அடைந்த முன்னேற்றமானது பார்ப்பன ‘தர்மத்தின்’ படி கீழ்ச்சாதி என்று வகைப்படுத்துவதிலிருந்து கிட்டத்தட்ட தங்களைத் தாங்களே வெளியேற்றிக் கொண்டனர்.

<

p style=”text-align: justify;”>சூத்திரர்களின் இந்த எழுச்சியானது 1970களில் பரவலாக மாநில ரீதியான அரசியல் கட்சிகளை உருவாக்கியதோடு, அரசியல் என்பதை கடும் போட்டிகள் நிலவும் களமாக மாற்றியது. இதன் விளைவாக தங்களுடைய பலன்களுக்காக சாதிய, மத அடையாளங்களை பரவலாக பயன்படுத்த தொடங்கினர். இதன் விளைவாக முதன்முறையாக 1977 இல் மத்தியில் ஏற்பட்ட ஒரு கூட்டணி ஆட்சி அரசியலின் போக்கையே மாற்றியது. பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பிற்படுத்தப்பட்ட தன்மை குறித்து மண்டல் கமிசன் விவாதித்தது கூட இதன் விளைவுதான். பிற்படுத்தப்பட்ட தன்மையின் பெயரால் சாதிய அடையாளங்கள் முன்னுக்கு வந்ததும் கூட இந்த விவாதத்தின் விளைவுதான். அதற்காக சூத்திரர்களில் ஏழைகள் இல்லை என்று கூறுவதாகாது. 20 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் 78% மக்கள் வாழும் நாட்டில் வறுமை என்பது ஏழை மற்றும் பின்தங்கிய மக்களிடையே இயற்கையாக சாதிகள், சமூகங்கள் கடந்து உறைந்திருக்கத்தான் செய்யும். ஆனால், சாதி என்பது ஆன்மீகம் சார்ந்த வறுமை அல்லது பின்தங்கிய நிலை பற்றியதல்ல. மாறாக, அது ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளுக்கெதிரான சமூக கலாச்சார, இனவெறுப்பு பற்றியதாகும்.

சாதிஎன்பது மதச்சார்பின்மையின் குறைபாடோ அல்லது பின்தங்கிய நிலை பற்றியதோஅல்ல. அது குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான சமூக-பண்பாட்டுரீதியான, ஓரளவுக்குஇனவெறிகொண்டமுன்முடிவு

ஆக, இந்த சாதிகளுக்கிடையே சமூக-கலாச்சார பாரபட்சம் என்பது வழக்கமான சாதிய அமைப்பில் இல்லை. சாதிகளுக்கிடையிலான பகிர்வு என்பது நடவாமல் இருப்பதற்கான காரணமானது, கலாச்சார வேறுபாடுகளிலும், பகுதியளவில் வர்க்க வேறுபாட்டிலும்தான் ஒளிந்திருக்கின்றது. ஆனால், சாதிய பாரபட்சம் என்பது தலித்துகளுக்கு எதிராக மட்டுமே இருக்கின்றது. ஆக, இருப்பிலிருக்கும் சாதியமைப்பு என்பது தலித் மக்கள் மற்றும் தலித் அல்லாதவர்கள் என்று குறுகியிருக்கின்றது. தலித்துகள்தான் இப்படியான பாரபட்சங்களை பரவலாக சந்திக்கின்றார்கள், அதன் அச்சுறுத்தும் வெளிப்பாடு என்பது கிராமப்புறங்களில் தலித்துகள் மீதான வன்முறையாகவே வெளிப்படுகின்றது.

ஒருபுறம் சூத்திர சாதிகளின் அதிகாரப்படுத்துதலும், மறுபுறம் கிராமப்புரங்களில் தலித் மக்களின் பலவீனப் படுத்தப்படுதலும், தலித் மக்களின் கலாச்சார உரிமை கோரலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சாதிய மோதல்களுக்கும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் வித்திட்டு வந்திருக்கின்றது. தலித்துகளுக்கு நீண்ட காலமாக மிகக் கொடுமையான அநீதிகள் இழைக்கப்பட்டே வந்திருக்கின்றன, அப்படித்தான், அதிகாரத்திலிருந்த இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக 1960களில் தலித்துகளுக்கெதிராக பெரும் அடக்குமுறை ஏவப்பட்டத்தை கவனிக்க முடியும்.

25 டிசம்பர் 1968 ல் பண்ணையார்கள் மற்றும் அவர்களின் கைக்கூலிகளால் மிகவும் கொடூரமான ஒடுக்குமுறை ஒன்றில் 44 தலித்துகள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நாடெங்கிலும் தலித் மக்கள் ஏராளமான வன்முறைகளை சந்தித்தனர். கீழ்வெண்மணியை பொறுத்தவரையில், கம்யூனிஸ்டுகள், தொடக்கத்தில் தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தவர்களாலும் பின்னால் நக்சலைட்டுகளாலும் முன்னெடுக்கப்பட்ட வர்க்க போராட்டத்திற்கு எதிர்வினையாக பண்ணையார்கள் செய்த கொடூரம் அது. கீழ்வெண்மணிக்கு அடுத்ததாக, 1969ல் பிகாரின் பூர்னியா என்னுமிடத்தில் அடுத்தடுத்து வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. அடுத்த முப்பதாண்டுகளுக்கும் பீகாரில் தலித் மக்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை. 1990 களுக்கு பிறகு தலித் மக்கள் நக்சலைட்டுகளோடு கூட்டு வைத்துக் கொண்டு ஒடுக்குபவர்களை திருப்பி தாக்க தொடங்கிய பிறகுதான் இந்த வன்முறை வெறியாட்டங்கள் குறைந்தது.

இந்த வன்முறைகள்தான் சாதியின் இயங்குதலை புரிந்து கொள்ளும் கண்ணாடிகளாக திகழ்கின்றன. ஒடுக்குமுறைகள் பண்பளவில் முந்தைய காலத்திற்கும், இன்றைக்கும் பெரிய மாற்றம் இருக்கின்றது. முன்பெல்லாம் ஒடுக்குமுறைகள் என்பது அன்றாடம் நடப்பதாகவும், எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தலித்துகளின் மீதான ஒடுக்குபவர்களின் உரிமையாகவும் கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்பொழுதல்லாம் தலித்துகளின் மீதான ஒடுக்கும் உரிமை அநியாயமாக கைமீறிப் போகிறதே என்ற உணர்வில்தான் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. முன்பு தலித்துகள் பேசும் திராணியற்றவர்கள் என்ற அகந்தையில் ஒடும்முறைகள் நிகழ்ந்தன, இன்று தலித்துகளின் விழிப்புற்ற தன்னுணர்வின் காரணமாக ஒடுக்குமுறைகள் நிகழ்கின்றன. முன்பெல்லாம் தலித்துகளை அவமானப்படுத்துவதற்காக ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. தற்போதைய காலங்களில் தலித்துகளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள் மீதான வன்மத்தின் காரணமாக ஒடுக்குமுறைகள் நிகழ்கின்றன.

அதேபோல, ஒடுக்குமுறைகளின் தன்மை முன்புக்கும், தற்போதைக்கும் பெரிய வேறுபாட்டை சந்தித்திருக்கின்றது. முந்தைய காலங்களில் தலித்துகளும், தலித் அல்லாதோர்களும் புழங்கிக் கொள்ளும் வழக்கத்தில் ஒன்றாகவே ஒடுக்குமுறைகளும் இருந்தன. அவை, உடலளவில் பாரிய காயங்களையும் , பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தன. ஆனால், இன்று முன்பைவிட கூடுதல் வன்முறையானதாகவும், பழிவாங்கி தண்டிக்கும் உணர்ச்சியால் உந்துதல் பெற்றதாகவும் இருக்கின்றது. முன்பு பெரும்பாலும் ஒரு தனிபட்ட நபரின் கோபத்தின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால், அவை இன்று திட்டமிட்டு ’பாடம் கற்பிக்கும்’ நோக்கோடு நடத்தப்படுகின்றன. அது நீதி வழங்கும் முறையாகவும் பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தலித்துகள் மீதான வன்முறைகள் எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தாலும், அதன் அடர்த்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது, மறந்துவிடலாகாது.

அரசாங்கத்தால் பட்டியலிட்டு காக்கப்படும் வன்முறைகளின் தொகுப்பே, சாதிய ஒடுக்குமுறையை அளக்கும் ஒரு குறுக்கு வழியாக தற்போதைக்கு இருக்கின்றது. இந்த பட்டியலானது, ஒடுக்குமுறையின் வீரியம், நடந்த இடம், அதன் விகிதம், அதன் வளர்ச்சி, நீதி வழங்கல் முறை போன்றவை சாதிகளையும், சாதியின் இயங்கும் தன்மையை புரிந்து கொள்வதற்கும் அதை எதிர்த்து நிற்பதற்கான திட்டத்தை வகுக்கவும் பயன்படும்.

இதுபோன்ற ஆய்வுகளின் வெளிப்பாடு பல்வேறு மாயைகளிலிருந்து நம்மை விடுவிப்பதாக இருக்கும். அந்த மாயைகள் கீழ்க்கண்டதாக இருக்கக் கூடும்,

 1. மேல்சாதி பார்ப்பனர்கள்தான் தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை செலுத்துபவர்கள் , சூத்திரர்கள் அவர்களின் இயற்கையான கூட்டாளிகள் என்பது,
 2. பொருளாதார முன்னேற்றம் சாதியை ஒழிக்கும் என்பது,
 3. நிலவுடமை பொருளாதாரத்தின் வெளிப்பாடுதான் சாதி என்பது,
 4. தலித்துகள் விரும்பி நம்பும் வழிமுறையான, அவர்களின் பிரதிநிதிகள் அதிகாரத்திற்கு வந்தால், அவர்களின் நலன்களை பாதுகாப்பார்கள் என்பது,
 5. தலித்துகளில் பலவீனமானவர்கள் மீதுதான் ஒடுக்குமுறைகள் ஏவப்படுகின்றன என்பது,
 6. வலிமையான சாதி எதிர்ப்பை அடிப்படையாக கொண்ட தலித் இயக்கமானது தலித் மக்களின் பிரச்சினைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பது,
 7. அரசியல் ரீதியான எதிர்ப்பு என்பது ஆளும் வர்க்க(சாதிகளுக்கு)ங்களுக்கிடையே முரண்களை உருவாக்குவதோடு, அது தலித் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக போராட்டத்தில் உதவக்கூடும் என்பது
 8. தலித்துகளின் அரசியல் செயல்பாடு தலைவரை மையப்படுத்தியது என்பது,
 9. பக்கச்சார்பில்லாத ஊடகம் மற்றும் சுதந்திரமான நீதியமைப்பு இருக்கின்றது என்பது,
 10. தலித் மக்களின் நண்பனாக திகழக்கூடிய குறிப்பிடத்தக்க அளவில் சிவில் சமூகம் இருக்கின்றது. அது தலித் மற்றும் தலித்தல்லாதோர் இடையே நடுவர் போன்று செயல்படுகின்றது என்பது,

மேற்கண்ட இந்த மாயைகள் அனைத்தும் கயர்லாஞ்சி உள்ளிட்ட பிற ஒடுக்குமுறை சம்பவங்களில் சுக்குநூறாக நொறுங்கியதா இல்லையா? இந்த ஒடுக்குமுறைகள் நம் முன் கண்ணாடி போல நின்று, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. அனைத்து ஒடுக்குமுறைகளும் சாதி என்பது சிவில் சமூகத்தோடு நின்றுவிடுவதில்லை, மாறாக அரசால் ஊக்குவிக்கப்படுவதாக இருக்கின்றது. ஆக, சாதி ஒழிப்பு களம் என்பது அடிப்படையிலேயே அரசை எதிர்கொள்வது என்பதாகும்.

சாதியின் தோற்றம் பற்றிய குழப்பத்தில், அதன் அமைப்பு பலவீனப்பட்டுள்ள நிலையில், அதன் வெளிப்பாடான ஒடுக்குமுறைகளை ஒழிப்பதுதான் சாதியை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி. சமகாலத்தில் சாதியின் வெளிப்பாடு என்பது ஒடுக்குமுறைகளாகவே இருக்கும் தருணத்தில், யுக்திரீதியாக இந்த ஒடுக்குமுறைகளை ஒடுக்குவதில்தான் கவனம் இருக்க வேண்டும்.

ஏற்கனவே கண்டது போல, கிராமங்களில் தலித்துகளுக்கும், தலிதல்லாதவர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் சமத்துவமின்மை இந்த ஒடுக்குமுறைகளுக்கான காரணமாக இருக்கின்றது. இந்த தருணத்தில் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது சிறந்ததாக இருக்கும், ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறும் முடிவிற்கான காரணத்தை 1936 ஆம் ஆண்டு தனது முன்னணி செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கும் பொழுது, இந்த ‘ஒடுக்குமுறைகளின்’ மீதுதான் அதிக கவனம் செலுத்தி ஒடுக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்று ஏறக்குறைய இதே முடிவுக்குத்தான் வந்தார். தலித் மக்கள் திரளின் வலிமையை கூட்ட, ஏற்கனவே இருக்கும் ஒரு மதத்தை சார்ந்த மக்கள் திரளோடு தலித் மக்களை அதில் இணைப்பது என்று ஒரு வழியை முயற்சித்தார். மதமாற்ற வழிமுறையிலுள்ள குறைபாடு என்பது வெளிப்படையானது, அதை புரிந்து கொள்வது கடினமானதல்ல, அவருடைய 1956 ஆம் ஆண்டு மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கையே இந்த வழிமுறையை சரியென்று மெய்பிக்கவில்லை.

பிரிவு(சாதி) வாரியாக வலுவாக பிரிந்து கிடந்த அன்றைய சமூகச் சூழலில் இது போன்ற தீர்வு சிந்திக்கத்தக்கதாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று ஒவ்வொரு சாதியின் வயிற்றிலிருந்தும் வர்க்கங்கள் முளைவிடத் தொடங்கிவிட்ட நிலையில், பழைய பாணி தீர்வுகள் முற்றிலும் பொருத்தமற்றதாகவே அமையும்.தலித் மற்றும் தலித்தல்லாவர்களிடையே இருக்கும் இந்த வேற்றுமையை மிக எளிதாக களைவதென்பது வர்க்க ஒற்றுமையின் வழிதான் சாத்தியம். வரலாற்று மற்றும் இதர காரணங்களுக்காக பலருக்கும் அது தொலைதூர கனவாக தோன்றினாலும், இதுதான் பற்றிக் கொண்டு முன்னகரத் தகுதியான ஒரே வழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியிலான முன்னெடுப்பை எடுக்க வேண்டிய கடமை இடதுசாரி ஆற்றல்களுக்குதான் முதன்மையாக இருக்கின்றது. ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் தத்துவார்த்த தெளிவோடு தலித் மக்களோடு இணைவார்களானால் இடதுசாரிகளால் கண்டிப்பாக இதை சாத்தியப்படுத்த முடியும். சுண்டூர் மற்றும் காயா-அஹமதாபாத் பகுதிகளிலிருந்து கிடைத்த அனுபவத்திலிருந்து பார்க்கும் பொழுது ஒடுக்குமுறைகளாகட்டும் அல்லது சாதியாகட்டும் எதிர்த்து நிற்பது என்பதுதான் மிக காத்திரமான வழிமுறையாக இருக்கக் கூடும். இந்த வழிமுறையில், குற்றம் புரிபவர்கள் தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒடுக்குப்படுகின்ற சூத்திர சாதி உழைக்கும் மக்களையும் அந்த கொடூரர்களிடமிருந்து அந்நியப்படுத்தும். இந்த வழிமுறைதான் விரும்பத்தக்க கலாச்சார மாற்றத்தை துரிதப்படுத்தும் க்ரியா ஊக்கியாக செயல்படுவதோடு, ஒடுக்கப்பட்ட மக்களிடையே வர்க்க உணர்வை தூண்டி வளர்க்கும்.

பொதுப்பார்வையிலிருந்து முரண்படும் வகையில் சாதியின் சிக்கல் என்பது எதார்த்தத்தில் முன்பைவிட குறைவானதாக ஆகியிருக்கின்றது. நிற வேறுபாட்டின் அடிப்படையில் வெள்ளையர், கருப்பர் என்று பிரிப்பது போல, வர்க்கரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் முதலாளி, பாட்டாளி என்று பிரிப்பது போல, தற்போது தலித், தலித்தல்லாதவர் என்று சாதியின் இருப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.

வரலாற்றில் இப்போதிருப்பது போன்று சாதி என்றுமே எதிர்கொள்ளும் அளவுக்கு எளிதாக இருந்ததில்லை. சாதி ஒழிப்புக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், சரியான திட்டத்தோடு இந்த நேரத்தில் தயார்நிலையில் இருப்பார்களேயானால், வரலாற்றுரீதியான சாதி ஒழிப்பு திட்டமென்பது வெற்றியை எட்டும் தருணம் விரைவாக கைகூடி வரும்.

நன்றி: http://www.countercurrents.org/teltumbde141109.htm

Related Posts