அரசியல்

எரியாத அடுப்பும், எரிகின்ற அகல்விளக்கும்.!!

” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?”

மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து நிலவரத்தை எடுத்துச் சொல்லி எடுக்கப்பட்ட முயற்சிகளை புரியவைக்க முயற்சிக்கிறார். ஆனால், பிரதமர் திரு நரேந்திர மோடி மூன்று முறை தோன்றி மூன்று முறையும் அறிவியலற்ற, குறிப்பாக நாட்டின் ஏழை பிரஜைகளின் நலன்களைப் பற்றி அக்கறையற்ற அறிக்கைகளை வெளியிடுவது இவர்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் ராமாயணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ? என்ற கேள்வியை இயல்பாகவே எழுப்புகிறது.

ஆம், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து ஏழைகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் இன்னும் நடந்த வண்ணமே உள்ளனர். வீடு போய் சேருவோமா? அல்லது வழியிலேயே பசியால் சாவோமா? என்றறியாமல் நடந்துகொண்டே இருக்கின்றனர். இதுவரை, 22 நபர்கள் இறந்திருக்கிறார்கள். ரன்வீர் சிங் என்ற 39 வயது தொழிலாளி டெல்லியில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

அவரின் மூன்று குழந்தைகளுக்கு எந்த அரசு பதில் சொல்லும்? இப்படி மற்ற 21 பேரும் விபத்து ஏற்பட்டும், உடல் நலம் குன்றியும் இறந்து விட்டனர். நாக்பூரில் பணிபுரியும் தமிழக நாமக்கல்லை சேர்ந்த லோகேஷ் திடீர் நாடுதழுவிய மூடலால் வேறுவழியின்றி நடந்தே நாமக்கல்லை நோக்கி வந்திருக்கிறார். வரும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.இவையெல்லாம் அலட்சிய அரசுகளின் படுகொலையே அன்றி வேறன்று. இது ஒருபுறமிருக்க வீடுகளில் முடங்கி கிடக்கும் ஏழைகளின் பசி கொடுமை அதனால் ஏற்படும் இறப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி கூட பீகார் மாநிலத்தில் 8 வயது சிறுவன் ராகேஷ் பசியில் இறந்துபோனான். மும்பை தாராவி பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வறுமானம் இல்லாமல் அந்த பகுதியில் அந்த பகுதியின் கவுன்சிலர் ஏற்பாடு செய்திருந்த உணவுக்காக ஒரே நேரத்தில் 2000 பேர் பெரும் வரிசையில் எந்தவித மருத்துவ பாதுகாப்பும் இன்றி காத்துக்கிடந்த சோகம் அரங்கேறியது. இரண்டு இலட்சம் ஏழைகளை கொண்ட இந்தியாவின் பெரிய பகுதி அது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோலத்தான், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ராணா ஐயூப் ஒரு இணைய ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில், மும்பையில் அவர் ஒரு தினக்கூலி புலம்பெயர் தொழிலாளியான கான்ஷியாம் லாலை சந்தித்தபோது தன்னுடைய 200 ரூபாய் அன்றாட ஊதியத்தில் தான் எட்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவு அளிப்பதாக அந்த தொழிலாளி கூறினாராம். மேலும், உணவு குறித்த கவலைகள் இருப்பதால் தன்னால் வைரஸை பற்றி கவலைப்பட முடியவில்லை என்று அவர் கூறினார்.

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸில் இருக்கும் தனது மனைவியை பற்றி நிறைய கவலைப்பட்டார் காரணம் அந்த மருத்துவமனை இனி கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாறிவிடும். “உங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்” என்று எவ்வளவு எளிதாக பிரதமரால் சொல்ல முடிகிறது என்று ராணாவிடம் கேட்டுவிட்டு, நான் ஒரு வாரம் வெளியே செல்லவில்லை என்றால் என் குழந்தைகளும் மனைவியும் இறந்து போவார்கள் என்று கான்ஷியாம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார் ஐயூப்.

சென்னை கோயம்பேட்டில் இருக்கும் சாதாரண கூலித் தொழிலாளி கேட்கிறார் “நீங்கள் என்னை சோப்பு போட்டு கை கழுவ சொல்கிறீர்கள் ,ஆனால் எனக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் எங்கு கை கழுவுவது.

உங்களின் திட்டங்கள் எப்போதுமே எங்களுக்கானதாக இல்லை” என்கிறார் அந்த நபர். இந்த கேள்விக்கு யார் தான் பதில் சொல்வது?? கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் குழந்தைகள் உண்ண உணவின்றி புற்களை தின்னும் காணொளி காட்சி காண நேரிட்டது. இப்படியாக நாட்டில் கான்ஷியாம்களும் , முனியம்மாளும், சாந்தியும், பாத்திமாவும், ரோஷியும் மட்டும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வஞ்சிக்கப்படுவதை யார்தான் கேட்பது?

உலக நாடுகளின் நிலை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 205 நாடுகளை கரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 1,099,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 59179 பேர் உயிரிழந்துள்ளனர். 2,28,938 பேர் குணமுடைந்துள்ளனர். இத்தாலியில் அதிகபட்சமாக 14681 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,77,467 பேர் பாதிக்கப்பட்டு 7402 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் பல நாடுகளின் நிலை படுமோசமாக உள்ளது. இந்நாடுகள் எல்லாம் ஒருபுறம் அறிவியல்ரீதியாக வைரஸை எதிர்த்தும், மறுபுறம் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா தன்னுடைய குடிமகன்களுக்கு 1000 டாலர் தர ஏற்பாடு செய்துள்ளது. டா தனது நாட்டின் உழைக்கும் வர்க்க மக்களுக்கு தலா 2000 டாலர் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. வெறும் 50இலட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து மக்கள் நிவாரணத்திற்காக மட்டுமே 5.4 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் நிலை தலைகீழ். மொத்த சுமையையும் மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிட்டு ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

அதிகப்படியான நிதிசுமை. குறிப்பாக தொடர்ச்சியாக நிபா வைரஸ், பெருவெள்ளம், கொரோனா என தொடர் பேரிடர்களை சந்தித்து நிதி நெருக்கடியில் உழன்று வரும் கேரளம் கூட மக்கள் நிவாரண நிதியாக 20000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.. ரேஷன் மூலம் தரமான பொருள்களை இரண்டு மாதங்களுக்கு சேத்து வழங்குவது, தொழில்நுட்பத்தை மருத்துவத்துறையில் பயன்படுத்துவது என சிறப்பாக பணியாற்றி வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை கேரளத்தில் எழுந்தபோது கூட உடனடியாக முதல்வர் தலையிட்டு அவர்கள் எங்கள் “விருந்தினர்கள்” அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என கூறி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். தமிழக அரசும் கூட ஒரு ரேஷன் அட்டைக்கு ஆயிரம், ஒரு மாத ரேஷன் இலவசம் என அறிவித்து வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், ஐந்து பேர் அங்கம் வகிக்கும் ஒரு குடும்பத்தில் 1000 என்பது எந்த மூலைக்கு? அது மட்டுமின்றி ரேஷன் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், பல பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்ககன்றனர்.

மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள 5ஆம் எண் ரேஷன் கடையில் போடப்பட்ட அரிசியில் வண்டும் கல்லும் இருந்ததை கண்டு அதிர்ந்து போன நாகராஜ் வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார். இதே நிலைதான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்.. இருப்பினும் தமிழகத்தில் ஒரே ஆறுதலாக அம்மா காலத்தில் துவங்கப்பட்ட “அம்மா உணவகம்” தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு உணவளித்து வருகிறது. ஆனால்,அங்கு செல்வோரை கூட சில இடங்களில் போலீஸ் அடித்து உதைக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகிறது. ஆனால், இவை யாவும் நிதி பற்றாக்குறையிலே இயங்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த சூழலிலும் கூட ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய பலாயிரம் கோடி ரூபாய்களை சரியாக கொடுக்காதது கவலையளிக்கிறது. இதில் நிதியமைச்சர் ஒரு அறிக்கை விட்டால் அதற்கு எதிர்மாறாக வங்கிகள் மறுஅறிக்கை விடுகின்றனர். மூன்று மாத கடன் தவணையை கட்ட தேவையில்லை, பிறகு கட்டிக்கொள்ளலாம் என நிதியமைச்சர் அறிக்கை விட்டால், வங்கிகளோ மூன்று மாத தவணைக்கு ஈடாக மும்மடங்கு அதிகமாக இறுதியில் கட்ட வேண்டும் என்று மறுஅறிக்கை விடுகின்றன. அதேபோல மின்கட்டணத்தை கட்ட வேண்டாம் , என யாரும் தள்ளுபடி செய்ததாக தெரியவில்லை. முடிந்தவரை கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள் என்றே அமைச்சர் தங்கமணி பேசியிருக்கிறார். ஏப்ரல் 14 வரை கட்டணம் செலுத்த தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகும் நீட்டிக்க வாய்ப்புண்டு என்று சொல்கிறார்களே தவிர ஒரு தினக்கூலியோ, மேஸ்திரியோ, பழவியாபாரியோ, மீன்வியாபாரியோ எப்படி வேலையின்றி பணம் செலுத்த முடியும் என்று யோசித்த பாடில்லை. இது போன்ற துயர்சூழலிலும் மக்கள் பலரும் வேலையற்று கிடக்கும் நிலையிலும் காசு வசூலிப்பதை கராறாக வங்கிகளும், அரசும் செய்கிறது.

இந்நிலையில் பாரத பிரதமரோ மும்முறை மக்கள் முன் பேசியும் ஏழைகளின் உணவு பிரச்சினை குறித்தோ, புலம்பெயர் தொழிலாளிகளின் நடைபயணம் குறித்தோ, நாட்டு பிரஜைகளின் கடன், நிதி சுமை குறித்தோ மறந்தும் கூட வாய்திறக்காதது இந்த அரசு நாட்டின் பெரும்பான்மை ஏழைகளுக்கான அரசு இல்லை என்பதை பட்டவர்த்தனமாக படம் போட்டு காட்டுகிறது. ஊழியர்களின் சம்பளத்தை அலுவலகங்கள் வெட்டக்கூடாது என பிரதமர் கேட்டுக்கொண்டார. ஆனால், கட்டுமானம், உற்பத்தி, விநியோகம் சார்ந்து அலுவலகம் சாராத, முறைசாரா தொழிலாளர்களை பற்றி இவர்கள் கவலைபாடமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

பிரதமமந்திரி நிதி கணக்கில் நிதி செலுத்துங்கள் என வழக்கம்போல் இவர்கள் மக்கள் மீதே ஒருவகையான பொறுப்பு சுமையை இறக்கி வைக்கிறார்கள். ஆனால், வருடத்திற்கு 8இலட்சம் கோடி வரிவருவாய் வரக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கண்டிப்போடு ஒரு தொகையை முன்னதாகவே கேட்டுப்பெறும் வேலையை கூட அரசு செய்யவில்லை. ஆனால், இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வரிதள்ளுபடி, வாராக்கடன் தள்ளுபடி என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுக்க தயங்கியதில்லை அரசு.

நிலை இப்படியிருக்க மறுபுறம் ஆளும் கட்சியின் ஆதரவு குழுக்களோ மோடிதான் தீர்க்கதரிசி, அவர்தான் நம்மை காப்பாற்றுவார், ஒருபடி மேலே போய் கைதட்ட சொல்வதும், விளக்கேற்ற சொல்வதும் அறிவியல் காரணங்கள் என அறிவியலுக்கே அசிங்கத்தை ஏற்படுத்தும் அவநம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர். பசியால் வறண்டுபோன வயிறுகளை உணவால் நிரப்புவதை தவிர வேறு எந்த வெற்று அறிக்கையாலும் மக்களின் நம்பிக்கையை பெறமுடியாது. விளக்குகளை ஏற்ற வேண்டாம், எங்கள் வீடுகளில் அடுப்புகளை ஏற்றுங்கள் என கோடான கோடி மக்கள் கையேந்தி நிற்கின்றனர். இன்னமும் விளக்கு ஏற்றுவதை விடுத்து விழித்துக் கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில் கொரோனாவை விட பசி என்னும் கொடிய வைரஸ் பல இலட்சம் மக்களை கொத்து கொத்தாய் கொன்று குவிக்கும்.

  • சுபாஷ்.

Related Posts