“Dont hate the media, Be the media” என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான “
கலையக“த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர். சர்வதேச ஊடகங்கள் வழங்கும் செய்திகளின் திணிக்கப்பட்ட பார்வையின் முகத்திரையினை கிழித்துக்காட்டி, அதன் மறைக்கப்பட்ட உண்மைகளை கட்டுரைகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் என பன்மொழிப்புலமையும் கொண்டவராகையால், அந்தந்த பிரதேச நிலவரங்களை அவர்களின் மொழிகளினூடாகவே அறிந்துகொண்டு தமிழில் எழுதிவருகிறார். “
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா“, “
அகதி வாழ்க்கை“, “
ஈராக்: வரலாறும் அரசியலும்“, “
ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா?“, “
காசு ஒரு பிசாசு” ஆகிய அவரது நூல்கள் உலக அரசியல் குறித்த ஆர்வமுடையோர் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியவை. உக்ரைனில் கலகம் உருவாகத் துவங்கியதிலிருந்தே, தொடர்ந்து அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை தமிழில் கட்டுரைகளாக நமக்குத் தந்துகொண்டிருக்கிறார். உக்ரைன் குறித்து நமக்குப் பொதுவாக எழும் கேள்விகளைத் தொகுத்து, அதற்கான அவரது பதில்களை “மாற்று” வாசகர்களுக்காகத் தருகிறோம்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேர வேண்டும் என்பதாக துவக்கத்தில் வெளியுலகிற்கு காண்பிக்கப்பட்ட இப் பிரச்சனை, அதன்பின்னர் பல கோணங்களில் செல்லத் துவங்கிவிட்டதே. உண்மையிலேயே அதுமட்டும் தான் காரணமா? அல்லது வேறு சில வரலாற்றுக் காரணங்களும் உண்டா? விரிவாகச் சொல்லமுடியுமா?
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு முன்னர், சில வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அன்றைய ஜனாதிபதி, ரஷ்யா ஆதரவு யனுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்ட பிறகே, நெருக்கடி ஆரம்பமாகியது. உக்ரைனில் மேற்குலக ஆதரவு “புரட்சி” நடப்பது இதுவே முதல் தடவை அல்ல. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க கோடீஸ்வரர் சோரோஸ் நிதியுதவியுடன் “ஒரேஞ்ச் புரட்சி” நடந்தது. அப்போதும், மேற்குலக நாடுகள் ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியானார். அப்போதெல்லாம், ரஷ்யா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மேற்குலக ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஒற்றுமையின்மை காரணமாக, பெரும்பான்மையான உக்ரைனிய வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலில் ரஷ்ய ஆதரவு யனுகோவிச்சிற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்தனர்.
ஆகவே, மேற்குறிப்பிட்ட அரசியல் வரலாற்றை வைத்து ஆராய்ந்தால், இன்றைய உக்ரைனிய நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வேண்டும். “சர்வதேச சமூகத்தின்” எதிர்ப்பை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சம்பாதிக்கும் அளவிற்கு, ரஷ்யா விட்டுக் கொடாத நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன? சில நேரம், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாவது கூட ரஷ்யாவுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்வது அச்சத்தை உண்டாக்கி இருக்கலாம்.
கிழக்கு ஐரோப்பாவில், சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், “கம்யூனிச அபாயத்தை” காரணமாகக் காட்டி, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. இன்று, உலகில் எங்கேயும் “கம்யூனிச அபாயம்” இல்லை. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள், முதலாளித்துவ நாடாகி விட்டன. ஆனாலும், நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருகின்றது. முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த பால்டிக் கடலோர நாடுகள், ஜோர்ஜியா போன்ற நாடுகள் கூட நேட்டோவில் சேர்ந்து விட்டன. அப்படியானால், ரஷ்யா எதற்காக இப்போது மட்டும், நேட்டோ விஸ்தரிப்பை கண்டு அஞ்ச வேண்டும்?
பத்து வருடங்களுக்கு முன்னர், தலைநகர் கீவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பணம் கொடுப்பவர் பக்கம் சாயும் கொள்கையற்ற கும்பலாக இருந்தது. ஆனால், இந்த தடவை நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாசிஸ சக்திகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் ஒரு கட்சியின் தலைவர், பல வருடங்களாக ஜெர்மனியில் வாழ்ந்தவர். உக்ரைனிய பாசிஸ்டுகள், ஐரோப்பிய ஒன்றியம் (ஜெர்மனி), அமெரிக்கா ஆகிய சக்திகள் ஒன்று சேர்வது, வரப்போகும் ஆபத்தின் அறிகுறியாக தென்பட்டது. ஏதாவதொரு இரகசியத் திட்டம் இருக்கலாம்.
இந்த தடவை, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சதிப்புரட்சி நடத்தி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், கிரீமியாவை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க இருந்தனர். கிரீமியா தொடர்பாக, இதற்கு முத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு, அங்கிருக்கும் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டுமென கோர இருந்தனர். ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னர், அங்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கி தளம் அமைத்திருக்கும். இந்த இரகசிய திட்டத்தை மோப்பம் பிடித்தறிந்த ரஷ்யா, கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டது.
கிரீமியா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. அங்கிருந்து இலகுவாக கருங்கடலை கண்காணிக்க முடியும். கருங்கடலை சுற்றி, உக்ரைன், ரஷ்யா தவிர, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா போன்ற பல நாடுகள் உள்ளன. மேலும், மத்தியதரைக் கடல் நாடுகளுடன் தொடர்புபடுத்தும் பொஸ்போருஸ் (துருக்கி) நீரிணை ஊடாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் கிரீமியா முக்கியமானது. 19 ம் நூற்றாண்டில், கிரீமியாவை கைப்பற்றுவதற்காக, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவுடன் போரிட்டன. கிரீமியா போரில் பல இலட்சம் பேர் மடிந்தனர். ரஷ்யா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே, அந்தப் போர் நடந்தது. கிரீமிய யுத்தம் தான், உலக வரலாற்றில் நடந்த முதலாவது நவீன காலப் போர் ஆகும்.
உக்ரைன் நெருக்கடிக்கு, கிரீமியா தவிர, வேறு காரணங்களும் இருக்கலாம். ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பியக் கண்டத்திற்கு செல்லும் பெட்ரோலிய, எரிவாயுக் குழாய்கள் உக்ரைன் ஊடாகச் செல்கின்றன. அவற்றை மேற்குலகின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒரு நோக்கமாக இருந்தது. உண்மையில், ஆப்கான் போரும் இது போன்ற காரணத்திற்காகவே நடந்தது. துருக்மேனிஸ்தானில் இருந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் அமைப்பதற்காக, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்து இருந்தன. உக்ரைனின் கிழக்கு மாநிலமான டானியேட்ஸ்க் பகுதியில், இன்னமும் நிலத்துக்கு கீழே தோண்டப்படாத எரிவாயுப் படிமங்கள் இருக்கலாம் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அவற்றை ரஷ்யா எடுப்பதற்கு முன்னர், மேற்குலக நாடுகள் முந்தி விட நினைத்தன. இறுதியில், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்த உக்ரைன் அரசைக் கவிழ்த்த சதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது?
கீவ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கோஷம் எழுப்பியதில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட, “உக்ரைனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்” என்று தான் கூறி வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் என்றால், நாங்கள் ஜெர்மனியை புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஜெர்மனி, இன்று தனக்கு வேண்டியதை, இலகுவாக பணம் கொடுத்து சாதிக்கலாம் என்று நினைக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், அமெரிக்கா கருத்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. இராணுவத் தலையீடு நடத்தப் பட வேண்டுமானால், அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினையில், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பலப்பரீட்சை நிலவுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ பலம் பெறுவதை தடுப்பதும், அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. ஆகவே, முன்பு யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்ததைப் போல, உக்ரைன் விடயத்திலும், சில சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Recent Comments