அரசியல்

அரசியல் பேசலாம்!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அரசியல் அதிகாரமும், செலவிடப்படும் மக்களின் வரிப்பணமும் ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. 66 ஆண்டு கால சுதந்திரம் ஒரு சாராருக்குத்தான் பயனளித்திருக்கிறது. கொள்ளையடிக்க ஒரு சாராருக்கு சுதந்திரம்: மற்ற அனைவருக்கும் பட்டினியால் மடிய சுதந்திரம்: இவை சுதந்திரம் அல்ல, சாமானிய மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ற அடிமைத்தனம்.

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? என்றார் பாரதி.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து  ஆறு தசாப்தங்கள் கடந்தும் பசிப் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பாரதி கனவு கண்ட சுதந்திர இந்தியா இன்னும் கனவிலேதான் உள்ளது. சுகாதாரமும் மருத்துவமும் சாமானிய மக்களுக்கு எட்டாத தூரத்திலேதான் இருக்கிறது. கொள்ளையடிக்கும் தொழிலாக மருத்துவமு‍ம் மாறியுள்ளது.

நமக்குக் காண்பிக்கப்படும் திரைப்படங்களும், இந்த சமூகத்தில் மிக நல்லவர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும் அரசியல் என்பது சாக்கடை என்று வருணனை செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சாக்கடை என்று கூறிவிட்டால் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள், நாம் நினைத்ததை எல்லாம் செய்து கொண்டிருக்க முடியும் என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் சுயமுன்னேற்றம் ஒன்று மட்டுமே வாழ்வை உயர்த்தும் என்று கூறி, சமூகத்தைப் பற்றிய சிந்தனையை மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். மேலும், இதைவிட கொடுமையான மூடநம்பிக்கையில், மக்களை மூழ்கடிக்க இன்னொரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பாரம்பரியம் என்று கூறி இன்னார் இன்ன தொழிலையும், இன்ன வயதினர் இதைப் பற்றி மட்டும்தான் சிந்திக்க வேண்டும் என்ற திணிப்பையும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

திறமையான பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மனித கலாச்சாரத்தை பல மடங்கு பெருக்கியிருக்க முடியும். சமூகத்தை சீர்படுத்தியிருக்க முடியும், தொழிநுட்ப சாதனைகளை பல மடங்கு உயர்த்தியிருக்க முடியும். இப்படி 120 கோடி மக்களின் அத்துனை திறமைகளும் பாழ்பட்டு போய்க் கொண்டிருக்கின்றன இப்போதுள்ள அரசியல் நிலைமைகளால்.

தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதே. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியாகும் பொருளை விற்று பெரு இலாபமடைவது பெருமுதலாளிளே. வளர்ந்துள்ள தொழிநுட்பமும் பெருமுதலாளிகளின் நலன்களுக்கே உதவியாக உள்ளது.

தேவையான எவ்வளவு உழைப்பையும் செலுத்த லட்ச லட்சம் கரங்கள் இருந்தாலும், இன்னும் வேலைவாய்ப்புக்கள் இன்றி சோம்பிக் கிடக்கின்றன. இப்படி இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால், நமக்கு தேவை மாற்றம். அந்த மாற்றம் நம் எல்லோருக்குமான மாற்றமாக அமைய வேண்டும். நமக்கு வர இருக்கும் சோதனையைச் சரிவரத் தீர்ப்பதற்கு நாம் சரியான அரசியல் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது நமக்கு திசைகாட்டியாக அமையும்.

சோதனைக் கூடத்தில் மனித சமுதாயத்தின் நன்மைக்காக தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறவன் தான் வீரன் என்றார் ஜூலியஸ் பூசிக். ஆம் நாம் ஒவ்வொருவரும் வீரரே, சமூக மாற்றத்திற்காக போராட முன்வரும் போது. நாம் வீரராகும் போதுதான் நமது ஒட்டுமொத்த மனித சமூகமும் பயனுரும்.

மனித குலத்தின் படைப்பாற்றல் மிக்க சக்திகள் அனைத்தையும், ஒவ்வொரு தனிமனிதனின் படைப்பாற்றல் முழுமையையும் பயன்படுத்தி முழுமையான வளர்ச்சி அடையும் படி செய்யும் ஒரு அமைப்பை பெறுவதற்காக நாம் போராட வேண்டும் – ஜூலியஸ் பூசிக். அப்படிப்பட்ட ஒரு அமைப்பை, சமூகத்தை நாம் உருவாக்க முனைய வேண்டும்.

இந்த திசையில் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டால் மக்களை நேசிக்கும் அரசியல் உருவாகும். அந்த அரசியல் எல்லோருக்குமான அரசாக உருவெடுக்கும்.

நாம் தேர்ந்தெடுக்க இருக்கும் அரசியல் வழி நிச்சயம் கீழ்க்காணும் நான்கு‍ வகை தத்துவங்களில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

1. கம்யூனிசம் – பாட்டாளி வர்க்க அரசியல் தத்துவம்  (Authoritarian Left)

2. முதலாளித்துவம் (Authoritarian Right)

3. இடது லிபர்டேரியனிசம்  ( Left Libertarian )

4. வலது லிபர்டேரியனிசம் (Right libertarianism)

Political_chart.svg

அரசியல் என்பது‍, ஒரு‍ அமைப்போ அல்லது‍ மக்கள் குழுவோ ஏற்றுக் கொண்டுள்ள தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நான்கு வகைகளின் ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுத்துச் சென்றாக வேண்டும்.

வாருங்கள்,கைகோர்த்து,சுத்தப்படுத்தி,மனித வாழ்வை மேம்படுத்த…

Related Posts