அரசியல்

பளிச்செனத் தெரியும் இரு வேறு உலகங்கள்

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து முன்னேற மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது . ஆனால் நடந்தது என்ன ?

வியட்நாம் தொற்று நுழையாமல் பாதுகாத்தும் ,சீனா தொற்றிலிருந்து மீண்டு வந்தும், கியூபா 50க்கு மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவக் குழுவை அனுப்பி உதவியும் உலகில் முன்னுதாரணங்கள் ஆகியுள்ளன ! இவை அனைத்தும் இடதுசாரி ஆளுகையில் உள்ள நாடுகள் ! வலதுசாரி ஆளுகையில் உள்ள இந்தியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் நாளும் தொற்று மற்றும் மரணமடைவோர் எண்ணிக்கையும் வளர்ந்து வருவதையும் காண்கிறோம். கைதட்டுதல் ,விளக்கேற்றுதல், இன்னாருக்கு தொற்று வரும், வராது எனும் அறிவியல் பூர்வமற்ற கணிப்புகள் போன்ற ஏமாற்று நடவடிக்கைகள் இந்திய சூழலின் முக்கிய காரணிகள் !

இந்தியாவிலும் முதலில் தொற்றினால் பாதிக்கப் பட்டாலும், அதை எதிர்கொண்ட விதத்தில் கேரளா உலக அரங்கில் நமது கௌரவத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. மத்திய வலதுசாரி அரசின் கீழ் குறைந்த அளவிலான அதிகாரங்களைப் பெற்று செயல்படும் மாநில இடதுசாரி ஆட்சி என்பதைக் காண்கிறோம். கோமியம் குடிப்பது, யாகம் நடத்துவது, ஸ்லோகம் சொல்வது என அறிவியலுக்கு புறம்பான விசயங்களில் அக்கறை செலுத்தி மருத்துவ கட்டமைப்பில் கவனமற்ற உத்திரபிரதேசம் போன்ற வலதுசாரி ஆளுகை கொண்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பரவலையும் செய்தியாகக் காண்கிறோம் .

தமிழகம் மருத்துவத்திலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளிலும் ஒப்பீட்டு அளவில் முன்னேறிய மாநிலம் ! ஆனாலும் இன்றைய ஊழல் மலிந்த வலதுசாரி சார்புள்ள நிர்வாகம் ஊரடங்கு காலத்தில் மக்களை வதைக்கிறது ! அறிவியல் பூர்வமற்ற கணிப்புகள் , ஊரடங்கின் அமுலாக்க முறை ஆகியன நோய்த்தொற்றுப் பரவலையும், மரணங்களையும், அதிகரிக்கின்றன .இவைகளின் எண்ணிக்கையை மூடி மறைத்து மக்களை ஏமாற்றும் கோளாறுகளையும் காண்கிறோம் !

இத்துடன் வேலை வாய்ப்புகளின் இழப்பும் சேர்ந்து உருவாக்கும் விளைவுகளை பலவித செய்திகள் மூலம் நாளும் அறிகிறோம் அவை நமக்கு அதிர்ச்சி தருகின்றன.

மிக சமீபத்தில் உடல் நலமற்ற கணவரின் துணையுடன் தன் உடலின் விலை சொல்லும் மனைவி எனும் கொடிய செய்தியை அறிய நேர்ந்தது ! இது புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் எனும் சிறுகதைக்கு மீண்டும் உயிர் தந்தது ! பலரும் பகிர்ந்த இப்பதிவு தமிழக ஊரடங்கு கால வாழ்வை பொட்டில் அறைந்தாற் போல் உணர்த்துகிறது.

இதே சம்பவம் பசிக் கொடுமை தாள முடியாமல் கணவரின் சம்மதம் இன்றி அல்லது கணவர் அறியாமல் சுயமுடிவில் அப்பெண்ணின் நிலை தாழ்ந்திருந்தால் அப்பதிவின் தன்மை எப்படி இருந்திருக்கும்? அப்பெண்ணை மனுசியாய் மதித்து, குடும்ப நலன் கருதி அவர் எடுத்த முடிவு, இது ஊரடங்கு காலக் கொடுமை என நேர்மறையாய் சிந்தித்திருப்போமா?

நம்மைப் போன்ற மாநிலங்களில் புது விசயமாக உள்ள இத்தொடர் ஊர் அடங்குதலை ஜம்மு காஷ்மீர் பகுதி மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல விதமாய் அனுபவித்துள்ளனர் . இப்போதும் காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கிய சமயம் போடப்பட்ட ஊரடங்கு ஓராண்டு காலம் ஆகியும் நீடிக்கிறது . நோய்த் தொற்றின் பாதிப்புகளையும் அம்மக்கள் சேர்த்து அனுபவிக்கின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாதம் எனும் சொல்லுடன் இணைத்தே இவை நியாயப்படுத்தப் படுகின்றன. தொடரும் தொழில் முடக்கமும், வர்த்தக சரிவின் கடுமையும் குடும்ப நெருக்கடிகளை தீவிரப்படுத்துகிறது. அங்கு வாழும் பெண்களின் நிலை குறித்து கற்பனை செய்யவும் இயலுமா எனும் கேள்வி எழுகிறது.

இது ஒருபுறமிருக்க, நெருக்கடி காலத்தில் வறுமையின் உச்சம் தொட்டு நிலை தடுமாறும் குடும்பங்கள் நல்ல வருமானம் பெறும் சூழல் வரும்போது மற்றவர்க்கு உதவ நினைக்குமா என நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்கு சகதொழிலாளிகளின் சுயநலப் போக்கை கண்ட சொந்த அனுபவம் இருந்தது . அதிலிருந்து எழுந்தது அக்கேள்வி !

பொதுவாக , நாம் வாழ்வை தனிமனித அனுபவமாக மட்டுமே பார்க்கப் பழகியுள்ளோம். அதையே வசதியாகவும் கருதுகிறோம் .எனவே தான் நமது வாழ்வின் பிரச்சனைகளின் தீர்வை தனி மனித மனமாற்றத்தில் மட்டுமே தேடுகிறோம் . அல்லது அவதாரங்களை எதிர்பார்க்கிறோம் . தற்செயல் நிகழ்வுகளை அதனுடன் முடி போட்டு சமாதானம் தேடுகிறோம் .அல்லது நிந்திக்கிறோம் .

ஒரு வேளை மாற்றம் தேடினாலும் அரசியல் சொற்களின் வெற்று முழக்கத்தில், அதன் போலியில் மயங்கி குழம்புகிறோம்.வாக்குரிமையைக் கூட, நமது உரிமை எனும் எண்ணம் மறந்து, அரசியல்வாதிகளிடம் விலை பேசி விற்று விடுகிறோம் . வாய்ச்சொல் விமர்சனம் செய்கிறோம் அல்லது அவர்களுடன் சமரசம் செய்கிறோம் . குழாயடி சண்டையின் சரி, தவறை கவனிக்கும் நாம் அதற்கு அடிப்படையான சங்கிலித் தொடர் அதிகாரங்கள் பற்றி சிந்திப்பதில்லை.

நிறைவேறா ஆசைகளால் தற்கொலைக்கு ஆளாகும் உயிர்கள் மீது அனுதாபம் அல்லது ஆத்திரம் கொள்கிறோம். வாழ வழியற்றுத் தவிக்கும் எளியவர்களின் ஆன்மாவை, பேராசைக்கு பலியாக்கும் அரசமைப்பு முறை பற்றி சிந்தித்து, எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

எனவே தான் நாடு தழுவிய ஊரடங்கு காலம் பிரதமரின் அறிவிப்பை போல் உலக பணக்கார பட்டியலில் முன்னேற, வெகு சிலருக்கு மட்டும் வாய்ப்பு உருவாக்கித் தந்துள்ளது. பெரும்பான்மையினருக்கு சமாளிக்க முடியாத கடுந்துயர் பரிசாகக் கிடைத்துள்ளது .

பணமதிப்பிழப்பு, மதிப்பு கூட்டு வரி, போன்றவை தந்த பாதிப்பிலிருந்து மிகச்சிறிய அளவில் மீண்ட மக்களை ஊரடங்கு புதை குழியில் அமிழ்த்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு எழ நம்பிக்கை தரும் வகையில் அரசின் கொள்கைகள்,செயல்பாடுகள் என எதுவும் இல்லை.
உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமற்ற மக்களின் வாழ்வு போட்டி பொறாமை ஏமாற்றுதல் எனும் மோதல் கொண்ட சமூகத்தை உருவாக்குமா? அல்லது மக்களின் கருணை மனதைக் காத்திடுமா?

இப்பூவுலகை இன்னமும் ஆழமாய்க் கீறி அதன் வளங்களை கொள்ளை யடிக்கத் துடிக்கும் பேராசையின் கொடும் கரங்கள் மேன்மேலும் நீள்கின்றன . அதற்காகவே மக்களது வாக்குரிமை தந்த அதிகாரங்கள், வரிப்பணங்கள் , வங்கி சேமிப்புகள், பொதுதுறைகள், என அனைத்தும் மிக நுணுக்கமாயும் பட்ட வர்த்தனமாயும் பயன்படுத்தப் படுகின்றன.

உலகிற்கு உண்மையான மாற்றை முதன்முதல் காட்சிப் படுத்திய ரஷ்யாவின் 1917 ம் ஆண்டின் புரட்சிக்கு முந்தைய நிலை தான் இப்போதய இந்திய மக்கள் நிலமை . ஆளுவோரின் பேராசை, வெறுப்பு, பகை கொண்ட மனநிலை அம்மக்களிடம் பிரதிபலித்தது .

புரட்சிக்குப் பின் தொழிலாளி வர்க்க அரசு ; நிலம், உணவு, உடை, இருப்பிடம், கல்வி, தொழில், மருத்துவம், என வாழ்வின் அடிப்படை அம்சங்களை உத்தரவாதப்படுத்தி , மக்களிடம் நம்பிக்கை உருவாக்கியது. அவர்களின் குற்ற மனநிலை மாற தீவிர முயற்சி எடுத்தது . இதனால் மக்களின் வாழ்வியல் முற்று முழுதாய் மேம்பட்டது .

1945ல் முடிவடைந்த இரண்டாம் உலகப் போரில் ஒரு கோடி மக்களின் உயிரிழப்பின் மூலம் சோவியத்தின் வீரம் செறிந்த தனித்த தியாகம் வெளிப் பட்டது. எல்லைக் கோடுகள் இல்லா உலகை என்னுள் அடக்குவேன் எனக் கொக்கரித்த ஹிட்லரை வீழ்த்தியது. மக்களின் நல்வாழ்வை காப்பது தான் உண்மையான தேசபக்தி என்பதை வரலாறாக்கியது. ஆரியத்தின் சுத்தரத்த வெறியுணர்வு மனிதம் முன்பு மண்டியிட்டது.

இவ்வனுபவங்களை உள் வாங்கி செயல்படுவது இன்றைய சூழலில் மிக அவசியம் ! விசாலமான சிந்தனையை உருவாக்குவது ! மக்களை ஒருங்கிணைப்பது ! அநீதிகளுக்கு எதிராய் போராடச் செய்வது ! ஒருவருக்காக எல்லாரும், எல்லோருக்காக ஒவ்வொருவரும் எனும் எண்ணத்தை உறுதி செய்வதே நமது அடிப்படைக் கடமை !

செம்மலர்

Related Posts