அரசியல்

தூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்?)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான சூழலில் உலகின் பல நாடுகளில் யாருடைய தத்துவம் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாட்டின் எதிர்காலத்தை அந்தந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென்பது சோவியத் யூனியனின் விருப்பமாக இருந்தபோதும், அமெரிக்க அத்தனை எளிதாக அதனை நடக்கவிடுவதாக இல்லை. இதனால் அவர்களுக்கிடையிலான போட்டி பெரிதாகியது. பல நாடுகளின் எதிர்காலத்தை அந்தந்த நாடுகளாலேயே தீர்மானித்துக்கொள்ள இயலாமலும் போனது. அதில் மிகமுக்கியமான நாடு கொரியா. மொழியாலும், கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும், வாழ்வியல் முறைகளாலும் எவ்வித முரண்பாடும் இல்லாத ஒரே நிலப்பரப்பின் தென் மற்றும் வட பகுதிகள் 70 ஆண்டுகளாகவே இருநாடுகளாகவும் இருதுருவங்களாகவுமே இருந்துவருகின்றன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி, அமெரிக்காவின் சர்வதேச ஆதிக்கம், வடகொரியாவுக்கான பொருளாதார மற்றும் இராஜிய உறவுகள் வைத்துக்கொள்ளும் நாடுகளின்மை போன்றவை இணைந்து வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரம் உலகெங்கிலும் மூலைமுடுக்கெல்லாம் பரவுவதற்கான காரணிகளாக மாறிவிட்டன. வேலைவெட்டிக்கே போகாமல் ஊரைச்சுற்றிக் கொண்டும், பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டும், சமூகப்பொறுப்பு சிறிதளவும் இல்லாமலும் இருக்கும் ஒருவனை நாயகனாகக் காட்டுவதற்காகவே, அவனுக்கு அருகிலிருக்கும் இன்னொருவனைக் கொடூர வில்லனாகக் காட்டுவதை நாயகபிம்ப மசாலாத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா. அப்படியான வழிமுறையில்தான், தான் விரும்பும் நாட்டை ஹீரோவாகவும், அழிக்கவிரும்பும் நாட்டை வில்லனாகவும் உலகமக்களிடம் கொண்டுசேர்க்கிறது அமெரிக்கா. எதுசரி எதுதவறு என்று தெளிவாக சிந்தித்து தீர்மானிக்க முடியாத அளவிற்கு நம்முடைய மூளையை மழுங்கடிக்கும் வேலையைத்தான் அப்படியான பிரச்சார உத்திகள் செய்கின்றன. ஒருகட்டத்தில் சதாம் உசேனை நாயகனாகப் பார்க்கவைக்கவும், பின்னர் வில்லனாகப் பார்க்கவைக்கவும் அதே உத்திகள்தான் பயன்பட்டன. வட-தென் கொரியாக்கள் குறித்து நமக்கு வந்துசேரும் செய்திகளும் முன்முடிவுகளும் அதேபோன்ற பிரச்சார உத்திகள்தான்.

வடகொரியாவை வில்லனாக்கிக் கொண்டிருக்கும் கட்டுரைகள், நூல்கள், செய்திகள், ஆடியோக்கள், வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஆயிரமாயிரம் வந்துகொண்டே இருக்கின்றன. உலகின் ஏதோவொரு மூலையிலிருக்கும் ஏதோவொரு தேநீர்க்கடையில் உட்கார்ந்திருக்கும் இருவரிடம் மைக்கை நீட்டிக்கேட்டால் கூட வடகொரியாவை வில்லன் தேசம் என்று சொல்வார்கள். ஆனால் வடகொரியாவுக்கு எதிராக நாயகதேசமாக முன்னிறுத்தப்படும் தென்கொரியாவைப் பற்றியும், அதன் வரலாற்றையும், அரசியலையும் எந்த ஊடகங்களாவது நமக்கு சொல்லியிருக்கின்றனவா? அதன் ஒரு சிறுதுளியைப் பேசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தென்கொரியாவின் வரலாற்றுச் சுருக்கம்:

உலகப் போர்கள் நடைபெறுவதற்கு முன்பே ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்தது கொரியா. அங்கிருந்து வெளியேறிய தலைவர்கள் பலரும் “இடைக்கால கொரிய குடியரசு” ஒன்றை சீனாவின் ஷாங்காயில் அமைத்து ஜப்பானிடமிருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சித்தனர். கொரியா என்பது ஒற்றை நாடாகத்தான் அனைவராலும் பார்க்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் கொரியாவில் ஜப்பானுடன் நடந்த போரின்காரணமாக அமெரிக்க மற்றும் சோவியத் படைகள் கொரியாவில் முகாமிட்டிருந்தன. சீனாவுடனும் சோவியத் ரஷ்யாவுடனும் நிலத்தொடர்பு கொண்டிருந்த கொரியாவின் வடக்கு பகுதிகளில் சோவியத் படைகள் அதிகமாகவும், கடல்தொடர்பு காரணமாக கொரியாவின் தெற்குப்பகுதிகளில் அமெரிக்கப் படைகள் அதிகமாகவும் முகாமிட்டு ஜப்பானுடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும், ஜப்பானின் தோல்வியையடுத்து, இடைக்கால கொரிய குடியரசின் தலைவர்கள் அனைவரும் கொரியாவுக்கு மீண்டும் திரும்பினர். ஆனாலும் வடக்கில் இருந்த சோவியத் படைகளும் தெற்கில் இருந்த அமெரிக்கப் படைகளும் அப்படியே தான் இருந்தன. தங்கள் தேசத்திற்கு அதிகாரப்பூர்வமாக விடுதலை வழங்கி தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று இடைக்கால கொரிய குடியரசு அமைப்பின் தலைவர்களான கிம் க்யூ சிக், கிம்கூ உள்ளிட்டோர் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்தனர். சீனா, சோவியத் யூனியன், ப்ரிட்டன், ப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஒத்துழைப்புத் தருவதாக சொல்லியபோதும், அமெரிக்கா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. சோவியத்-அமெரிக்க கூட்டு ஒத்துழைப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மாநாடும் நடத்தப்பட்டது. அதில், அமெரிக்காவும் சோவியத்தும் தங்களது படைகளை கொரியாவிலிருந்து விலக்கிக்கொண்டு, கொரியாவின் எதிர்காலத்தை கொரிய மக்களே தீர்மானிக்க அனுமதிக்கவேண்டும் என்று அறைகூவல்விடுத்தார் சோவியத்தின் பிரதிநிதியாக அம்மாநாட்டில் கலந்துகொண்ட தெரன்டி ஷ்டிகோவ். ஆனால் அந்த கூட்டு ஒத்துழைப்புக் குழுவிலிருந்தே அமெரிக்கா விலகியது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இடைக்கால கொரிய குடியரசு சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கியதாலும், சீனாவும் சோவியத்துமே கொரியாவின் விடுதலைக்கு அதிகமாக உதவியதாலும், புதிதாக உருவாகப்போகும் கொரிய அரசு நிச்சயமாக கம்யூனிச ஆதரவு நாடாகத்தான் இருக்கப்போகிறது என்று யூகித்த அமெரிக்கா, அதனை எப்படியாவது தடுத்துநிறுத்த முயன்றது. இடைக்கால கொரிய குடியரசில் தனக்கான ஆட்களை உருவாக்கி உள்நுழைத்தது அமெரிக்கா. அப்படியாக அமெரிக்காவின் முழு ஆதரவையும் பெற்ற சிங்க்மன் ரீ, கொரியாவை இரண்டாக உடைத்து தென்கொரியா என்கிற புதிய தேசத்தை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்காவின் உதவியுடன் அது நிறைவேறியதோடு மட்டுமல்லாமல், அவரே தென்கொரியாவின் முதல் அதிபரும் ஆனார். ஒன்றுபட்ட கொரியா உருவாகவேண்டும் என்று அப்போது குரல்கொடுத்த ல்யூ வூன் ஹயங்க், கிம் க்யூ கிக், கிம்கூ போன்ற பல கொரிய தலைவர்கள் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் உதவியுடன் கொரியா முழுவதிலும் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். போடோவில் கம்யூனிச ஆதரவாளர்கள் என்று முத்திரைகுத்தி, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை அமெரிக்க இராணுவமும் தென்கொரிய இராணுவமும் கொன்றுபோட்டன. ஏறத்தாழ 70% வரையிலான பத்திரிக்கையாளர்களும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. ஜேஜு தீவில் தென்கொரிய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டதால், அங்கு வாழ்ந்த 70% மக்களைக் கொன்றுபோட்டது அமெரிக்க ஆதரவு தென்கொரிய அரசு.

இப்படியாக மக்களை அடக்கியும் ஒடுக்கியும் கொன்றும் தென்கொரிய அரசு தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனாலும் அவ்வப்போது மக்களும் அந்த கொடூர அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துகொண்டே தான் இருந்து வந்திருக்கின்றனர்.

 

எதிர்க்கருத்தை தொடர்ந்து ஒடுக்கும் தென்கொரிய அரசும், அதற்கெதிரான போராட்டமும்:

1960இல் மாசான் என்னும் ஊரில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனைக் காவல்துறையினர் கொன்றனர். அதனைத் தொடர்ந்து நடந்த நாடுதழுவிய போராட்டத்தின் மூலமாக 19வது இயக்கம் என்கிற புதிய மக்கள் இயக்கம் உருவானது. அதன் தொடர்ச்சியான போராட்டத்தால், சிங்க்மன் ரீயின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

1979 அக்டோபர் மாதம் 16ஆம் தேதி காலை பத்து மணியளவில், புசன் பல்கலைக்கழக நூலகத்தின் முன்னால் ஆயிரம் மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அவர்கள், “யூஷின் முறையை நிறுத்து! மக்களை அடிமைகளாக வைத்திருகும் மார்சியல் சட்டத்தை இரத்து செய்” என்ற முழக்கங்களை உரக்க எழுப்பினர். போராட்டத்தை பல்கலைக்கழகத்தை தாண்டி வளரவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்துவிட்டனர். காவல்துறையின் தடுப்பைத் தகர்த்து, நள்ளிரவு 1 மணியளவில் மாணவர்கள் தெருவில் இறங்கிப்போராடினர்.  மறுநாள் பல்கலைக்கழகமே காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டொங்கா பல்கலைக்கழக மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடத் துவங்கினர்.

அக்டோபர் 18 ஆம் தேதி, கியோங்க்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் போராடினர். அங்கும் பல்கலைக்கழகத்தில் துவங்கிய போராட்டம் வீதிக்கு வருகையில், பல்லாயிரக்கணக்கானோர் இணைந்த போராட்டமாக மாறியது.

தென் கொரியாவின் சர்வாதிகாரியாக இருந்த பார்க் சுங்க் ஹீ, அவரது புலனாய்வுப் பிரிவின் தலைவராலேயே கொல்லப்பட்டார். பார்க்கின் மறைவுக்கு முன்னரே மக்களாட்சிக்கான போராட்டங்களை மாணவர்கள் துவக்கியிருந்தனர். பார்க் இறந்தபிறகு அவை மேலும் வீரியத்துடன் நடத்தப்பட்டன. இராணுவ ஜெனரலாக இருந்த சுன் தூ-ஹுவான் என்பவருக்கு அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைத்திருந்தமையால், அவர் அடுத்த சர்வாதிகாரியானார். போராட்டங்களை நிறுத்துவதற்காக கடுமையான வன்முறைகளை புதிய சர்வாதிகாரியான ஹுவான் முடுக்கிவிட்டார். தென்கொரியாவின் குவாங்க்ஜு பகுதி மக்கள் அடக்குமுறைகளை மீறிப் போராடினர். அம்மக்களை ஒடுக்குவதற்காக, வடகொரியாவின் எல்லையில் நிறுத்தியிருந்த படைகளைக்கூட குவாங்க்ஜு அனுப்ப அமெரிக்கா அனுமதியளித்து உதவியது.

குவாங்க்ஜு வந்ததும், எவரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கான வன்முறைகளை அப்படையினர் கட்டவிழ்த்தனர். ஆயுதமின்றி அமைதியாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்த மாணவர்களை நடுவீதிகளில் இரத்தம் சொட்டச்சொட்ட லத்தியால் அடித்தனர். உயிர்போகும்வரையிலும் கொடூரமாக அடித்தனர். அடித்தே கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்த உடல்களை டிரக்குகளில் அடுக்கிவைத்து மீண்டும் மீண்டும் அடித்து அடையாளம்கூட தெரியாதவாறு மாற்றினர். நள்ளிரவுக்குள் பல பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமித்தது இராணுவம். எதிர்த்துப் போராடிய மாணவர்களை, கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தாக்கியது இராணுவம். இரவெல்லாம் அடியினாலும் உதையினாலும் பாலியல் வன்புணர்வினாலும் மாணவர்களின் உடல் மற்றும் மனவலிமையினை சிதைக்கும் வேலையைச் செய்தது இராணுவம். “இதே கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தான் வியட்னாம் போரில் நாற்பது வியட்னாம் பெண்களில் மார்பகங்களை வெட்டி வீசியெறிந்தேன்” என்று கொக்கரித்தானாம் ஒரு இராணுவ வீரன். (வியட்னாம் போரின்போது, பல்லாயிரக்கணக்கான தென்கொரிய படைவீரர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

அடி உதைகளையும் கைதுகளையும் தாண்டியும்கூட, மாணவர்கள் தொடர்ந்து வலிமையோடு போராடி வந்தனர். மாணவர்களின் போராட்ட குணத்தைக் கண்டு, அவர்களோடு பொதுமக்களில் பலரும் கைகோர்க்கத் துவங்கினர். இராணுவத்தினரால் தாக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பணியினை குவாங்க்ஜுவின் டேக்சி ஓட்டுனர்கள் செய்துவந்தனர். இதனைக் கண்டறிந்து, டாக்சி ஓட்டுனர்களைக் குறிவைத்துத் தாக்கியது இராணுவம்.

நகரம் முழுவதிலும் 18000 காவல்துறையினரும் 3000த்திற்கும் மேற்பட்ட இராணுவப்படையினரும் போராட்டக்காரர்களை கொடூரமாகத் தாக்கிவந்தனர். ஒருகட்டத்திற்கு மேல், அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள, கற்கள், கத்திகள், குழாய்கள், கட்டைகள், இரும்புக்கம்பிகள், சுத்தியல்கள் என கையில் கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்த வேண்டியதாகியது. ஏராளமானோர் கொல்லப்பட்டபோதும், போராட்டத்தை நிறுத்துவதற்கு எவரும் தயாராக இல்லை. உண்மையான போராட்ட செய்திகளை உலகுக்கு தெரியப்படுத்துவதற்காகவே, “மிலிட்டன் புல்லட்டின்’ என்கிற பத்திரிக்கையும் தொடங்கப்பட்டது. அன்று மாலை 5.50க்கு, மக்களை சுற்றிவளைத்து காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை தகர்த்து முன்னேறிப் போராடினர். இராணுவப்படையினரால் மீண்டும் அடிக்கத்துவங்கியதும், மக்கள் மீண்டும் ஒன்றுகூடி அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். காவல்துறையையும் இராணுவப்படையையும் தனித்தனியாக பிரிப்பதற்கான பணியினை அங்கேயே உட்கார்ந்து திட்டமிட்டு, அதனை செய்வதற்கான ஆட்களை தங்களுக்குள் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுத்தனர். குவாங்க்ஜு நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 7 இலட்சத்தில், 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இதர பொதுமக்கள் அனைவரும் கைகோர்த்து அன்று மாலையே பேரணியில் கலந்துகொண்டனர்.

ஒன்பது பேருந்துகளும் இருநூறுக்கும் மேற்பட்ட டேக்சிக்களும் புடைசூழ, நகரின் கடைவீதித்தெருவான கும்னம் அவன்யூவில் பேரணி சென்றது. மீண்டும் இராணுவப்படை தாக்கியது. இருப்பினும் மக்கள் பின்வாங்கவில்லை. நகரில் இருக்கும் ஜனநாயக சதுக்கத்தில் பேரணி நின்று போராட்டத்தி தொடர்ந்தபோது இரவைத் தொட்டிருந்தது. இரவு துவங்கும் வேளையில், இராணுவப்படையில் தாக்குதல் அதிகரித்தது. இரயில் நிலையம் அருகில் இருந்த போராட்டக்காரர்கள் பலரும் இராணுவத்தின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். ஜனநாயக சதுக்கத்தின் அருகிலிருந்து M16 மூலமாக கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தி மேலும் பலரைக் கொன்றது இராணுவம்.

தென்கொரியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குவாங்க்ஜுவில் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடூரங்களைப் பற்றி வாய்திறக்கவே இல்லை. மாறாக, காவல் நிலையங்களை சமூகவிரோதிகள் தாக்குவதாகவும், கலவரத்தை அவர்கள் தூண்டுவதாகவும் பொய்ப்பிரச்சார செய்திகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருந்தன. தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டுக்கொண்டிருந்த எம்பிசி ஊடகத்தின் கட்டிடத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். மக்கள் வெள்ளைத்தைப் பார்த்து அஞ்சி, ஊடக உயரதிகாரிகளும் அங்கே காவலுக்கு இருந்த படைவீரர்களும் தப்பித்து ஓடிவிட்டனர். கட்டிடத்தின் உள்ளே மக்கள் நுழைந்ததும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதனை செயலிழக்கச் செய்தனர் மக்கள்.

மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாங்கப்படும் வரியினை மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், மக்களைக் கொல்லும் இராணுவத்திற்குப் பயன்படுத்துவதனால் தான் வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இரவைத்தாண்டி விடியற்காலைப் பொழுதை நெருங்கிக்கொண்டிருந்த போதும், மக்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. அதிகாலை 4 மணிக்கு இரயில் நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மீண்டும், M16 மூலமாக ஏராளமான மக்களைக் கொன்றது இராணுவம். அதிலும் குறிப்பாக போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் குறிபார்த்து தாக்கிக் கொல்லப்பட்டனர். மக்கள் அப்போதும் போராட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கவில்லை. தங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த சகபோராளிகளின் பிணங்களுக்கு அருகே நின்றுகொண்டே போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மே 21 ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் கும்னம் அவன்யூவில் மீண்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போராடினர்.

மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு ஆலோசனை வைக்கப்பட்டது. தென்கொரியாவை இராணுவமயமாக்கியதில் பெரும் இலாபம் அடைவது இராணுவ ஆயுதங்களை விற்கும் கான்ட்ராக்டர்கள் தான் என்பதால், அவர்களிடமிருந்து இராணுவ வாகனங்களை கைப்பற்றவேண்டும் என்ற யோசனை கூறப்பட்டது. அதனை ஏற்று, முக்கியமான இராணுவ கான்ட்ராக்டரான ஏசியன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் குடோனுக்கு மக்களில் சிலர் சென்றனர். அவர்களில் ஏழு பேருக்கே வாகனம் ஓட்டத்தெரிந்தபடியால், முதலில் ஏழு இராணுவ வாகனங்கள் கைப்பற்றப்பட்டு கொண்டுவரப்பட்டன. பின்னர் பலரும் பலமுறை சென்று, ஒட்டுமொத்தமாக 350 இராணுவ வாகனங்கள் வரையிலும் மக்களின் கைவசம் வந்துசேர்ந்தன. அந்த வாகனங்களில் தெருத்தெருவாக சென்று, இராணுவத்தின் அட்டூழியங்களை உரக்கப்பேசி உண்மையை பலருக்கும் தெரியப்படுத்தினர். நகருக்கும் வெளியே இருக்கும் அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் இன்னபிற நகரங்களுக்கும் பிரச்சாரம் செய்ய அவ்வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் பெண்களின் பங்கு மிகமுக்கியமானது.

மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை கிடைக்கவிடாமல் இராணுவம் செய்திருந்தது. அதனை சமாளிக்க அங்கிருந்த கொக்ககோலா நிறுவனத்திலிருந்து உண்பதற்கும் குடிப்பதற்குமான பொருட்களை கொண்டுவர சில வாகனங்களை போராட்டத்தினர் நியமித்தனர். அதேவேளையில் இராணுவத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தவும் ஒரு குழு ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறவேளையிலேயே, திடீரென எதையும் மதிக்காமல் தொடர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஏராளமானவர்களைக் கொன்றது இராணுவம். 500க்கும் மேற்பட்டவர்களும் படுகாயமடைந்தனர்.

அமைதிவழிப் போராட்டத்தில் வன்முறையைப் பயன்படுத்தியதோடு நில்லாமல், அமைதிப் பேச்சுவார்த்தையின் போதும் கொடூரமாக நடந்துகொண்ட இராணுவத்தின் மீது மக்கள் கடும்கோபத்திற்குள்ளாகினர். இனியும் பொறுப்பதற்கில்லையென்று, அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே, ஒரு காவல்நிலையைத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆயுதங்களைப் பறித்தனர். பல குழுக்களை உருவாக்கி, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு காவல்துறையினை முற்றுகையிட்டு ஆயுதங்கள் சேகரிக்கும் வேலையை திட்டமிட்டு செய்யப்பட்டது. செய்தி கேள்விப்பட்ட ஹுவாசன் என்கிற ஊரிலிருந்த சுரங்கத் தொழிலாளர்களும், தங்களது சுரங்கப்பணியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொருட்களை எடுத்துக்கொண்டு, குவாங்க்ஜு வந்தடைந்தனர். ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவந்த பெண்கள், ஏழு பேருந்து முழுக்க நாஜு என்கிற ஊருக்குச் சென்று, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளையும் இன்னபிற ஆயுதங்களையும் கைப்பற்றி, குவாங்க்ஜுவுக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அதேபோன்று சங்க்சொங்க், யொக்வாங்க் மற்றும் தம்யாங்க் பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன.

குவாங்க்ஜுவில் துவக்கப்பட்ட மக்கள் இயக்கம், ஹுவாசன், நாஜு, ஹப்யுங்க், யங்க்வாங்க், காங்க்ஜின், மோவான், ஹேனம், மொக்போ உள்ளிட்ட தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியின் 16க்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பரவியது. எதனையும் திட்டமிட்டு ஜனநாயகப்பூர்வமாக செய்யத் துவங்கியதும், தங்களுக்கான தன்னாட்சி பெற்ற அரசாங்கத்தை நடத்துமளவிற்கு மக்கள் இயக்கம் வளர்ந்துகொண்டிருந்தது. குவாங்க்ஜுவோடு நின்றுவிடாமல், சுஞ்சு மற்றும் சியோலிலும் இதனை பரப்புவதற்காக போராட்டக்காரர்கள் முயன்றனர். ஆனால், அங்கே சென்றடைய முடியாத அளவிற்கு தடுப்புகளை இராணுவம் அமைத்திருந்தது. ஹ்வான்சன் மற்றும் யொங்க்வங்க் பகுதிகளிலிருந்தும் குவாங்க்ஜுவிற்கு வந்துகொண்டிருந்த போராட்டக்காரர்களை ஹெலிகாப்டர் மூலமாக சுட்டுவீழ்த்தத் துவங்கியது இராணுவம்.

ஊடகங்களையும் பயணப்பாதைகளையும் இராணுவம் கட்டுக்குள் கொண்டுவராமல் போயிருந்தால், தென்கொரிய தேசம் முழுவதும் போராட்டம் பரவியிருக்கும். போராட்டக்களத்திலேயே, இதுவரையிலும் தென்கொரியா பார்த்திராத ஜனநாயக நடைமுறைகளை போராட்டக்காரர்கள் தங்களுக்குள் உருவாக்கியிருந்தனர். அன்று மாலை 5.30 மணியளவில் குவாங்க்ஜுவிற்குள் மக்கள் கட்டுப்பாட்டில் பெருமளவு நிர்வாகம் வந்தபடியால், இராணுவம் அப்பகுதியை விட்டே சற்று வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தது. இரவு 8 மணியளவில் நகரம் முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இராணுவத்தை விடவும் ஆயுத பலமும் அதிகார பலமும் மிகமிகக் குறைவாக இருந்தபோதிலும், மக்களின் எதற்கும் அஞ்சாத மனவலிமையும் தியாகங்களுமே, அமெரிக்க ஆதரவுபெற்ற தென்கொரிய இராணுவத்தையும் ஒருபடி பின்னோக்கி நகரவைத்தது.

பிரான்சில் பாரிஸ் கம்யூன் உருவானதைப் போலவே, தென்கொரியாவின் குவாங்க்ஜு நகரிலும் ஒரு மக்கள் கம்யூன் உருவானது. ஆனால், உலகின் மிகப்பெரிய இராணுவங்களை எதிர்த்து அம்மக்களால் அதிகபட்சம் 6 நாட்கள் வரையே தாக்குப்பிடிக்கமுடிந்தது. அந்த ஆறு நாட்களிலும் தினந்தோறும் மக்கள் கூடுகை நடத்தப்பட்டு, மக்கள் கருத்தும் கேட்கப்பட்டு, விவாதங்களினூடே முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அதற்குள் தனது பலத்தை மொத்தமாகத் திரட்டி, மே 27 ஆம் தேதியன்று மிகக்கொடூரமாக மக்கள் கம்யூனை தாக்கி அழித்து ஒடுக்கியது இராணுவம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதே மே 27 ஆம் தேதிதான் பாரிஸ் கம்யூனும் ஒடுக்கப்பட்டு ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்பது துக்ககரமான ஒற்றுமை. 1980இல் குவாங்க்ஜுவில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், ஒடுக்கப்பட்டிருந்தாலும், அது விதைத்த நம்பிக்கை நாடு முழுவதும் பரவியது. 1987இல் நாடு தழுவிய போராட்டமாக மாறி, தென்கொரியா ஒரு குறைந்தபட்ச தேர்தல் ஜனநாயக நாடாக மாறுவதற்கு குவாங்க்ஜு மக்களின் தியாகமனப்பான்மையும் போராட்டகுணமுமே ஒருவகையில் காரணம் எனலாம்.

குவாங்க்ஜு குறித்த திரைப்படங்கள்:

அரசியல் திரைப்படங்கள் என்றாலே மோசமான எம்எல்ஏ அல்லது அமைச்சர் இருப்பது போலக்காட்டி, அந்த வில்லனை எதிர்த்து ஒரு நாயகன் படம் முழுக்க துன்புறுவது போலவும், இறுதிக்காட்சியில் நாயகன் திருப்பி அடித்துத் துவைத்து திருத்துவது போலவும் படமெடுப்பது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் உலகெங்கிலுமுள்ள மாற்று அரசியல் சினிமாக்களை உற்று நோக்கினால், ஒன்றை எளிதில் விளங்கிக்கொள்ளலாம். அதாவது, ஏதோவொரு உண்மையான சம்பவத்தை பின்புலத்தில் வைத்து, அதற்குள் சில கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை அந்த உண்மைச் சம்பவத்திற்குள் உலவவிட்டு கதையமத்தால், அந்த உண்மைச் சம்பவமும் உலகிற்கு எடுத்துச் சொல்வது போலாகும், அழகான திரைப்படத்தையும் உருவாக்கியது போலாகும். அப்படியாக, தென்கொரியாவில் 1980 ஆம் மே மாதம் ஜனநாயகம் வேண்டிப் போராடிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்தை பின்புலமாக வைத்துக்கொண்டு, திரைக்கதை அமைத்து பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவை அனைத்திலும் கதை நடந்த காலகட்டம், பின்புலம், களம் எல்லாமும் ஒன்றாக இருக்கிறபோதும், ஒவ்வொன்றிலும் வேறுவேறு திரைக்கதையும், வேறுவேறு கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரே சம்பவம் எவ்வாறு பல திரைக்கதைகளாக மாற்றம் பெறுகின்றன என்பது, அரசியல் திரைப்படமெடுக்கும் ஆர்வமுடையவர்கள் கற்றறிய வேண்டிய மிகமுக்கியமான பாடம். குவாங்க்ஜு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மே18, ஏ டேக்சி ட்ரைவர், 26 இயர்ஸ், ஏ பெட்டல், ஃபோர்க் லேன், தி அட்டார்னி, பெப்பர்மண்ட் கேண்டி, தி ஓல்ட் கார்டன், எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகமுக்கியமான திரைப்படம் மே-18.

மே18 திரைப்படம்:

படத்தின் பெயரைப் பார்த்ததுமே நம்மையறியாமல் 2009ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இறுதிப்போர் நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியாது தான். தென்கொரியாவில் 1980 மே மாதம் நடத்தப்பட்ட அரசபயங்கரவாதக் கொடூரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சில திரைப்படங்களில் மிகவும் முக்கியமான படம் இது. நாம் இன்று பார்க்கிற பல தென்கொரிய திரைப்படங்களைப் போல நவீன திரை உருவாக்கம் கொண்ட திரைப்படமில்லையென்றாலும் கூட, பேசவந்த கருப்பொருளை மிக நேர்மையோடு பேசிய திரைப்படம்.

குவாங்க்ஜுவில் நடந்த மக்கள் போராட்டத்தில் டேக்சி ஓட்டுனர்கள் முக்கியமான பங்காற்றியிருந்தனர். கையில் கிடைக்கிறவர்களை எல்லாம் நடுத்தெருவில் லத்தியால் கொடூரமாக அடித்துபோட்டுக்கொண்டிருந்தது இராணுவம். அப்போது குற்றுயிரும் குலை உயிருமாக இருப்பவர்களை, கடுமையான சூழலுக்கு நடுவில் தூக்கிக்கொண்டு அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பணியினை டேக்சி ஓட்டுனர்கள் தான் செய்துவந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களிடையே தகவல் பறிமாறிக்கொள்ளவும் டேக்சி ஓட்டுனர்கள்தான் தூதுவர்களாக இருந்து செயல்பட்டனர். அதனால் தான் குவாங்க்ஜு பற்றிய எந்த திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரேயொரு முக்கிய டாக்சி ஓட்டுனர் கதாபாத்திரமாவது இருக்கும்.

மே18 படத்திலும் சட்டம் படிக்கும் மாணவர்களில் ஒருசிறுபகுதியினர் போராட்டக்களத்தில் இருப்பார்கள். அவர்களுடைய போராட்டத்தை ஆசிரியர்களும் ஆதரிக்கமாட்டார்கள். யாரும் போராடக்கூடாது, வெளியே நடமாடக்கூடாது என்பது போன்ற கடுமையான விதிகளைக் கொண்ட மார்சியல் சட்டம் அமலில் இருந்தபோதும், அதனை சட்டக்கல்லூரி மாணவர்கள் எதிர்த்து கல்லூரி வாயிலில் போராடுவார்கள். அப்போராட்டத்தில் ஒரு மாணவனை நடுத்தெருவில் அடித்தே இராணுவத்தினர் கொன்றுவிடுவார்கள். மறுநாள் கல்லூரியில், அவனுடைய வகுப்பில் அவனது இருக்கை காலியாக இருக்கும். அவன் உட்கார்ந்த இடத்தில் ஒரு பூச்செண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த மாணவர்களும் அவரவர் இடத்தில் உட்கார்ந்து கதறி அழுதுகொண்டிருப்பார்கள். இனியும் பயந்து உள்ளே உட்கார்ந்து அழுவதில் பயனில்லை என்று வகுப்பை புறக்கணித்து வெளியேவந்து அனைத்து மாணவர்களும் போராடத்துவங்குவார்கள். இப்போது ஆசிரியர்களும் வாழ்த்தியனுப்புவார்கள்.

மாணவர்கள் போராடத் துவங்கியதும், கண்மூடித்தனமாக தென்கொரிய இராணுவம் அவர்களை அடிக்கத்துவங்கும். நட்டநடு சாலையில் லத்தியால் அடித்தே பல மாணவர்கள் கொல்லப்படுவர். ஆனாலும் மாணவர்களின் மன உறுதியின் காரணமாக போராட்டம் மேலும் பரவி விரிவடையும். ஒருகட்டத்தில் அப்போராட்டம் அக்கம்பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவத்துவங்கியதும், மக்களை வாட்டிவதைக்கும் இராணுவ மார்ஷல் சட்டத்தை ஒழிக்க முன்வருவதாக அரசு அறிவிக்கும். அதனைக் கொண்டாட மாணவர்களும் பொதுமக்களும் ஊரின் மையப்பகுதியில் குவிந்திருப்பார்கள். எல்லோரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கையில், அம்மக்களை சுற்றிவளைத்து கண்டபடி சுட்டுக்கொல்லும் இராணுவம். அதில் ஒரு டாக்ஸி ஓட்டுநரின் தம்பியும் சட்டக்கல்லூரி மாணவருமான ஒருவரை இராணுவம் கொலை செய்துவிடும். போராட்டமென்றாலே தள்ளிநிற்கும் அவரது அண்ணனான டாக்ஸி ஓட்டுநரும் போராட்டக்காரர்களுடன் இணைவார். முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும் மக்களின் போராட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பார்.

மக்களின் இணைந்த போராட்டத்தினால் ஜனநாயகப்பூர்வ குழு அமைக்கப்பட்டு, மக்களின் விருப்பத்தின்படியே குவாங்க்ஜுவில் அனைத்தையும் செய்யும் அளவிற்கு அக்குழு வளர்ந்துவிடும். இராணுவத்தின் ஆயுதக்கிடங்கை அதிரடியாகத் தாக்கி, இராணுவத்திடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்து ஆயுதங்களையும் எடுத்து சேர்துவைக்கும் போராட்டுக்குழு. அமெரிக்காவுடன் வடகொரியாவின் எல்லையில் நிறுத்திவைத்திருக்கும் இராணுவத்தின் பெரும்பகுதியை குவாங்க்ஜு நோக்கி போராட்டத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் உத்தரவைப் பெற்று தென்கொரிய அரசு திருப்பியனுப்பும். இரவோடு இரவாக அம்மக்களை சுற்றிவளைத்து அடித்தும் சுட்டும் ஏராளமானோரை கொன்று குவிக்கும் தென்கொரிய அரசு.

அரசின் ஆவணங்களின்படியே 284 பேர் நடுரோட்டில் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர் (உண்மையான எண்ணிக்கை அதைவிட பலமடங்கு என்று கணிக்கப்படுகிறது). அப்படத்தின் இறுதிக் காட்சியில், அந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய சிலருக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் துப்பாக்குச்சூட்டுக்கு ஆணையிட்டது யார் என்ற விசாரணை மட்டும் இன்று வரையிலும் முடிவடையாமலே இருக்கிறது என்ற வசனத்துடன் படம் முடியும். நம்ம தூத்துக்குடி சம்பவமும் தென்கொரிய சம்பவமும் எப்படி ஒத்துப்போகிறது பாருங்கள்.

அப்படத்தில் மற்றொரு காட்சி வரும். அதில், போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வரத்துவங்கியதும், போராட்டக்குழுவில் சிலர், “அமெரிக்கா இன்னும் 5 நாட்களில் நம்மைக் காப்பாற்ற வந்துவிடுவார்கள். இனி கவலையில்ல்லை” என்பார்கள்.

உடனே மற்றொருவர், “அமெரிக்கா நம்மை ஆதரிப்பதாக இருந்திருந்தால், நம்மில் இத்தனை பேர் இறந்திருக்கவே மாட்டார்கள். அமெரிக்கா 5 நாட்களில் வருகிறதென்றால், நம்முடைய அழிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கிறதென்று பொருள்” என்பார்.

உலகம் முழுக்க அரச பயங்கரவாதம் இப்படித்தான் மக்களைக் கொன்றுகுவித்தும், கொல்லச்சொன்னவர்களைக் காப்பாற்றியுமே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்கிறது. இதுபோன்று தன் சொந்த மக்களை கடந்த 70 ஆண்டுகளில் ஒருமுறை கூட துன்புறுத்தியோ அடித்துநொறுக்கியோ போராட்டக்குரலை நசுக்கியேவிட்டிடாத வடகொரியாவை உலகின் மிகப்பெரிய வில்லன் நாடாகப் பார்க்க அகில உலக ஊடகங்களும் ஆட்சியாளர்களும் நம்மைப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் தென்கொரியாவை ஏதோ பூவுலகின் சொர்கதேசம் போன்றுதான் நமக்கு முன் நிறுத்திவருகிறார்கள். இதுமட்டுமல்ல, தென்கொரியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 17 சதவிகிதத்தை அமெரிக்கா ஆக்கிரமித்து தனது படைகளை நிறுத்திவைத்திருக்கிறது. அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக உருவாகும் எந்தவொரு அரசை வீழ்த்தியும், அமெரிக்காவின் அடிமை அரசுகளுக்கு எதிராக எழும் எந்தவொரு மக்கள் எதிர்ப்பையும் நொறுக்கியுமே வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் ஆணைக்கு ஏற்பவே தென்கொரியாவில் எதுவும் நடக்கும், தன் சொந்த மக்களை அடித்துக்கொல்வது உள்பட. போராடும் மக்களை கம்யூனிஸ்டுகள் என்றும் சமூக விரோதிகள் என்றும் அமெரிக்காவும் அதன் அடிமை கொரிய அரசும் முத்திரை குத்தியே கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களை வன்முறையாலேயே கையாண்டுவருகின்றன. சமீபத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொன்றதோடல்லாமல், அவர்களை சமூகவிரோதிகளாக சித்தரித்தனர் நமது ஆட்சியாளர்கள். எவ்வளவு ஒற்றுமை பாருங்கள் இந்த ஆட்சியாளர்களுக்கிடையே…

-இ.பா.சிந்தன்

Related Posts